மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 11: “என் அம்மாவோட அஞ்சு பிரசவங்களை நான்தான் கவனிச்சுக்கிட்டேன்!”

பாடகர் டி.எல்.மகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாடகர் டி.எல்.மகராஜன்

பாடகர் டி.எல்.மகராஜன் நெகிழ்ச்சி - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்

சினிமாத்துறையின் ஆரம்பகாலத்தில், நடிகர்களும் நடிகைகளும் தங்கள் படங்களில் தாங்களே பாடியும் பன்முகம் காட்டிய நிலையில், 1940-களில் பின்னணிப் பாடகர்கள் முக்கியத்துவம் பெற்றனர். அந்த விதத்தில், தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடக ராகப் பரிமளித்தார் திருச்சி லோகநாதன். ‘ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, ‘கல்யாண சமையல் சாதம்’ போன்ற எண்ணற்ற பாடல்கள், லோகநாதனின் இறவா புகழ் பாடுகின்றன.

இவரின் மூத்த மகன் டி.எல்.மகராஜனும், பல தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடிய பிரபலமான பின்னணிப் பாடகர். தன் கணீர்க்குரலில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண’ எனும் பக்திப் பாடலைப் பாடிக்காட்டிய மகராஜன், கிளாஸிக் கால கட்ட நினைவு களுடன் பேச ஆரம்பித்தார்...

 மனைவியுடன் டி.எல்.மகராஜன்...
மனைவியுடன் டி.எல்.மகராஜன்...

“என் தாத்தா - பாட்டியான காளி என்.ரத்தினம் - சி.டி.ராஜ காந்தம், தமிழ் சினிமால முன்னோடி நட்சத்திர தம்பதியா இருந்தவங்க. எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதுல இவங் களோட பங்கு முக்கியமானது. அவர்களைத் தொடர்ந்து எங்கப்பாவும் சினிமால புகழ்பெற்றார். ஒரு படத்துல ஏதாச்சும் ஒரு கேரக்டருக்குத்தான் அப்பா பாடுவார். எவ்வளவு சம்பளம்னாலும் அதே படத்துல இன்னொருத்தருக்குப் பாட மாட்டார். சுதேசிக்காரரான எங்கப்பா, ‘கப்ப லோட்டிய தமிழன்’ படத்துல பாடிய மூணு பாடல் களுக்கும் சம்பளம் வேண்டாம்னு மறுத்தார். கச்சேரிகள்ல யாராச்சும் சிறப்பா பாடினா, அந்தக் கலைஞரை வாழ்த்தி, தன் நகைகளை எங்கப்பா பரிசளிப்பார். டி.எம்.செளந்தர ராஜன் ஐயா, சீர்காழி கோவிந்தராஜன் ஐயா போன்ற பல பாடகர்களின் ஆரம்பகால வளர்ச்சியில எங்கப்பா உதவினார். சர்க்கரை நோயின் தாக்கத்தால 67 வய சுல அவர் இறந்துட்டார்” என்கிற மகராஜன், 12 வயதில் ‘திருவருட்செல்வர்’ படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.

தாய்க்குப் பிரசவம் பார்த்த தலைமகனாக இளம் வயதி லேயே குடும்பப் பொறுப்பு களையும் நிர்வகித்திருக் கிறார் மகராஜன். அது குறித்துப் பேசியவர், “என் பெற்றோருக்கு 13 குழந்தைகள். அதுல எட்டு குழந்தைகள் பிறக்கிறவரைக்கும்தான் அப்பாவுக்கு சம்பாத்தியம் இருந்துச்சு. பிறகு, அவர் பாடுறதை நிறுத்திட்டதால, மூத்த பையனான நான் குடும்ப பாரத்தைச் சுமந்தேன். ஸ்கூல் படிச்சுகிட்டே சினிமாலயும் கச்சேரிகள்லயும் பாடினேன். அந்தக் காலகட்டத்துல என் பெற்றோருக்கு அடுத்தடுத்து அஞ்சு குழந்தைகள் பிறந்துச்சு. பிரசவ செலவுடன், எங்கம்மாவுக்கும் அந்த அஞ்சு குழந்தை களுக்குமான தேவைகளை உடனிருந்து கவனிச்சுகிட்டேன். ‘என் இறப்புக்கு அப்புறமா, எனக்குத் திதி கொடுக்கிறது உட்பட எந்தக் கடமையையும் நீ செய்ய வேண்டாம். அதைவிட அதிக மாவே எனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நீ பண்ணிட்டே’னு எங்கப்பா தன் கடைசி காலகட்டத்துல ஆத்மார்த்தமா சொல்லி என்னை ஆசீர்வதிச்சார்” நெகிழ்ச்சியாகக் கூறுபவர், சினிமா பாடல்கள் தவிர, கடந்த 57 ஆண்டுகளில் பக்திப் பாடல்கள், தனிப் பாடல்கள் உட்பட 8,000 பாடல்களைப் பாடியிருக் கிறார்.

 திருச்சி லோகநாதன்
திருச்சி லோகநாதன்

“டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் ஐயாவின் ‘தசாவதாரம்’ படத்துல பால ராமனா நடிச்சேன். சீதையா தேவி எனக்கு ஜோடியா நடிச்சாங்க. நடிப்புல ஆர்வம் இல்லாத தால, அதுக்கப்புறமா இசைத்துறையில மட்டுமே வேலை செஞ்சேன். ஆரம்பத் துல எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் இசையில ‘ரதி தேவி சந்நிதியில்’ உட்பட நிறைய பாடல்களைப் பாடினேன். ‘சிவப்புமல்லி’ படத்துல ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்’ பாடலை டி.எம்.செளந்தரராஜன் ஐயாவுடன் இணைஞ்சு பாடினேன். ‘இன்று போய் நாளை வா’ படத்துல ‘மேரி பியாரி’ பாடல் பாடினதும், அந்தப் பாட்டுக்குக் கிடைச்ச வரவேற்பும் சுவாரஸ்ய மானது. ‘நாயகன்’ படத்துல பி.சுசீலாம்மாவுடன் சேர்ந்து பாடிய ‘அந்தி மழை மேகம்’ பாடல் என் கரியர்ல ரொம்பவே முக்கியமானது.

‘பார்த்திபன் கனவு’ படத்துல ‘பக் பக் பக்’ பாடலுக்கான தன் எதிர்பார்ப்பை இசை யமைப்பாளர் வித்யாசாகர் எனக்குச் சொன்னதும், பாடகர் சி.எஸ்.ஜெயராமன் ஐயாவின் குரல் சாயல்ல பாடினேன். வித்யாசாகர் குஷியாகிட்டார். ‘புதிய மன்னர்கள்’ படத்துல வரும் ‘நீ கட்டும் சேலை மடிப்புல’ பாடல் ரெக்கார்டிங்ல அது சிம்பிளான பாடல்னு தப்பா எடை போட்டுட்டேன். ஒருமுறை சிங்கப்பூர் கச்சேரிக்குப் போனப்போ, இரவுல நடைப் பயிற்சி போனேன். ஹோட்டல் பரோட்டா மாஸ்டர், அந்தப் பாடலைப் பாடியபடியே மாவு பிசைஞ்சுகிட்டிருந்தார். உற்சாகமா அவர்கிட்ட பேச்சு கொடுத்தப்போதான், மக்கள் மனசுல அந்தப் பாடல் ஏற்படுத்தின தாக்கம் புரிஞ்சது” என்று புன்னகையுடன் சொல்பவர், ‘மச்சினிச்சி வர்ற நேரம்’, ‘காதல் யோகி காதல் யோகி’, ‘ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி’, ‘நெஞ்சே உன் ஆசை என்ன’ உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர் தலைமையில் திருமணம் செய்துகொண்ட மகராஜன், தன் குடும்ப வாழ்க்கையையும் தொட்டுப்பேசினார்... “இல்லத்தரசியான என் மனைவி நிர்மலா தேவியின் ஒத்துழைப்பாலதான் எந்தக் கவலை யுமின்றி இத்தனை வருஷமா என்னால பாட முடிஞ்சது. என் தம்பிகள் தங்கைகள் பலரையும் தந்தை ஸ்தானத்திலேருந்து வளர்த்து ஆளாக்கினேன். அதனால, எங்களுக்கு ஒரு குழந்தை போதும்னு நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். எங்க பொண்ணு ஆதிலட்சுமிகீர்த்தனாவை மலேசி யால கட்டிக்கொடுத்திருக்கோம்” என்று மகிழ்பவர், இசைத்துறையில் தான் கடைப் பிடிக்கும் கொள்கை குறித்தும் சொன்னார்.

பாடகர் டி.எல்.மகராஜன்
பாடகர் டி.எல்.மகராஜன்

“எந்தக் காலத்திலும் மாற்றங்கள் அவசியம் தான். ஆனா, அவை இளைஞர்கள் உட்பட எல்லாத் தரப்பினருக்கும் நன்மை பயப்பதா இருக்கணும். ‘நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் நாட்டுக்குப் படிப்பினை தந்தா கணும்’னு கவிஞர் புலமைப்பித்தன் ஐயா கருத்தாழத்தோடு பாட்டு எழுதினார். நாம வாழுறப்போ செய்ற வேலைகள் காலம் கடந்தும் முன்னுதாரணமா பேசப்படணும். அதன்படி, அறம் தவறிய வார்த்தைகளையும், கவலை தோய்ந்த பாடல்களையும் பாடுறதுல எப்பவுமே எனக்கு உடன்பாடில்லை” என்று உறுதியுடன் முடித்தார்.

- கச்சேரி களைகட்டும்...

எப்படி இருக்கிறார் தீபன் சக்ரவர்த்தி?

‘நிழல்கள்’ படத்தில் வரும் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலைப் பாடிய பின்னணிப் பாடகர் தீபன் சக்ரவர்த்தி, டி.எல்.மகராஜனின் தம்பி.

“இளையராஜா அண்ணன் பிஸியா இசை அமைச்சுக்கிட்டிருந்த நேரம். அவர் சார்பா கங்கை அமரன் அண்ணன் கச்சேரிகளை நடத்திட்டிருந்தார். அதுக்காகப் பாட என்னைக் கூப்பிட்டார். நேர மின்மையால எனக்கு பதிலா என் தம்பி தீபன் சக்ரவர்த்தியைப் பாட அனுப்பினேன். ஒருமுறை புத்தாண்டு தினத்துல தம்பியை அழைச்சுக்கிட்டு இளையராஜா அண்ணனைப் பார்க்கப் போனேன். அப்போ தம்பி பாடிக்காட்ட, இளையராஜா அண்ண னுக்குப் பிடிச்சுப்போச்சு. மறுநாளே எஸ்.ஜானகி அம்மாவுடன் சேர்ந்து ‘ஓ நெஞ்சமே இது உன் ராகமே’ பாடலைப் பாடுற வாய்ப்பைத் தம்பிக்குக் கொடுத்தார் அவர். தம்பி இப்போ மலேசியாவுல குடும்பத்துடன் வசிக்கிறார். சென்னையில வசிக்கிற என் இன்னொரு தம்பி தியாகராஜனும் சினிமாலயும் கச்சேரிகள்லயும் பாடிகிட்டிருக்கார்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.