மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 4: எம்.ஜி.ஆருக்கு மருமகன் வாய்ப்பு... ஒரு பாடலால் முடிவான கல்யாணம்!

சிவசிதம்பரமும் அவரின் மனைவி சாந்தி மீனாட்சியும்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவசிதம்பரமும் அவரின் மனைவி சாந்தி மீனாட்சியும்

- சீர்காழி சிவசிதம்பரத்தின் கலகல குடும்ப கச்சேரி! - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்

‘வெண்கலக் குரலோன்’ சீர்காழி கோவிந்தராஜன், கிளாஸிக் கால கட்ட திரையிசை மற்றும் கர்னாடக இசை ஆளுமைகளில் தனித்துவமானவர். தோற்றத்திலும் குரலிலும் தந்தையின் நகலாகப் பிரதிபலிக்கும் அவரின் மகன் `பத்மஸ்ரீ' சீர்காழி சிவசிதம்பரம், மருத்துவராகவும் பாடகராகவும் முத்திரை பதித்த ‘பாட்டு வைத்தியர்’. சிவசிதம்பரமும் அவரின் மனைவி சாந்தி மீனாட்சியும் இணைந்த தம்பதி பேட்டிக்காக, சென்னையிலுள்ள அவர்களின் ‘இசை இல்ல’த்துக்குச் சென்றோம்.

கோவிந்தராஜன் வாழ்ந்த அந்த நினைவாலயத்தின் வரவேற் பறையை அலங்கரித்தன, இசை மற்றும் திரைக்கலைஞர்கள் பலருடைய அரிய புகைப்படங்கள். அவற்றின் பின்னணிக் கதையை விவரித்த சிவசிதம்பரம், தந்தையின் நினைவுகளுடன் பேச்சைத் தொடங்கினார்.

“அப்பாவைச் சந்திக்க இந்த வீட்டுக்கு வராத இசைக்கலைஞர்களே கிடையாது. அப்பாவின் வழியில நான் பாடகராகணும்னு எங்கம்மா ஆசைப்பட்டாங்க. ஆனா, நானும் என் அக்காவும் டாக்டராகணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். ‘சினிமாவுலயும் இசைத்துறையிலயும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்புகளையும் தாங்கிக்க மனபலம் அதிகமா தேவைப்படும். உனக்கு இசைத்துறை வேண்டாம்பா’னு அப்பா என்கிட்ட பலமுறை ஆதங்கத்துடன் சொல்லியிருக்கார். ‘புள்ளை டாக்டரா ஆகிடுவான்’னு அப்பாவுக்கு நம்பிக்கை கொடுத்த எங்கம்மா, சங்கீத வித்வான் பி.கிருஷ்ணமூர்த்தி ஐயாவை என் இசை குருவாக்கினார். காலேஜ் படிக்கிறப்பவே கச்சேரிகள்ல பாடிகிட்டிருந்த நான், பொது மருத்துவத்துறையில பட்ட மேற்படிப்பு முடிச்சுட்டு, அரசு மருத்துவரா வேலை செஞ்சேன். அதைப் பார்த்த எங்கப்பாவுக்கு அவ்வளவு பெருமை...” சிவசிதம்பரத்தின் பேச்சில், தந்தை சொல் மீறாத மகனுக்கான பூரிப்பு.

தங்களின் கல்யாண கதையுடன் சாந்தி மீனாட்சி உரையாடலைத் தொடங்கினார்... ``எங்க ரெண்டு குடும்பத்துக்கும் நீண்டகால நட்பு உண்டு. எங்கம்மா கர்ப்பமா இருந்தப்போ, ‘எனக்குப் பொண்ணு பிறந்தா அவதான் இந்த வீட்டுக்கு மருமகளா வருவா’னு சொல்லியிருக்காங்க. அதன்படியே 1984-ல் பெற்றோரால நிச்சயிக்கப்பட்டு எங்க கல்யாணம் நடந்துச்சு. அந்த நேரத்துல இவர் பாடி வெளியாகியிருந்த ‘அபிநய சுந்தரி ஆடுகிறாள்’ பாட்டு எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போனதாலதான் இவரைக் கட்டிக்க சம்மதிச்சேன். தனக்குப் பெண் பிள்ளை இருந்திருந்தா, என் வீட்டுக் காரருக்குத்தான் கட்டிக் கொடுக் கிறதுன்னு எம்.ஜி.ஆர் சார் ஆசையோடு இருந்திருக்கார். அதுக்கான வாய்ப்பு அமையாததால, இவருக்கு நான் ஜோடியாகிட்டேன்” என்றவரின் நகைச் சுவையால், சிவசிதம்பரத்தின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.

1988-ல் தந்தையின் மறைவுக்குப் பிறகு, மருத்துவத்துடன், மக்களை மகிழ்விக்கும் பாடகராகவும் பரபரவென இயங்கினார் சிவசிதம்பரம். முன்னணி இசையமைப் பாளர்கள் பலருக்கும் பின்னணி பாடிய வருக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடிய ‘ஓடக்கார மாரிமுத்து’, ‘அஞ்சாதே ஜீவா’, ‘அவளுக்கென்ன அம்பாசமுத்திரம்’ போன்ற பாடல்கள் பெரும் புகழைக் கொடுத்தன.

சங்கீத சந்நிதி 4: எம்.ஜி.ஆருக்கு மருமகன் வாய்ப்பு... ஒரு பாடலால் முடிவான கல்யாணம்!

“அப்பா காலமான பிறகு, அவர் ஏற்கெனவே கமிட் பண்ணியிருந்த 41 கச் சேரிகள்லயும் நான் பாடணும்னு சம் பந்தப்பட்டவங்க அன்புடன் கேட்டாங்க. அதையெல்லாம் நிறை வேத்தினதும், அப்பாவின் ஸ்தானத்தி லேருந்து முழு நேரமா பாட வேண்டிய சூழல் ஏற் பட்டுச்சு. எனவே, காலையில மருத்துவம், மாலையில இசையின் மகத்துவம்னு ஒரே நேரத்துல ரெண்டு துறைகள்லயும் பிஸியா வேலை செஞ்சேன். நேரமின்மையால குடும்பத்துக்கு என்னால சரிவர கவனம் கொடுக்க முடியாட்டியும், குடும்ப நிர்வாகத்தை என் அம்மாவின் வழியில மீனாட்சி பொறுப்பா பார்த்துகிட்டாங்க. கச்சேரிகள்லயும், பக்தி ஆல்பங்கள்லயும் பாடிட்டிருந்த எனக்கு, ‘மிருதங்க சக்ரவர்த்தி’ படத்துல ‘அபிநய சுந்தரி ஆடுகிறாள்’ பாடல் மூலமா பின்னணிப் பாடகரா அடையாளம் கொடுத்தார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சார். அந்தப் பாடலை வாணி ஜெயராம் அம்மாவோடு சேர்ந்து பாடினேன். எங்கப்பாகூட பாடிய மூத்த பாடகர்கள் பல ரோடும் சேர்ந்து பாடுற பாக்கியத்தையும் இசை மேதைகள் பலரும் எனக்குக் கொடுத் தாங்க. ஆஸ்பத்திரியில பாடிகிட்டே வைத்தியம் பார்ப்பேன். அதனால, மக்கள் ஆர்வமா என்னைத் தேடி வந்தாங்க.

தனியார் ஆஸ்பத்திரிகள்ல எத்தனையோ வாய்ப்புகள் வந்தும், ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்க்கணும்ங்கிற கொள்கையில 30 ஆண்டுகள் கவர்ன்மென்ட் டாக்டரா வேலை செஞ்சேன். சென்னை மருத்துவக் கல்லூரியில பொது மருத்துவத்துறையின் பேராசிரியராவும் துறைத்தலைவராவும் பொறுப்பு இயக்குநராவும் இருந்தேன். கடைசியா பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரியில டீனா வேலை செஞ்சு ஓய்வு பெற்றேன்” என்று பணிச்சூழலை விவரித்தவர், தற்போது மருத்துவத்துறை ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

“எங்க குடும்பத்துல யாருக்கு உடம்பு சரியில்லைனாலும், இவர்கிட்டதான் முதல்ல வைத்தியம் பார்ப்பாங்க. ஊசி போட்டுக்க நான் சிரமப்படுவேன். அதனால என்மேல இவர் ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்கிறதைத் தவிர்க்க, எனக்கு உடம்பு சரியில்லைனா இவர்கிட்ட கிண்டலா சொல்லிட்டு வேற டாக்டர்கிட்டதான் போவேன்” கணவரிடம் கலாட்டாவாகச் சொல்லும் மீனாட்சி,

“ரசிகர்கள் இவர் மேலயும், என் மாமனார் மேலயும் வெளிப்படுத்துற அன்பைப் பார்த்து பிரமிச்சிருக்கேன். எவ்ளோ டென்ஷனா இருந்தாலும் யார் மேலயும் பெரிசா குறை பட்டுக்கவே மாட்டார். அதனால, வீட்டுல இவரால எனக்கு எந்த பிரஷரும் இருக்காது. எனக்கு எதிர்பார்ப்புகள் குறைவுதான். நான் சொல்லி ரொம்ப காலமா இவர் கேட்காத ஒரே விஷயம் சமையல்தான். எங்க மூணு சம்பந்திகளும் நல்லா சமைப்பாங்க. அதைத் தெரிஞ்சுகிட்டு ‘ஆம்பளைங்ககூட சமைப் பாங்கபோல...’னு ஆச்சர்யப்பட்டார். யூடியூப் பார்த்துச் சமையல் கத்துக்கிற இவர், அப்பப்போ சமைச்சு சர்ப்ரைஸ் பண்றார்” கணவரின் பர்சனல் பக்கங்களை உடைக்கும் மீனாட்சியைப் பார்த்து, “இன்னிக்கு பல உண்மைகள் வெளிய வரும்போல...” என்று சிரிக்கிறார் சிவசிதம்பரம்.

“மூத்த மகன் சந்தோஷின் குடும்பம் மலே சியாவுலயும், பொண்ணு வைஷ்ணவியின் குடும்பம் பிரேசில்லயும் வசிக்கிறாங்க. இளைய மகன் வருண் கோவிந் குடும்பமும் நாங்களும் ஒண்ணா இருக்கோம். அப்பப்போ எலியும் பூனையுமா இருந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்காம வாழுறோம். எங்க பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடியே குடும்ப ஒற்றுமையை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கத்துக்கொடுக்கிறோம். ஆண்டவன் எந்த விதத்துலயும் குறைவில்லாம எங்களைப் பார்த்துக்கிறார்” என்று மனநிறைவுடன் கூறிய சிவசிதம்பரம், தன் தந்தையின் பாடல்கள் சிலவற்றை கணீர் குரலில் பாடிக்காட்டி, குரல் வழியே சீர்காழி கோவிந்தராஜனை நம் கண்முன் நிறுத்தினார்!

- கச்சேரி களைகட்டும்...

“அப்பா எங்களோடதான் வாழ்கிறார்!”

1988-ல் தன் 55 வயதில் காலமான சீர்காழி கோவிந்த ராஜனின் மறைவு, இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பு. தந்தையின் கடைசி நிமிடங்கள் குறித்துப் பேசிய சிவசிதம்பரம், “நல்லாதான் இருந்தார். ஒருநாள் நள்ளிரவுல அவருக்கு மூச்சுத்திணறலோடு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுச்சு. உடனடியா முதலுதவி செஞ் சேன். ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டுப் போறப்போ, பூஜை ரூம்ல ‘முருகா... முருகா... உலகம் வாழ்க’னு வேண்டினார். ‘நீ எனக்குக் கிடைச்ச நல்ல மனைவி’னு அம்மாகிட்ட சொன்னார். என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து, ‘நல்லவங்களோடு சேர்ந்து நல்லவனா இருக் கணும்; குடும்பத்தைப் பொறுப்பா பார்த்துக்கணும்’னு சொன்னார். சிகிச்சை பலனளிக்காம அவர் உயிர் பிரிஞ்சுடுச்சு. எனக்கு எந்த வேண்டுதலா இருந்தாலும், அப்பாகிட்டதான் முறையிடுவேன். இந்த வீட்டுலயும் அவர் எங்களோடுதான் எப்பவுமே இருக்கார்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.