சங்கீத சந்நிதி 3: அமைதியோ அமைதி ஹரிணி... செம கலாய் திப்பு... இசையோடு உறவாடும் காதல் தம்பதி!

இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்
என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம், ஏ.எம்.ராஜா – ஜிக்கி, பிரதீப் குமார் – கல்யாணி நாயர் வரிசையில், தமிழ்த் திரையிசையில் நட்சத்திரப் பாடகர்களாகப் பரிமளிக்கும் ஜோடிகளில் திப்பு – ஹரிணி தம்பதிக்கும் முக்கிய இடமுண்டு. இருவருமே ஏ.ஆர்.ரஹ்மானால் பின்னணிப் பாடகர்களாக அறிமுகமானவர்கள்.
திரையிசை முன்னோடிகள் பலருக்கும் செல்லப் பிள்ளையான ஹரிணி, ‘ஆகாய சூரியனை’, ‘மேகம் கருக்குது’, ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’, ‘ஆலங்குயில் கூவும் ரயில்’ என ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். அதிகம் பேசாத இயல்புடையவருக்கு, அப்படியே நேரெதிராக, கலகலப்பானவர் திப்பு. கரியரிலும் வாழ்க்கையிலும் ஒருசேர வென்றவர்கள், தங்களின் காதல் கதையை சுவைபட விவரிக்க, சிரிப்பும் சுவாரஸ்யமும் ஆர்ப்பரித்தது.
“ ‘இந்திரா’ படத்துல ‘நிலா காய்கிறது’ பாடல் மூலமா என் சினிமா பயணத்தை தொடங்கி வெச்சார் ஏ.ஆர்.ரஹ்மான் சார். அப்போ எனக்கு 13 வயசுதான். தொடர்ந்து நிறைய ஹிட் பாடல் களைப் பாடினேன்” என்று பெருமிதத்துடன் ஹரிணி நிறுத்த, கடல் கடந்த தங்களின் காதல் நினைவுகளில் மூழ்கினார் திப்பு...
“பிரைவேட் ஆல்பத்துக்கான ரெக்கார்டிங்ல முதன்முதல்ல சந்திச்சோம். ஹரிணி ஒரு பாட்டு பாடிட்டாங்க. இன்னொரு பாட்டுல டபுள் மீனிங் வார்த்தைகள் இருந்ததால, பாட மாட்டேன்னு சொன்னாங்க. ‘பாட வாய்ப்பு கிடைக்காம பலரும் தவிக்க, கிடைச்ச வாய்ப்பை மறுக்கிறாங்களே... ரொம்ப திமிர்போல’னு ஹரிணியை தப்பா நினைச்சேன். அதுக்கப்புறமா இவங்களோட நியாயமான கொள்கையைப் புரிஞ்சுகிட்டதும், ஹரிணி மேல எனக்கு அன்பு அதிகரிச்சது.
ஆஸ்திரேலியாவுல இசையமைப்பாளர் தேவா சாரின் கச்சேரியில நாங்க பாடினோம். அப்போ மியூசிக் சார்ந்த விஷயங்களை ஹரிணி எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. இவங்க லைஃப் பார்ட்னரா வந்தா நல்லாயிருக்கும்னு என் மனசுல அலாரம் அடிச்சுகிட்டே இருந்துச்சு. என் விருப்பத்தை ஹரிணிகிட்ட சொன்னேன். நாங்க பேசிக்கிட்டதைத் தூரத்துலேருந்து கவனிச்ச தேவா சார், ‘ஹரிணி யார்கிட்டயும் பெரிசா பேசி நான் பார்த்ததில்லை. உன்கிட்டதான் சிரிச்சுப் பேசி பார்த்தேன்’னு சொன்னார். அதை வெச்சே எல்லாம் சுபமா முடியும்னு நம்பினேன்” என்றபடியே மனைவியின்மீது தன் பார்வையைத் திருப்பினார் திப்பு. “நான் யார்கூடவும் ஈஸியா பழகிட மாட்டேன். ஆனா, நிறைய நல்ல குணங் களைக் கொண்டிருந்த திப்பு, எனக்கான சரியான பார்ட்னரா இருப்பார்னு உறுதியா நம்பி னேன்” என்று புன்னகைக்கிறார் ஹரிணி.
“கல்யாணம் முடிவாகியிருந்தப்போ, வெறும் மூணு பாடல்கள்தான் சினிமாவுல நான் பாடி ரிலீஸ் ஆகியிருந்துச்சு. ஆனா, ஹரிணி அப்போ முன்னணிப் பாடகி. அதனால, எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு நான் சொன்னப்போ, ‘காமெடி பண்ணாத’னு பலரும் கிண்டலா சிரிச் சாங்க. நிச்சயமா நானும் ஜெயிச்சுடுவேன்னு நம் பிக்கையோடு உழைச்சேன். படிப்படியா எனக் கும் ஹிட் பாடல்கள் கிடைச்சது...” திப்புவின் பேச்சில் வைராக்கியத்தில் வென்ற பூரிப்பு.
எவ்வளவு உச்ச ஸ்தாயியிலும் பாடுவதில் வல்லவரான திப்பு, ‘நீ எந்த ஊரு’, ‘சூரத்தேங்காய் அட்ரா அட்ரா’, ‘திருவிழானு வந்தா’, ‘காதல் வந் தால் சொல்லியனுப்பு’, ‘வெண்மதி வெண்மதியே’, ‘பார்க்காத என்னைப் பார்க்காத’, ‘சம்திங் சம்திங்’ என பல ஜானரிலும் ஏராளமான ஹிட் பாடல் களைப் பாடி, குறுகிய காலத்திலேயே பிரபலமான பாடகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
“டபுள் மீனிங் பாடல்களைப் பாடுறதுனா மட்டும் ஹரிணி தவிர்த்துடுவாங்க. துள்ளலான பாடல்களும் ரொம்பவே செலக்டிவ்வாதான் பாடியிருக்காங்க. ஆனா, ஆரம்பத்துல எந்த லிமிட்டேஷனும் நான் வெச்சுக்கிட்டதில்லை. வீடு கட்டுறது எனக்குப் பெரிய கனவு. அதுக்குப் பணம் சேர்க்கணும்னு எந்த வாய்ப்பா இருந்தாலும் ஏத்துக்கிட்டேன். 2003-ம் வருஷத்துல மட்டும் 140-க்கும் அதிகமான பாடல்களைப் பாடினேன். வீடு கட்டி முடிச்ச பிறகு, ஓரளவுக்குப் பொருளா தார தேவைகள் பூர்த்தியானதும், என் பொறுப்புணர்வை உணர்ந்து, எனக்கேத்த பாடல்களை மட்டும் பாட ஆரம்பிச்சேன்.கர்னாட்டிக் மியூசிக்ல ஹரிணி எக்ஸ்பெர்ட். இசை சார்ந்த பல விஷயங்களையும் ஹரிணி கிட்ட கூச்சப்படாம கத்துப்பேன். தன் வெற்றியைவிடவும் என் வெற்றியைத்தான் ஹரிணி பெரிசா கொண்டாடுவாங்க. ஒரே வயசா இருந்தாலும், சினிமாவுல என்னைவிட ஹரிணி சீனியர். அதனால எங்களுக்குள்ள பாகுபாடுகள் வர வாய்ப்பிருக்குனு ஆரம்ப காலத்துல சிலர் எச்சரிச்சாங்க. ஆனா, அது மாதிரியான பேச்சுக்கே நாங்க இதுவரை இடம் கொடுத்ததில்லை” திப்பு அன்புடன் உருக, ஹரிணியின் முகத்தில் வெட்கம்.
“தேவா சார், ரஹ்மான் சார், வித்யாசாகர் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார் உள்ளிட்ட பல மியூசிக் டைரக்டர்களும் எங்க ரெண்டு பேருக் கும் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத் தாங்க. ஒரே படத்துல தனித்தனியே வெவ்வேறு பாடல்களை நாங்க பாடியிருந்தாலும், வெகுசில பாடல்களுக்குத்தான் டூயட் பாடி னோம். ஒரே துறையில வேலை செய்றதால ஒருத்தர் ரெக்கார்டிங் போயிட்டா, இன்னொ ருத்தர் வீட்டைக் கவனிச்சுப்போம். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மியூசிக் மட்டும்தான். அதைத் தாண்டி வாழ்க்கையின் பல்வேறு பரி மாணங்களையும் எனக்குப் புரிய வெச்சது திப்புதான். பெண்கள் கஷ்டப்படுற வீடு நல்லாயிருக்காதுனு சென்டிமென்ட்டா சொல்வார்” என்கிறார் ஹரிணி.
வீட்டிலேயே ஒலிப்பதிவுக்கூடம் வைத்திருப் பவர்கள், விளம்பரங்கள் மற்றும் சினிமா பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொடுக் கின்றனர். இவர்களின் மகள் சாய் ஸ்மிருதி, எம்.பி.பி.எஸ் படிக்கிறார். மகன் சாய் அபயங்கர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் புரோ கிராமராக பணியாற்றுகிறார்.
“பிள்ளைங்க பேரன்ட்ஸ் மீட்டிங், பிக்கப், டிராப்னு எல்லாத்துக்கும் ஹரிணிதான் போவாங்க. குடும்பத்தினரின் நலனுக்குப் பிறகுதான், தன் கரியர், விருப்பத்துக்கு முக்கி யத்துவம் கொடுப்பாங்க. அதுக்காக, ரஹ்மான் சார் உட்பட பலரின் பாடல் வாய்ப்புகளையும் இழந்திருக்காங்க” நெகிழ்ச்சியுடன் கூறும் திப்பு, ஹரிணிக்காக சில பாடல்களைப் பாடி கலகலப்பூட்டினார். மெலடி பாடல்களுக்குப் பெயர் பெற்ற ஹரிணி, நம் டாஸ்க்கை ஏற்று திப்பு பாடிய துள்ளலான சினிமா பாடல்கள் சிலவற்றைப் பாடிக்காட்டி அசத்தினார்.
“ஒவ்வொருத்தரும் கல்யாண வாழ்க்கையில பல கனவுகளுடன் அடியெடுத்து வைப்போம். நம்மோடு பயணிக்கிற வாழ்க்கைத்துணை நம்ம எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரியே இருந்தா, குடும்ப வாழ்க்கையில சின்ன வெற்றிகள்கூட பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த வகையில எல்லா விதத்துல யும் எனக்குப் பொருத்தமானவரா ஹரிணி கிடைச்சதுல நான் லக்கி” என்று திப்பு உணர்வுபூர்வமாகச் சொல்ல, அவரின் பேச் சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல, “நானும் ரொம்பவே லக்கிதான்” என்று ஹரிணி முடிக்க, அந்த வீட்டுக்குள் எழுந்த சிரிப்பலை, வெளியில் பொழிந்த கனமழையை மிஞ்சியது!
- கச்சேரி களைகட்டும்...