மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 13: “இளையராஜாவின் தம்பிங்கிற கர்வத்தை எதுக்காகவும் விட்டுத்தர மாட்டேன்!”

கங்கை அமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கங்கை அமரன்

இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள் - கங்கை அமரன்

படம்: மா.சந்தீப் குமார்

“வணக்கம்... வணக்கம்... வணக்கம்... வணக்கம்...” - கங்கை அமரனின் டிரேட் மார்க் வரவேற்பும் உற்சாகமும் நமக்கும் உத்வேகம் கூட்டுகின்றன. இளசு களுக்கு சவால் விடும் வகையிலான குறும்பான பேச்சாற்றலும் நகைச்சுவை உணர்வும், 75 வயதிலும் இவரை சுறுசுறுப்பாக இயக்குகின்றன.

``பாகுபாடுகள் இல்லாம எல்லோர்கூடவும் நட்பு பாராட்டுவேன். என் துக்கங்களை எனக்குள்ளேயே வெச்சுக்கிட்டு, நான் இருக்கிற இடம் கலகலப்பா இருக்கணும்னு லூட்டியும் நையாண்டியும் பண்ணு வேன். இதுதான் நான்!” - ஓப்பனிங்கிலேயே சுவா ரஸ்யம் கூட்டுகிறார் கங்கை அமரன்.

இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர், கதாசிரியர், தொகுப்பாளர்... இப்படிப் பன்முகங்கள்கொண்ட வித்தகர் கங்கை அமரனை, ‘இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி’ என்ற அறிமுகம்தான் வெகுஜன மக்களிடம் இன்னும் நெருக்கமாக்கியது. தங்களின் இன்னிசை வாழ்க்கைக்கு ஆதார ஸ்ருதி யான பண்ணைபுரத்து கதையிலிருந்து பேச ஆரம்பித்தார் அமரன்.

கங்கை அமரன்
கங்கை அமரன்

“எங்க மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார மேடைகள்ல பாடகரா இருந்தார். அவரை மாதிரியே நாடகங்கள்ல வேலை செய்யணும்னு ராஜா அண்ணனும் நானும் ஆசைப் பட்டோம். டைரக்டர் பாரதிராஜா எங்களோட பால்ய காலத்து தோஸ்து. ஆரம்பகாலத்துல அவர் நாடகங்கள் நடத்தினார். அதுக்கு இளையராஜா அண்ணன் மியூசிக் போட்டார்; நான் பாடல்கள் எழுதினேன். எங்களோடு கிராமத்துல சுத்திட்டிருந்த பாரதிராஜா, சினிமால வேலை செய்யப்போறேன்னு சென்னைக்கு வந்தார். அவரைப் பின்தொடர்ந்து, என் அண்ணன்களும் நானும் சென்னைக்கு வந்தோம். அப்போ எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் சார். தான் நடத்திய நாடகங்களுக்கு மியூசிக் பண்ற வாய்ப்பைக் கொடுத்து, எங்க வாழ்வாதாரத்துக்கும் வழி செஞ்சார். நாடகம் மற்றும் சினிமாத்துறையினரின் அறிமுகம் கிடைச்சது. பல இசையமைப்பாளர்கள்கிட்டயும் இசைக்கருவிகள் வாசிச்சோம். ‘அன்னக்கிளி’ படம் மூலமா இளையராஜா இசையமைப்பாளரா ஆனார். அதுக்கப்புறமா கடுமையா உழைச்சோம்; அபரிமிதமான வளர்ச்சியைப் பார்த்தோம்” கங்கை அமரனின் குரலிலும் பேச்சிலும் பெருமிதம் ததும்பு கிறது. ‘டீக்கடை பாடல்கள்’ என்பன போன்ற சில எதிர்மறை விமர்சனங்களைப் பந்தாடி, ‘அன்னக்கிளி’ பாடல்கள் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன்பிறகு, அசுர வேகத்தில் வளர்ந்தார் இளையராஜா. அவருக்கு இசை சார்ந்த எல்லா வேலைகளிலும் உதவியாளராகப் பணியாற்றிய கங்கை அமரன், இசை தாண்டி பிற துறைகளிலும் முத்திரை பதித்தார்.

“ராஜா அண்ணன் இசையமைப்பாளரானதும், அவருக்கு கிடார் வாசிச்சுக்கிட்டிருந்தேன். ‘நல்லவனுக்கு நல்லவன்’ உட்பட பல படங்கள்ல அவர் சார்பா ரீ-ரெக்கார்டிங் வேலைகளை நான் செஞ்சு கொடுத்தது பலருக்கும் தெரியாது. கண்ண தாசன் ஐயா மாதிரி பாடலாசிரியரா பெயர் எடுக்கிற ஆசையிலதான் சினிமாத்துறைக்கு வந்தேன். அதுக் கான சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திகிட்டேன். ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’தான் பாடலாசிரியரா நான் எழுதின முதல் பாட்டு. பாடகி எஸ்.ஜானகி அம்மாவுக்கு தேசிய விருதை வாங்கித் தந்த அந்தப் பாடல், இளையராஜாவுக்கும், பல மியூசிக் டைரக்டர் களுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை நான் எழுதுறதுக்கு நல்ல தொடக்கமா அமைஞ்சது.

இந்த நிலையில என் ஃபிரெண்டு மலேசியா வாசுதேவனும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விஜயகுமாரும் ‘மலர்களிலே அவள் மல்லிகை’ங்கிற படத்தை எடுத்தாங்க. அதுல என்னை இசையமைப்பாளரா ஆக்கறேன்னு உசுப்பேத்தி விட்டாங்க. அந்த விஷயம் தெரிஞ்சதும் இளையராஜா அண்ணனுக்கு என்மேல செம கோபம். ‘மியூசிக் பத்தி உனக்கு என்ன தெரியும்?’னு ரெக்கார்டிங் ஸ்டூடியோல எல்லோர் முன்னாடியும் என்னைத் திட்டி வெளிய போகச் சொல் லிட்டார். அப்போ அங்க வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அண்ணன், ‘உனக்கு ‘அன்னக்கிளி’ வாய்ப்பு வந்தப்போ, என்கிட்ட உதவியாளரா இருந்த உன்மேல நான் கோபப்பட்டிருந்தா நீ வளர்ந்திருப் பியா?’னு இளையராஜாவை சத்தம் போட்டார். அப்புறம்தான் அண்ணனுக்கு என்மேல கோபம் போச்சு. இசையமைப்பாளரா நானும் நிறைய படங்கள்ல வேலை செஞ்சேன்.

அப்பல்லாம் பாடல் உருவாக்கிற வேலைகள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ’ பாடல் டியூனை போலவே, ஹீரோ ஹீரோயின் பாடுற மாதிரி ‘எங்க ஊர் ராசாத்தி’ படத்துக்குப் பாட்டு கேட்டாங்க. ‘அது மாதிரி ஏன்... அதையே உல்டாவா பண்ணிடலாம்’னு நான் சொன்னேன். அப்படித்தான் ‘பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன்’ பாட்டை உருவாக்கினேன். இதுபோல முன்னோடி இசையமைப்பாளர்கள் பலரோட பாடல்களைத் தழுவி, அதுல என் ஞானத்தையும் சேர்த்து நிறைய பாடல்களை உருவாக்கினேன். இப்படித்தான் பல இசை யமைப்பாளர்கள் இப்பவரைக்கும் பாடல் களை உருவாக்கிறாங்க. ஆனா, காப்பி அடிச் சதை ஒப்புக்கிற தைரியம் எனக்கு உண்டு” குசும்பாகச் சொல்பவர், ‘வாழ்வே மாயம்’, ‘சட்டம்’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’, ‘மெளன கீதங்கள்’ உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

‘கோழிகூவுது’ படத்தின் மூலம் இயக்குநராக வும் அவதாரமெடுத்தார் கங்கை அமரன். இவர் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றி, தமிழ் சினிமா உலகத்தைத் திகைக்க வைத்தது. அதுவரை வெற்றிகளை மட்டுமே அதிகம் பார்த்த அமரனுக்கு, சொந்தப் படங்களால் ஏற்பட்ட தோல்விகள், வாழ்க்கை சமநிலையைப் புரிய வைத்துள்ளன.

“நான் இயக்கித் தயாரிச்ச ‘கோயில் காளை’ படம் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத் தாலும், எனக்குப் பலவிதங்கள்லயும் நஷ்டமே கிடைச்சது. எங்க மூத்த பையன் வெங்கட் பிரபுவை ஹீரோவாக்கி படமெடுக்கலாம்னு என் மனைவி விருப்பப்பட்டாங்க. ‘பூஞ் சோலை’ங்கிற அந்தப் படம் நல்லபடியா உருவானாலும், ரிலீஸ் பண்ண முடியாம முடங்கிடுச்சு. கஷ்டமான அந்த நேரத்துல யாருமே எங்களுக்கு உதவலை. அப்போ பல மியூசிக் டைரக்டர்களுக்கும் கீபோர்டு வாசிச்சான் எங்க இளைய மகன் பிரேம்ஜி. அவனோட வருமானத்துலதான் குடும்பத்தை நடத்தி னோம். கிடைச்ச கச்சேரி வாய்ப்புகளை வெச்சு காலத்தை நகர்த்தினேன். ரெண்டு பசங்களும் இப்போ நல்லபடியா சம்பாதிக்கிற தோடு, என்னை ஜம்முனு பார்த்துக்கிறாங்க. ஆனா...” - அமரனின் குரலில் வெளிப்படும் தளர்வு, காதல் மனைவி மணிமேகலையின் இழப்பிலிருந்து அவர் மீளாததை வெளிப் படுத்துகிறது.

“ ‘உங்க திறமைக்கு என்ன குறைச்சல்’னு மியூசிக் டைரக்டராக என்னை ஊக்கப் படுத்தினது என் மனைவிதான். அவளைப் பறிகொடுத்தது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். அவ இல்லாததை நினைச்சு எனக்குள்ளேயே புழுங்கித் தவிக்கிறேன்” என்று மெளனத்தில் கரைந்தவர், இளையராஜா குறித்துக் கேட்டதும் குஷியானார்.

“இளையராஜா எவ்ளோ பெரிய இசைஞானியா இருந் தாலும், அவர் எனக்கு அண்ணன். அவரோட ஒரே தம்பி நான் மட்டும்தான். அந்த உரிமையில ராஜா செய்ற சில தவறுகளை வெளிப்படையாவே கண்டிப்பேன். அது மாதிரியான சில தனிப்பட்ட காரணங்களால, அவருக்கும் எனக்கும் விரிசல் ஏற்பட்டுச்சு. ரொம்ப காலம் பேசிக்காமலேயே இருந்தோம். ஒருநாள் போன் பண்ணார். ‘நான் இப்படித் தான்னு உனக்குத் தெரியும்ல. உன்மேல நான் வெச்சி ருக்கிற அன்பை எனக்கு வெளிக்காட்ட தெரியலை’னு உருகினார். எல்லா வீம்பையும் உதறித்தள்ளிட்டு மறுபடியும் ஒண்ணு சேர்ந்தோம். இந்த ஜென் மத்துல இளைய ராஜாவின் தம்பிங்கிற கர்வத்தை நான் எதுக்காகவும் விட்டுத்தர மாட்டேன். நாங்க அண்ணன் தம்பிகள் நாலு பேரும் ஒண்ணா இருந்ததுபோல, இப்பவும் எப்பவும் எங்க பிள்ளைகளும் ஒத்துமையா இருக்கணும்” - நியாயமான எதிர்பார்ப்புகளைச் சொல்லி மனநிறைவுடன் விடைபெற்றார் அமரன்.

- கச்சேரி களைகட்டும்...