சங்கீத சந்நிதி 14: “என் கணவரை பத்தி யாராச்சும் புகார் சொன்னா பயங்கரமா சிரிப்பேன்!”

இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள் - பாடகர் ஸ்ரீநிவாஸ் குடும்பத்தின் ரகளை
காதலித்து கரம்பிடித்து இல்லறத்தை இனிமையாக்கு பவர்கள் ஒரு ரகம். கரம்பிடித்த பின்னர் அன்பால் மண வாழ்க் கையை நிறைப்பவர்கள் மற்றொரு ரகம். இரண்டாம் ரகத்தில் ராகம் பாடுகின்றனர் ஸ்ரீநிவாஸ் – சுஜாதா ஜோடி.
பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், இசை நிகழ்ச்சி நடுவர் என இசைக்காக தன் வாழ்க்கையின் திசையை மாற்றிக்கொண்டவர்தான் ஸ்ரீநிவாஸ். ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று பக்கா குடும்பஸ்
தனாக உருகுவது, பலரும் அறி யாத இவரது சுவாரஸ்ய முகம்.
சென்னையை அடுத்த முட்டுக் காட்டில், கிழக்குக் கடற்கரையை ஒட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கின்றனர். புது வீடு, கோடைக்கு இதமான கடல் காற்று, ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினரின் கலகலப்பான உரையாடல் எல்லாம் ஒருசேர நம்மை வரவேற்றன.
“நான் பேசறதைவிட என் மனைவியை அதிகமா பேச சொல்லுங்க. ஏன்னா, இவங் களைப் பொண்ணு பார்க்கப் போனப்போ சரண்டர் ஆனவன்தான் நான்...” அசத்த லான ஒன்லைனுடன் ஸ்ரீநிவாஸ் ஆரம்பிக்க, சடாரென்று ஒலித்தது சுஜாதாவின் குரல்.
“ ‘உனக்கு மியூசிக் பிடிக்குமா... உன் ஃபேவரைட் சிங்கர்ஸ் யார், யார்?’ - இதுதான் பொண்ணு பார்க்க வந்தப்போ இவர் என்கிட்ட கேட்ட கேள்வி. ‘கிஷோர் குமார், ஹரிஹரன்’னு சொன்னேன். ‘மெஹ்தி ஹசன் பிடிக்குமா?’ன்னார். ‘பிடிக்கும்’னு சொன்னேன். திடீர்னு இவர் முகத்துல ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்” - அன்று ஏற்பட்ட அதே வியப்புடன் கணவரைப் பார்க்கிறார் சுஜாதா.
“என் மனைவி பிடிக்கும்னு சொன்ன பாடகர்களின் வெறிபிடிச்ச ரசிகன் நான். அந்தப் பாடகர்களையெல்லாம் பிடிக்காதுனு இவங்க சொல்லியிருந்தா, ‘பை பை... நைஸ் டு மீட் யூ’னு சொல்லிட்டு வந்திருப்பேன். ஆனா, இவங்க சொன்ன பதில்ல, என்னை முழுசா இவங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்” - ஆதர்ச கணவராக உருகுகிறார் ஸ்ரீநிவாஸ்.
சிறு வயதிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்த ஸ்ரீநிவாஸ், கல்லூரிக்காலத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். இவரின் கல்லூரி நண்பர்களான சித்ராவும் வேணுகோபாலும் பின்னணிப் பாடகர்களாகப் புகழ்பெறவே, இன்ஜினீயராக வேலை செய்துகொண்டிருந்த ஸ்ரீநிவாஸின் கவனமும் திரையிசையின்மீது திரும்பி யிருக்கிறது.
“இளையராஜா சாரை சந்திக்கிறதும் அவர் இசையில பாடுறதும் எனக்குப் பெருங்கனவு. ஒருமுறை அதுக்கான வாய்ப்பு கிடைச்சும், அன்னிக்குனு பார்த்து என் குரல் சரியில்லாம போகவே ஏமாற்றமாகிடுச்சு. பாடகராகணும்னு நிறைய முயற்சிகள் எடுத்தேன். இசையமைப்பாளர்கள் வித்யாசாகரும் ஷரத்தும் என்மேல பெரிய நம்பிக்கை வெச்சு, 90-களின் தொடக்கத்துல ஜிங்கிள்ஸ், டிராக்ஸ் பாட வாய்ப்புகள் கொடுத்தாங்க. அப்பதான் இன்ஜினீயர் வேலையை விட்டுடலாம்னு முடிவெடுத்தேன். குடும்பத்துல பலரும் எதிர்த் தாங்க. ‘உங்களுக்குப் பிடிச்சதை நல்லபடியா பண்ணுங்க’னு என் கரியர் விஷயத்துல அப்போதிலிருந்து இப்போவரைக்கும் முழு சப்போர்ட் கொடுக்கிறது சுஜாதாதான். ரஹ்மான் சாரின் அறிமுகம் கிடைச்சு, அவர்கிட்ட ரெகுலரா டிராக், கோரஸ்னு நிறைய பாடினேன். பக்குவமா என்னை மெருகேத்தி வளர்த்துவிட்டார்” - எந்த எதிர்பார்ப்பும் இன்றி சந்தோஷமாக வேலை செய்த இவர், ‘நம்மவர்’ படத்தில் வரும் ‘சொர்க்கம் என்பது நமக்கு’ பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
‘படையப்பா’ படத்தில் இடம்பெற்ற ‘மின்சார பூவே’ பாடலின் வெற்றியால் ஸ்ரீநிவாஸின் சக்சஸ் கிராஃப் வேகமாக உயர்ந்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ் உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கும் ஏராள மான ஹிட் பாடல்களைப் பாடினார். ‘என்னுயிரே’, ‘கையில் மிதக்கும் கனவா நீ’, ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’, ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா’, ‘சொட்டச் சொட்ட நனையுது’ உட்பட பல மொழிகளிலும் சேர்த்து 5,000 பாடல்களுக்கும் மேல் பாடி யிருக்கிறார். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத் துள்ளார்.
கணவரிடம் பிடித்த விஷயங்கள் குறித்து சுஜாதாவிடம் கேட்டதும், குலுங்கிச் சிரித் தவர்... “இண்டஸ்ட்ரிக்கு வந்த புதுசுல இவர் கொஞ்சம் அழகா இருப்பார். இவருக்கு ரசிகைகள் அதிகமானாங்க. அதனால, என் கல்யாண வாழ்க்கைக்கு ஏதாச்சும் சிக்கல் வந்திடுமோன்னு கொஞ்சம் பயந்தேன். அதை பத்தி இவர்கிட்ட சொல்றப்போல்லாம் நக் கலா சிரிச்சுட்டுப்போயிடுவார். மியூசிக், குடும் பம் தவிர வேற எது மேலயும் இவருக்கு கவனம் போகாதுங்கிறதைப் போகப்போகப் புரிஞ்சுகிட்டேன். இவரை பத்தி யாராச்சும் சத்தியம் பண்ணி புகார் சொன்னாலும் எனக்கு சிரிப்புதான் வரும்” என்று கணவரின் புகழ்பாடியவர்...
“எங்க பொண்ணுங்க ஸ்கூல் போக ஆரம் பிச்சதும் அக்கறையா எனக்கு கார் டிரைவிங் கத்துக்கொடுத்தார். அப்புறம்தான் தெரிஞ்சது, பிள்ளைங்களை ஸ்கூல்ல பிக்கப், டிராப் பண்ற வேலையை என்கிட்ட ஒப்படைக்கப் போறார்னு. வீடு க்ளீனா இருக்கணும்னு ஆசைப்படுவாரே தவிர, அதுக்காக சப்போர்ட் பண்ண மாட்டார். டைமிங் விஷயத்துல பர்ஃபெக்ஷனே கிடையாது. கச்சேரிக்கான ஃபிளைட்டை கூட மிஸ் பண்ணியிருக்கார்” - கட்டுப்படுத்த முடியாத சிரிப்புடன் சுஜாதா பேச, வெட்கத்தில் தலைகுனிந்து புன்னகைக் கிறார் ஸ்ரீநிவாஸ்.
மனைவியிடம் பிடித்தவை குறித்துக் கேட்டதும், “மனைவி மற்றும் குழந்தைகள் வந்த பிறகுதான் சிங்கரா நான் வளர ஆரம்பிச் சேன். என்னையும் என் குடும்பத்தையும் தாங்கி நிற்கிற தூண் சுஜாதாதான். இவங் களோட எல்லா குணமும் எனக்குப் பிடிக்கும். அதுலயும், என்னை பத்தின உண்மைகளை வெளிப்படையா போட்டு உடைக்கிற துணிச்சல் ரொம்ப பிடிக்கும்” என கிண்டலாகச் சொல்லிச் சிரித்தவரிடம், சமையல் ஆர்வம் குறித்துக் கேட்டோம். “இவருக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது” என்று மின்னல் வேகத்தில் பதிலளித்தார் சுஜாதா.
“லாக்டெளன் நேரத்துல என் மனைவி பெங் களூர்ல இருக்க, எங்க வீட்ல நான் ஒத்தையில சிக்கிட்டேன். வீடியோகால்ல கேட்டு சமையல் செஞ்சு நொந்துபோனேன். பக்கத்து வீட்டுக் காரங்களோட விருந்தோம்பல் மூலமாவும், ஆன் லைன்ல உணவுகளை ஆர்டர் பண்ணியும்தான் ஒரு வாரகாலத்தை நகர்த்தினேன். அது என்னவோ தெரியலை... என் கைக்கு கரண்டி மட்டும் செட் ஆகவே மாட்டேங்குது...”
“நீங்களே பேசிட்டிருந்தா எப்படி?” என்று இடைமறித்தார், ஸ்ரீநிவாஸின் மூத்த மகளும் பின்னணிப் பாடகியுமான சரண்யா. “நானும் என் கணவரும் காதலிச்சுகிட்டிருந்த நேரம். என் மேல அப்பாவுக்கு சந்தேகம் வரவே, என் தங்கை கிட்ட விசாரிச்சிருக்கார். அவ எல்லாத்தையும் உளறிக்கொட்டியிருக்கா. மெசேஜ்லதான் எல்லாத்தையும் விலாவாரியா அப்பாவுக்குத் தெரியப்படுத்தினேன். ‘உனக்கு எது ஹேப்பியோ, அதுதான் எனக்கும் ஹேப்பி’னு கூலா ரிப்ளை செஞ்சார். இவர் எவ்ளோ பாசமான அப்பாங் கிறதுக்கு இந்த உதாரணமே போதும்ல” என்று பெருமையாகச் சொல்லிவிட்டு, அப்பாவின் குறும்பான விஷயங்கள் குறித்துக் கலாய்த்துத் தள்ளினார். பின்னர், தந்தையுடன் இணைந்து ‘மின்சார பூவே’ பாடலைப் பாடிக்காட்டி சிலிர்ப் பூட்டினார். ஸ்ரீநிவாஸின் இளைய மகள் சுனந்தா, ஐ.டி பணியாளர். இவரின் கலாட்டாவுக்கும் அதிகம் சிக்குவது ஸ்ரீநிவாஸ்தான்.
“என் வீட்ல என்னை மாத்தி மாத்தி கலாய்ச்சுத் தள்ளிட்டாங்க. இந்தப் பேட்டியைப் படிக்கிற, வீடியோ மூலமா பார்க்கிற மக்களுக்கும் உங்களுக் கும் செம சந்தோஷமா இருந்திருக்கும்ல. பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ங்கிறதால நானும் ஹேப்பியா எடுத்துப்பேன்” என்று பிர காசத்துடன் சொன்னவர், “என்னைப் பொறுத்த வரை ஹேப்பினெஸ்தான் சக்சஸ். இதைத் தேடிப்போறதைவிட, நாமே நமக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக்கிறதுலதான் உண்மை யான வெற்றி அடங்கியிருக்கு!” என்று மெசேஜ் சொல்ல, குடும்பமாக ஃபேமிலி போட்டோவுக்கு உற்சாகத்துடன் போஸ் கொடுத்தனர்.
- கச்சேரி களைகட்டும்...