சினிமா
Published:Updated:

“சுதந்திரமாக இருக்கவேண்டும் சுயாதீன இசை!”

சியென்னார்
பிரீமியம் ஸ்டோரி
News
சியென்னார்

15 வயதில் ஆங்கிலத்தில் ராப் பாடல்கள் எழுத ஆரம்பித்து, பிறகு முழுக்க தமிழில் எழுதினேன்.

சியென்னார் - தமிழ் சுயாதீன இசையில் ஒரு மௌன ராகம். மிருதுவான இசையோடு, மென்மையான குரலில் பரிசோதனை முயற்சிகளாக உருப்பெறும் சியென்னாரின் (Siennor) பாடல்கள் தமிழ் சுயாதீன இசைக்குப் புதுவடிவம் கொடுக்கின்றன. 2017-ல் யூடியூபில் வெளியான `பொன்னிற மாலை’ சியென்னாரின் வருகையை அறிவித்தது; அதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் வெளியான பாடல்கள் மூலம் சமகாலத் தமிழ் சுயாதீன இசையின் (Independent music) முகங்களில் ஒருவராக அவர் பரிணமித்தார். கடந்த ஆண்டு Spotify-யில் மட்டும் 75 நாடுகளிலிருந்து சுமார் 3 லட்சம் முறைக்கு மேல் சியென்னாரின் பாடல்களை ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர். சியென்னாரின் சமீபத்திய பாடல் ‘உன் அருகில்.’

“சுதந்திரமாக இருக்கவேண்டும் சுயாதீன இசை!”

சியென்னார் யார்... சந்தித்தோம்.

“வாங்க” என கண்ணாடிக்குள் கண்கள் சிரிக்க வரவேற்கிறார் சியென்னார். ‘மியாவ்’ என்றவாறே அலட்சியப் பார்வையில் நம்மை அளந்துவிட்டு உள்ளே செல்கிறது அவரது சாம்பல் நிறப் பூனை Indie. சியென்னாரின் டியூன்களைத் தேக்கி வைத்திருக்கும் பியானோ முன்னறையில் நிற்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால், குறைந்த ஒளியில் மௌனித்திருக்கிறது ஒலிப்பதிவுக் கூடம்; சியென்னாரின் இசை இங்குதான் பிறக்கிறது!

“என் படகை ‘சியென்னார்’ என்று அழைக்கலாம். காலம் என்னும் நிற்காத நதியில், சிந்தனை எனும் துடுப்பைக் கொண்டு பயணிக்கும் இந்தப் பயணத்தில் பாடல்கள் எழுதி, இசையமைத்து, அதைப் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” அசாதாரண அமைதியுடன் பேசத் தொடங்குகிறார் சியென்னார்.

“நான் அதிகம் பேசுகிற ஆள் கிடையாது; சிறுவயதிலிருந்தே தனியாகத்தான் இருப்பேன். அந்த வயதில் நான் கேட்டவை பெரும்பாலும் தமிழ் சினிமாப் பாடல்களும், எளிதாகக் கிடைத்த பிரபலமான மேற்கத்திய ஆல்பங்களும்தான். இசையமைப்பாளர்களே முழுப் பாடலையும் உருவாக்குபவர்கள் என்று சிறுவயதில் நம்பினேன். அந்தத் தவறான புரிதல்தான் இசையமைப்பாளராக ஆக வேண்டும், சினிமாவுக்கு இசையமைக்க வேண்டும் என்கிற உந்துதலை எனக்குக் கொடுத்தது. 7 வயதில் கீபோர்டில் தொடங்கிய இசைப் பயிற்சி, 12 வயதில் பியானோவில் தொடர்ந்து சுயமாக கிடார் கற்றுக்கொண்டதில் வந்து நின்றது. ட்ரினிட்டி இசைக் கல்லூரி 8 கிரேட் தேர்வுகளை முடித்திருந்த இந்தக் காலகட்டத்தில்தான் இன்ஜினீயரிங் படிக்கக் கல்லூரிக்கும் சென்று வந்துகொண்டிருந்தேன்” என்று இசைக்குள் நுழைந்த கதைச் சொல்கிறார் சியென்னார்.

“15 வயதில் ஆங்கிலத்தில் ராப் பாடல்கள் எழுத ஆரம்பித்து, பிறகு முழுக்க தமிழில் எழுதினேன். கையில் எப்போதும் கீபோர்டு இருந்ததால், பாடல்களுக்கு இசையமைத்து யூடியூபில் வெளியிட்டேன். கொஞ்ச காலம் ‘Endless Knot’ என்ற குழு மூலம் பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பாடி வெளியிட்டோம். இந்த வடிவம்தான் என்றில்லாமல், இருக்கும் இசைக் கருவிகளைக் கொண்டு பரிசோதனை முயற்சியாக இந்தப் பாடல்களை உருவாக்கினோம். Indie (சுயாதீன இசை) என ஒன்று இருப்பதாகவே அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய ஆரம்பக்கால முயற்சிகள் எல்லாம் indie தான் என்பதைப் பின்னாள்களில் அறிந்தேன்” தன்னை அழைப்பதாக நினைத்து பூனை திகைத்துப் பார்க்க, புன்னகை ஒன்றை அதன்மீது தூவுகிறார்.

“2017-ல் கேபர் வாசுகி, டென்மா இருவரையும் சந்தித்தேன். அப்போது ‘பொன்னிற மாலை’ உள்ளிட்ட சில பாடல்களை நான் உருவாக்கி வைத்திருந்தேன். அவற்றை யூடியூபில் வெளியிடச் சொல்லி இருவரும் ஊக்கமளித்தனர். தயக்கத்துடன் முதலில், ‘கண்ணே’ என்ற பாடலை வெளியிட்டேன். அதுவரை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பார்வைகள், ஆயிரத்தைத் தொட்டன. எனக்கு அது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அதன் பிறகு வெளியான ‘பொன்னிற மாலை’ தான் என்னுடைய தொடக்கமாக அமைந்தது!”

‘Ambivalent’ பியானோ தனியிசை, ‘இன்னும் என்ன’, ‘வா உயிரே’, `முயல் தோட்டம்’, Terrace Jams குழு ஆல்பம், கொரோனா ஊரடங்கில் வெளியான ‘Side B’ தொகுப்பு உள்ளிட்ட சியென்னாரின் பாடல்கள் தமிழின் சமகால சுயாதீன இசையை முன்னகர்த்திச் செல்கின்றன.

“சுதந்திரமாக இருக்கவேண்டும் சுயாதீன இசை!”

``சுயாதீன இசைச் செயல்பாடு சியென்னாருக்கு வருமானம் கொடுக்கிறதா?’’

“Indie-யைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியில் எனக்கு இழப்பு மட்டும்தான். எனவே நான் இசை வகுப்பு எடுக்கிறேன், சின்னச் சின்ன ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். அந்த வருமானத்தை indie-யில் முதலீடு செய்கிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் என்னுடைய பாடல்கள் பரவலானால் ராயல்டி வரலாம். தமிழில் சுயாதீன இசை என்பது ரொம்ப காலமாகவே இருந்துவருகிறது. Bluebirds ராஜசேகர், நெமசிஸ், யோதகா, பூர்வா, லா பொங்கல் எனப் பல குழுக்கள் இங்கு இருந்திருக்கின்றன. அது ஒரு அலையாக வந்து போய்விடுகிறது. அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. ஆனால், அமைப்புப் பின்னணி வந்துவிட்டால் அது மாற்று இசையாகிவிடும்; சுயாதீன இசை என்பது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்; அதன் தன்மையே அதுதான்.”

``சினிமாப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த சியென்னாருக்கு சினிமாவில் இசையமைக்கும் ஆசை இப்போது இருக்கிறதா?’’

“ஆம், இல்லை - இரண்டும்தான். சினிமாவுக்குத் தான் போக வேண்டும் என்பது தீர்மானம் கிடையாது; ஆனால், வாய்ப்பு வந்தால் நிச்சயம் செய்வேன். இசையமைப்பாளராக வாய்ப்பு வரும்வரை அதை மட்டுமே நம்பியிருந்தால் ரொம்பச் சிரமமாகிவிடும். அதனால் நாம் செய்வதைத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். நான் சினிமாவுக்கு வந்தாலும் வராவிட்டாலும் என்னிடமிருந்து இசை வந்துகொண்டே இருக்கும்!”

கிடாரின் கடைசி மீட்டல் போல் பேச்சை நிறைவுசெய்கிறார் சியென்னார்!