
‘பிரேம கதா’ சொல்லும் பாடகி பின்னி கிருஷ்ணகுமார் - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்
ஒரு பாடல்... ஓஹோவென புகழ். பின்னணிப் பாடகி பின்னி கிருஷ்ணகுமாருக்கு ‘சந்திரமுகி’ ‘ரா ரா’ பாடல் மூலம் கிடைத்த புகழ் அந்த ரகம்தான். மனைவியின் நலனையே தன் நலனாக பாவிக்கும் காதல் கணவர் கிருஷ்ண குமார்தான் பின்னியின் பலம். கர்னாடக இசைப் பாடகர்களாக கரியரிலும் கரம்கோத்து வெற்றி நடைபோடுபவர்களின் மகள்தான், ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி. மலர்ந்த சிரிப்புடனும் உற்சாகத்துடனும் நம்மை வர வேற்றவர்கள், எப்போதும் குறையாத தங் களின் உற்சாகத்துக்கான காரணத்திலிருந்து உரையாடலைத் தொடங்கினர்...
“ ஃபேஷன் விஷயத்துல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். வெளியிடங்களுக்குப் போறப்போ பளிச் மேக்கப்ல கலர்ஃபுல்லா டிரஸ் பண்ணிப்பேன். தவிர, நகை, நகைச்சுவை, சுவை... இவை மூணும்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்” - உற்சாகம் ததும்ப பின்னி சொல்ல, மனைவியின் பேச்சை வழிமொழிகிறார் கிருஷ்ணகுமார்.

“பிரகாசமான தோற்றமும், அன்பான சிரிப்புமா அணுகிறதுதான் பிறருக்கு நாம கொடுக்கிற சிறந்த வரவேற்புனு நம்புறோம். வருத்தமாவும் சோகமாவும் இருக்கிறதே எங்களுக்குப் பிடிக்காது. எங்க குருஜி பால முரளிகிருஷ்ணா ஐயாகிட்ட நாங்க கத்துகிட்ட நல்ல பண்புகள்கள்ல இதுவும் ஒண்ணு” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கிருஷ்ணகுமார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணகுமாரும் பின்னியும் இசைக் குடும்பத் தைச் சேர்ந்தவர்கள். இசையால் இணைந்த இவர்களின் ‘பிரேம கதா’வை வெட்கத்துடன் பகிர்ந்தார் பின்னி...
“ஸ்கூல் படிக்கும்போது எங்களுக்குள்ள அறிமுகம் ஏற்பட்டுச்சு. நான் பயங்கர வாயாடி. இவர் பேசவே மாட்டார். இவரை சரியா புரிஞ்சுக்காம, ரொம்ப கர்வமா இருக் கார்னு தப்பா நினைச்சேன். சின்னச் சின்ன உரசல்களுக்குப் பிறகே இவரோட குணத்தைப் புரிஞ்சுகிட்டேன். நண்பர்களா பழகினோம். இசை மேல எங்களுக்கிருந்த காதலால எங்க மனமும் இணைஞ்சது. ரெண்டு வீட்டார் சம்மதத்தோட கல்யாணம் நடந்துச்சு” சிரிப்பும் வெட்கமுமாகக் கூறும் பின்னி, தன் கணவருடன் இணைந்து ஏராளமான வெளி நாட்டு நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார்.
கர்னாடக இசையில் முன்னோடிப் பாடக ரான பாலமுரளிகிருஷ்ணாவின் நினைவில் கரைந்த கிருஷ்ணகுமார், “குருஜிக்கும் எங்களுக் கும் மூணு தலைமுறை பந்தம். அவர்கிட்ட நாங்க ரெண்டு பேரும் இசை கத்துக்கிட்டது, உரையாடி மகிழ்ந்ததெல்லாம் எங்க இசைப் பயணத்துக்கும் இல்லறத்துக்கும் பேருதவியா அமைஞ்சது. ரொம்ப காலமா கர்னாடக இசையில மட்டும்தான் நாங்க பாடிக்கிட்டிருந் தோம். என் மனைவி சினிமாவிலும் பாட ஆசைப்பட்டாங்க. இவங்க குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டை இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கு கொடுத்தோம். ‘சந்திர முகி’ல பாட வாய்ப்பு கிடைச்சது. திரையிசை யில அறிமுக பாடகருக்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கிறது பெரிய விஷயம்!” கிருஷ்ணகுமாரின் பேச்சில் மனைவி மீதான அன்பும் பெருமிதமும் வெளிப்படுகின்றன.
“சோஷியல் மீடியா பெரிசா வளராத கால கட்டம் அது. ‘ரா ரா’ பாடல் வெளியாகி சில மாசங்களுக்கு அப்புறமாதான் பலரும் என்னை நோட்டீஸ் பண்ணாங்க. அந்தப் பாட்டு பெரிய ஹிட்டானதும் நிறைய பாடல் வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, ‘சந்திரமுகி’ வெளியாகி ஏழு மாசங் களுக்குப் பிறகுதான் புதுப்பாடல் வாய்ப்பு கிடைச்சது. நான் கர்னாடக இசைப் பாடல்கள் தான் பாடுவேன், கச்சேரிகள்ல பாடுறதால சினிமாவுல பாட நேரம் இருக்காதுனு பலரும் தவறா நினைச்சாங்க. இதனாலயும் எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காம போயிருக்கலாம். ‘ரா ரா’ பாடலுக்குப் பிறகு, நான் பாடின பல நல்ல பாடல்கள் பெரிசா பேசப்படாம போனதுக்கும் காரணம் புரியல” மென்சிரிப்புடன் கூறும் பின்னி, இளையராஜா, தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர் களுக்குப் பல்வேறு பாடல்களைப் பாடி யுள்ளார். இளைய தலைமுறையினர் ஆயிரக் கணக்கானோருக்கு இவர்கள் இருவரும் இசை பயிற்றுவித்திருக்கின்றனர். ஸ்வேதா மோகன், கோபிகா பூர்ணிமா, ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ரஞ்சித் உன்னி உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பலரும் இவர்களின் மாணவர்கள். பிரபல இசையமைப்பாளர்கள் சிலருக்கு கிருஷ்ண குமார் ஆலோசகராகவும் இருக்கிறார்.
“சில மலையாளப் படங்கள்ல பாடியிருந் தாலும், கர்னாடக இசைதான் எனக்கு அதிக மனநிறைவைக் கொடுக்குது. இளைஞர்களின் இசைத்திறனைப் பட்டைத்தீட்டி புதுப்புது பாடகர்களை உருவாக்கிவிடுறதை பின்னி பெரிய பாக்கியமா நினைப்பாங்க” என்ற கிருஷ்ணகுமாரைத் தொடர்ந்து, தன் இல்லற சுதந்திரம் குறித்து பகிர்ந்தார் பின்னி...
“நினைச்ச விஷயத்தைச் சுதந்திரமா செய் யுறதுக்கான ஊக்கம் கொடுக்கிற கணவர் கிடைக்கிறது பெண்களுக்குப் பெரிய கொடுப் பினை. அந்த விதத்துல என் கணவர் ஒருபடி மேலபோய், அவரைவிட எனக்கு அதிக புகழ் கிடைக்கணும்னு ஆசைப்படுவார். கர்னாடக இசையில என்னைவிட இவர் எக்ஸ்பெர்ட். அஞ்சு மொழிகள்ல பாடல்கள் எழுதி, இசை யமைப்பார். கச்சேரிகள்ல இவரைவிட நான் நல்லா பாடணும்னு என்னை ஊக்கப்படுத்து வார். எந்தக் கோபத்தையும் ரெண்டு நிமிஷத் துக்கு மேல நீடிக்க விட மாட்டோம்” என்கிற பின்னியைப் பார்த்துப் புன்னகைத்தபடியே பிள்ளைகள் குறித்துப் பேசினார் கிருஷ்ணகுமார்.
“ஷிவாங்கி பேசுறது கீச்சுகீச்சுனு குழந்தைத் தனமா இருந்தாலும் அதுபோன்ற குரல்வளம், பாடுறதுக்கு உதவியா இருக்கும். ‘இந்தக் குரல் வளம் கடவுள் உனக்குக் கொடுத்த கிஃப்ட். அதனால, உன் குரலையும் நீ பேசுறதையும் யார் கிண்டல் செஞ்சாலும் கவலைப்பட வேண்டாம்’னு பொண்ணுகிட்ட சொல்லு வோம். பொண்ணு பாடகியா வளரணும்னு ஆசைப்பட்டோம். ஆனா, பெரிய நடிகர் களோடு சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு அவளுக்குக் கிடைக்குது. ‘ஷிவாங்கியின் அப்பா - அம்மா’னு பலரும் எங்களைக் கூப்பிடுறது பெருமையா இருக்கு. மகன் விநாயக் சுந்தர் பி.டெக் படிக்கிறான்!”
“ ‘ரா ரா’ பாடல் ஒலிக்கிற காலம்வரை எனக்கு ரிட்டயர்மென்ட்டே கிடையாது!” என்று பின்னி, அந்தப் பாடலைப் பாடிக் காட்ட, கிருஷ்ணகுமார் முகத்தில் சந்தோஷம்!
- கச்சேரி களைகட்டும்...