மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 6: காதல் கடிதத்தில் 'குஷ்பு'... அனிதாவை மயக்கிய மண்ணின் குரல்!

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி

பாடகர்கள் குப்புசாமி - அனிதாவின் கலகல காதல் - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்

‘மக்கள் இசை’யைக் கடைக்கோடிவரை கொண்டுசென்ற பெருமை புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதிக்கு உண்டு. கிராமிய வாழ்வின் அன்பு, காதல், வீரம், பக்தி என சகலத்தையும் பாடலாக வடித்து, குக்கிராமம் முதல் மேற்கத்திய நாடுகள் வரை அந்த இசையை ஒலிக்கச் செய் தவர்கள். இயக்குநர் ஷங்கர் படம்போல ஆச் சர்யப்படுத்துகிறது இவர்களின் ‘ஹைடெக்’ வீடு. அந்த வியப்பு அடங்குவதற்குள், காதல், கரியர் போராட்டம், பெருமித வெற்றி என தங்களின் கலகலப்பான கதைக்குள் நம்மை அழைத்துச் சென்றனர்.

“என் வாலிப பருவத்துல வறுமை, கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தேன். தினமும் ஸ்கூலுக்குப் பல கிலோமீட்டர் நடந்துதான் போவேன். அப்பவும் சரி, நான் மியூசிக் காலேஜ் படிக்கிறப்பவும் சரி ‘உனக் கெல்லாம் படிப்பே ஜாஸ்தி... இதுல மியூசிக் வேறயா? மண்வெட்டி பிடிக்கிற கைக்கு மைக் தேவையா?’னு என்னைப் பலரும் ரொம்பவே ஏளனம் பேசினாங்க. குடும்பத்துல நான்தான் மூத்த பிள்ளை. நான் கஷ்டப்பட்டு முன்னேறி, என் தம்பி, தங்கச்சியையும் நல்லா படிக்க வெச்சேன்” குப்புசாமியின் போராட்டங் களைக் கண்முன் நிறுத்துகின்றன, அவரின் வலி மிகுந்த வார்த்தைகள்.

“என் பூர்வீகம் உத்தரப்பிரதேசம். மேட்டுப் பாளையத்துலதான் வளர்ந்தேன். செல்வாக் கான குடும்பம். ஸ்கூல் படிக்கும்போதே தமிழ்ல எழுதப் பேச ஆர்வமா இருப்பேன். முறைப்படி மியூசிக் கத்துகிட்டேன். பாடகி யாகணும்ங்கிற ஆசையில சென்னைப் பல்கலைக்கழகத்துல மியூசிக் கோர்ஸ் சேர்ந் தேன். அங்கதான்...” என ராகத்துடன் இழுக் கும் அனிதாவுக்கு, அதே கல்லூரியில் ஆராய்ச் சிப் படிப்பு படித்துக்கொண்டிருந்த குப்புசாமி யுடன், மோதலிலிருந்து காதல் மலர்ந்துள்ளது.

“காலேஜ்ல அனிதா பின்னாடி நிறைய பசங்க சுத்திட்டிருப்பாங்க. பாதுகாப்பு கொடுக்கிற மாதிரி, நான் அனிதாவை இம்ப்ரெஸ் பண்ண எவ்வளவோ முயற்சி செஞ்சேன். என்னையும் இவங்க பெரிசா கண்டுக்கலை. முட்டலும் மோதலுமாதான் இருப்போம். தென்னிந்தியக் கல்லூரி மாணவர் களின் திறனை வெளிப்படுத்துற ஒரு நிகழ்ச்சி யில, நான் பாடின பாட்டுக்குப் பாராட்டுகள் குவிஞ்சது. அப்பதான் என்மேல அனிதாவுக்குத் தென்றல் வீச ஆரம்பிச்சது. என்கூட டிவி நிகழ்ச்சிகள், கச்சேரிகள்ல சேர்ந்து பாடி னாங்க. ‘உங்களை நான் காதலிக்கிறதா சொன்னா என்ன பண்ணுவீங்க?’னு ஒருநாள் அனிதாகிட்ட கேட்டேன். ‘இதுதான் பண்ணு வேன்’னு பெரிய சொம்பை எடுத்து கோவமா என் மேல வீசிட்டாங்க...” குப்புசாமி மிரட்சி யுடன் சொல்ல, குலுங்கிச் சிரிக்கிறார் அனிதா.

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி

“கொஞ்ச நாள் இவர் எங்க வீட்டுக்கு வந்தும் பாட்டு சொல்லிக் கொடுத்தார்.

‘மாசி மாசம் பொறந்துட்டு மாமா
என்னை மாலையிடத் தயங்கிடலாமா?
மாமன் மகளை மறந்திடலாமா?
என்னை மயங்க வெச்சு மழுப்பிடலாமா?’


- இதுபோல இவர் மனசுல இருக்கிறதை என் வாயால சொல்ல வைக்கணும்னு, காதல் பாடல்களா சொல்லிக் கொடுப்பார். நானும் அப்பாவியா பாடினேன். ஏதேதோ பெயர்ல எனக்கு லவ் லெட்டரும் அனுப்புவார். அதுல இவர் பெயரைச் சுருக்கி, ‘குஷ்பு’னு எழுதி யெல்லாம் காமெடி செஞ்சார். எதுக்குமே மயங்காத நான், இவர் குரலுக்கும் இசைத் திறமைக்கும் மயங்கிட்டேன்” - வெட்கத்தில் அனிதா உருக, குப்புசாமியின் முகத்தில் பெருமிதம்.

1992-ல் இவர்களுக்குத் திருமண மானது. அதன்பிறகு, இருவரும் ஒன்றாக மக்கள் இசைப் பாடல்களை உலகம் முழுக்கப் பாடிப் புகழ்பெற் றனர்.

“இசையை மட்டுமே நம்பி வாழ்க்கையைத் தொடங்கினோம். கிராமியப் பாடல்களைத் தகுதி யற்றதா நினைச்சு, என்கூட சேர்ந்து பாட பல பாடகர்கள் தயங்கினாங்க. எங்க ரெண்டு பேரையும் ஒடுக் கணும்னு எத்தனையோ வேலைகள் நடந்திருக்கு. ஆனாலும், மக்களின் ஆதரவு இப்பவரைக்கும் எங்களுக்குப் பரிபூரணமா கிடைக்குது” கரியரில் வளர்ந்த கதையை குப்புசாமி சொல்ல...

“கிராமிய வாழ்வின் எல்லா விஷ யங்களும் இவருக்கு அத்துப்படி. உழவுலேருந்து ஊர்ப்பெருமை வரைக்கும் கடகடனு பாடல் எழுதி மெட்டுப் போடுவார். முறையா ஆராய்ச்சி செஞ்சு உருவாக்கும் பாடல்களைப் பல வருஷமா ஆவணப் படுத்திகிட்டிருக்கார். ரொம்ப கஷ்டப்பட்டு ‘மக்கள் இசை’க்கு நாங்க பாதை வகுத்திருக்கோம். வயசுல நாங்க பெரியவங்களா இருந்தாலும், மக்கள் இசையில எங்களுக்கு குப்புசாமி தான் முன்னோடி’னு விஜய லட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதி ஆத்மார்த்தமா சொல்லியிருக்காங்க” கணவரின் புகழை எடுத்துரைக்கும் அனிதாவின் குரலில் பூரிப்பு.

ஆயிரக்கணக்கான கிராமியப் பாடல்களை உருவாக்கியுள்ள குப்புசாமி, ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’, ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’, ‘காத்தாடிப்போல’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல் களையும் சினிமாவில் பாடியிருக்கிறார்.

“இயக்குநர் தங்கர் பச்சானும் நானும் நண்பர்கள். அவருக்காகத்தான் அவரின் ‘சொல்ல மறந்த கதை’ படத்துல நடிக்க ஒப்புக்கிட்டேன். அந்தப் படத்துல நடிக்கிறப்பவே என் கேரக்டர் எனக்குப் பிடிக்கல. தங்கர் பச்சான் என்ன நினைச்சாரோ தெரியல. அவரின் ‘தென்றல்’ படத்துல நான்தான் பாடணும்னு, வித்யாசாகர் சார்கிட்ட போராடி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். ‘புத்தம்புது பாட்டு வந்தா தாண்டவக் கோனே’ பாடலும் பிரமாதமா உருவாச்சு” என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் குப்புசாமி, அந்தப் பாடலை உச்ச ஸ்தாயியில் பாடிக்காட்டி, சிலிர்ப்பூட்டினார்.

“தினமும் இவர்தான் எனக்கு காபி போட்டுக் கொடுப்பார். விதவிதமா சமைச்சுக் கொடுப்பார். எனக்கும் சேர்த்து இவர்தான் ஷாப்பிங் போவார். நான் ஆசைப்பட்டு எந்தப் பொருள் கேட்டாலும், அது எந்த நாட்டுல கிடைச்சாலும் வாங்கிக் கொடுத்துடுவார். சம்பாதிக்கிறதையெல்லாம் எங்கிட்டதான் கொடுப்பார். எங்க பெரிய பொண்ணு டாக்டர் பல்லவிக்குக் கல் யாணம் ஆகிடுச்சு. சின்னவ மேஹா ப்ளஸ் டூ படிக் கிறா. கல்யாணம் ஆனப்போ எங்களைப் பலரும் கேலி கிண்டல் செஞ்சாங்க. ஆனா, இப்பவரை என்னை ராணி மாதிரி பார்த்துக்கிறார். நானும் இவருக்காக எல்லாவிதத்துலயும் தமிழ் மரபுகளைக் கடைப்பிடிச்சு, தமிழ்ப்பெண்ணா பெருமையா வாழறேன்” என்று சொல்லும் அனிதாவின் விருப்பத்துக்காக...

‘ராசாத்தி உன்னை எண்ணி
ராப்பகலா கண் விழிச்சேன்
ராப்பகலா கண் விழிச்சு
ராணி உன்னைக் கைப்பிடிச்சேன்’


என்ற பாடலைக் குப்புசாமி பாட, அன்பால் நிறைந்தது அந்த வீடு!

- கச்சேரி களைகட்டும்...