சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

ஐஸ்வர்யா சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா சங்கர்

வீயெஸ்வி; படங்கள்: யோகா

சென்னை இசை ரசிகர்களுக்கு எட்டு மணி சிண்ட்ரோம் அதிகம் இருப்பதைக் காணமுடிகிறது. கச்சேரிகளின் போது இரவு எட்டு, எட்டே கால் மணி ஆகிவிட்டால் இவர்களுக்குக் கை விரல்கள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன. மேடையில் கலைஞர்கள் பாடிக்கொண்டிருக்கும்போதே இவர்கள் கொத்தாக எழுந்து வெளிநடப்பு செய்துவிடுகிறார்கள். என்னதான் தீர்வு இதற்கு? சிம்பிள். பாடுபவர்கள் இன்னும் நன்றாகப் பாடி இவர்களைக் கட்டிப்போட்டால் மருந்து மாத்திரை இல்லாமல் `நோய்' குணமாகிவிடும்!

ச்சேரி ஹாலுக்கு வருமுன் ஒருநடை பிராட்வே சென்று பைநிறைய சரவெடி, புஸ்வாணம், கம்பிமத்தாப்பு எல்லாம் வாங்கி வருவாரோ? ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் பாடியபோது எழுந்த சந்தேகம் இது! (மதுரத்வனி - ஆர்கே கன்வென்ஷன் சென்ட்டர்)

சரிகமபதநி டைரி 2019
சரிகமபதநி டைரி 2019

மத்யமாவதியில் தியாகராஜரின் `அலகலல்லலாடக' பாடல். ராமனின் நெற்றியில் புரண்ட சுருண்ட குழல் அசைந்தாடுவது கண்டு விஸ்வாமித்திரர் மகிழ்ந்தது மாதிரி, ஸ்ரீரஞ்சனியின் பட்டுப்போன்ற மென்மையான குரல் கேட்டு அரங்கம் மகிழ்ந்தது. ஸ்வரங்களில் ஆயிரம் வாலா சரவெடி!

பூர்வி கல்யாணியில் ஆலாபனை வளர்ந்து கொண்டே போகும்போது `ஹம்மிங்' செய்வதுபோல் நீண்ட நேரம் வாய்மூடியபடி ராகத்துக்குண்டான சங்கதிகளை ஸ்ரீரஞ்சனி தரைச்சக்கரம் மாதிரி சுழற்றியது ஜோர்!

OVK-யின் (ஊத்துக்காடு வேங்கட கவி) `பத்மாவதி ரமணம் ஜெயதேவா' பாடலில், `சுந்தராங்க சுப சோபித மதனம்' வரிகளில் நிரவல் செய்த போதும், தொடர்ந்த விறுவிறு ஸ்வரங்களின் போதும் கலர் மத்தாப்பூக்கள் சிதறி விழுந்தன!

பிரதானமாக திவிஜாவந்தி. அழுத்தம் திருத்தமான ஆலாபனையில் ஹம்மிங் விளையாட்டு உண்டு. மேல் ஸ்தாயியில் அங்கங்கே `கீச்' என்று போனதும் உண்டு! தீட்சிதரின் `சேத ஸ்ரீ பாலகிருஷ்ணம்' பாடலைத் தொடர்ந்த ஸ்வரங்களில் ஜால வித்தை காட்டினார் ஸ்ரீரஞ்சனி. குறிப்பாக, ஸ்வரக் குறைப்பின்போது ஒவ்வொரு முறையும் `ரி... க... ரி...'யில் முடித்தபடியே வந்தது, மறுநாள் வரை காதுகளில் ரீங்கரித்தபடி இருந்ததாக, பக்கத்து இருக்கையில் இருந்தவர் `செல்'லினார்!

ஸ்ரீரஞ்சனி
ஸ்ரீரஞ்சனி

A ஷார்ப் (ஆறரைக் கட்டை) சுருதியில் பாடுகிறார் ஸ்ரீரஞ்சனி. பக்கவாத்தியம் வாசிப்பவர்களுக்கு இது பேஜாரானது. இதையும் மீறி வயலினில் ஸ்வீட்டாகப் பின்தொடர்ந்த எல்.ராமகிருஷ்ணனுக்கு ராமர் ப்ளஸ் கிருஷ்ணரின் அருள் உண்டு!

பின்குறிப்பு: இந்த வருடமும் மியூசிக் அகாடமியில் ஸ்ரீரஞ்சனிக்கு, பகல் ஒன்றரை மணி ஸ்லாட்தான். பிரமோட் பண்ணுங்க சார்!

ங்கீதம் கற்றுக்கொள்ள பிற மாநிலங்களிலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ஸ்டேஷன் (அப்பாடா!) வந்திறங்கும் இளம் கன்றுகள் யாருமே விசாரிப்பது, பாப்புலர் குரு சுகுணா வரதாச்சாரியின் முகவரியாகத்தான் இருக்கும். இவரது பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட பலரில் ஒருவர் ஐஸ்வர்யா சங்கர். ஆர்.ஆர்.சபாவின் மினி அரங்கில் பாடினார்.

ஐஸ்வர்யா சங்கர்
ஐஸ்வர்யா சங்கர்

எடுத்த எடுப்பில் மாயாமாளவகௌள ராகத்தில் `இந்த பராக்க...' பாடலை நிரவல், ஸ்வரங்களுடன் ஐஸ்வர்யா ஆரம்பித்தபோதே களைகட்டிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனை அய்யா சகோதரர்கள் இயற்றிய கீர்த்தனை. `உமாதாசர்' இவர்களது முத்திரை.

பிசிர்தட்டாத அழுத்தமான குரல் ஐஸ்வர்யாவுக்கு. அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து சம்பிரதாயமாக, சமர்த்தாகப் பாடுகிறார். தனக்கு பரத நாட்டியமும் தெரியும் என்பதை மேடையில் பாடும்போது டான்ஸ் ஆடி வெளிப்படுத்துவ தில்லை.

ஐஸ்வர்யா பாடிய காபி, கறந்த பாலில் மைசூர் டிகாக்‌ஷன் கலந்த சுவை. சங்கதிகளில் காபியின் ஆவி பறந்தது. வயலினில் ஆர்.கே. ஸ்ரீராம்குமார் பாடகியைப் பின்தொடர்ந்த விதமும், தனியாக கோதாவில் இறங்கியபோது காபியைக் கலக்கிய விதமும் மணம், குணம், சுவை நிரம்பியது.

அன்றைய ஆட்ட நாயகன், அருண்பிரகாஷ். வாசிப்பது தெரியாமல் வாசிப்பதிலும், வாசிக்கத் தேவையில்லாத இடங்களில் மிருதங்கத்தை சைலன்ட் மோடில் போடுவதிலும் இவர் கெட்டிக்காரர். ஐஸ்வர்யா பாடிய `இந்த ஸௌக்யமநி...' பாடல் நெடுக அருண்பிரகாஷ் பின்தொடர்ந்த விதத்தை `இவ்வளவு இன்பம் அது’ என்பதை வர்ணிக்க இயலாது.

அதெல்லாம் இருக்கட்டும். ஒட்டுமொத்தக் கச்சேரி மெனுவில் இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகம் கூட்டினால், ஏன் எதற்கு என்று யாரும் கேட்கப்போவதில்லை!

நிஷா ராஜகோபால்
நிஷா ராஜகோபால்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் ஒவ்வொரு கச்சேரிக்கு முன்பாகவும், பங்குபெறும் கலைஞர்களின் பெயர்களை அறிவிப்பார் சபாவின் செயலர். கூடவே செங்குத்தான அட்டையில் பெயர் எழுதி மேடையின் இரு பக்கமும் நிற்க வைத்திருந்தாலும், ஸ்பான்சர் செய்த பத்து நிறுவனங்களின் பெயர்களையும் மூச்சுவிடாமல் படித்து முடிப்பார். மேடை வடிவமைப்பு, ஒலி - ஒளி அமைப்பாளர்கள், வாசலில் செக்யூரிட்டி போன்றவர்களை அறிமுகப்படுத்துவதில்லை!

பாடகர், பாடகிகள் பலர், ஜன்னலில் கறுப்புத்திரை ஒட்டப்பட்ட காரில் கிட்டத்தட்ட மேடைவரை வந்திறங்கும் இந்த நாளில், `கார்த்திக்’கில் பாடிய நிஷா ராஜகோபால், மெயின் கேட்டில் இறங்கி, கேன்ட்டீனில் ஓரிருவருக்கு ஹலோ சொல்லிவிட்டு, கிரிக்கெட் பிட்ச் நீளத்திலுள்ள பாதையில் நடந்து சென்றது காணக்கிடைக்காதது!

சுவாதி திருநாளின் `ஜய ஜய பத்மநாப’வில் (சரசாங்கி) ஆரம்பித்தார் நிஷா. இவர் ஒவ்வொரு முறையும் ராகத்தை முணுமுணுத்துப் பார்க்கும்போதே இன்ன ராகம் என்பதை ஈஸியாகக் கண்டறிய முடிகிறது. குரலை மேலும் கனமாக்கிக் கொண்டிருக்கிறார். வாய்விட்டுப் பாடுகிறார். வரிகளைத் தெளிவாக உச்சரிக்கிறார்.

அடாணாவில் அதட்டிவிட்டு, தியாகராஜரின் `அநுபம குணாம்பு தீ...' பாடல். ஜனக மகாராஜனின் மருமகனே, சகலலோகநாதனே என்றெல்லாம் விளித்து ராமனிடம் தியாகராஜர் முறையிடும்போது, திரௌபதிக்கும் கோபியருக்கும் அவர்களது பக்திக்கு வசப்பட்டு ஆடையளித்துக் காப்பாற்றிய மகாபாரத சம்பவத்தை இந்தப் பாடலில் நினைவூட்டுகிறார்.

சரிகமபதநி டைரி 2019

அடுத்து பைரவி. விசேஷமாகவும் விகாரமாகவும் இல்லாத மிதமான ஆலோபனை. அருணாசலக் கவிராயரின் `ஆரோ... இவர் ஆரோ...' பாடலில் `சந்திரவிம்ப முக மலராலே என்னைத்தானே பார்க்கிறார்...' என்று மாடத்தில் நின்று சீதா பாடும் வரிகளை நிஷா நிரவல் செய்த போது, இன்றைய நாளின் PreWedding Shoots நினைவுக்கு வந்தன! மற்றபடி, நிறைவாகப் பாடும் நிஷாவுக்கு இருக்கும் ஒரே சவால், Predictable ஆக இல்லாமல் புதுமை சேர்ப்பது மட்டுமே!

பிரம்ம கான சபாவின் 54-வது வருட இசை விழா. ஹைதராபாத் சகோதரர்கள், ஊர்மிளா சத்யநாராயணன், விசு, தவில் டி.ஆர்.சுப்ரமணியன் ஆகிய ஐவருக்கு 'பத்மம்' விருது வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால். பின்னர் இவரின் தொடக்க உரை. நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று, தொல்காப்பியத்தில் ஆரம்பித்து, பண் ஆராய்ச்சி செய்து, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று வரிசைகட்டி, நெய்தல், மருதம் என்றெல்லாம் அடுக்கி, புரந்தரதாசர், மூம்மூர்த்திகள் வழியே பாபநாசம் சிவன்வரை வந்து அலசினார் கவர்னர். ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்த தமிழறிஞர் வாழ்க!

விழா நிறைவுற்றதும், `அசுரன்' அபிஷேக் ரகுராம் கச்சேரி. `கவர்னர் கிளம்பியாச்சு... இனிமே நீ வரலாம்’ என்று அஸாவேரியில் `ராரா மாயிண்டிதாக' என்று ரகுவீரனை அழைத்து முதல் வரிசையில் உட்கார வைத்தார்.

காட்டாற்று வெள்ளமெனக் கற்பனை பெருக்கெடுக்க, அதிமந்த்ர ஸ்தாயியில் சடுகுடு விளையாடும் விதமாக அபிஷேக் செய்த ரீதிகௌள ராக ஆலாபனை அவருடைய விசிறிகளை ஆரத் தழுவியது. இந்த ராகத்தை இத்தனை நிமிடங்கள் மட்டுமே பாட வேண்டும் என்றெல்லாம் டைம்டேபிள் போட்டு வைத்திராமல், எந்த ராகமானாலும் அதை ஆழங்கால் உழுது அறுவடை செய்வது அபிஷேக் ரகுராமின் வெற்றி ஃபார்முலா!

ஸாவேரி, நாட்டக்குறிஞ்சி, தன்யாசி, மோகனம், முகாரி, பூர்விகல்யாணி, மத்யமாவதி என்று அடுத்தடுத்து ராக ஆலாபனைகள். புல்லாங்குழலில் தன் பங்குக்கு அவற்றை சந்தனமாகக் குழைத்தார் ஜெ.பி.சுருதிசாகர். (நோ வயலின்!) இத்தனை ராகங்களில் அமைக்கப்பெற்ற சுவாதி திருநாளின் `பாவயாமி ரகுராமம்...' என்ற ராமாயணக் கதை சொல்லும் பாடலைப் பாடி ` சும்மா கிழி' என்று கிழித்தார் அ.ரகுராம்! முதலில் முழுப்பாடலையும் ஸாவேரியில் அமைத்திருந்தாராம் சுவாதி திருநாள். பின்னர் இதை ராக மாலிகையாக மாற்றியவர் செம்மங்குடி. பத்ரி சதீஷ்குமாரின் மிருதங்க வாசிப்பு ராமனுக்கு ஆஞ்சநேய பலம்!

அக்‌ஷய் பத்மநாபன்
அக்‌ஷய் பத்மநாபன்

ரம்பராவுக்காக ராகசுதா ஹாலில் இளம் பாடகர் அக்‌ஷய் பத்மநாபன். அரங்கில் இன்னொரு இளைய தலைமுறைப் பாடகர். அண்மையில் டாலர் தேசத்தில் மூன்று மாதங்கள் பயணித்து 26 கச்சேரிகள் செய்துவிட்டுத் திரும்பியவர். இவர் கீழிருந்த வண்ணம் பாடகரைப் பார்த்து நினைத்து நினைத்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்க, மேடையிலிருந்து பாடகரும் பதிலுக்குச் சிரிக்க... கச்சேரியின் சீரியஸ்னெஸ் காலி. இதையும் மீறி , அக்‌ஷய் பாடிய காபி ` பேஷ் பேஷ் ’ ரகம்.

மிருதங்கத்தில் சுமேஷ் நாராயணனும், கஞ்சிராவில் அனிருத் ஆத்ரேயாவும் வாசித்த தனி, அன்றைய ஹைலைட். ஹாலில் 30 பேர் மட்டுமே இருந்தாலும் துவண்டுபோய்விடாமல் அவர்களையே 300 பேராகக் கருதி இவர்கள் தாளமழை பொழிந்தது சாலச் சிறப்பு!

- பக்கங்கள் புரளும்...