
எப்பவும் நான் கதைக்கும் அதை உருவாக்கினவங்களுக்கும் என்னை அர்ப்பணிச்சிடுவேன். அப்போ கதைக்கு என்ன தேவையோ அது தானா வரும்.
மலையிடுக்குகளில் கசியும் பழங்குடிப் பாடல்களை நினைவுபடுத்தும் பிரதீப்பின் குரல். `அட்டகத்தி’யில் `ஆசை ஒரு புல்வெளி’யில் ஆரம்பித்த பயணம், ‘மாயநதி’யில் கலந்து, ‘கோடி அருவி’யாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தனது பல வருட உழைப்பில் உருவான அருணகிரிநாதர் குறித்தான `அருணகிரிப் பெருமாளே’ டாக்குமென்ட்ரியைத் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார்.

‘`அருணகிரிநாதர் டாக்குமென்ட்ரிக்கான ஐடியா எங்கிருந்து தொடங்கியது?’’
``1920-ல் பிரின்ட் பண்ணின ஒரு பழைய திருப்புகழ்ப் புத்தகத்தை 2012-ல் என் அம்மா கொடுத்தாங்க. சின்ன வயசுலயே என்னுடைய குருகிட்டயும் திருப்புகழ் கத்துக்கிட்டேன். திருப்புகழையும் அதை எழுதின அருணகிரிநாதரையும் அந்தச் சமயத்துல நான் பார்த்ததுக்கும் இப்போ நான் எப்படிப் பார்க்குறேங்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஆரம்பத்துல சின்ன ஐடியாவாதான் இதை ஆரம்பிச்சேன். நண்பர்கள்கூட சேர்ந்து கான்செர்ட் மூலமா மக்கள்கிட்ட எடுத்துட்டுப் போனோம். அதுக்குப் பிறகு நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால 2015-ல் டாக்குமென்ட்ரியா பண்ண முடிவெடுத்து அதற்கான வேலைகள்ல இறங்கினோம். திருவண்ணாமலை உள்ளிட்ட பல ஊர்களுக்குப் போய் அருணகிரிநாதர் பத்தின தகவல்களைச் சேகரிச்சோம். இப்போ அதை வெளியிட்டிருக்கேன்.”
“அடுத்து நாகஸ்வரக் கலைஞர்கள் பத்தி ஒரு டாக்குமென்ட்ரி பண்ணப்போறீங்களாமே?’’
``அதுதொடர்பான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு. வறுமையிலதான் கவிதை வரும்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் சிறந்த கலையை உருவாக்குறதுக்கான தவிப்பும் நடைமுறை வாழ்க்கைக்கான போராட்டமும் இருக்கும். நாகஸ்வரக் கலைஞர்கள் அந்தக் கலையைக் கத்துக்கிட்டு ஸ்ருதி சுத்தமான நாதத்துடன் இசைக்க 15 வருடங்கள் எடுக்குமாம். நாகஸ்வரம் செய்யத் தேவைப்படுற ‘ஆச்சா’ மரம் 300 வருடங்கள் பழைமையானது. நாகஸ்வரம் செய்யுற கலையும் இப்போ அழிஞ்சுட்டு வருது. நாகஸ்வரம் செய்யறதைத் தொழிலாகக் கொண்ட குடும்பம் இப்போ ஒண்ணுதான் இருக்கு. இவங்க மேல இரக்கப்படுறதுங்கிறதைத் தாண்டி அவங்களுக்கு நம்மாள முடிஞ்ச உதவி பண்ணணும். அப்போ, அந்தக் கலை நம்மளுக்கு உதவும். ஏன்னா, கலைக்கு என்னைக்குமே அழிவு கிடையாது.”

‘`தனியிசைக் கலைஞர் டு சினிமாப் பயணம் பற்றிச் சொல்லுங்க. தனியிசை பரவலா கவனம் ஈர்த்துட்டு வருகிற இன்றைய சூழல்ல அதற்கான தேவை என்னவா இருக்கு?’’
``எனக்கு இசையில என்ன தோணுதோ அதைத்தான் பண்ணிட்டிருக்கேன். நாகஸ்வரக் கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை பத்தின ஒரு ரிவ்யூ படிச்சேன். அவர் ராகம் வாசிக்க ஆரம்பிக்கும்போது கொஞ்ச நேரம் மட்டும்தான் அவர் என்ன ராகத்துல வாசிக்கிறார் அப்படிங்கற பிரக்ஞை கேட்கறவங்களுக்கு இருக்குமாம். அதுக்குப்பிறகு, அவர் ஊதுறாரு நமக்குக் கேட்குதுங்கறது மட்டும்தான். அவ்வளவுதான் இசை. நான் பாடுறேன், நீங்க கேட்கறீங்க. இப்படித்தான் நான் பார்க்குறேன். சில பாடல்கள், இசையெல்லாம் நான் தோணும்போது பண்ணியிருப்பேன். அதைக் கேட்ட இயக்குநர்கள் ‘இது நல்லாருக்கு, படத்துல பயன்படுத்திக்கலாம்’னு சொல்லுவாங்க. அப்போ இது இண்டிபெண்டன்ட் மியூசிக்கா? சினிமா இசையா? நான் பொதுவா இசையை இப்படித்தான் பார்க்குறேன். மத்தபடி தனியிசையை பர்ஃபாம் பண்றதுக்கான வாய்ப்புகள் அப்படிங்கறது இங்க குறைவாதான் இருக்கு. ஏன்னா அவங்களுக்குக் கூட்டம் வரணும், டிக்கெட்ஸ் விற்கணும். இந்த மாதிரியான தேவைகளால பிரச்னை இருக்கு. நாமளும் தனியிசைக்கான கலாசாரத்தைப் பரவலாக்காம விட்டுட்டோம்.”
‘`தனியிசைக் கலைஞர்கள் சினிமாக்குள்ள வர்றதுதான் வெற்றிங்கற ஒரு பிம்பம் இருக்கே?’’
``அப்படிக் கிடையாது. ஆனா, அப்படித்தான் இங்க உருவாக்கி வச்சிருக்காங்க. நானே ஸ்டேஜ்ல போய்ப் பாடுறேன்னா, ரெண்டு பாட்டு நான் சினிமால பாடின பாடல்கள்தான் பாடுவேன், அதுகூட சேர்த்து என்னுடைய பாட்டையும் பாடறேன். இதுக்கு சினிமாங்கறது ஒரு கருவியா இருக்கு. இந்த உலகத்துல வாழ பல விஷயங்களைச் செஞ்சுதானே ஆகணும். அதுக்காக, கலைஞர்களைக் குறை சொல்ல முடியாது. அந்த ப்ராசஸை என்ஜாய் பண்ணணும். அவ்வளவுதான்.”

‘` ‘சில்லுக்கருப்பட்டி’ காதல் படம்.. அடுத்து, இருளை மையமாகக் கொண்ட ‘அந்தகாரம்.’ படங்களுக்கான இசையை எப்படித் தேர்வு செய்றீங்க?”
``எப்பவும் நான் கதைக்கும் அதை உருவாக்கினவங்களுக்கும் என்னை அர்ப்பணிச்சிடுவேன். அப்போ கதைக்கு என்ன தேவையோ அது தானா வரும். அதுமட்டுமல்லாம, வேலையை என்ஜாய் பண்ணிப் பண்ணணும். அப்போ அது இருளோ ஒளியோ எதுவா இருந்தாலும் சரி, அது தானா வந்துடும். இளையராஜா சார் சொன்ன மாதிரி, இசையைப் பொறுத்தவரைக்கும் நாம தெரிஞ்சுக்கவேண்டியது என்னன்னா ‘இசையோ கலையோ, உங்களை எதைப் பத்தியும் யோசிக்க விடாத பரவச நிலைக்கு எடுத்துட்டுப் போகணும். அந்த அளவுக்கு நம்ம இசையோடு ஒன்றியிருக்கச் செய்யணும்’ அவ்வளவுதான்.”
‘`உங்களை அதிகம் பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியறதில்லையே?’’
``வெளிய வந்து முகத்தைக் காட்டறது, நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு எல்லாருக்கும் சொல்றது, மேடைல பேசறது, எல்லாருக்கும் முன்னாடி கால்ல விழறது... இதுல செட் ஆகுற கேரக்டர் நான் இல்லை. அதனால, முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துடுவேன். மக்கள் முன்னாடி பேசறதுக்கு எனக்கு பயம் எதுவும் இல்லை. ஆனா, உண்மையா என்னைப் பத்திச் சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்லை. இதையும் மீறி, கலந்துக்கிட்ட சில விருது விழாக்கள் தனிப்பட்ட முறையில் எனக்குக் கஷ்டமாதான் இருந்தது.”

‘`சந்தோஷ்நாராயணனுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றிச் சொல்லுங்க?’’
``2003-லிருந்து அவரை எனக்குத் தெரியும். ரெண்டு பேரும் சந்திச்சா இசை பத்தி அதிகம் பேசுவோம். அதுமட்டுமல்ல, சந்தோஷ் அவர் கையாலயே எனக்கு சமைச்செல்லாம் தருவார். அதுக்குப் பிறகு சும்மா ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது மியூசிக் பண்ணுவோம். அது நல்லா இருந்தா ரெக்கார்டு பண்ணி, படத்துக்குத் தேவையான இடத்துல உபயோகிப்போம். ‘கபாலி’க்குப் பிறகு ஒரு சின்ன பிரேக் இருந்தது. அப்போ, சந்தோஷ் கால் பண்ணி, ‘டேய், ரஜினி சார் கூப்பிட்டிருந்தார். நீதான் பாடணும்னு சொல்லியிருக்கார்’னு சொன்னதும், நான் போய்ப் பாடின பாட்டுதான் ‘கண்ணம்மா.’ நான் பெரிய ரஜினி ஃபேன். தினமும் அவருடைய ‘ராஜாதி ராஜா’ போஸ்டர்லதான் கண் முழிப்பேன். ‘கபாலி’ பாட்டு கேட்கும்போதே என்னைக் கட்டிப்பிடிச்சு ரஜினி சார் பாராட்டினார். ‘சந்தோஷும், பிரதீப்பும் சேர்ந்தா அந்தப் பாடலுக்கு ஒரு எதிர்பார்ப்பு வந்துடுது. அதை எப்படி சமாளிக்கிறீங்க’ன்னு நிறைய பேர் கேட்குறாங்க. அந்த மாதிரி எதுவுமே கிடையாது. இசை எங்களுடைய வேலை. அதுக்கு எங்களை ஒப்படைக்கிறோம். அவ்வளவுதான்.”