மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 2: “எங்கள மாதிரி லூட்டியான தம்பதியைப் பார்க்கிறது கஷ்டம்!” - பாடகி சுஜாதா

மோகன் - சுஜாதா
பிரீமியம் ஸ்டோரி
News
மோகன் - சுஜாதா

இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்

‘புது வெள்ளை மழை’யாக திரையிசையில் இன்னிசை கானம் பொழிந்த சுஜாதா, தனித்துவமான குரல்வளம் கொண்ட பின்னணிப் பாடகி. ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘என் வீட்டுத்தோட்டத்தில்’, ‘தித்திக்குதே’, ‘ஆசை ஆசை இப்பொழுது’, ‘ஏதோ ஒரு பாட்டு’ என பல தலைமுறையினரின் ஃபேவரைட் பாடல்கள் பலவும் சுஜாதாவின் புகழ்பாடுகின்றன.

இவரின் கணவர் கிருஷ்ண மோகன், குழந்தைகள்நல மருத்துவர். இவர்களை ஒன்றுசேர்த்ததுடன், இந்த ஜோடியின் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கிறது இசை. இவர்கள் இணைந்து கொடுக்கும் முதல் தமிழ்ப் பேட்டி என்பதால் ஆவலும் சுவாரஸ்யமும் கூடுகிறது.

“பின்னணிப் பாடகர் யேசுதாஸ் அண்ணன், என் குடும்ப நண்பர். அவரின் கச்சேரியில ஏழு வயசு குழந்தையா சுஜாதா பாடினப்போதான் இவரை முதல் தடவையா பார்த்தேன். எங்க ரெண்டு பேருக்கும் 12 வயசு வித்தியாசம். முதல் சந்திப்புலயே என்னை ‘அங்கிள்’னு கூப்பிட்டாங்க. ரெண்டு குடும்பமும் நட்பாச்சு. இருவீட்டார் ஏற்பாட்டுல கல்யாணம் முடிவாச்சு” கரம்பற்றிய கதையுடன் மோகன் நிறுத்த...

“எங்கம்மா சிங்கிள் பேரன்ட். கட்டுப்பாடான குடும்பம். 17 வயசுலயே எனக்கு நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்க. சட்டப்படி நான் மேஜர் ஆகணும்னு ஒரு வருஷம் காத்திருந்து இவர் என்னைக் கட்டிக்கிட்டார். இதைவிடவும் பிரமாதமான சம்பவம் ஒண்ணு மோகன் குடும்பத்துல நடந்திருக்கு” என்றபடியே கணவரைப் பார்த்து நையாண்டியாகச் சிரிக்கிறார் சுஜாதா.

சுஜாதா
சுஜாதா

“என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 1947-ல கல்யாணம் முடிவாகியிருக்கு. அம்மாவுக்குப் பிடிச்ச பாடகியான டி.கே.பட்டம்மாள் அம்மாவின் இசைக்கச்சேரியோடுதான் கல்யாணம் நடக்கணும்னு அவங்க உறுதியா இருந் திருக்காங்க. ஆனா, ரெண்டு வருஷம் கழிச்சுதான் பட்டம்மாளின் தேதி கிடைச்சிருக்கு. அதுவரை காத் திருந்து எங்கப்பாவை அம்மா கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. நல்ல பொண்ணுக் காகவும் இசைக்காகவும் அப்பாவும் நானும் எவ்ளோ காலம்னாலும் காத்திருப்போம்” என்று மோகன் குசும் பாகச் சொல்ல, அதிர்வேட்டுச் சிரிப்பு ஆர்ப்பரித்தது.

“இவரோட வேலை விஷயமா ரெண்டு பேரும் மூணு வருஷங்கள் தனித்தனியா இருந்தோம். என் படிப்பு முடிஞ்சதும் சென்னைக்குக் குடி வந்தோம். 1984-ல சென்னை அப் போலோ ஆஸ்பத்திரியில இவர் டாக்டரா வேலை செஞ்சார். அப்போ சிகிச்சைக்காக அங்க அனுமதிக்கப் பட்ட எம்.ஜி.ஆர் சாரை சில மாதங்கள் இவர் கவனிச்சுக்கிட்டார். முறைப்படி மியூசிக் கத்துகிட்ட இவரும் நல்லா பாடுவார். மோகன் குடும்பத்தினரின் ஊக்கத்தாலதான் மறுபடியும் சினிமா வுல பாட ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல ரெண்டு முறை எனக்கு கரு கலையவே டிப்ரெஷன்ல இருந்தேன். மூணாவது முறை கர்ப்பமானப்போ கரியருக்கு பிரேக் கொடுத்துட்டு, பெட் ரெஸ்ட்லயே இருந்தேன். சுசீலாம்மா, வாணிம்மா, யேசுதாஸ் அண் ணன், ஜெயச்சந்திரன் அண்ணன் ஆகியோர் கலந்து கிட்டு பாடிய ஒரு கச்சேரிக்கு ஆசையா போனேன். மறுநாளே பொண்ணு பிறந்துட்டா...” சுஜாதா பூரிப்புடன் கூறும் இவர்களின் ஒரே மகள் ஸ்வேதா மோகன், முன்னணிப் பாடகியாக வளர்ந்து வருகிறார்.

மலையாள சினிமாவில் பாடிக்கொண்டிருந்த சுஜாதாவை, ‘கவிக்குயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அந்தப் படத்தில் சுஜாதாவின் பாடல் இடம்பெறா விட்டாலும், ‘ஜானி’யில் ‘ஒரு இனிய மனது’ பாடலால் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார். ஏ.ஆர்.ரஹ் மானுக்கு அறிமுகம் கொடுத்த ‘ரோஜா’ திரைப்படம் தான், சுஜாதாவுக்கும் கம்பேக் வாய்ப்பாக அமைந்தது. ரஹ்மானின் இசையில் அதிக பாடல்கள் பாடிய பாடகியான சுஜாதா, புகழுடன் இருந்த நேரத்தில் அவரின் இசையில் பிற பாடகர்களுக்கும் பாகு பாடின்றி கோரஸ் பாடியது குறிப்பிடத்தக்கது.

“ரஹ்மான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்பே, அவருக்கு நிறைய விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ், டிராக் பாடினேன். ‘சேச்சி’னு என்கிட்ட ப்ரியமா இருப்பார். அவரின் எல்லா வாய்ப்புமே ஸ்பெஷலா இருக்கும். அதனாலதான், ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’, ‘கண்ணாளனே’, ‘தமிழா தமிழா’னு பல பாடல்களுக்கு கோரஸும் பாடினேன். பலரும் ஆச்சர்யமா பார்க் கும் ரஹ்மானையே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வெச்சவர் இவர்...” என தன் கணவர் செய்த தமாஷை நினைவூட்டுபவர்...

“ஃபிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில ரஹ்மானின் கச்சேரியில் நான் பாடிட்டிருந்தேன். அனுமதிச்சீட்டு இல்லாததால ஸ்டேஜ் ஓரத்துல கோரஸ் சிங்கர்ஸ் கூட்டத்துல மோகன் புகுந்துட்டார். ‘ஊ ல ல லா’ பாடலை கோரஸ் சிங்கர்ஸோடு இவர் தப்பா டிராக் பாடவே, எல்லோருக்கும் ஷாக். ‘யார் அது?’னு ரஹ்மான் இவரை மிரட்சியோட பார்த்ததை நினைக்கும்போதெல்லாம் வயிறு வலிக்கிற அளவுக்குச் சிரிப்பேன்” என்று சுஜாதா சொல்ல, மீண்டும் அங்கே சிரிப்பு மழை.

“நாங்க ஃபிரெண்ட்ஸாதான் பழகுவோம். சுஜாதா உரிமையோடு பெயர் சொல்லி என்னைக் கூப்பிடு வாங்க. எங்களுக்குள்ள அப்பப்ப சண்டைகள் வரும். இவங்க எவ்ளோ கோபமா பேசினாலும் பதிலுக்கு நான் எதுவுமே பேச மாட்டேன். அதனால, இன்னும் கோபமாகி ரூமுக்குள்ள போயிடுவாங்க. நான் அமைதியா சிரிச்சுட்டு கடந்துபோயிடுவேன்” என்று மனைவியைச் சமாளிக்கும் தந்திரம் சொல்லிப் புன்னகைக்கிறார் மோகன்.

சுஜாதா - மோகன்
சுஜாதா - மோகன்

தமிழ் சினிமா முன்னணி இசையமைப் பாளர்கள் பெரும்பாலானோருக்கும் ஏராள மான ஹிட் பாடல்கள் பாடியிருக்கும் சுஜாதா வுக்கு, இளையராஜாவின் இசையில் அதிகம் பாடாத வருத்தம் உண்டாம்.

“இளையராஜா சார் மியூசிக்ல பாட பல வருஷமா வாய்ப்பு கிடைக்காத நிலையில, ‘பூமணி’ படத்துல அவர்கூட டூயட் பாட மறு படியும் வாய்ப்பு கிடைச்சது. ராஜா சாருக்கு 75-க்கும் அதிகமான பாடல்கள் பாடியிருந் தாலும், ‘மஞ்சள் பூசும் வானம்’, ‘ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே’ உள்ளிட்ட சில பாடல்கள்தான் பிரபலமாச்சு. தென்னிந்தியா வுல பலரோட இசையில பாடினாலும், தமிழ்ல ரஹ்மான் மாதிரி, மலையாளத்துல எனக்கு நிறைய ஹிட்ஸ் கொடுத்தது வித்யா சாகர் சார்தான்” பெருமிதத்துடன் சொல் கிறார் சுஜாதா.

‘பூ பூக்கும் ஓசை' (மின்சார கனவு) பாடலுக் காக சுஜாதாவின் பெயர் தேசிய விருதுக்குத் தேர்வாகி, கடைசி நேரத்தில் அவருக்கு அந்த விருது கிடைக்காமல் போனதாகப் பேச்சு உண்டு. இதுகுறித்து கேட்டதும் உரத்த குரலில் ஆரம்பித்தார் மோகன்.

“சுஜாதா பிஸியா பாடிட்டிருந்த காலத்துல தேசிய விருதுக்குப் பெரிய மதிப்பு இருந்துச்சு. என் மனைவிங்கிறதுக்காகச் சொல்லலை. சுஜாதாவோட திறமைக்குத் தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைச்சிருக்கணும். அதனால தனிப்பட்ட முறையில எனக்கு ஆதங்கம் உண்டு. சுஜாதா பல மொழிகள்லயும் 7,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி னது முக்கியமான சாதனைதான். 20,000-க்கும் அதிகமான கச்சேரிகள்ல நான் கலந்துகிட்டதும் சாதனைதானே...” என்று தன் புகழையும் பதிவு செய்கிறார் குறும்பாக.

“பிஸியா பாடிட்டிருக்கும்போது, இவருக் கான தேவைகளைச் சரியா என்னால செய்ய முடியாம போயிருக்கு. குடும்ப விசேஷங்கள்ல நான் கலந்துக்க முடியாததால, எனக்காக இவர் பல இடங்கள்ல திட்டு வாங்கியிருக்கார். ‘நல்லா சமைக்கணும்; நீளமா முடியிருக் கணும்’ங்கிறதுதான் மனைவியா வரப்போற வருக்கான இவரின் எதிர்பார்ப்புகளா இருந் திருக்கு. அந்த விஷயங்கள் உட்பட என்னால நிறைய ஏமாற்றங்களைப் பார்த்தவர், கல் யாணத்துக்கு அப்புறமா தனிப்பட்ட ஆசைகள் எதையுமே வெச்சுக்கலை. கிச்சன் புகை என் குரல்வளத்தைப் பாதிக்கிறதால, ‘அந்தப் பக்கமே நீ போகக் கூடாது’னு என் மாமியார் கண்டிப்போடு சொல்வாங்க. அதனால, கல்யாணமாகி 41 வருஷத்துல ரெண்டு முறைதான் இவருக்கு சமைச்சுக் கொடுத் திருக்கேன். ஆனா, எதுக்காகவும் இவர் என்மேல குறைப்பட்டுகிட்டதேயில்லை” - கசிந்துருகும் சுஜாதாவைக் கட்டியணைக் கிறார் மோகன்.

“ஸ்வேதா குழந்தையா இருந்தப்போ அவளோட நேரம் செலவிட முடியாம வருத்தப்பட்டிருக்கேன். இளைய தலை முறைக்கு வழிவிட்டு நான் பாடுறதை இப்போ குறைச்சுக்கிட்டேன். எங்கம்மா ஸ்வேதாவை வளர்த்து ஆளாக்கினதுபோல, எங்க பேத்தி ஸ்ரிஷ்டாவின் உலகத்துல நாங்க ரெண்டு பேரும்தான் அதிகமான நேரத்தைக் கொடுக் கிறோம். இவரும் வீட்டிலிருந்தபடியே மெடிக்கல் கன்சல்டன்சி மட்டும் பார்க்கிறார். குடும்பம், தனிப்பட்ட சந்தோஷம்னு ரொம்பவே ஹேப்பியா இருக்கோம்” என்று மனநிறைவுடன் சுஜாதா சொல்ல, மோகன் ஆமோதித்துச் சிரிக்க, அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றோம்.

- கச்சேரி களைகட்டும்...