சங்கீத சந்நிதி 1: “கோபம், வெறுப்பு இதுக்கெல்லாம் என் வாழ்க்கையில இடமே இல்லை!”- வாணி ஜெயராம்

- இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள் - புதிய பகுதி
எல்லாத் தலைமுறையினரின் அன்றாடங்களிலும் ஏதோ ஒரு வகையில் இசை கலந்திருக்கிறது. அப்படி நம்மைத் தாலாட்டிய, ஆற்றுப்படுத்திய, மகிழ்வித்த, காதல் மயமாக்கிய, கொண்டாட வைத்த இசைக்கலைஞர்கள் பலர். அந்த இசைக்கும் குரலுக்கும் சொந்தக்காரர்கள் தங்களின் கரியர் முதல் பர்சனல் வரை பகிரும் தொடர் இது. முதல் கச்சேரிக்கு நம்மை வரவேற்கிறார் வாணி ஜெயராம்.
‘ஓவர் நைட்டில் புகழ் வெளிச்சம்...’ சினிமாவில் மிக அரிதாகவே கிடைக்கும் இந்தப் பிரபல்யம், 1971-ல் இந்தித் திரைப்படம் ‘குட்டி’ வெளியானபோது, நடிகை ஜெயா பாதுரிக்கும், பின்னணிப் பாடகி வாணி ஜெயராமுக்கும் ஒருசேரக் கிடைத்தது. தென்னகத்தை யும் இந்தி இசையே ஆண்டு கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அந்தக் காலகட்டத்தில், தெற்கிலிருந்து சென்று, பாலிவுட்டில் மிரட்சியை ஏற்படுத்தியவர் இவர்.
நாடறிந்த இசைப் பிரபலமாக ஜொலித்த வாணியின் குரலைப் பட்டிதொட்டியெங்கும் பிரபல மாக்கியது தென்னிந்தியத் திரையுலகம். இவரின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்கள் பலவும் ‘அபூர்வ ராகங்கள்’. ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...’ என கர் னாடக சங்கீதத்தின் மேன்மையைச் சாமா னியர்களுக்கும் புரிய வைத்தவர்,‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறாக’ (முள்ளும் மலரும்) கிராமிய மணம் பரப்பியதுடன், ‘என்னுள்ளில் எங்கோ’ (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) என்று மெலடியால் மனம் வருடி, ‘வா வா பக்கம் வா... (ரஜினி நடித்த தங்க மகன்) என டிஸ்கோவும் ஆட வைத்தார். ‘ஒரே குரலில் இத்தனை பரிமாணங் களா?’ என்று ஆச்சர்யப்படும் வகையில், 19 மொழிகளில் பாடிய ஒரே இந்தியப் பின்னணிப் பாடகியாக முத்திரை பதித்தார்.
51 ஆண்டுகள், 20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், எண்ணற்ற விருதுகள் என வாணி யின் சாதனைகள் நீண்டாலும், தனக்கே உரிய அடக்கமும் அமைதியுமாக நம்மிடம் பேசத் தொடங்கினார்.
“நான் வேலூர்ல பிறந்து, சென்னையில வளர்ந்தேன். எனக்குப் பெயர் வைக்கிற வைபவம் நடக்கிறப்போ, எங்கம்மாவுக்கு பயங்கர ஜுரம். பயத்துடன் எங்கப்பா ஜோதிடரைப் பார்த்திருக்கார். ‘போன ஜென்மத்துல உங்க பொண்ணு பழனி ஆண்டவருக்கு நிறைய தேனாபிஷேகம் பண்ணியிருக்கு. தேன் போன்ற குர லுடன் பெரிய பாடகியா வருவா. சந்தோஷமா வீட்டுக்குப் போய் ‘கலை வாணி’னு பெயர் வைங்க’னு ஜோதிடர் சொல்லியிருக்கார். அதன்படி ‘கலை வாணி’னு எனக்குப் பெற்றோர் வெச்ச பெயர், ‘வாணி’யா மாறிடுச்சு.
இந்தி சினிமா பாடகியா ஆகணும்னு ஆசைப்பட்டு, கர்னாடக இசையும் கத்துகிட்டேன். ஸ்கூல் படிக்கும்போதே அகில இந்திய வானொலியில மெல்லிசைப் பாடல்கள் பாடுறது, நாட கங்கள்ல நடிக்கிறது, ஓவியம், பேச்சுனு கிடைச்ச மேடைகளையெல்லாம் பயன்படுத்திகிட்டேன். காலேஜ் முடிச்சதும் சில வருஷங்கள் வங்கிப் பணிக்கும் போனேன்” இளமைக்கால நினைவுகளைப் புன்னகையுடன் ரீவைண்டு செய்பவர், திருமணத்துக்குப் பிறகு மும்பையில் குடியேறினார்.
உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் என்ற இந்துஸ்தானி இசைப் பயிற்சியாளர் மூலமாக, இந்தி இசையமைப்பாளர் வசந்த் தேசாயின் அறிமுகத்துடன், பின்னணிப் பாடகியாகும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. ‘குட்டி’ படத்தில் வாணி பாடிய ‘போலே ரே பப்பி ஹரா’ உள்ளிட்ட இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட். தொடர் வெற்றிகளைக் கொடுத்து, பாலிவுட்டில் தவிர்க்க முடியாத பாடகியாக வேகமாக வளர்ந்து வந்த நேரத்தில், தொழில் போட்டியால் அந்தத் திரையிசையில் கோலோச்சிய சிலரால், வாணிக்கான நிலை யான இடம் கிடைக்காமல் போனது.
“இந்தி சினிமாவுல எனக்கும் ஓர் இடம் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, அதை விடப் பெரிய புகழ் கிடைச்சது. அந்த நேரத் துல எனக்கான பாடல் வாய்ப்புகள் கிடைச் சுடக் கூடாதுனு சில கசப்பான அனுபவங்கள் நடந்தது உண்மைதான். ஒரு கதவு மூடினா, மற்றொரு கதவு திறக்கும்ங்கிற மாதிரி, தக்க சமயத்துல தென்னிந்திய சினிமாவுல எனக்குப் பெரிய ஓப்பனிங் கிடைச்சது. அந்த விதத்துல நான் ரொம்பவே லக்கி” கடினமான சூழலையும் பக்குவத்துடன் கடந்துவந்த வாணிக்கு, தமிழ் சினிமா என்ட்ரியும் வெற்றிகரமாகவே அமைந்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன்முதலில் இவர் பாடி, எல்லோ ரையும் முணுமுணுக்க வைத்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல், ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமானது. விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர் – கணேஷ், இளையராஜா போன்ற அப்போதைய முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசை யிலும் இவர் பாடிய பாடல்கள், எவர் கிரீன் கானங்கள். கர்னாடக இசையில் புலமை பெற்றிருந்த வாணிக்கு, அந்த இசை சார்ந்த சினிமா பாடல்களே மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது சுவாரஸ்யம்.
“நான் பாடினதுல பெரும்பாலான பாடல்கள் கடினமானவை. கஷ்டமான சங்கதிகள் மற்றும் கர்னாடக சங்கீத பாடல்கள்னா இசையமைப்பாளர்கள் பலரும் என்மேல நம்பிக்கை வெச்சு கூப்பிடுவாங்க. எனக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த ‘ஏழு ஸ்வரங்களுக் குள்’ பாடலுக்கு ஒருநாள்தான் பயிற்சி எடுத்து கிட்டேன். மறுநாள் ஒரே டேக்ல ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. ‘சங்கராபரணம்’ படத்துல நான் பாடிய ‘மானச சஞ்சரரே’ உள்ளிட்ட கர்னாட இசை சார்ந்த நிறைய பாடல்களுக்கும் மக்கள் தாளம் போட்டாங்க. சரியா சாப்பிடவும் தூங்கவும் நேரமில்லாம, பல ஸ்டுடியோக் களுக்குப் பறந்து, ஒரே நாள்ல அதிகபட்சமா 14 பாடல்கள்வரை பாடியிருக்கேன்.
தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியா போன்ற மொழிகள்ல பல வருஷங்கள் முன்னணிப் பாடகியா இருந்தேன். என் குரல் வளத்தைப் பலமுறை பாராட்டிய இந்திரா காந்தி அம்மையார், பல்வேறு நிகழ்ச்சிகள்ல என்னைப் பாட வெச்சாங்க. ஒருமுறை சென்னை வந்திந்தப்போ, ராஜீவ் காந்திஜியின் அன்புக்காக, ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி னேன். ‘நான் உங்க ரசிகன்’னு கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர் சொன்னது மறக்க முடியாத பாராட்டு” என்று பெருமிதப்படுகிறார் வாணி.
தன் மனைவியின் சங்கீத ஞானம் திசை யெங்கும் ஒலிக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்டிருந்தார் வாணியின் கணவர் ஜெய ராம். அவரின் ஊக்கத்தால் இந்துஸ்தானி இசை பயின்ற வாணி, திரையிசை, கர்னாடக சங்கீதம், இந்துஸ்தானி ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் கோலோச்சினார்.
“எனக்கான ஊக்கம் உறுதுணை எல்லாமுமா என் கணவர்தான் இருந்தார். தனக்கான அடையாளம், பெரிய உத்தியோகம்னு எல்லாத்தையும் எனக்காகத் தியாகம் செஞ் சார். அந்நியோன்யமான நண்பர்களாகத் தான் நாங்க வாழ்ந்தோம்...” தன்னவர்மீதான அன்பைப் பகிர்பவர், இன்றும் உற்சாகம் குறையாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
“சின்ன வயசுலயும் சரி, நல்லா சம்பாதிச்சப்ப வும் சரி... ஆடம்பரமான வாழ்க்கைக்கு நான் ஆசைப்படலை. பெரும்பாலான வேலைகளை நானே செய்துக்கிறேன். வீட்டு வேலைகளுக்குப் பணியாளர் உதவுறாங்க. இந்தியா முழுக்கப் பயணிச்சாச்சு. நிறைவு வந்துடுச்சு. அதனால, வெளிநிகழ்ச்சிகளுக்குப் போறதைக் கூடுமான வரை தவிர்க்கிறேன். பரபரப்பா வேலை செஞ் சுட்டு வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சப்போ, ஓவியம், தனி ஆல்பம் பண்றது, பாட்டு எழுதுறது, வாசிப்புனு பயனுள்ள வகையில என்னைப் புதுப்பிச்சுகிட்டேன். டிவியில உலக நிகழ்வுகளைத் தெரிஞ்சுப்பேன். இப் படியே ஒவ்வொருநாள் விடியலும் இனிமையா கழியுது” என்று புத்துணர்ச்சியுடன் சொல்பவர், சமீபத்தில் டி. இமான் இசையில் ஒரு பாடலைப் பாடியிருப்பதுடன், தொடர்ந்து சினிமாவில் பாட ஆர்வமாக இருக்கிறார்.
இன்றைய இசை சூழல் குறித்துப் பேசுபவர், “கதைக்கேற்ற பாடல், பாடலுக்கேற்ற இசை, இசைக்கேற்ற குரல், குரலுக்கேற்ற ரசிகர்கள்னு எங்க காலத்துல திரையிசைக்கான முக்கியத் துவம் காரணகாரியத்துடன் இருந்துச்சு. இப்போ கால மாற்றத்துக்கேற்ப திரையிசையில நிறைய புதுமைகள் ஏற்பட்டிருக்கிற வேளையில, எங்க காலத்து இசைக்கலைஞர் களுக்குக் கிடைச்ச வரவேற்பு, இப்போதைய மற்றும் வருங்கால கலைஞர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கணும். அதுக்கு, இசை, பாடல் வரிகள், குரல்னு எல்லாவிதத்துலயும் இசைக்கான மாண்பு தொடர்ந்து காக்கப் படணும்னு தனிப்பட்ட முறையில அன்புடன் கேட்டுக்கிறேன்” - நல்ல இசை தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்ற அக்கறையுடன் சொல்லி முடிக்கிறார் ‘இசைவாணி’.
- கச்சேரி களைகட்டும்...

இளையராஜாவும் ரஹ்மானும்...
“இளையராஜா சார் மியூசிக்ல நிறைய ஹிட்ஸ் பாடியிருக்கேன். ‘உங்க குரலை ராஜா சார் இன்னும் அதிகமா பயன்படுத்தியிருக்கலாம்’னு ரசிகர்கள் பலரும் சொல்லியிருக்காங்க. தனிப்பட்ட முறையில அந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ‘வண்டிச்சோலை சின்னராசு’ படத்துல ‘ஒரு சுகம் சுகம்’ உட்பட ரஹ்மான் மியூசிக்ல சில பாடல்கள்தான் பாடியிருக்கேன். ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரஹ்மான் எனக்குக் கொடுத்தப்போ, ‘இவங்க குரலை நான் அதிகமா பயன்படுத்தியிருக்கணும். மிஸ் பண்ணிட் டேன்’னு சொன்னார்.”