மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 15: “நீ பாடகரா பெரிசா கிழிச்சுடலைனு என் பெற்றோரே சொல்வாங்க!”

பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா

இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள் - பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா

திரையிசையில் மின்னிய எண்ணற்ற பாடகர்களில், காதலர்களின் சுகமான குரலுக்குச் சொந்தக்காரர் ஹரிஷ் ராகவேந்திரா. ரசிகர்கள் சிலாகிக்கும் இவரின் ஹிட் மெலடீஸ், காதலர்களின் விருப்பமான கீதங்கள். அமெரிக்காவில் வசிக்கும் இசை காதலன் ஹரிஷை, தொலை பேசியில் பிடித்தோம்.

“புதிய பாதையில பயணிக்கலாம்னு 2015-ல் குடும்பத்துடன் அமெரிக்காவுல குடி யேறினோம். இங்கிருந்தபடியே சினிமாக் கான பாடல்களைப் பாடி அனுப்புறேன். தேவைப்பட்டா இந்தியாவுக்கு வந்தும் பாடிட்டுப் போறேன். குழந்தைங்க மற்றும் பெரியவங்களுக்கு குரல்வளத்துக்கான பயிற்சி கொடுக்கிறேன்” - தற்போதைய அப்டேட்டுடன் ஆரம்பித்தவர், தன் இசை வாழ்க்கையின் நேற்று, இன்று, நாளைய சங்கதிகளைப் பேசினார்.

“காலேஜ் நாள்கள்ல கேள்வி ஞானத்துல கல்ச்சுரல் நிகழ்ச்சிகள்ல பாடினேன். ‘நல்லா பாடுறியே’னு ஃப்ரெண்ட்ஸ் உசுப்பேத்தவே, பாடகராக முயற்சி செஞ்சேன். நடிகர் அர்ஜுன் சார் உட்பட சிலரின் சிபாரிசால, இசையமைப்பாளர் வித்யாசாகர் சாரின் அறிமுகம் கிடைச்சது. ‘அரசியல்’ங்கிற படத்துல ‘வா சகி வா சகி’ங்கிற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார் அவர். அடுத்த நாலரை வருஷத்துல தமிழ் மற்றும் தெலுங் குல 25 பாடல்கள்வரை பாடினேன். அதுல சில பாடல்கள் ஹிட்டாச்சு. ஆனாலும், ‘இந்தப் பாடலையெல்லாம் பாடியிருக் கேன்’னு நானா எடுத்துச் சொல்லித்தான் பலர்கிட்டயும் வாய்ப்பு கேட்க வேண்டி யிருந்துச்சு. சளைக்காம வாய்ப்புகள் தேடினேன். இதுக்கிடையில நிறைய ஜிங்கிள்ஸ் பாடினேன். இசையமைப் பாளர்கள் தேவா சார், மணி ஷர்மா சார், வித்யாசாகர் சார் ஆகியோர்கிட்ட டிராக் சிங்கராவும் வேலை செஞ்சு அனுபவங் களைக் கத்துக்கிட்டேன். எதிர்காலத்துக் கான பாதை தெரியாமதான் அலைஞ்சு கிட்டிருந்தேன். பல தடங்கல்களைக் கடந்து, 45 நிமிஷத்துல நான் பாடிட்டு வந்த ஒரு ரெக்கார்டிங் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு!” - வியப்புடன் சொல்லும் ஹரிஷுக்கு, இளையராஜா இசையில் ‘பாரதி’ படத்தில் பாடிய ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாடல்தான் திருப்புமுனையாக அமைந்தது.

பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா
பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா

தமிழ்த் திரையிசையில் எம்.எஸ்.விஸ்வ நாதன் - டி.எம்.செளந்தரராஜன், இளைய ராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூட்டணியைப்போல, ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஷ் காம்போவும் முக்கியமானது. ‘மின்னலே’ மூலம் ஆரம்பித்த தங்கள் கூட்டணியின் தொடக்கத்தை நினைவு கூர்ந்தார் ஹரிஷ்.

“ஆரம்பத்துல அவருக்கு சில விளம்பரங் கள்ல பாடினேன். ஹாரிஸ் ஜெயராஜுக்கு பிரேக் கொடுத்த ‘மின்னலே’ படம், ‘அழகிய தீயே’ பாடலால எனக்கும் கமர்ஷியல் வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பத்து வருஷங் களுக்கும் மேல் தொடர்ச்சியா நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்து, இசைத் துறையில என் இருப்பை உறுதிசெய்தார். ஹாரிஸ் சார் சமீபத்துல மலேசியாவுல கச்சேரி நடத்தினார். அதுல தனக்குப் பிடிச்ச பாடகரா அவர் என்னைச் சொன்னது எனக்குக் கூடுதல் சர்ப்ரைஸ். அவர் மீதான மரியாதை நிமித்தமான நட்பு என்றென்றும் தொடரும்” - 20 ஆண்டு களுக்கும் மேலாகத் தொடரும் நட்பு குறித்துப் பெருமிதத்துடன் சொல்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜைப் போலவே ஹரிஷின் குரலை சிறப்பாகப் பயன்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா. மேலும், மணி ஷர்மா, வித்யாசாகர், இமான், ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் ஹிட்ஸ் மழை பொழிந்திருக்கிறார் இவர். அவற்றில், ‘தேவதையைக் கண்டேன்’, ‘முதல் கனவே’, ‘சர்க்கரை நிலவே’, ‘மெல்லினமே மெல்லினமே’, ‘ஆகாய சூரியனை’, ‘கனா காணும் காலங்கள்’, ‘அன்பே என் அன்பே’ என பல பாடல்கள் ஹரிஷை முன்னணிப் பாடகராக நிலைநிறுத்தின.

“எத்தனை பாடல்களைப் பாடுறோம் என்பதைவிட, ஒரு பாடகரின் குரலும் பாடலும் எவ்வளவு காலம் மக்கள் மனசுல நிலைச்சிருக்குங்கிறதுதானே முக்கியம்? அந்த வகையில பல தலைமுறையிலயும் இளைஞர்கள் முணுமுணுக்கிற மாதிரியான லவ் மெலடீஸ் நிறைய பாடியதால அளவு கடந்த சந்தோஷம்தான். ‘தவமாய் தவமிருந்து’ படத்துல நான் பாடிய ஒரு பாட்டு, என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. அந்தப் பாட்டு கேசட்லகூட இடம்பெறலை. ‘மயக்கம் என்ன’ படத்துல நான் பாடிய ‘என்னென்ன செய்தோம்’ பாடல், திரையில ஒலிக்காம ஆடியோ கேசட்ல மட்டுமே கேட்டுச்சு. இது போல நான் எதிர்பார்த்த சில பாடல்கள் சினிமால வராம போனதைத் தவிர்த்து, இசைத்துறையில எனக்கு எந்த ஏமாற்றங்களும் ஏற்பட்டதில்லை.

தாமதமா இசை கத்துக்க ஆரம்பிச்சும்கூட பாடகரா பிழைச்சுகிட்டது என் பிராப்தம். ‘எத்தனையோ வெற்றிகள் கிடைச்சாலும், பல்லாயிரம் பாடல்கள் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் மாதிரியான பாடகர்கள் உனக்கும் மேல உச்சத்துல இருக் காங்க. நீ ஒண்ணும் பெரிசா கிழிச்சுடலைங் கிறதை மனசுல ஆழமா பதிய வெச்சுக்கோ’னு என் பெற்றோர் அடிக்கடி சொல்வாங்க. சினிமாங்கிற மாய உலகத்துல பக்குவமா பயணப்பட நல்ல நண்பர்களின் வழிகாட்டுதல் களும் யோகாவும் எனக்கு உதவுச்சு” - பாடக ராக வளர்ந்துவந்ததைப்போலவே, ஒவ்வொரு வார்த்தையையும் நிதானத்துடன் உச்சரிப்பது ஹரிஷின் பக்குவத்தைப் பிரதிபலிக்கிறது.

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

நடிகராகவும் சில படங்களில் தோன்றியவர், சில சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். தவிர, ரேடியோ பண்பலை மற்றும் டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும், யோகா ஆசிரியராகவும் சில காலம் வேலை செய்திருக்கிறார் ஹரிஷ்.

தன் பர்சனல் பக்கங்கள் குறித்துச் சொன்ன வர், “என் மனைவி சுசித்ரா, தனியார் நிறுவனத் துல ஹெச்.ஆர் அதிகாரியா வேலை செய் றாங்க. இரட்டையர்களான எங்க மகள்கள் தியா மற்றும் நயனிக்கு எட்டு வயசாகுது. இந்த நாட்டுல வேலையாட்களுக்கான ஊதியம் அதிகம். அதனால, எலெக்ட்ரீஷியன் வேலை, பிளம்பிங், மெக்கானிக் வேலைனு பல தேவை களையும் நானே செஞ்சுக்கிறேன்”- அமெரிக்க வாழ்க்கையில் பல அனுபவங்களையும் கற்றுக் கொள்பவராகச் சிரிக்கும் ஹரிஷ், இசைத்துறை யில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

“பாடகரா ஜெயிச்சேனா இல்லையானு தெரியலை. ஆனா, ஃபீல்டுக்கு வந்ததிலேருந்து இப்போவரை நிம்மதியா வேலை செய்றேன். இந்த நிறைவே பெரிய வெற்றிதானே!” - மெல் லிசையாக ஈர்க்கின்றன ஹரிஷின் கலகலப் பான பேச்சும் பாசிட்டிவிட்டியும்!

- கச்சேரி களைகட்டும்...

அந்தப் பரிசுக்காகக் காத்திருக்கிறேன்!

“சின்ன வயசுல ஒருநாள் ஃபுட்பால் விளையாடும்போது கீழ விழுந்ததுல, என் நாக்குத் துண்டாகிடுச்சு. இனி எனக்குப் பேச்சே வராதோன்னு வீட்ல பயந்துட்டாங்க. ட்ரீட்மென்ட் முடிஞ்ச கையோடு அன்னிக்கு தியேட்டர்ல பார்த்த ‘ரோஜா’ படத்தின் இசையும் பாடல்களும் என் வலிகளையெல்லாம் மறக்கடிக்கச் செஞ்சது. இசைத் துறையில எனக்குக் கிடைக்காத பரிசு, ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில பாடாததுதான். வருங் காலத்துல அதுவும் நிச்சயம் கைகூடும்னு உறுதியா நம்புறேன்!” - எதிர்பார்ப்புடன் சொல்கிறார் ஹரிஷ்.