
இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள் - பாடகர் மது பாலகிருஷ்ணனின் பர்சனல் உலகம்!
‘யேசுதாஸ் மாதிரியே பாடகராகணும்!’ - மலையாளத் திரையிசையில் சாதிக்க நினைக்கும் பாடகர்கள் பெரும்பாலா னோருக்கும் இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இதே எதிர்பார்ப்புடன் சினிமாவில் நுழைந்த மது பாலகிருஷ்ணன், கே.ஜே.யேசு தாஸைப் போலவே குரல்வளம் கொண்ட திறமையான பின்னணிப் பாடகர்.
‘வா வா என் தேவதையே’, ‘பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்’, ‘டிங் டாங் கோயில் மணி’, ‘இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே’, ‘பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்’, ‘சொல்லித்தரவா சொல்லித்தரவா’ என நீளும் இவரின் ஹிட்ஸ், ‘இவையெல்லாம் இவர் பாடிய பாடல்களா?’ என்று பலருக்கும் திகைப்பை ஏற்படுத்தும். நீண்ட காலத்துக்குப் பிறகு, தமிழில் பேட்டியளிக்கும் மதுவிடம், யேசு தாஸுக்கும் இவருக்குமான குரல் ஒற்றுமை குறித்த கேள்வியில் இருந்தே உரையாடல் ஆரம்பமானது.
“அவர் மாதிரியே வாய்ஸ் கிடைக்கிறது பாக்கியம். அதேநேரம், இப்பல்லாம் வெரைட்டியான குரல்வளத்தைத்தான் இசையமைப்பாளர்கள் விரும்புறாங்க. அந்த வகையில குரல் ஒற்றுமை எனக்கு மைனஸாவும் அமையுது. இதை உணர்ந்து, பாடகரா வளர ஆரம்பிச்சப்பவே என் குரல் தனிச்சுத் தெரியுற மாதிரி மாடுலேஷன் கொடுத்துதான் பாடறேன். ஆனாலும், ‘நீங்க யேசுதாஸ் சாரின் மகன்தானே?’னு சிலர் கேட்பாங்க. ‘அப்படியும் வெச்சுக்க லாம்’னு சிரிப்பேன். யேசுதாஸ் சார் எனக்கு ஆசான், அப்பா, முன்னோடி, வழி காட்டி” - சிஷ்யனாக உருகுபவர், யேசு தாஸின் பாடல்களில் தனக்குப் பிடித்த வற்றைப் பாடிக்காட்டினார்.
மதுவின் பூர்வீகம் பாலக்காடு. வளர்ந்தது திருச்சூர் மாவட்டத்தில். இப்போது வசிப்பது கொச்சியில். பால்யத்திலேயே மேடைகளில் பாட ஆரம்பித்த மதுவுக்கு, அப்போதைய காலகட்டம் உணர்வுப் போராட்டமாக இருந்திருக்கிறது.
‘`கமல் சார், `தெனாலி’ படத்துல சொல்ற மாதிரி, சின்ன வயசுல நான் ‘எதுக்கெடுத் தாலும் பயம்’ ரகமா இருந்தேன். ப்ரீ டிகிரி முடிச்சதும் சென்னை வந்தேன். குருகுலம் முறையில, பிரபல கர்னாடக இசை மேதை டி.வி.கோபாலகிருஷ்ணன் சாரின் இன்ஸ் டிட்யூட்ல நாலு வருஷம் மியூசிக் கத்துக் கிட்டேன். வீட்டு ஞாபகத்துல அடிக்கடி அழுவேன்; சுவர்ல முட்டிப்பேன். என்கூட படிச்ச சில மாணவர்களும் என்னை மாதிரியே ஹோம்சிக் ஃபீலிங் வந்து, பாதியிலேயே ஊருக்குப் போயிட்டாங்க. அதுபோல அப்போ நானும் வீட்டுக்குப் போயிருந்தா, என் கரியரே திசைமாறியிருக் கும். என் நல்ல நேரம், குருநாதர்களும் நண்பர்களும் என்கிட்ட அன்பா பழகி, என்னைப் பக்குவப்படுத்தினாங்க.
அந்த நேரத்துல ‘உளவுத்துறை’ படத்துல சிங்கர் சித்ரா அக்காவோடு டூயட் பாடுற முதல் திரையிசை வாய்ப்பு கிடைச்சது. ஆசையா நான் பாடின அந்தப் பாட்டு சினிமால வரலை. அதேபோல மலையாளத் துல நான் பாடிய முதல் பாட்டும் சினிமால வரலை. அதுக்கெல்லாம் வருத்தப்படாம தொடர்ந்து நம்பிக்கையோடு காத்திருந் தேன். ஒருமுறை யேசுதாஸ் சார் பிறந்தநாள் விழாவுல நான் பாடினேன். அதுல இசை யமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி சாரும் இளையராஜா சாரும் விருந்தினர்களா கலந்துகிட்டாங்க. மறுவாரமே ராஜா சார்கிட்டேருந்து ‘பாரதி’ படத்துல பாட அழைப்பு வந்துச்சு...” திரையிசை சூழலுக்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக்கொண்ட மதுவை, ‘பார்த்திபன் கனவு’ படத்தில் வரும் ‘கனா கண்டேனடி’ பாடல், வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தது.

``ஆரம்பத்துல நான் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப் போனதில்லை. அதனா லேயே இசையமைப்பாளர்களுக்கு என்னை பத்தி தெரியாம இருந்துச்சு. எனக்குத் தெரிஞ்ச ஸ்வாமிஜி ஒரு வரைப் பார்க்க சிங்கப்பூர் போயிருந் தேன். அவருக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் சார் நல்ல பழக்கம். ஸ்வாமிஜி என்னை பத்தி வித்யா சாகர் சார்கிட்ட பேசினார். ‘உங்க மியூசிக்ல பாட எனக்கு ஆசை’னு நானும் அவர்கிட்ட போன்ல பேசி னேன். ‘உடனே சென்னை வாங்க’னு சொன்னார் வித்யாசாகர் சார். ‘கனா கண்டேனடி’ பாடலை ஆர்க் கெஸ்ட்ரா ஏதும் இல்லாமதான் பாடிட்டு வந்தேன். வித்யாசாகர் சாரின் இசை மேஜிக்ல ரசிகர்களைப் போலவே நானும் அந்தப் பாட்டை லயிச்சுக் கேட்டேன்.
வழக்கம்போல ஒருமுறை அவர் கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. ஆஷா போஸ்லேஜியின் குரல்ல ரெக்கார்டு செய்யப்பட்ட பாடலை ஒலிபரப்பினாங்க. ‘இவருடன் உங்க குரலும் டூயட்டா வரப்போகுது’னு அவர் சொல்ல, எனக்கு இன்ப அதிர்ச்சி. அதுதான் ‘சந்திரமுகி’ல வரும் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ பாடல்” என்று இடையிடையே தன் பாடல்களைப் பாடிக்காட்டிய படியே பேசியவருக்கு, ஏராளமான மெலடி பாடல் களைக் கொடுத்து ஊக்கப்படுத்தியதில் வித்யாசாகரின் பங்கு முக்கியமானது.
கர்னாடக இசையிலும் புகழ்பெற்ற பாடகர் மது, இளையராஜாவின் வெறியர். ``ராஜா சார் என்மேல ரொம்பவே அன்பு காட்டுவார். ஆனா, அவர் பர்ஃபெக் ஷனிஸ்ட். ஒவ்வொரு முறையும் ஸ்கூல் ஹெட் மாஸ்டரை போலத்தான் அவரை அணுகுவேன்” என்பவர், இளையராஜாவின் இசையில் பாடிய ‘பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடிய ‘தெய்வம் இல்லை எனும் போது’ பாடலும் மனதை கனமாக்கும். ‘வா வா என் தேவதையே’ பாடல் மூலம் மகள்களையும் தந்தையர் களையும் பாசப் பிணைப்பால் கலங்கடிப்பார். ‘ஒரு கிளி காதலில்’, ‘அற்றை திங்கள் வானிலை’, ‘கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்’ போன்ற பாடல்கள் மூலம் பரவசப்படுத்துவார்.
மதுவின் மனைவி விதிதா, இல்லத்தரசி. விதிதாவின் தம்பிதான் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். “எங்க ரெண்டு குடும்பங்களும் சொந்தம்தான். நானும் கிரிக்கெட் பிரியர். சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடுறப்போ நான் பேட்டிங் செய்யறப்போ, ஸ்ரீசாந்த் ஃபீல்டிங் பண்ணுவான். அவனை பந்து எடுத்துப் போடச் சொல்லி டார்ச்சர் பண்ணுவேன். அப்புறம் பிரபலமான பிளேயரானதும், அவனுக்கு நான் பந்து எடுத்துப் போட வேண்டியதா போச்சு. இதுமாதிரியான விளையாட்டு ரகளைகள் இப்பவும் தொடருது. என் மனைவியும் நானும் ரெண்டு வருஷம்தான் காதலிச்சோம். அதுக் குள்ள விஷயம் வீட்டுக்குத் தெரிஞ்சு, எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.
இசைக்கு இணையா குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். இப்பவும் எனக்கு ‘ஹோம்சிக்’ வரும். ரெக்கார்டிங், கச்சேரினா மட்டும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு வந்து பாடிட்டு உடனே வீடு திரும்பிடு வேன். எங்க பெரிய பையன் மாதவ், லண்டன்ல காலேஜ் படிக்கிறான். சின்னவன் மகாதேவ் ஸ்கூல் படிக்கிறான். ரெண்டு பசங்களுக்கும் வெஸ்டர்ன் மியூசிக்ல ஆர்வம் இருக்கு. நான் மெலடி சாங்ஸ்தான் அதிகம் பாடறேன். அதனால, வீட்டுக்குள்ளேயே எனக்குப் போட்டி உருவாகாதுனு நினைக்கிறேன்” கல கலப்புடன் சொல்பவருக்கு, இசைத்துறையில் இரண்டு ஆசைகள் இருக்கின்றனவாம். முதல் ஆசை, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடுவது. மற்றொன்று...
“உயிர் இருக்கிற வரைக்கும் பாடணும். பாடிக்கிட்டு இருக்கும்போது உயிர் போகணும்...” இசைக்கும் தனக்குமான பந்தத்தை சிரித்தபடியே சொல்லி முடிக் கும் மதுவின் பேச்சிலும் ஜீவன் இழையோடுகிறது.
- கச்சேரி களைகட்டும்...