
தமிழ் சினிமாவின் ஃபீல்குட் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். இசையிலும் சரி, குரலிலும் சரி, ஒரு மென்சோகம் இழையோடும். செல்வராகவன் - தனுஷ் இணையும் புதுப்படத்துக்காக மெட்டுகள் அமைத்துக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.
`` ‘பவர் பாண்டி’, ‘விஐபி-2’ அடுத்து செல்வராகவன் படம் எனத் தொடர்ந்து தனுஷுடன் இயங்கக் காரணம் என்ன?’’
“ ‘ஜோக்கர்’தான் காரணம். அந்தப் படம் வெளியாகி கொஞ்ச நாள்ல இயக்குநர் ராஜு முருகன் ‘தனுஷ் நம்ம எல்லோரையும் பார்க்கணும்னு சொல்றார்’னு கூப்பிட்டார். அப்படித்தான் தனுஷோடு முதல் பழக்கம். திடீர்னு ஒருநாள் வீட்டுக்கு வந்தார். அன்னைக்குத்தான் நாங்க தனியா சந்திச்சோம். அதுக்குப் பிறகு இசை, சினிமான்னு நிறைய பேசினோம். சில பாடல்களைப் பத்திப் பேசும்போது, இந்தப் பாட்டுல இந்த இன்ஸ்ட்ரூமென்ட்டை நீங்க கொஞ்சம் சத்தமா கேக்க வச்சிருக்கலாமேன்னு சொன்னார். ‘இந்த சத்தம் ரேடியோவில, கார்ல கேட்கும்போது சரியா ரீச் ஆகாது’ன்னு அவர் சொன்னப்பதான் புரிஞ்சது. ‘இளையராஜா பாட்டெல்லாம் கேளுங்க. ஒவ்வொரு சவுண்டும் கேட்கும். கார், பஸ், லாரி, எல்லாத்துலயும் ராத்திரி, பகல்னு எல்லா நேரத்துலேயும் கேட்கும். அதுதான் வேணும். என்ன டெக்னாலஜி, என்ன சவுண்டு சிஸ்டம் வந்தாலும், இப்பவும் நைட்டானா அவரு பாட்டுதான் கேக்குது’னு தனுஷ் சொன்னார்.”
“தனுஷ் இளையராஜா ரசிகரா?”
“தனுஷ் வெறித்தனமான இளையராஜா ரசிகர். ‘என் படத்துல அந்த மாதிரி ஒலிகள்தான் இருக்கணும். நான் ஒரு தீவிர இளையராஜா ரசிகன். முடிஞ்சா என்னைத் திருப்திப்படுத்துற மாதிரி ட்யூனைக் கொடுங்க’ன்னு சவால் விட்டார். அப்படி வந்த டியூன்தான் ‘பார்த்தேன்’ பாடல். நானும் அவரும் முக்கால்வாசி நேரம் கேக்குறது இளையராஜா பாட்டுதான். அவர் பாடல்களைக் கேட்டுக் கேட்டு நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம்.”

“அடுத்து ‘தனுஷ்-செல்வா’ படம் பண்றீங்க. யுவன், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ், அனிருத்னு நிறைய இசையமைப்பாளர்களைப் பார்த்த ஒரு இயக்குநர் செல்வராகவன். ஒரு ட்யூனை அவர் எப்படி வாங்குவார்?”
“இதுவரை ரெண்டு பாட்டு முடிச்சிருக்கோம். செல்வா தனக்கு என்ன வேணுமோ அது கிடைக்கிற வரை விடாதவர். மணிரத்னம் பத்தி ஒண்ணு சொல்லுவாங்க. திரைக்கதை எழுதும்போது அவருக்கு ஒரு காட்சி மனசுக்குள்ள ஓடும்ல, அதுதான் ஒளிப்பதிவு ஆகும். அதே மாதிரி, ஒரு பாட்டு செல்வராகவன் மனசுக்குள்ள கேக்கும்ல, அதுதான் ஆல்பம். அவரோட டெக்னீஷியன்ஸ்கிட்ட இருந்து அதை எப்படி வாங்குறதுன்னு அவருக்குத் தெரியும்.”
“சிம்புதேவனோட ‘கசடதபற’ எப்படி வந்திருக்கு?”
“சிம்புதேவன் பத்தி எல்லாருக்குமே தெரியும். சிம்புதேவனுடைய திரைக்கதை எப்போதுமே சிறப்பாக இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். ஆறு இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், கதைகள். இதுவரை பண்ணமுடியாத ஒண்ணைத் தன்னோட காலகட்டத்துல தமிழ் சினிமாவுக்காகப் பண்ணியிருக்கார். நான் இந்தப்படத்துல ஒரு பாட்டும், ஒரு கதைக்கான பின்னணி இசையும் பண்ணியிருக்கேன்.”