Published:Updated:

``நித்யா மேனன் கொடுத்த அன்பு முத்தம்... எஸ்.பி.பி கொடுத்த வாக்குறுதி!" - பி.சுசீலா ஷேரிங்ஸ்

நித்யா மேனனுடன் பி.சுசீலா

ஒப்பற்ற சாதனைகள் பலவற்றைச் சத்தமின்றி செய்த இந்த சூப்பர் சீனியர், நடிகை நித்யா மேனனுடன் இணைந்து காபி விளம்பரம் ஒன்றில் நடித்து ஆச்சர்யம் கூட்டியிருக்கிறார். இதுகுறித்து பி.சுசீலாவிடம் பேசினோம்.

``நித்யா மேனன் கொடுத்த அன்பு முத்தம்... எஸ்.பி.பி கொடுத்த வாக்குறுதி!" - பி.சுசீலா ஷேரிங்ஸ்

ஒப்பற்ற சாதனைகள் பலவற்றைச் சத்தமின்றி செய்த இந்த சூப்பர் சீனியர், நடிகை நித்யா மேனனுடன் இணைந்து காபி விளம்பரம் ஒன்றில் நடித்து ஆச்சர்யம் கூட்டியிருக்கிறார். இதுகுறித்து பி.சுசீலாவிடம் பேசினோம்.

Published:Updated:
நித்யா மேனனுடன் பி.சுசீலா

`சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலுக்கு வாயசைத்துச் சிணுங்கி நடித்த சரோஜாதேவியைக் கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்ததில் பி.சுசீலாவின் தேன் குரலுக்கு முக்கியப் பங்கு உண்டு. கிளாஸிக் காலகட்ட திரையிசையைக் குத்தகைக்கு எடுத்து, ரசிகர்களின் மனங்களைச் சொக்க வைத்த குரலுக்குச் சொந்தக்காரர். மகிழ்ச்சி, சோகம், காதல், துள்ளல் என அனைத்து உணர்வுகளும் இவரது இனிய குரலில் ததும்பி வழியும். சுசீலாவின் குரலுக்கு வாயசைக்காத அந்தக் காலத்து நடிகைகளே இல்லை. ஒப்பற்ற சாதனைகள் பலவற்றைச் சத்தமின்றி செய்த இந்த சூப்பர் சீனியர், நடிகை நித்யா மேனனுடன் இணைந்து காபி விளம்பரம் ஒன்றில் நடித்து ஆச்சர்யம் கூட்டியிருக்கிறார். இதுகுறித்து பி.சுசீலாவிடம் பேசினோம்.

பி.சுசீலா
பி.சுசீலா

``எனக்கு அதிக ஆர்வமும் நாட்டமும் இருப்பது இசைத்துறையில் மட்டுமே. நடிப்பில் ஆர்வமில்லை. எனவே, அதுதொடர்பான சில வாய்ப்புகளை நிராகரித்துவிட்டேன். அதேநேரம், `மனதைத் திருடிவிட்டாய்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க வலியுறுத்தினர். படத்தின் கதைச்சூழலும் என்னைச் சார்ந்தே இருக்கும் என்பதால் நடித்தேன். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு விளம்பரப் படம் ஒன்றில் அருமை சகோதரர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து நடித்தேன். மிகவும் தயங்கிய என்னை உற்சாகப்படுத்தி, அந்த ஜவுளி விளம்பரத்தில் நடிக்க வைத்ததில் அவரின் பங்கு முக்கியமானது. இந்த நிலையில், சமீபத்தில் பிரபல காபி தயாரிப்பு நிறுவனத்தினர் என்னைத் தொடர்புகொண்டு அவர்களின் விளம்பரத்தில் நடிக்கக் கேட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் மறுத்தேன்! என் ரசிகரான அந்த விளம்பரப் படத்தின் இயக்குநர் `யமுனா' கிஷோர், என்னை வலியுறுத்தி நடிக்கக் கேட்டார். ``பி.சுசீலாவாகவே நடிக்கிற கேரக்டர். நீங்கள் திரையிசைக்கு வந்து 70 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் விளம்பரம் அமைகிறது. நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும்" என என் மருமகளும் வலியுறுத்தினார். பிறகுதான் ஒப்புக்கொண்டேன். சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஒரு வீட்டில்தான் ஷூட்டிங் நடைபெற்றது. அந்த இடமும் இயற்கைச் சூழலில் பிரமாதமாக இருந்தது. சமூக இடைவெளியுடன் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

நித்யா மேனனுடன் பி.சுசீலா
நித்யா மேனனுடன் பி.சுசீலா

என்னுடன் நித்யா மேனன் இணைந்து நடிப்பதை முன்பே தெரியப்படுத்தினர். என் தீவிர ரசிகையான நித்யா, சந்தித்த தருணத்திலேயே பல வருடங்களாகப் பழகிய உணர்வுடன் என்னுடன் நெருங்கிப் பழகினார். நன்றாகப் பாடும் திறமை கொண்ட நித்யா, என்னுடைய சில பாடல்களைப் பாடி மகிழ்வித்ததுடன், எனக்கு அன்பு முத்தம் கொடுத்தார். இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அவரது குணம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆறு மணிநேரம் படப்பிடிப்பு நடந்தது. சினிமாவில் உள்ள பல்வேறு தரப்பினருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டாலும், 1969-க்கு முன்புவரை பின்னணிப் பாடகர்களுக்கு அந்த விருது தரப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்காகப் பலரும் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். பலனாக, 1969-ம் ஆண்டு முதன்முதலில் எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதுதான் அந்த விளம்பரப் படத்தின் மையக்கரு. இயக்குநர் சொல்லிக்கொடுத்ததுபோல அப்படியே நடித்தேன். மகன், மருமகள், பேத்திகள், வீட்டுப் பணியாளரும் என்னுடன் வந்திருந்திருந்தனர். வீட்டில் இருந்தே உணவு எடுத்துச் சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். கொரோனா காலகட்டத்தில் எங்கும் வெளியே செல்ல முடியாத நிலையில், அந்த விளம்பரத்தில் நடித்த அனுபவம் பிக்னிக் சென்ற உணர்வை ஏற்படுத்தியது" என்று சிரிப்பவர், முதல் முறையாகத் தேசிய விருது வென்ற அந்தத் தருணத்தைச் சுவைப்பட நினைவுகூர்கிறார்.

வாலியுடன் பி.சுசீலா
வாலியுடன் பி.சுசீலா

`` `உயர்ந்த மனிதன்' படத்தில் வரும் `நாளை இந்த வேளை' பாடலுக்காகத்தான் எனக்கு முதல் முறையாகத் தேசிய விருது கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் சிறப்பாக இசையமைத்த படம். அவருக்குப் பிடித்த பாடல்களில் அதுவும் முக்கியமானது. அந்தப் பாடல் ஒலிப்பதிவு பணிகள் முடிந்த பிறகு, எனக்கு ஒலிபரப்பி காட்டிய எம்.எஸ்.வி, அந்தப் பாடலுக்காக எனக்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார். அது அப்படியே நடந்தது. அந்தப் பாடலில் வாணிஶ்ரீயும் சிறப்பாக நடித்திருப்பார்.

என் மகன் பிறந்து ஐந்தாவது நாள், இரட்டிப்பு மகிழ்ச்சியாக விருது அறிவிப்பு செய்தி வந்தது. அதைக் கணவர் என்னிடம் கூறினார். ஏவி.மெய்யப்ப செட்டியார் எனக்குப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி உட்பட பலரும் அந்த விழாவில் கலந்துகொண்டு என்னை வாழ்த்தினார்கள். அன்புத்தோழி லதா மங்கேஷ்கர் அந்த விழாவில் பங்கேற்றதுடன், என் வீட்டுக்கும் வந்தார். வீணை ஒன்றைப் பரிசாகக் கொடுத்து என்னை அவர் வாழ்த்தியது என்றைக்கும் மறக்க முடியாத பசுமையான தருணம்.

லதா மங்கேஷ்கர், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோருடன்...
லதா மங்கேஷ்கர், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோருடன்...

உண்மையில் அது ஒரு பொற்காலம். திரையிசையில் பல ஜாம்பவான்கள் ஜொலித்தாலும், அனைவருக்கும் தனி அடையாளம் இருந்தது. பல மூத்த இசையமைப்பாளர்களிடம் பாட எனக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. அப்போது தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் குறைவு. இசையமைப்பாளர்கள் சவால்விடும் வகையில் நேர்த்தியாக இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்தார்கள். அதற்கு ஈடுகொடுத்து எங்கள் குரல் தனித்து ஒலிக்கும் வகையில் சிரத்தையுடன் நாங்களும் பாடினோம். பெரிய அறையில் ஒலிப்பதிவு நடக்கும். அதன் மையப்பகுதியில் நின்று, ஆண் மற்றும் பெண் பாடகர்கள் ஜோடிப் பாடல்களை ஒன்றாகவே பாடுவோம்.

பாடகர்களோ, இசைக்கலைஞர்களோ... யார் சிறு பிழை செய்தாலும், எதிர்பாராத வகையில் பறவைகளின் சப்தம் கேட்டாலும்கூட மீண்டும் முதலில் இருந்து எல்லோரும் அவரவர் வேலைகளைத் தொடங்க வேண்டும். அப்போதெல்லாம் ஒலிப்பதிவுக்கூடங்களில் ஹெட்போன்கூட இருக்காது. இதனால், இசையமைப்பாளர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர் என எல்லோரும் மிகவும் கவனத்துடனும் கூட்டு முயற்சியுடனும் பணியாற்றினோம். அப்படித்தான் எங்கள் காலத்தில் முத்தான பாடல்கள் ஆயிரக்கணக்கில் உருவாயின. அந்தத் தருணங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, `கடினமான பல பாடல்களையும் எப்படித்தான் பாடினோமோ?' என்ற உணர்வுதான் மேலோங்குகிறது.

p.susheela
p.susheela

அப்போதெல்லாம் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பேன். குளிச்சியான உணவுகள், தேங்காய் சேர்த்த உணவுகளை மிகவும் குறைவாகவே பயன்படுத்தினேன். இயல்பாகவே பிறரிடம் அதிகம் பேச மாட்டேன். ரெக்கார்டிங் நேரம் தவிர பெரும்பாலும் என் குரலுக்கு வேலை தரமாட்டேன். அதுவும் என் குரல் வளத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதனால், கடவுள் எனக்கு இயற்கையாகக் கொடுத்த குரல் வளத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

உணவைக் கொஞ்சம் அதிகமாக உட்கொண்டாலும்கூட உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இதனால், கவனச்சிதறல் ஏற்பட்டு சரியாகப் பாட முடியாமல் போகலாம். எனவே, வெந்நீர், காபி, டீ, பிஸ்கட்தான் பெரும்பாலான வேளைகளில் என் பசியை ஆற்றியிருக்கின்றன. இப்படியேதான் 1955 முதல் நீண்ட காலத்துக்கு ஓய்வின்றிப் பாடினேன். சாப்பிட நேரமில்லாமலும் பணியாற்றியிருக்கிறேன். காலை 7 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 2 மணி வரை இடைவிடாமல் பாடிய அனுபவங்களும் உண்டு. அந்தக் காலம் திரும்பக் கிடைக்காதது" என்றவர், நிறைவாக...

p.susheela
p.susheela

``அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்க்கை முறையே எனது பர்சனல் உலகம். தற்போது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் ஓய்வுநேரங்கள் கழிகின்றன. நான் மறந்துபோன பல பாடல்களையும் எனக்குக் காண்பித்து மகிழ்விக்கிறார்கள் என் குடும்பத்தினர். மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிளாஸிக் காலகட்ட நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், திரைக்கலைஞர்கள் பலரும் என்னைச் சந்திக்க அவ்வப்போது வருவார்கள்.

லாக்டெளன் காலகட்டத்தில் அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் பலருடனும் வீடியோகாலில் உரையாடுகிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்காலம் முதலே அவரை எனக்கு நன்கு தெரியும். என்மீது அதிக அன்பு கொண்டிருந்தார். கொரோனா சூழலில் அவரைச் சந்திக்க முடியவில்லை. `விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்' என்று கூறியிருந்தார். அதற்குள் விதி விளையாடிவிட்டது" என்று ஆதங்கத்துடன் விடைபெற்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism