
சங்கராபரணத்தை மந்த்ர ஸ்தாயியில் தொடங்கினார் சந்தீப்.
மேற்கு நோக்கிச் சாய்ந்து மறையத் தயாராகிக் கொண்டிருந்தது சூரியன். நல்லவேளை, இரண்டு நாள்களாக மழை இல்லை. கையில் குடையில்லாமல் கச்சேரிகளுக்குப் போக முடிந்ததில் கைலாசத்துக்கும் மகிழ்ச்சி. நித்தியம் சந்திக்கும் நட்பு வட்டத்துக்கு இவர் கைலாஷா! கும்பகோணம் பக்கத்தில் ஒரு சிறு கிராமம் இவர் பிறந்து வளர்ந்த ஊர். ஏழு தலைமுறையாக சங்கீதம் தமது பரம்பரைச் சொத்து என்று திமிருடன் நினைக்கும் காவேரி ரத்தம்!

நாரத கான சபாவுக்குள் கைலாசம் நுழைந்தபோது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மேடையில் கொஞ்சம்போல தாடியுடன் சந்தீப் நாராயணன், ஆபோகியில் சபாபதியின் பெருமை பாடிக்கொண்டிருந்தார். நிறைய தாடியுடன் மிருதங்கம் சாய்கிரிதர். ஒரிஜினலாக பத்ரி சதீஷ்குமார் வாசித்திருக்க வேண்டும்; ‘அவருக்குப் பதிலாக இவர்!’ கழுத்து வளைத்து எட்டிப் பார்த்தார் கைலாசம். கடம் குருபிரசாத். ஆபேரி ஸ்வரங்களின்போது ‘வரதுவுக்கு சமானம் வேறு ஆகுமா’ என்று கைலாசத்தைப் பாட வைத்தது, வரதராஜனின் சரளமான இனிமையான வயலின் வாசிப்பு.
சங்கராபரணத்தை மந்த்ர ஸ்தாயியில் தொடங்கினார் சந்தீப். அவருடைய குரல் ஸ்கூபா டைவிங் மாதிரி ஆழம் போனது. ‘சொர்ணத்துக்கு ஆபரணம்னா உயிராச்சே’ என்று தன் மனைவியை நினைத்துக் கொண்டார் கைலாசம். ஆலாபனையை மூன்று காலங்களிலும் பாடி முடித்தார் சந்தீப். பிளாஸ்கிலிருந்து தண்ணீர் எடுத்து இரண்டு மிடறு குடித்தார். இந்த சீசனில் ஒருமுறை பயன்பாட்டுக்குப் பிறகு கடாசிவிடக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று சபா நிர்வாகிகளும் இசைக் கலைஞர்கள் சிலரும் பிரசாரம் செய்துவருவது கைலாசத்துக்கு நினைவு வந்தது.

“ஏன் சார்... சங்கராபரணம் சந்தீப் நல்லா பாடினார்தானே?” என்று கைலாசத்திடம் கேட்டார் பக்கத்து இருக்கைக்காரர்.
“முதல் பாதி ரொம்ப நல்லா பாடினார்... பொடி சங்கதிகள் பளீர்னு வெளிப்பட்டது. அங்கங்கே கள்ளக்குரலில் இவர் பாடறது ரொம்ப சுகமா இருக்கு... பின்பாதிதான் சுமார்... க்ளைமாக்ஸ் இழுவை... கத்தரி போட்டிருக்கணும்” என்றார் கைலாசம். இடப்பக்கம் இருப்பவர் முறைத்தார். கச்சேரிக்கு நடுவே தொண தொணவென்று யார் பேசினாலும் இவருக்குப் பிடிக்காது!
‘ஸ்வர ராக ஸுதா’ பாடல், ‘மூலாதார...’வில் நிரவல், ஸ்வரம், 17 மணித்துளிகளுக்குத் தனி எல்லாம் முடிந்து வெளியே வந்தார் கைலாசம். நன்கு இருட்டிவிட்டிருந்தது.
நாரதகான சபா மினி ஹாலைப் புதுப்பித்திருக் கிறார்கள். மேடை அகலமாகியிருக்கிறது. நாற்காலிகள் அனைத்தும் புத்தம் புதுசு. சவுண்ட் சிஸ்டம் தலைகுப்புற மாறியிருக்கிறது. ‘பழையன கழிந்து, புதியன புகுதல்’ எப்போதுமே பொங்கலுக்குப் புது டிரஸ் எடுப்பதுபோலதான்! என்ன இருந்து என்ன, கச்சேரி நன்றாக அமைய வேண்டுமே! ஹாலுக்கும், கேட்கும் ஆளுக்கும் கொடுப்பினை இருந்தால் இது சாத்தியம்.

சபாவின் மினி சீரிஸில் டி.கலைமகன் பாடினார். சிவப்பழமாக நெற்றிநிறைய திருநீற்றுக்கீற்று. வில்லுப்பாட்டுப் புகழ் சுப்பு ஆறுமுகத்தின் பெயரன். கலைமகனுக்குக் கணீர் குரல். ஆழ்வார்பேட்டையில் பாடினால் அச்சரப்பாக்கம் வரை கேட்கும். ஆனால், பாவம் துளியும் இல்லை. சில இடங்களில் பாடல் வரிகளை வசனமாகப் பேசுவதுபோன்ற உணர்வு. இன்னொரு பக்கம், முதல் அரை மணி நேரத்துக்கு செம சவுண்ட். குறிப்பாக, மிருதங்கத்தின் ‘தொப்பி’யிலிருந்து வந்த ஒலி, இதயம் பலவீனப் பட்டவர்களை பாதித்திருக்கும்! பாடுபவர்களும், பக்கவாத்தியக் கலைஞர்களும் வால்யூமை அதிகமாக்க சைகை மூலம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்தான், சபாக்களில் ஒலியைக் கட்டுப்படுத்துபவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடப் பழகணும்.
ஆபோகியில் சபாபதிக்கு, பைரவியில் அம்ப காமாட்சி, சிவலோக நாதனைக்கண்டு, ஏன் பள்ளி கொண்டீரய்யா, பந்துவராளியில் ‘ரகுவர’ நந்நு’ என்று கலைமகன் பாடிய எல்லாப் பாடல்களுமே ஏற்கெனவே ‘ஹிட்’ அடித்தவை. சௌக்கியமாகவும், உருக்கமாகவும் பாட வேண்டியவை. இவற்றில் கலைமகனுக்கு பந்துவராளிக்கு மட்டுமே பாஸ் மார்க்.
கலைமகன் மேடையைக் காலி செய்ததும், அதே மேடையேறினார் சாருமதி ரகுராமன். வயலின் ஸோலோ. டெல்லி சாய்ராம் மிருதங்கம், கிருஷ்ணா ஸ்ரீராம் கடம். வயலின் மேதை டி.என்.கிருஷ்ணனிடம் கற்றறிந்தவர் சாருமதி. ஆசானைப்போலவே இவரது Bowing காதுகளை வருடி ஒத்தடமிடும். அன்றும் இட்டது. தர்பார் வர்ணத்தில் ஆரம்பித்து லெஜண்ட் லால்குடியின் தில்லானாவுடன் முடித்தார்.

மாயாமாளவகௌள, கமாஸ், கல்யாணி என்று சாருமதி வாசித்த ஒவ்வொரு ராகமும், மோடி - சீன அதிபர் விசிட்டின்போது அரிதாரம் பூசப்பட்ட ECR சாலையில் பயணித்த மாதிரி சுகம் தந்தன! நளினகாந்தி ராகம் வாசித்துவிட்டு, தாளம் முடித்து, ‘மகிம தெலிய தரமா ஸ்ரீராமா..’ என்ற பல்லவி வரிகளும், ராகமாலிகையில் ஸ்வரங்களும் வாசித்து முடித்தபோது நல்ல வயலின் வாசிப்பின் மகிமை உணர முடிந்தது. பிரபலங்களுக்குப் பக்கவாத்தியமாக நிறையவும், ஸோலோவாக கம்மியாகவும் வாசித்து வருகிறார் சாருமதி. இன்னும் சில வருடங்களுக்கு இப்படியே தொடரட்டும்.
ஒவ்வொரு அயிட்டத்தையும் வாசித்து முடித்ததும்தான் அதன் ராகம் - பாடல் - தாளம் - இயற்றியவர் பெயர்களை அறிவிக்கிறார் சாருமதி. வாசிப்பதற்குமுன் கொடுக்க வேண்டிய விவரங்கள் இவை. கல்யாணப் பந்திகளில் சாப்பிட்டு முடித்தவுடன் மெனு கார்டு நீட்டுவதில்லையே!

இந்த வருடத்தில் தங்கள் வீட்டிலிருந்து பெயர்ந்து வேறு வீடு சென்றமர்ந்த ராகு, கேது, சனி, குரு போன்ற கிரகங்கள் கடலூர் ஜனனிக்கு சாதக பலன்களையே கொடுத்திருக்கின்றன! முக்கியமாக, கலைமாமணி விருது தவிர, ‘சிவ மகிமை’ ஆல்பத்தில் இவர் பாடியுள்ள ‘புதிய உலகம் மலரட்டுமே’ பாடலுக்கு ‘அமைதிப் பாடல்’ விருதும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலிருந்து கிடைத்திருக்கிறது. வேறென்ன வேணும்?!
மறைந்த பாடகர் எம்.பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி ஜனனி, பாரதிய வித்யா பவனில் கச்சேரி. இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு கேட்கும்போது குரலில் மெச்சூரிட்டி லெவல் கூடிவருவது தெரிகிறது.
வலஜி ராகத்தில் லேசாக உருக வைத்துவிட்டு, பாபநாசம் சிவனின் ‘பாதமே துணை.’ பொதுவாக ஆலாபனைகளில் ஒவ்வொரு சங்கதியையும் முடிக்கும்போது ‘ப்’ என்று முடிவதுபோல் ஒலிப்பதை இவர் தவிர்க்க வேண்டும். அதே மாதிரி மேல்காலத்தில் பயணிக்கும்போது குரலுக்கு அனுமதிக்கப்பட்ட லெவலைவிட மேலேறிச் செல்கிறார். தடுக்கி விழ வாய்ப்பு அதிகம்.
அதேபோல், அட்சரம் புரியாத அந்த Fast motion ஸ்வரங்கள் எதற்கு? அது குருஜி பாலமுரளிக்கு மட்டுமேயான ஸ்வர விளையாட்டு!
கரகரப்ரியா மெயின். தியாகராஜரின் ‘சக்கநி...’ கீர்த்தனை. கடைசி 27 நிமிடங்களில் விரிவாகப் பாட முடியாமல் ஜனனிக்கு மூச்சுமுட்டியது நிஜம்.

ஆல்பங்களுக்காக ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நிறைய பாடிவருவதால் மேடையிலும்கூட இரு காதுகளிலும் Plug பொருத்திக்கொள்கிறார் இவர். நிமிடத்துக்கு ஒருமுறை அவற்றை அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறார், காதுகளுக்குள் பூச்சி நுழைந்துவிட்ட மாதிரி!
தொடக்க விழாவுக்குப் பிறகு சீனியர் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜனைப் பாட வைத்ததோடு, அரை மணி நேரம் தாமதமாக அவருக்கு மேடை கொடுத்தார்கள். ஓ.எஸ்.டி-யும் ஒன்றரை மணி நேரத்தில் கச்சேரியை முடித்துக் கொண்டுவிட்டார். #முத்ரா25!
கைவசம் இருப்பது இரண்டே கால் மணி நேரம். அதற்குள் தன் முழுத்திறமையை வெளிப்படுத்துவது குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவுக்குப் பெரிய சவால். அவ்ளோ ஞானம் இவருக்கு. மிருதுவான குரல். மேடையில் உற்சாகம் ஊற்றெடுக்கும் உடல்மொழி.
தியாகராஜரின் ‘ஸரஸ ஸாம தான பேத’ பாடலை லிஸ்டில் சேர்த்துக்கொண்டால், புரட்டி எடுக்க அதில் ஸ்கோப் எக்கச்சக்கம். காபிநாராயணி ராகத்தை ஆலாபனை செய்து, ‘ஹிதவுமாட...’ வரியில் நிரவல் செய்து, ஸ்வரங்களில் வூடு கட்டி விளையாடணும் - மதுரை மணி ஐயர் மாதிரி! இவை எதையுமே செய்யவியலாமல், ஜஸ்ட் துக்கடா லெவலில் பாடலை மட்டும் பாடி பாலமுரளி கடந்து சென்றது ஏமாற்றம்!

அமீர்கல்யாணியைக் கையிலெடுத்தார். கல்யாணிக்குக் குல்லா போட்டது மாதிரியான இந்துஸ்தானி முலாம் பூசப்பட்ட ராகம். இதை பாலமுரளி ஆலாபனை செய்த விதம் கேட்கக் கேட்கத் திகட்டாதது. தானம் செய்வதற்கு முன்பாக, விருத்தமாக இவர் பாடிய நாராயணீயம் ஸ்லோகம், வாவ்... வாவ்! வயலினில் ஹெச்.என்.பாஸ்கர் கூடவே குழைத்துக் கொண்டு வர, ‘சாயங்காலே வனான்தே...’ என்று ஆரம்பித்து வரும் எட்டு வரிகளில் அமீர்கல்யாணியின் நவரசங்களையும் வெளிப்படுத்திக் கரகோஷம் அள்ளினார் பாலமுரளி. அது மட்டுமே அன்றைய தினத்துக்குப் போதுமானதாக இருந்தது.
இந்தக் கச்சேரி முருகனின் மறு பெயர் கொண்ட சபாவுக்காக, கலக முனியின் பெயருடைய ஹாலில் நடந்தது. எந்த சபா, எந்த ஹால் என்பதை முதலில் கண்டுபிடித்துச் சொல்லும் நபருக்கு சஞ்சய் பாடிய ‘தமிழும் நானும்’ ஒலிநாடா அனுப்பி வைக்கப்படும்!
- பக்கங்கள் புரளும்...