Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

சஞ்சய் சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
சஞ்சய் சுப்ரமணியன்

இங்கே ஒரு மாலையில் விசாகா ஹரியின் ஹரிகதை.

சரிகமபதநி டைரி 2019

இங்கே ஒரு மாலையில் விசாகா ஹரியின் ஹரிகதை.

Published:Updated:
சஞ்சய் சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
சஞ்சய் சுப்ரமணியன்
சரிகமபதநி டைரி 2019
சரிகமபதநி டைரி 2019

ட் அவுட் வைத்துப் பாலாபிஷேகம் செய்யவில்லையே தவிர, ரஜினி தர்பாரின் முதல் நாள் முதல் ஷோ மாதிரியாக கிருஷ்ண கான சபாவில் சலசலப்பும் பரபரப்பும். எப்போது கதவு திறக்கும், எந்நேரம் தரிசனம் கிடைக்கும் என்பது தெரியாமல் நீண்ட வரிசை. இங்குதான் என்றில்லை, டிசம்பரில் சஞ்சய் சுப்ரமணியன் பாடிய ஒரு டஜன் கச்சேரிகளிலும் இதே திருவிழாச் சூழல்தான். பாடுமிடமெல்லாம் துரத்திச்சென்று கரவொலி எழுப்பிக் கொண்டாடுகிறார்கள் அவரின் தீவிர ரசிகர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேடையில் வெள்ளை விரிப்பு. சஞ்சய் உட்பட அத்தனை கலைஞர்களும் கண்களுக்கு இதம் தரும் வெள்ளைவெளேர் வேட்டி சட்டையில். இசை மேளா ஆரம்பமானது. கார்வைகளில் சஞ்சய் ‘தம்’ பிடிக்கும்போதும், தானங்களிலும், ஸ்வரங்களிலும் உற்சாக உடல் மொழியுடன் வித்தைகாட்டும்போதும் விண்ணதிரக் கைதட்டிப் பரவசப்படும் சுப்ரமணிய பக்தர்கள்.

பூர்விகல்யாணியில் `அப்பனே... பழநியப்பனே...’ என்று காவடி தூக்கிவிட்டு, சக்கரவர்த்தி ராகமான கரகரப்ரியா அன்றைய மெயின். முன்பு ஒருமுறை சஞ்சய் பற்றிய கட்டுரை ஒன்றில் டி.எம். கிருஷ்ணா குறிப்பிட்டது போல் கரகரப்ரியாவுக்குள் புகுந்து புத்தம்புது கரகரப்ரியாவைக் கண்டறிந்தார் இந்த ராட்சசப் பாடகர். ராகத்துக்கான பல்வேறு சங்கதிகளை ‘இந்தா பிடிங்க’ என்று அள்ளி அள்ளி வீசினார். ஆலாபனை முடியும் முன் பாடிய புதுப் புது சங்கதிகள், இதுவரை கேட்டிராத பிரமிப்பூட்டும் ரகம்.

சஞ்சய் சுப்ரமணியன்
சஞ்சய் சுப்ரமணியன்

கிருஷ்ணர் - அர்ஜுனன் மாதிரி இணைந்து செயல்படுபவர்கள் சஞ்சய் - வயலின் வரதராஜன். தன் முறை வந்தபோது ஆலாபனையில் பாடகர் பாடி முடித்த சங்கதிகளை அச்சு அசலாக ரிப்பீட் செய்தார் வரது. பாதி ஆலாபனை வாசிப்பின் போதே வயலின் கலைஞர் கைதட்டல்கள் அள்ளிய அபூர்வம் அன்று நடந்தது. வாவ்... வாவ்... வரது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிக்கெட் 20x20-ல் கடைசி ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசுவதுபோல் தனி ஆவர்த்தனம் போது மிருதங்கம் நெய்வேலி வெங்கடேஷ் - மோர்சிங் ராஜசேகர் வாசிப்பால் அரங்கம் அதிர்ந்தது. அதுவும் நெய்வேலியாருடன் ராஜசேகர் கபடி ஆடியது க்ளாஸ்!

விஷாகா ஹரி
விஷாகா ஹரி

‘சஞ்சய் பாட்டு உள்ளம் தொடுகிறதா அல்லது பொழுதுபோக்கு தருகிறதா?’ என்ற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, ஒரே மாதத்தில் இத்தனை கச்சேரிகள் பாடினாலும் அவரது எனர்ஜி லெவல் சற்றும் குறையாமல் அதே தீவிரத்துடன் இருப்பது ஆச்சர்யம். வாழ்க, நீ எம்மான்!

டிசம்பர் இசை விழாக்களைச் சென்னைக்குள் மட்டுமே மாவாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் தாம்பரம் தாண்டி வாழும் சங்கீதப் பிரியர்களுக்கு உண்டு. அதை ஓரளவு போக்கும் வகையில், காட்டாங்களத்தூரிலுள்ள சிவானந்த குருகுலம் மறைமலைநகரிலிருக்கும் தங்கள் பள்ளிக்கூட வளாகத்தில் பிரமாண்டமான ஆடிட்டோரியம் எழுப்பியிருக்கிறார்கள். இங்கு ‘மறைமலைநகர் மயிலாப்பூர் ஆகிறது’ என்று விளம்பரப்படுத்தி, பத்து நாள் இசை விழா நடத்தியது. இந்த அரங்கம் மியூசிக் அகாடமி, நாரத கான சபாவுக்கெல்லாம் சவால் விடும் அளவு அம்மாம் பெரிசு! பத்து நாள்களும் மிகப் பிரபல பாடகர்கள் அலுப்பு பார்க்காமல் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மொஃபசல் நகரத்துக்குப் பயணம் செய்து பாடிவிட்டு வந்திருக்கிறார்கள். இனி ஒவ்வொரு வருடமும் இந்த மேளா நடக்கும்.

இங்கே ஒரு மாலையில் விசாகா ஹரியின் ஹரிகதை. வழக்கம்போல் கச்சேரி பாதி, கதை மீதி. ‘எந்தரோ மகானுபாவுலு’ என்று தலைப்பு. ஆரம்பத்தில் மார்கழி மாதத்தின் மகிமையைப் பற்றிப் பேசிவிட்டு, கனகதாசரில் ஆரம்பித்து மகான்கள் ஆறு பேரின் சுருக்கமான வரலாறு. இதில் இருபதாம் நுற்றாண்டுத் தமிழறிஞர் பெரியசாமிதூரனின் வரலாற்றையும் விசாகா இணைத்துக்கொண்டபோது மறைமலைநகர் தமிழர்கள் காலர் தூக்கிவிட்டுக் கொண்டார்கள். தூரன் பள்ளியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த சமயம், பகத்சிங் தூக்கிலிடப்பட்ட தகவல் அறிவிக்கப்பட, தேர்வு எழுதுவதை அப்படியே நிறுத்தினார் அவர். விடைத்தாளில் ‘வீர வாழ்வே வாழ வேண்டும்...’ என்று பாடலொன்று எழுதினார். பிலஹரி ராகத்தில் இதைப்பாடி விசாகா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் விளக்கினார். அதேபோல் ஆண்டாள் திருக்கல்யாணம்.

விக்னேஷ் ஈஸ்வர்
விக்னேஷ் ஈஸ்வர்

சிறந்த கதைசொல்லியாகவும், ஜனரஞ்சகக் குரலுடன் ஜனம் ஈர்ப்பவராகவும் இன்றுவரை விசாகாவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.

த்யம் தியேட்டரில் இரண்டாவது லெவலிலுள்ள ‘செரீன்’ தியேட்டரில் கச்சேரி கேட்கும் அனுபவம் வேற லெவல்! காலை வேளையில் பக்கா திட்டமிடலுடன் இங்கே ஐந்து நாள்கள் இசைவிழா. Madrasana அமைப்பு இரண்டாவது வருடமாக இதை நடத்தி அசத்தியது. மிதமான வெளிச்சத்தில், துல்லியமான ஒலியமைப்புடன், பாப்கார்ன் ஓசையின்றிப் பாட்டு கேட்டது நிஜமாகவே சுகானுபவம்!

அசோக் ரமணி
அசோக் ரமணி

முதல் நாள் விக்னேஷ் ஈஸ்வர். வயலினில் ராஜீவ் முகுந்தன், மிருதங்கத்துடன் பர்வீன் ஸ்பர்ஷ், கஞ்சிராவுடன் அனிருத் ஆத்ரேயா என்று பாடகரை வருடிவிடும் பக்கவாத்தியம்.

வெல்வெட் துணி மாதிரியான வழுவழுப்புக் குரலுடையோன் விக்னேஷ். நவராகமாலிகை வர்ணம். ஆரம்பத்தில் ஒன்பது ராகங்களின் மினி ஆலாபனை. மலயமாருதமும், ஆஹிரியும் வந்தோருக்கு `சுப்ரபாதம்’ பாடின. சத்தியம் தவறாமல், உலகம் அனைத்துக்கும் தாசனாகி, தெய்வ வேறுபாடின்றி, என்றும் அழிவில்லாத சுஸ்வரமான கானத்துடன் ராம நாமத்தினால் சுகித்தார் விக்னேஷ் (ஸுகி யெவரோ - கானடா).

கச்சேரி முடிந்ததும் ஆபீஸ் விரைபவர்களைச் சுறுசுறுப்பாக்கி அனுப்பி வைக்க இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பான ராகங்களைப் பட்டியலில் இணைத்துக்கொண்டிருக்க வேண்டும், டி.எம். கிருஷ்ணாவின் இந்தச் சீடர். மற்றபடி பழுதேதுமில்லை ஈஸ்வரா!

யிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் பாபநாசம் அசோக் ரமணி. தோடி வர்ணத்துடன் தொடங்கினார். தாத்தா பாபநாசம் சிவனின் ‘தத்வமரியதரமா’ என்ற ரீதிகௌள ராகப் பாடலை சேதமின்றிப் பாடினார். சிலபல வின்டேஜ் சங்கதிகளுடன் பூர்விகல்யாணியை அலசிவிட்டு, மெயினாக கரகரப்ரியா. தியாகராஜரும், தமிழ் தியாகையரும் பலருக்கும் விட்டுச்சென்றிருக்கும் கரகரப்ரியாவின் அடுக்கடுக்கான உயிரோட்டமுள்ள சங்கதிகள் இவருக்கும் கைகொடுக்க ‘சக்கநி’யில் ராஜபாட்டைப் பயணம்.

அசோக் ரமணி அமைதியான அகிம்சை வழிப் பாடகர். ஸ்வரங்களில் துவம்சம் செய்யத் தெரியாதவர். அன்று சேர்த்து வைத்து மிருதங்கத்தில் திருவாரூர் வைத்தியநாதன் அடித்து வாசித்து, பாடகரின் குரலுக்கு பங்கம் ஏற்படுத்திக்கொண்டிருந்தது பரிதாபம்!

அசோக்கின் சாரீரம், ‘இங்கே சாலை பழுதாகியிருக்கிறது. மாற்றுப் பாதையில் செல்லவும்’ என்று போர்டு எழுதி வைக்கும் நிலையில் உள்ளது. எனவே, வாசிப்பதே தெரியாமல் மிருதங்கம் வாசிக்கக்கூடிய அன்றைய வேலூர் ராமபத்ரன், இன்றைய அருண்பிரகாஷ் மாதிரியானவர்களே அவருக்கு லாயக்கு. இல்லையென்றால் வெறும் கஞ்சிரா மட்டுமே லய சப்போர்ட்டுக்குப் போதுமானது.

பாரத் கலாச்சாரில் திருமதி ஒய்.ஜி.பி மறைவுக்குப்பின் நடக்கும் மார்கழி இசைவிழா. சென்ற வருடம் வரை ஒவ்வொரு கச்சேரிக்கும் வந்திருந்து, ஹாலில் நடுநாயகமாக சோபாவில் உட்கார்ந்து, முடிவில் நான்கு வார்த்தை பேசுவார். இந்த முறை சோபா அப்படியே இருக்கிறது. அதில் மிஸஸ் ஒய்.ஜி.பி-யின் போட்டோ வைத்திருந்தார்கள்.

நிர்மலா ராஜசேகர்
நிர்மலா ராஜசேகர்

இங்கே தன் வீணைக்கச்சேரியை சஹானா வர்ணத்துடன் தொடங்கினார் நிர்மலா ராஜசேகர். அமெரிக்கா வாழ் வித்தகி. அங்கேயிருக்கும் அந்த தேசத்து இசைக் கலைஞர்களுடன் இணைந்து கச்சேரிகள் செய்தும், ஆல்பம் வெளியிட்டும் செம பிஸி. ஒவ்வொரு டிசம்பருக்கும் தவறாமல் சென்னையில் ஆஜராகி விடுவார்.

சிடுசிடு முகத்துடன் வீணையை மீட்டாமல் சிரித்தபடி, தனம்மாள் பாணியில் பாடிக் கொண்டே வாசிக்கிறார் நிர்மலா. நல்ல வேளை, குரல் கொடூரமாக இல்லை! சாமர ராகம் என்று தீட்சிதராலும், சண்முகப்ரியா என்று மற்றவர்களாலும் அழைக்கப்படும் ராகத்தில் ‘ஸித்தி விநாயகம்’ கீர்த்தனை. பாடிக் காட்டா விட்டாலும்கூடப் பாடல் வரிகள் புரியுமளவு வாசிப்பில் தெளிவு.

சங்கராபரணத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆலாபனை முடித்துவிட்டு நிர்மலா தானம் வாசிக்கும்போது உடன் வயலின் - மிருதங்கம் - கடம் மூன்றும் இணைந்து பயணித்தது கேட்பதற்கு சுகம் தரும் கலவை. வி.வி.எஸ். முராரி வயலின் வாசிப்பு அங்கங்கே வீணையை ஓவர்டேக் செய்தது! மேலக்காவேரி பாலாஜி - ஹரிஹரசுப்ரமணியன் கடம் யாருக்கும் இடையூறாக இருக்கவில்லை.

இசைக்கருவிகளின் ஸோலோ கச்சேரிகளுக்கு, முக்கியமாக வீணைக்கு மக்களின் ஆதரவு இருப்பதில்லை என்பது கசக்கும் உண்மை. வீணை எஸ்.பாலச்சந்தர், சிட்டிபாபு காலத்து மவுசு வீணைக்குத் திரும்ப வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. விரைவில் பலிக்கட்டும்!

- பக்கங்கள் புரளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism