
- பாடகி அனுராதா ஸ்ரீராம் - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்
எவ்வளவு பெரிய கூட்டத்தையும் வசீகரக் குரலால் கட்டிப்போடும் திறன் படைத்த பாடகி அனுராதா ஸ்ரீராம். இவரின் கணவர் ஸ்ரீராம் பரசுராம், வயலின் கலைஞர், கர்னாடக மற்றும் இந்துஸ் தானி இசைப் பாடகர். இல்லறத்திலும் இசைத்துறையிலும் கரம்கோத்துக் கலக்குபவர்கள், கலகலப்பான பேச்சு, இடையிடையே பாடல் என இசைமயமான உணர்வுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.
“மும்பையைப் பூர்வீகமா கொண்ட ஸ்ரீராமுக்கு, வயலின் மூணாவது கை மாதிரி. ஏழு வயசுலயே கச்சேரி பண்ண ஆரம்பிச்சுட்டார். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. ரஜினி சாருக்கு மகளா ‘காளி’ உட்பட சில படங்கள்ல நடிச்சேன். இசைதான் கரியர்னு முடிவெடுத்து, பன்னிரண்டு வயசிலேருந்து கச்சேரிகள்ல பாட ஆரம்பிச் சேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மாதிரி கர்னாடக இசைப் பாடகியாகணுங்கிறதுதான் என் ஆசையா இருந்துச்சு. அமெரிக்கா வெஸ்லியன் யுனிவர்சிட்டியில மியூசிக் கோர்ஸ் படிக்கப் போனேன். அந்த இன்ஸ் டிட்யூட்ல பிஹெச்.டி பண்ணிட்டிருந்த ஸ்ரீராம், எனக்கு வழிகாட்டியா அமைஞ்சார். நட்பு காதலாச்சு. நான்தான் முதல்ல என் காதலை வெளிப்படுத்தினேன்” வெட்கத் தோடு அனுராதா நிறுத்த, ஸ்ரீராம் ஆரம்பித்தார்...
“கல்யாணத்துக்குப் பிறகு, சில காலம் பேங்க் வேலைக்குப் போனேன். அப்புறமா இசைத்துறையில மட்டும் வேலை செய்ய ஆரம்பிச்சேன். கோரஸ், ஹம்மிங், ஜிங்கிள்ஸ் பாடுறதுனு கிடைச்ச சின்னச் சின்ன வாய்ப்பையும் அனுராதா தயங்காம ஏத்து கிட்டாங்க. தன் குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டை ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு அனுப்பினாங்க. அவர் கிட்டேருந்து ‘பம்பாய்’ படத்துக்கு ஹம்மிங் வாய்ப்பும், ‘இந்திரா’ படத்துல கோரஸ் வாய்ப்பும் அனுவுக்குக் கிடைச்சது” மனைவியின் ஆரம்பகால சவால்கள் குறித்துப் பேசும் ஸ்ரீராமின் பேச்சில் தோழமைக்கான பரிவு. மெலடி, பக்தி, கானா என பல ஜானரிலும் ரசிகர்களை ‘ஓ போட’ வைக்கும் அனுராதாவின் திறமைக்கு, அதிகமான வாய்ப்பளித்தார் இசையமைப்பாளர் தேவா. அதன் பிறகு, ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைப் பாடி, திரையிசையில் முன்னணிப் பாடகியாக வளர்ந்தார் இவர்.
“வருஷக்கணக்குல கோரஸ் மட்டுமே பாடிட்டிருந்ததால, கரியர் பத்தின பயம் எனக்கு இருந்துச்சு. அப்பதான் ‘ஆசை’ படத்துல ‘மீனம்மா’ பாடல் வாய்ப்பு கொடுத்தார் தேவா சார். நானும் உன்னிகிருஷ்ணனும் கஷ்டப்பட்டு அந்தப் பாடலைப் பாடினோம். ‘சரியான வாய்ப்பே வர மாட்டேங்குது. இந்தப் பாட்டுல என் குரல் செட் ஆகலைனா சொல்லிடுங்க.. பிஹெச்.டி படிக்க வெளிநாடு போயிடலாம்னு இருக்கேன்’னு தேவா சார்கிட்ட சொன்னேன். ‘எங்கயும் போக வேணாம்... சித்ரா, சுஜாதா, ஸ்வர்ணலதா வரிசையில உங்க ளுக்கும் இடம் கிடைக்கும்’னு அவர் மனசார வாழ்த்தினார். தொடர்ச்சியா அவர் படங்கள்ல பாடுற வாய்ப்பையும் கொடுத்தார். என் வாழ்க்கை யில தேவா சார் வராம இருந்திருந்தா, நான் பெரிசா தெரியாமலேயே போயிருப்பேன்” நெகிழும் அனுராதா, தேவாவின் இசையில் பாடிய ‘கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு’ பாடல், பட்டிதொட்டி யெங்கும் பிரபலமானது.
அனுராதா பாடியதில், ‘ரோஜா பூந்தோட்டம்’, ‘உதட்டோர சிவப்பே’, ‘என்னவளே என்னவளே’, ‘நிலவைக் கொண்டுவா’, ‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்’, ‘ஓ போடு’, ‘கண்ணன் வரும் வேளை’, ‘அப்படிப்போடு’, ‘காட்டுச் சிறுக்கி’ உள்ளிட்ட ஏராள மான பாடல்கள் ரசிகர் களின் ஆல்டைம் ஃபேவ ரைட்ஸ்.
“கல்யாண புதுசுல ‘உனக்குப் போதுமான தூக்கமும் ஓய்வும் தேவை. அதனால, பாடுறதுல மட்டும் கவனம் செலுத்து. வீட்டு வேலைகளை நாங்க பார்த்துக்கிறோம்’னு இவர் வீட்டுல சொன் னாங்க. ஒரு பெண்ணோட வளர்ச்சிக்குக் குடும்பத்தாரின் ஆதரவு எவ்ளோ முக்கியம்ங் கிறதுக்கு உதாரணமா இவரும் இவரின் பெற்றோரும் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. இவருக்குக் கச்சேரி இருக்கிறப்போ நானும், எனக்குக் கச்சேரி மற்றும் ரெக்கார்டிங் இருந்தா இவரும் வீட்டு நிர்வாகத்தை ஷேர் பண்ணிப்போம். சமையல் மற்றும் குழந்தை களைக் கவனிச்சுக்கிறதை என்னைவிட இவர் நல்லா செய்வார்...” அனுராதா பெருமிதமாகச் சொல்லும் ஸ்ரீராம், கர்னாடக இசைப் பயிற்சி யாளராக, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். கர்னாடக இசையில் ‘ஏ டாப்’ கிரேடு கலைஞரான இவர், உலகம் முழுக்க கச்சேரி செய்திருக்கிறார்.
“இந்தக் காலத்துல குழந்தைங்க திசை மாறிப்போக நிறைய வழிகள் இருக்கு. எவ்ளோ பிஸியா இருந்தாலும், கரியர்ல நமக்கு எவ்ளோ போராட்டங்கள் இருந்தாலும், குழந்தைகளின் நலன்லயும் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரோட தலையாய கடமை. அந்த விஷயத்துக்குத்தான் நாங்க எப்பவுமே முன்னுரிமை கொடுப்போம்” பொறுப்புடன் சொல்லும் ஸ்ரீராம்...
“அனுராதா, கர்னாட்டிக் மியூசிக் பாடல் களையும் நல்லா பாடுவாங்க. ஆனா, அது சார்ந்த திரையிசை வாய்ப்புகள் இவங்களுக்கு அதிகமா வரல. துள்ளலான பாடல்களை நிறைய பாடினாங்க. எல்லா இசையுமே மக்களை மகிழ்விக்கத் தான்னு உண்மையா வேலை செஞ்சதாலதான் 30 வரு ஷமா இன்னும் பாடிட் டிருக்காங்க” எனும் ஸ்ரீராம், தன் மனைவியுடன் இணைந்து பாடிவரும் ‘ஜுகல் பந்தி’ கச்சேரிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். தவிர, ஏராளமான தனி ஆல்பங்களையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீராம் - அனுராதா தம்பதியின் மூத்த மகன் ஜெயந்த் பி.எஸ்ஸி படிக்கிறார்; இளைய மகன் லோகேஷ் இன்ஜினீயரிங் படிக்கிறார்.
டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் அனு ராதா, “நான் பாடகின்னே இந்த இளைய தலைமுறையில பலருக்கும் தெரியாது. ‘நீங்க ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் தானே?’னுதான் கேட்பாங்க. மியூசிக்ல சாதிக்கணும்னு நிறைய பிள்ளைகள் ரியாலிட்டி ஷோவுக்கு வர்றாங்க. ஆனா, அதுல சிலராலதான் ஜொலிக்க முடியுது. நல்ல வேளையா, 30 வருஷத்துக்கு முன்னாடியே நான் ஃபீல்டுக்கு வந்துட்டேன். ஓரளவுக்கு நல்ல பாடல்கள் பாடியிருந்தாலும் கூட, என் பசங்க மட்டும் என்னை சிங்கராவே மதிக்க மாட்டானுங்க. ரெண்டு பசங்களும் அனிருத் ரசிகர்கள். அவர் மியூசிக்ல நான் பாடினாதான் என்னை சிங்கரா ஏத்துப் போம்னு சொல்றாங்க. அதனால, அனிருத் கிட்ட வெட்கத்தைவிட்டு, ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுப்பா...’ன்னு கேட்டேன். இத் தனை வருஷத்துக்கு அப்புறமா எனக்கு எப்படியான சிக்கல்னு பாருங்க” என கலகலக்கிறார்.
“இசையெனும் கடல்ல ஜோடியா பயணம் செய்யும் பாக்கியத்தைக் கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கார். அந்தப் பொறுப்பைக் கடைசிவரை சரியா செய்வோம்...” கூட்டாகச் சொல்லும் ஸ்ரீராமும் அனுராதாவும், சங்கீத சமர்ப்பணமாக, ‘எப்படிப் பாடினாரோ...’ என்ற கர்னாடக இசை பக்திப் பாடலைப் பாடிக்காட்டி, திருவையாறு கச்சேரி கேட்ட உணர்வில் நம்மை திளைக்க வைத்தனர்.
- கச்சேரி களைகட்டும்...