2019 ஸ்பெஷல்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

ராமகிருஷ்ணன் மூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராமகிருஷ்ணன் மூர்த்தி

படங்கள்: ராம் ஐயர்

சரிகமபதநி டைரி 2019
சரிகமபதநி டைரி 2019

யிரம் பிறைகளுக்குமேல் பார்த்துவிட்ட உமையாள்புரம் சிவராமனுக்கு முதல் மரியாதை.தியாக பிரம்ம கான சபாவுக்காக வாணி மகாலில் சித் ஸ்ரீராம் கச்சேரி. தர்மவதியிலும் தோடியிலும் விட்டல் ராமமூர்த்தி Fast ஸ்வரங்களை வயலினில் வாசித்துக் கொண்டு வர, கூடவே சிவராமனின் கை விரல்கள் மிருதங்கத்தில் ‘பாடி’க் கொண்டு வந்தபோது இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே! பிறகு வந்த தனி ஆவர்த்தனத்தில் சிவராமன் வெவ்வேறு நடையில் வித்தை காட்டியபோது வயது என்பது வெறும் எண் மட்டுமே என்கிற உண்மை முகத்தில் அறைந்தது. இவரின் வேகத்துக்கு ஈடு கொடுப்பதிலும், சொல்லுக்குச் சொல் பதிலடி கொடுப்பதிலும் கஞ்சிரா ஸ்ரீசுந்தர்குமார் பயமறியாத இளம் கன்றாகத் துள்ளாட்டம் போட்டார். ஆக, அன்று இரண்டரை மணி நேரமும் சர்வம் தாள மயம்!

அமெரிக்காவில் Bay Area-வைச் சேர்ந்தவர் சித் ஸ்ரீராம். இசை அவரை சென்னைக்கு இழுத்து வந்திருக்கிறது. சினிமாவில் பின்னணிப் பாடகராக இளவட்டங்களைக் கவர்ந்திழுக்கிறார். ‘வானம் கொட்டட்டும்’ படத்துக்கு இசையமைக்கிறார். டிசம்பர் இசை விழாக் கச்சேரிகளில் வாராத தலைமுடியுடன் பாடுகிறார். Pay Area!

‘உறக்கத்தை ஒழித்து, தம்புராவை அழகுடன் கையிலேந்தி...’ என்றெல்லாம் ‘கத்தநுவாரிகி...’ கீர்த்தனையில் பக்தர்களை அடுக்கு மொழியில் பாராட்டுவார் தியாகராஜர். தம்புராவைக் கையில் ஏந்தாமலேயே இதைப் பாடினார் சித். எலெக்ட்ரானிக் சுருதிப்பெட்டி! தம்புரா மட்டுமே எந்தக் கச்சேரிக்கும் தூணாக நிற்கும்.

 சித் ஸ்ரீராம்
சித் ஸ்ரீராம்

துக்கடா பகுதியில் ஒன்றாக ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ பாடல். அது என்னவோ தெரியவில்லை, ஆணையம்பட்டி ஆதிசேஷய்யர் இயற்றிய அற்புதமான இந்த நீலமணி ராகப்பாடலை மதுரை சோமுவைத் தவிர வேறு யார் பாடினாலும் மனம் இரங்குவதில்லை!

பின்குறிப்பு: சித் ஸ்ரீராமின் குரலில் முன்பு இருந்த இரைச்சல் இப்போது குறைந்துவருகிறது. அரங்கில் கூட்டமும்!

லேட்டஸ்ட் ‘இசைப் பேரொளி’ ராமகிருஷ்ணன் மூர்த்தியின் கச்சேரி பிரம்ம கான சபாவில். இவரின் குரு ஆர்.கே. ஸ்ரீராம்குமார் வயலின், மனோஜ் சிவா மிருதங்கம், புருஷோத்தமன் கஞ்சிரா.

சிங்கப்பூர் அமைச்சருடன் செளம்யா
சிங்கப்பூர் அமைச்சருடன் செளம்யா

வகுப்பில் எப்போதும் முதல் மார்க் எடுக்கும் சமர்த்து சாயல் 31 வயது நிரம்பிய ராமகிருஷ்ணன் மூர்த்திக்கு. ‘சம்பிரதாயம் மீறாமல் புதுமையைப் புகுத்தும்’ என்கிற பம்மாத்து அடைமொழி இவருக்குப் பொருந்தாது. இலக்கணம் மீறாமல் சம்பிரதாயமாக மட்டுமே பாடத் தெரிந்தவர்.

தீட்சிதரின் ‘ஸ்ரீ மாத்ருபூதம்’ (கன்னட ராகம்) கீர்த்தனையை ஆலாபனை செய்து பாடும்போதே ரா.மூர்த்தியின் கீர்த்தி போகப் போக இன்னும் பெரிசாகும் என்பது விளங்கியது.

சங்கராபரணம், தோடி, கல்யாணி, தர்பார் என்று ராகங்களில் தாவித் தாவி ஆலாபனை செய்தார். தானமும் அப்படியே கச்சிதமாகப் பாடினார். ‘அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு சங்கரா பரணனை’ என்ற பல்லவி வரிகளையும், தொடர்ந்து ஸ்வரங்களையும் நான்கு ராகக் கூட்டணிக்குத் தலைமையேற்றுப் பாடகர் வழிநடத்த, அவருக்கு அமித்ஷா மாதிரி நிழலாகப் பின்தொடர்ந்து வியூகம் வகுத்துக் கொடுத்தார் ஸ்ரீராம்குமார். இந்தப் பாடகரிடம் இன்னும் சிறிது மசாலா சேர்க்கும்படி சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. இவருக்கு இந்தியா, எகிப்து என்று எந்த நாட்டு வெங்காயமும் பிடிக்காது!

ஸ்ரீராம்குமார் அருமையான பக்க வாத்திய வயலின் வித்வான். ஞானமிக்கவர். வாய்ப்பாட்டில் நிறைய இளசுகளுக்கு ஆசான். சங்கீத ஐயப்பாடுகளைக் களையக் கூடியவர். கச்சேரிகளில் பாடகர்களுக்கு வலுவான இடது கரம். எதிர்கால சங்கீத கலாநிதி?

ரஞ்சனி - காயத்ரி
ரஞ்சனி - காயத்ரி

சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடங்கி வைத்த மியூசிக் அகாடமி விழாவில் விருதாளர் எஸ்.சௌம்யாவின் ஏற்புரை. அதில் முன்மொழியவும், ஆமோதிக்கவும் மேடையில் அமர்ந்திருந்தவர்களை ‘உமையாள்புரம் சிவராமன் மாமா, சுதா ரகுநாதன் அக்கா’ என்றெல்லாம் ‘ஆத்து’ பாஷையில் சௌம்யா விளித்தது odd ஆக இருந்தது. 2020 நெருங்கும் வேளை இது!

இங்கு காலை நேரக் கச்சேரியில் நாகஸ்வரம் வாசித்து, வியக்க வைத்தவர் 21 வயது இளம்புயல் மயிலை எம்.கார்த்திகேயன். இவருடைய முதல் குரு தந்தை மயிலை எஸ்.மோகன்ராஜ். நியூஜெர்ஸி குருவாயூரப்பன் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்தான வித்வானாக இருக்கிறார். வியாசர்பாடி கோதண்டராமனிடமும் வாசிப்பு கற்றிருக்கிறார் கார்த்திகேயன். சட்டைக்கு மேல் டாலர் வைத்த செயின், விரல்கள் நிறைய மோதிரம் எல்லாம் இவர் அணிவதில்லை - இதுவரை! காதுகளில் கடுக்கண் மட்டுமே இவருக்கு ஆபரணம்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

பைரவி வர்ணத்துடன் ஆரம்பித்த கச்சேரியில் கார்த்திகேயன் வாசித்த ஊர்மிகா, தோடி, ஆனந்த பைரவி என ஒவ்வொன்றும் கானாமிருதம்.. வாசிக்கும்போது மாதிரிக்குக் கூடப் பிசிர் ஒலிக்காமல் இனிமையான குழைவுகளும் சங்கதிகளும் தாலாட்டுகின்றன. கேட்போர் கூடவே பாடிவரும் அளவுக்குக் கீர்த்தனை வரிகள் புரிகின்றன. ராகம் - தானம் - பல்லவிக்குக் காம்போதி (லகு), சுமனேசரஞ்சனி (த்ரிதம்) என்று இரு ராகங்களை எடுத்துக்கொண்டு மாறி மாறி கிறங்கடித்தார்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் உருப்படிகள் வாசித்தார் கார்த்திகேயன். இவற்றில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டு ஏதாவது ஒரு ராகத்தை விரிவாக ஆலாபனை செய்திருக்க வேண்டும். வீணைக்கு தானம் மாதிரி, ராஜவாத்தியமான நாகஸ்வரத்துக்கு ஆலாபனை. எல்லா ராகங்களையும் டிரெய்லர் மாதிரியாக துளித்துளி வாசித்து விட்டுக் கடந்து செல்லாமல், மேஜர் ராகத்துக்கு முக்கால் மணி, ஒரு மணி நேரம் ஒதுக்கி அதன் முப்பரிமாணங்களையும் வாசிப்பில் வெளிப்படுத்தினால் ஒரு வாரத்துக்கு அது காதுகளில் ஒலித்த வண்ணம் இருக்கும். அகாடமி கச்சேரியில் இதுமட்டும் மிஸ்ஸிங்!

டாக்டரிடம் போனேன். 103 டிகிரி காய்ச்சல். உடம்பு பூராவும் செம வலி. ரத்த அழுத்தமும் தாறுமாறாக எகிறியிருப்பது போல் உணர்ந்தேன். டாக்டர் மேலோட்டமாக சோதித்துவிட்டு பிரிஸ்கிரிப்ஷன் எழுதி நீட்டினார். பார்த்தபோது எனக்கு எதுவும் புரியவில்லை.

“இந்த மாத்திரை எங்கே கிடைக்கும் டாக்டர்?”

“சபாக்களில்!”

“புரியல டாக்டர்...”

“ஒண்ணுமில்லே... ரஞ்சனி - காயத்ரின்னு எழுதியிருக்கிறேன்... அடுத்து அவங்க எங்க பாடறாங்கன்னு பார்த்து அங்கே போங்க... பாடறதை மூணு மணி நேரம் கேளுங்க... உங்க நோயெல்லாம் போயே போயிடும்!” என்றார் டாக்டர்.

எடுத்த எடுப்பில் கமாஸ், கல்யாணி, கரகரப்ரியா என்று ‘க’ வரிசை ராகங்களுடன் வாணி மகால் கச்சேரியைத் தொடங்கி ஹாட்ரிக் அடித்தார்கள் ராகா சகோதரிகள். ஒவ்வொன்றிலும் பாவம் மிதந்து வந்தது. நவரசமும் நர்த்தனமாடின. சாருகேசியில் ‘ஆடமோடி கலதே’வுக்கான ஸ்வரங்களில் இருவரும் மாறிமாறி வேகமெடுத்தபோது அதிரடி டென்னிஸ் சகோதரிகள் செரீனா - வீனஸ் மறுபடியும் நினைவுக்கு வந்தார்கள்! காயத்ரி தனியாகப் பாடும்போது காதுகளை அவருக்குக் கொடுத்துவிட்டு, ரஞ்சனிமீது கண்களை நிலைநிறுத்தி அவருடைய ரியாக்‌ஷனைக் கவனித்தால் அது அவ்ளோ அழகு!

பிரதானமாக பூர்விகல்யாணி. அந்த ராகத்துக்கான லட்சணங்களையும், லட்சியத்தையும் அலட்சியம் செய்யவில்லை. சர்க்கஸ் வேலை செய்து சிக்குபுக்கு ரயில் ஓட்டவில்லை. மிகத் தெளிவாக அவர்கள் பாடிய ஆலாபனை வின்டேஜ் ரகம். சியாமா சாஸ்திரியின் ‘நின்னு வினாக மரி திக் எவர...’ கீர்த்தனை. ‘சிந்ததீர்ஸி வேகமே புரோசுடுகு...’ வரிகளில் நிரவலும், ஸ்வரங்களும்... இருவரும் பாடி முடித்தபோது பிரமாண்டப் பந்தலில் இளைப்பாறிய உணர்வு.

ராமகிருஷ்ணன் மூர்த்தி
ராமகிருஷ்ணன் மூர்த்தி

அடுத்து வந்தது ராகேஸ்ரீ. ஆரம்பத்தில் இந்த இந்துஸ்தானி ராகத்தை Base குரலில் ரஞ்சனி பாடியது உருக்கத்தின் உச்சம். பாதி வழியில் ரிலே ரேஸ் மாதிரியாக அதை வாங்கி, வளர்த்திச் சென்றார் காயத்ரி. ராகமாலிகையாக தன்யாசியை மூத்தவரும், கம்பீரநாட்டையில் கிரகபேதம் செய்து ஹம்சநாதத்தை இளவலும் நிறைவு செய்த போது அரங்கம் மகிழ்ந்து ஆரவாரித்தது.

இறுதியில் மராத்தி அபங் கிடையாது. பதிலாக இந்தியில் மீரா பஜன் - அபங் சாயலில்.

வெளியே வந்தபோது, டாக்டர் சொன்னதுபோல் ஜுரமும் இன்னபிற இம்சைகளும் இருந்த இடம் தெரியவில்லை!

- பக்கங்கள் புரளும்...