
இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்
‘அகத்தியர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை...’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் பலரும் தெய்விக உணர்வில் பரவச மடைவார்கள். தனித்துவக் குரலால் அந்தப் பாடலுக்கு உயிரூட்டிய டி.கே.கலா, தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகி. தவிர, குணச்சித்திர நடிகையாகவும் டப்பிங் கலைஞராகவும் பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக கவனம் பெற்ற சண்முகசுந்தரியின் மூத்த மகள்தான் இவர். திரையுலகில் தன்னை வளர்த்து விட்டவர்களுக்கு நன்றிகூறி, தன் இசைப்பயணம் குறித்து உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் கலா...

“தன் அஞ்சு வயசுலயே நாடக கம்பெனியில எங்கம்மா வேலைக்குச் சேர்ந்தாங்க. பாட றது, நடிக்கிறதுனு கலைத்துறை தான் உலகம்னு வாழ்ந்தாங்க. எங்கப்பா கபாலி, வைரம் அருணாசலம் செட்டியார் கம்பெனியில நாடகக் கலைஞரா இருந்தார். எங்கம்மா, தன் அஞ்சு பெண் பிள்ளைகள் நலன்லயும் ரொம்ப அக்கறையா இருந்தாங்க. குழந்தைப் பருவத்துலயே கேள்வி ஞானத்துல பக்திப் பாடல்களை ஆர்வமா பாடினேன். சினிமாவுல என்னைப் பாட வைக்கணும்னு எங்கம்மா ஆசைப்பட்டாங்க. அதனால, முறைப்படி இசை கத்துகிட்டேன். அந்த நேரத்துல நாடகம் மற்றும் சினிமாவுல அம்மாவுக்குப் போதுமான வருமானம் கிடைக்கல. அப்பாவுக்கும் நாடகங்கள்ல வாய்ப்பு குறைஞ்சது. குடும்பத்துல பொருளாதார நெருக்கடி அதிகமாச்சு.
12 வயசுலயே கச்சேரிகள்ல பாடி, சம்பாதிக்க ஆரம்பிச்சேன். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் ஐயாதான், அம்மாவுக்கு குருநாதர். அவர் இயக்கிய ‘அகத்தியர்’ படத்துல ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ பாடலைப் பாடவும், அந்தப் பாடல்ல நடிச்ச சிறுவனுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கவும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போ எனக்கு 13 வயசு. என் முதல் சினிமா பாடல் பெரிய ஹிட்டாகவே, அதுக்கப்புறமா மைக்கும் கையுமா பிஸியான பாடகியானேன்” - தனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்த அறிமுக வாய்ப்பை சிலாகித்துச் சொன்ன கலா, தமிழ்த் திரையிசையில் பரிச்சயமான பின்னணிப் பாடகியாக வளர்ந்தார்.
“பல படங்கள்ல எம்.ஜி.ஆருடன் நடிச்ச தால, எங்கம்மா மேல எம்.ஜி.ஆர் ஐயா ரொம்பவே அன்பு கொண்டிருந்தார். அவர் கலந்துகிட்ட ஒரு கல்யாண நிகழ்ச்சியில நான் கச்சேரி பண்ணினேன். நான் பாடினதைக் கேட்டு ரசிச்சு, என்னை மனசாரப் பாராட்டி னார். பிறகு, அவர் ஹீரோவா நடிச்ச ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல ‘போய்வா நதி அலையே’ பாடலைப் பாட எனக்காக சிபாரிசு செஞ்சார். ‘உழைக்கும் கரங்கள்’ படத்துலயும் ஒரு பாடல் வாய்ப்பு கொடுத்தார். ‘அகத்தியர்’ படத்துல பாடினதுக்கு அப்புறமா, பக்திப் பாடல்கள், தனி ஆல்பங்கள், குழந்தை நட்சத்திரங்களுக்குத்தான் அதிகமா பாடினேன். இந்த நிலையில, எம்.ஜி.ஆர் படங் கள்ல ஹீரோயினுக்குப் பாடுற பெரிய வாய்ப்புகள் எனக்குக் கிடைச்சது, பலருக்கும் பிடிக்கல. அந்த வாய்ப்புகளைத் தடுக்க, பல வேலைகள் நடந்துச்சு.
அதையெல்லாம் தாண்டி, யேசுதாஸ் சாருடன் சேர்ந்து நான் டூயட் பாடின ‘போய்வா நதி அலையே’ பாடல் பெரிய ஹிட் டாச்சு. நிறைய எதிர்ப்புகளைத் தாண்டித்தான், சினிமா, கச்சேரினு எனக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தொடர்ந்து உறுதிப்படுத்தி னேன். இப்பவும் அந்த எதிர்ப்புகள் மற்றும் தடைகளைத் தாண்டி, சுவாரஸ்யமான அனுபவங்களுடன் என் கலைப்பயணம் தொடருது. இதுக்கிடையே, சினிமாவுல நான் பிஸியா பாட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா, குடும்பப் பொருளாதார நெருக்கடிகள் சீராக ஆரம்பிச்சது. என் மூணு தங்கச்சிகளுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சுட்டுதான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பிறகு, கடைசி தங்கைக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன். பாடகியா நான் பேர் எடுத்து, குடும்பத்தையும் கரைசேர்த்ததால, எங்கம்மா வுக்கு அளவுகடந்த சந்தோஷம்” - மறைந்த தன் அம்மாவின் நினைவுகளில் மூழ்கி நெகிழ்கிறார் கலா.
எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, சங்கர் - கணேஷ், வி.குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையிலும் பல்வேறு ஹிட் பாடல்களை இவர் பாடி யுள்ளார். அதில், ‘வாரேன் வழி பார்த்திருப் பேன்’, ‘ஆடிப்பாரு மங்காத்தா’, ‘பொறந்திருச்சு காலம்’ உள்ளிட்ட பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ந்து பல பாடல்களைப் பாடிய அனுபவத்தைப் பகிர்ந்தவர், “சின்ன புள்ளையா இருந்த போதிலிருந்தே ரஹ்மான் தம்பியை எனக்குத் தெரியும். என்மேல அன்பு வெச்சு பல படங்கள்ல பாடுற வாய்ப்பைக் கொடுத்தார். அதுல ‘டூயட்’ படத்துல வரும் ‘குளிச்சா குத்தாலம்’, ‘தாஜ்மஹால்’ படத்துல வரும் ‘செங்காத்தே’ பாடல்கள் ஹிட்டாச்சு. சின்ன இடைவெளிக்குப் பிறகு, மறுபடியும் மக்கள் மத்தியில என்னைக் கொண்டுபோனது ரஹ்மான் தம்பிதான்” என்று புன்னகைத்தவர், ‘கில்லி’ படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக ஸ்கோர் செய்து, குணச்சித்திர நடிகையாகவும் பரிமாணம் பெற்றார்.
“எனக்கு ஆக்டிங் பழக்கமில்லை. இயக்குநர் தரணி சார் நம்பிக்கை கொடுத்து, ‘கில்லி’ படத்துல நெகட்டிவ் ரோல்ல என்னை நடிக்க வெச்சார். கதைப்படி, போன்ல என் கணவர், ‘அங்க என்ன நடக்குது’னு கேட்பார். ‘கொலை தான்’னு நான் பேசுற மாடுலேஷனும், மதுரை ஸ்லாங்ல வரும் என் டயலாக் டெலிவரியும் படக்குழுவினருக்குப் பிடிச்சது. அந்த ரோலுக்கு அப்படியே நேரெதிரா அப்பாவி யான அம்மா ரோல் ‘வெயில்’ படத்துல. எங்கப்பா இறந்த நேரம் அது. ரொம்ப உடைஞ்சுபோயிருந்ததால, அவரை மனசுல நினைச்சுகிட்டேதான் மகனைத் தொலைச்ச அம்மாவா ‘வெயில்’ல நடிச்சேன். என் கேரக்டர் அந்தப் படத்தைத் தயாரிச்ச டைரக்டர் ஷங்கர் சாருக்கு பிடிச்சுப் போன தால, அவரின் ‘ஐ’ படத்துல விக்ரமுக்கு அம்மாவா என்னை நடிக்க வெச்சார். ‘குருவி’ படத்துல விஜய் தம்பியின் அம்மாவா வெள்ளந்தியான ரோல்ல நடிச்சது வித்தியாச மான அனுபவம்” என்றவரின் ஒரே மகன், குடும்பத்தினருடன் கனடாவில் வசிக்கிறார்.
“தமிழ் சினிமாவின் பெரும் ஜாம்பவான்கள் பலரோடும் நெருங்கிப் பழகுற கொடுப்பினை எனக்குக் கிடைச்சிருக்கு. எம்.ஜி.ஆர் ஐயாவின் ஆசியும், ஜெயலலிதா அம்மாவின் நட்பும் கிடைச்சது பெருமிதம். ஜெயலலிதா அம்மா, ‘என் ஃபிரெண்டு கலா...’னு பாசமா சொல் வாங்க. அவங்கதான் என் மகன் கல்யாணத்தை நடத்தி வெச்சாங்க. எங்கம்மாவைப் போலவே, என் இந்தப் பிறப்பும் கலைப்பயணத்துக் கானதுதான்” என்று மகிழ்ச்சியும் உற்சாகமு மாகக் கூறுகிறார் டி.கே.கலா.
- கச்சேரி களைகட்டும்...