மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சங்கீத சந்நிதி 9: “எதிர்பார்ப்புகளும் இல்லை; என் வாழ்க்கையில் ஏமாற்றங்களும் இல்லை!”

பாடகர் கிருஷ்ணராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாடகர் கிருஷ்ணராஜ்

- பாடகர் கிருஷ்ணராஜ் - இசைக் கலைஞர்களின் பர்சனல் ஸ்வரங்கள்

எதிர்பார்ப்புகள் அதிகமில்லாதபோது ஏமாற் றங்களுக்கும் இடமிருக்காது. இந்தக் கொள்கை யுடன் வாழ்ந்துவரும் பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜின் வாழ்க்கையில் அலைக் கழிப்பு, அவமானம், இழப்பு என எத்தனையோ போராட்டங்கள் சூழ்ந்தபோதும், அவை எவையுமே இவரை பாதிக்கவில்லை.

“பெரிசா எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க் கைக்குப் பழகிட்டதால, பாடல் வாய்ப்புகள் அதிகம் வராதது, அங்கீகாரம் கிடைக்காதது, பொருளாதாரச் சிக்கல்னு எதுவுமே எனக்கு வருத்தத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தல!” - தன்னம்பிக்கை ஊற்றெடுக்கப் பேசும் கிருஷ்ணராஜின் பாடல்களைக் கேட்டு ஆட்டம்போட்ட பலருக்கும் இவரின் உருவம்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் துளியும் நாட்டமில்லாத கிருஷ்ணராஜ், திரை யிசையில் நன்மதிப்புக்கு உதாரணமான பாடகர்.

“சேலம் மாவட்டம் வேம்படிதாளம் கிராமம்தான் என் பூர்வீகம். நெசவுக் குடும்பம். ஆறு சகோதரர்கள்ல நான்தான் கடைசி. ஸ்கூல் முடிச்சதும் மேற்கொண்டு படிக்க முடியல. பத்து வருஷம் நெசவுத்தொழில் செஞ்சேன். கேள்வி ஞானத்துல பாடுவேன்; இசைக்கருவிகள் வாசிப்பேன். முறைப்படி மியூசிக் கத்துக்கலாம்னு, சென்னையில இருக் கிற தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில சேர்ந் தேன். சிறந்த மாணவரா படிப்பை முடிச்சேன். பட்டமளிப்பு விழாவுல அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் எனக்குப் பதக்கம் அணி விச்சு வாழ்த்தினார். பிறகு, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜம் சார்கிட்ட உதவியாளரா வேலை செஞ்சுகிட்டே, மற்ற சில இசையமைப் பாளர்களுக்கு பக்திப் பாடல்களைப் பாடினேன். இதுக்கிடையே பல இசைமைப் பாளர்களைச் சந்திச்சு வாய்ப்பு கேட்டு வருஷக்கணக்குல அலைஞ்சேன். படிப்படியா சினிமா பாடல்களும் பாட ஆரம்பிச்சேன்” ஆரம்பகால சவால்களை விவரிக்கும் கிருஷ்ண ராஜ், இசையமைப்பாளர் தேவாவிடம் ‘டிராக் சிங்க’ராக நீண்டகாலம் வேலை செய்தார்.

தேவாவின் இசையமைப்பில் ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் வரும் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல் தான் கிருஷ்ணராஜுக்கு பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அதன்பிறகு, பல ஹிட் பாடல் களைப் பாடி பிரபலமான பாடகர்கள் பட்டியலில் இணைந்தார்.

“பிரதான பாடகர்களின் தேதி கிடைக்காத பட்சத்துல, அவசர தேவைக்காக என் குரல்ல நிறைய டிராக் பாடல்களைப் பாட வெச்சார் தேவா சார். அதுல சிலதை சினிமாவுல பயன் படுத்தியிருக்காங்க. எஸ்.பி.பாலசுப்பிர மணியம் சார் என்மேல ரொம்பவே அன்பு கொண்டவர். தேவா சார் இசையில அவர் பாடவிருந்த பல பாடல்களுக்கு நான் டிராக் பாடியிருந்தேன். ‘இவர் குரலே நல்லாயிருக்கு... இதையே சினிமாலயும் யூஸ் பண்ணிடுங்க’னு பெருந்தன்மையோடு எனக்காக சில பாடல் களை விட்டுக்கொடுத்திருக்கார்.

சங்கீத சந்நிதி 9: “எதிர்பார்ப்புகளும் இல்லை;
என் வாழ்க்கையில் ஏமாற்றங்களும் இல்லை!”

இதுபோக, நான் பாடினா நல்லாயிருக்கும்னு தேவா சார் எனக்குக் கொடுத்த பல பாடல் களும் ஹிட்டடிச்சது. அதுல ‘பொற்காலம்’ படத்துல வரும் ‘தஞ்சாவூரு மண்ணையெடுத்து’ பாடல் முக்கியமானது. இளையராஜா சாரை வெச்சு அந்தப் பாடலைப் பாட வைக்கணும்னு இயக்குநர் சேரன் சார் ஆசைப்பட்டார். அது நடக்காமபோகவே, கடைசியா அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்துச்சு” என்று சிரித்தபடியே, அந்தப் பாடலின் சில வரிகளைப் பாடிக் காட்டியவருக்கு, சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது அந்தக் கிராமியப் பாடல்.

“இரவு நேரத்துல ரெக்கார்டிங்ல பாடி எனக்குப் பழக்கமில்லை. ரஹ்மான் சார் இசையில ‘தாஜ்மஹால்’ படத்துல பாட இரவு நேரத்துல கூப்பிட்டிருந்தாங்க. அவர் ஸ்டூடியோவுல ரொம்ப நேரம் காத்திருந்து சோஃபாலயே தூங்கிட்டேன். ‘ரெக்கார்டிங் போலாம்’னு திடீர்னு எழுப்பிவிட்டாங்க. ‘ஈச்சி எழுமிச்சி’ பாடலைப் பாடி முடிச்சப்போ அதிகாலை நாலு மணியாகிடுச்சு. தூக்கக் கலக்கமே தெரியாத அளவுக்கு, ரஹ்மான் சார் அவ்ளோ தன்மையா வேலை வாங்கினார். இதேபோல எஸ்.ஏ.ராஜ்குமார் சார், சிற்பி சார், பரணி சார், யுவன் சங்கர் ராஜா சார் உட்பட பல இசைமைப்பாளர்களும் அன்பு பாராட்டி, பாடல் வாய்ப்புகளைக் கொடுத் தாங்க” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

‘நீ பார்த்துட்டுப் போனாலும்’, ‘கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா’, ‘சோக்கு சுந்தரி’, ‘நான் ரெடி நீங்க ரெடியா’, ‘அய்யய்யோ என் இடுப்பு வேட்டி’, ‘ஆம்பளைக்கும் பொம் பளைக்கும் அவசரம்’ உட்பட கிருஷ்ணராஜ் பாடிய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன.

 சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசின் விருது...
சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசின் விருது...

தமிழ்த் திரையிசையில் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டிய பாடகர்களில் கிருஷ்ணராஜ் முக்கியமானவர். இதுகுறித்த கேள்விக்குப் புன்னகையுடன் பதிலளித்தவர், “நான் பாடின பாட்டு எப்பவாவது ஒருமுறை தான் ஏதாச்சும் பெரிசா பேசப்படும். அப்புறமா நான் இருக்கிறதையே மறந்துடு வாங்க. ‘சூரரைப் போற்று’ படத்துல நான் பாடின ‘நாலு நிமிஷம்’ பாட்டுவரைக்குமே இதேநிலைதான். ஆரம்பகாலத்துல வாய்ப்பு கேட்டுப் போன இடங்கள்ல நிறைய அவமானங்களைச் சந்திச்சிருக்கேன். பாடகரானதும் வாய்ப்பு கேட்கிறதை நிறுத்திட்டேன். இனி இசையமைப்பாளர்களே கூப்பிட்டு வாய்ப்பு கொடுக்கிறதுதான் சரியா இருக்கும். நான் வாய்ப்பு கேட்கப் போய், அதை அவங்க தப்பா எடுத்துக்கிட்டா சங்கடமாயிடும்னு நினைச்சேன். சரியா தப்பான்னு தெரியாட்டியும் இந்த அணுகு முறையைத்தான் தொடர்ந்து கடைப் பிடிக்கிறேன்.

ஆஹா... ஓஹோன்னு பெயர் எடுக்காட்டி யும், கிடைச்ச வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி, சுய முயற்சியால இந்த அளவுக் குப் பெயர் எடுத்ததே எனக்குப் பெருமிதம்தான். குரலும் உடலும் ஒத்துழைக்கிறவரை பாடணும்ங்கிறது மட்டும்தான் என் ஒரே விருப்பம்” என்று உற்சாகமாகச் சொல்லி, குடும்ப கதைக்குள் நுழைந்த கிருஷ்ணராஜ், தன் இரண்டு மகள்களுக்குத் தாயுமானவரும் கூட.

“சினிமால பாட ஆரம்பிக்கும் முன்பே எனக்குக் கல்யாணமாகிடுச்சு. அப்போ வாடகைக்கு ஒண்டுக்குடித்தன வீட்ல வாழ்க்கையை ஆரம்பிச்சோம். 2003-ல் உடல்நிலை சரியில்லாம 35 வயசுலயே என் மனைவி மோகனாம்பாள் தவறிட்டாங்க. மகள்களுக்காக மனைவியின் இழப்பிலிருந்து சீக்கிரமே மீண்டேன். ஜடைப் பின்னி விடுற துலருந்து பணிவிடைகள் செய்யறதுவரை தாய் ஸ்தானத்துலருந்து மகள்களை வளர்த்தேன். இதனால, வெளியூர் கச்சேரி களைத் தவிர்த்ததுடன், தேவா சார்கிட்ட செஞ்ச வேலையிலிருந்தும் விலகினேன். ரெண்டு மகள்களுக்கும் கல்யாணமாகிடுச்சு. சாமானியர்களின் வாழ்க்கைதான் என்னு டையதும். இருக்கிறதை வெச்சு சமாளிப் போம்னு சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கேன்” என்று முடிப்பவரின் வார்த்தைகள், அமைதி யான வாழ்க்கைக்கான அனுபவ பாடம்!

- கச்சேரி களைகட்டும்...

மறக்க முடியாத பெருமிதம்!

மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, கிருஷ்ணராஜ் பாடிய ‘தஞ்சாவூரு மண்ணையெடுத்து’ பாடல் மிகவும் பிடித்தமானது. அவரைச் சந்தித்த அனுபவம் சொன்ன கிருஷ்ணராஜ், “நாதன் சார் அழைப்பின்பேரில், தேவா சார், நான், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசைக்குழுவுடன் ஒருமுறை சிங்கப்பூர் போனோம். அந்தப் பாடலை நான் பாடி முடிச்சதும் மேடையேறிய நாதன் சார், ரொம்பவே நெகிழ்ந்து என்னை வாழ்த்தினார். 2016-ல் அவர் இறந்ததும், சிங்கப்பூர் நாடாளுமன்றத் துல அவர் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினபோது, ‘தஞ்சாவூரு மண்ணையெடுத்து’ பாடலை ஒலிக்க வெச்ச பிறகே இறுதி ஊர்வலத்தைத் தொடங்கினாங்க. என் திரைப்பயணத்துல மறக்க முடியாத பெருமிதம் இதுதான்” என்கிறார் உருக்கமாக.