மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 10: “மகன் சமத்து... மகள்தான் செம சேட்டைக்காரி!”

 உத்ரா, உன்னிகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
உத்ரா, உன்னிகிருஷ்ணன்

- பாடகர் உன்னிகிருஷ்ணன் - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்

கர்னாடக இசைப் பாடகர்கள், சினிமா பின்னணிப் பாடகர்களாகவும் புகழ்பெறுவது அரிதாகவே நடக்கும். ஆனால், இவ்விரண்டு துறைகளிலுமே கொடிகட்டிப் பறப்பவர் உன்னிகிருஷ்ணன். உலோகத்தை ஈர்க்கும் காந்தவிசைபோல, இவரின் மாயக்குரல் மக்களின் மனங்களை வசீகரித்துவிடும். மழலைக் குரலில் ‘சைவம்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகே அழகே’ பாடல் மூலம் ரசிகர் களின் உள்ளம் கவர்ந்த இவரின் மகள் உத்ரா, கல்லூரி மாணவியாக வளர்ந்துவிட்டார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ‘டைம்’ படத்தில் உன்னிகிருஷ்ணன் பாடிய ‘காதல் நீதானா’ பாடல், இன்றைய ‘2கே கிட்’ஸாலும் முணு முணுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ‘மொபைல் காலர் ட்யூன்’ என்கிற வகையில்இடம்பெற்ற இந்தப் பாடல் அனுபவத்திலிருந்து உரை யாடலைத் தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்...

“என் நண்பரும் பாடகருமான நிவாஸ் சாரின் குடும்பத்தினருடன் என் குடும்பத் தினரும் ஒண்ணா அந்தப் படத்தைப் பார்க்கப் போனோம். படத்துல ‘காதல் நீதானா’ பாடல் அடிக்கடி இடம்பெற்றது எனக்கு செம சர்ப்ரைஸ்...’’ கண்கள் விரியச் சொல்கிறார் உன்னிகிருஷ்ணன்.

“சின்ன வயசுல கிரிக்கெட்தான் என் உலகம். ஆனா, எங்கம்மாவின் ஆசைக்காக கர்னாட்டிக் சிங்கரானேன். அதுவரைக்கும் சினிமால பாடணும்னு நான் நினைச்சதுகூட கிடையாது. அதுக்கான தொடக்கப்புள்ளியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்க, பிளேபேக் சிங்கராவும் வேறொரு தளத்துக்குப் போனேன்” என்று சிலாகிக்கும் உன்னிகிருஷ்ணன், ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே அடி என்னவளே’ பாடலுடன் திரையிசையில் நுழைந்தார். முதல் பாடலே அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தது.

 உத்ரா, உன்னிகிருஷ்ணன்
உத்ரா, உன்னிகிருஷ்ணன்

பின்னர், தமிழ் சினிமா முன்னணி இசை அமைப்பாளர்களின் அபிமான பாடகரான தோடு, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகரானார் உன்னிகிருஷ்ணன். தந்தையைப் போலவே தன் முதல் பாடலுக்கு (‘அழகே அழகே’) உத்ராவும் தேசிய விருது பெற்றார். ‘போகும் பாதை’, ‘கை வீசும் காற்றாய்’, ‘ஈனா மீனா டீக்கா’ என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ள உத்ரா, பி.எஸ்ஸி முதலாம் ஆண்டு படிக்கிறார்.

“மனிதர்களோட எண்ணங்கள் பத்தி நிறைய தெரிஞ்சுக்கலாம்னு சைக்காலஜி கோர்ஸ் எடுத்தேன். சிங்கிங்தான் என் கரியரா இருக்கணும்னு ஆசைப்படறேன். அதனால, மியூசிக் பிராக்டிஸை மேனேஜ் பண்ணவும் இந்த கோர்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கு...” க்யூட்டாகச் சொல்கிறார் உத்ரா. அவரை இடைமறித்த உன்னிகிருஷ்ணன், “உத்ரா, சைக்காலஜி கோர்ஸ் எடுக்க முக்கிய காரணமும் இருக்கு” என்று பீடிகையுடன் தொடர்ந்தார்...

“சயின்ஸ், பிசினஸ், மேத்ஸ்னு டெக்னிக்கல் சப்ஜெக்ட்ஸ் எதுவுமே உத்ராவுக்குப் பிடிக்காது. கடைசியா இருந்த ஒரே ஆப்ஷன்தான் சைக்காலஜி கோர்ஸ்” என்று நையாண்டியாக அவர் சொல்ல, “ஏம்பா என் இமேஜை டேமேஜ் பண்றீங்க...” என்று வெட்கப்படுகிறார் உத்ரா.

“இப்பவும் என்னைக் குழந்தை மாதிரி ரொம்ப கேர் கொடுத்து வீட்ல வளர்க் கிறாங்க. ‘நான் பெரிய பொண்ணா வளர்ந்துட்டேன்’னு சொன்னாலும், சில நேரம் வெளியிடங்களுக்குச் சுதந்திரமா போக விடமாட் டேங்கிறாங்க. நான் கடைக்குப் போயிட்டு வீடு திரும்ப ரெண்டு நிமிஷம் லேட்டானாலும் பாட்டி எனக்கு போன் பண்ணிடுவாங்க...” தன் ஆதங்கத்தைப் புன்முறு வலுடன் சொல்கிறார் உத்ரா.

“எவ்வளவுதான் வளர்ந்துட்டாலும் குழந்தையின் நலன்ல பெற்றோர் அக்கறை காட் டுறது இயல்புதானே? அதுபோல, கால சூழ்நிலையால பொண் ணோட பாதுகாப்புல கூடுதல் அக்கறையுடன் இருக்கோம். மத்தபடி, பிள்ளைகளோட சுதந்திரத்துல நாங்க பெரிசா குறுக் கிட்டதில்லை...” மகளின் கரங்களைப் பற்றிக்கொண்டு சொல்லும் உன்னிகிருஷ்ணன், தங்களுக்குள் நடக்கும் மகிழ்ச்சித் தருணங்களைப் பகிர்ந்தார்.

“எனக்கு மீசையும் தாடியும் சரியா வளராது. ஷேவ் பண்ணாம விட்டா, பார்க்க நல்லாவே இருக்காது. மீசை தாடியோடு என்னைப் பார்க்க ஆசைப்படும் உத்ரா, போன் ஆப் மூலமா எனக்கு தாடி மீசை வரைஞ்சு தமாஷ் பண்ணுவா. என் பையன் வாசுதேவ் கிருஷ்ணா, ஆட்டோமொபைல் இன்ஜினீயரா வெளி நாட்டுல வேலை செய்யறான். குழந்தைப் பருவத்துல அவன் கொஞ்சம் சமத்து; உத்ரா தான் சேட்டைக்காரி. இப்போ அமைதி யாகிட்டா. ஆனா, ஃபிரெண்ட்ஸ் கேங்ல சேட்டைகள் பண்றாபோல.

குழந்தைப் பருவத்துல ஃபிரெண்ட்ஸோடு சைக்கிள்ல சுத்துறது, பம்பரம், காத்தாடி விடுறது, கிரிக்கெட்னு பெரும்பாலான நேரம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்னு இருந் தேன். இப்ப பெரும்பாலான பிள்ளைகளின் உலகம் போன்லயே மூழ்கிடுது. உத்ராவுக்கு ஃபுட்பால், பேட்மின்டன், கிரிக்கெட் விளை யாட்டுகள்ல ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கிறப்போல்லாம் குடும்பமா கிரிக்கெட் ஆடுவோம். எந்த நெருக்கடிகளும் இல்லாம, உத்ராவை மகிழ்ச்சியான சூழல்ல வளர்க்கவே முயற்சி செய்றோம்” என்னும் உன்னிகிருஷ்ண னைத் தொடர்ந்து, உத்ரா ஆரம்பித்தார்...

“எங்கம்மா கிளாசிக்கல் டான்ஸர். எங்களுக்காக தன் விருப்பங்கள் பலவற்றையும் விட்டுக்கொடுத்திருக்காங்க. ஆனாலும், அம்மா கொஞ்சம் கண்டிப்பு. அப்பா பயங்கர செல்லம். ஏதாச்சும் காரியம் ஆகணும்னா, அப்பா மூலமாதான் காய் நகர்த்துவேன். அப்பா பிரபலமான பாடகர்ங்கிறதால, சிலர் அவரோட என்னை கம்பேர் பண்ணிப் பேசு வாங்க. அதைப் பெரிசா கண்டுக்காட்டியும், என் திறமையை வெளிப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுப்பேன்” என்றவர், தந்தை பாடியதில் தனக்குப் பிடித்த ‘நறுமுகையே நறுமுறுகையே’ பாடலை அவருடன் இணைந்து பாடினார்.

“நான் சிங்கரானப்போ கர்னாட்டிக் கச்சேரிகள் மற்றும் சினிமால பாடுறதுக்கான வேறுபாடுகள், சரி மற்றும் தப்புகளையெல்லாம் படிப்பினைகளுக்குப் பிறகே கத்துக்கிட்டேன். அந்தச் சிரமங்கள் இல்லாதபடி, என் அனுபவத்துல உத்ராவுக்கு ஆலோசனைகள் கொடுக்கிறேன். இசை ஆர்வமுள்ளவங்க பலரும் பாடகராகிடலாம். ஆனா, சங்கீத ஞானம் அதிகமா உள்ளவங்கதான் தேர்ந்த இசைக்கலைஞராக முடியும். அதுக்கு நிறை யவே உழைக்கணும். பெற்றோரா அவளுக்கான சரியான பாதையை காட்டுறோம். ஆனா, தனக்கான சுய அடையாளத்தையும் வெற்றி யையும் தக்கவெச்சுக்கிறது உத்ராவோட முயற்சிகள்லதான் இருக்கு...” பொறுப்பான தந்தையாக உன்னிகிருஷ்ணன் சொல்ல, அவரின் தோள் பற்றி சிரிக்கிறார் உத்ரா.

- கச்சேரி களைகட்டும்...