
எங்க குடும்பத்துல பலருக்கும் முடி உதிர்வுப் பிரச்னை இருக்கு. அப்பாவுக்கு மட்டும் முடி உதிர்வுப் பிரச்னையே இல்லை. 40 வருஷங்களா தினம் தவறாம ஷாம்பூ பயன்படுத்தித் தலைக்குக் குளிப்பார்
‘‘சிங்கரா என் கரியரை ஆரம்பிச்ச பிறகுதான், ஃபேஷன் விஷயத்துல எனக்கு ஆர்வம் அதிகரிச்சது. வெளிய கிளம்புறதுன்னா அஞ்சே நிமிஷத்துல தடபுடலா ரெடியாகிடுவேன். வீட்ல பலருக்கும் மேக்கப் பண்ணிவிடுறது, செல்ஃப் மேக்கப் அட்வைஸ் கொடுக்கிறதுன்னு ஃபேஷன் விஷயத்துல எக்ஸ்பர்ட் ஆகிட்டிருக்கேன்!'' - கலகல சிரிப்புடன் சொல்கிறார், பின்னணிப் பாடகி சரண்யா ஸ்ரீநிவாஸ்.
பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகளான இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘கலா ரசிகா', ‘மெர்சல் அரசன்' போன்ற ஹிட் பாடல்களைப் பாடி நம் செவிகளை வருடியவர். ஃபேஷன் விஷயத்தில் ஆர்வம் கொண்ட சரண்யா, அதுகுறித்த சுவாரஸ்யங்களைப் பகிர்கிறார்.

‘‘தேவையான நேரத்துல மட்டும் லைட், மீடியம், ஹெவின்னு அவரவர் முகத்துக்கு ஏற்ப மேக்கப் பண்ணிக்கலாம். முடிஞ்சவரைக்கும் லைட் மேக்கப் போட்டுக்கிட்டா, நீண்டகாலத்துக்கு முகத்துல பெரிசா வித்தியாசம் அல்லது சுருக்கம் வராது. என் சாய்ஸ், எப்பவுமே லைட் மேக்கப்தான். அதுவும் செல்ஃப் மேக்கப்தான். ‘கொரியன் ஸ்கின் கேர்' முறையிலதான் எப்பவுமே மேக்கப் பண்ணுவேன். முகம் கழுவுறது, சீரம் பயன்படுத்துறது, சன்ஸ்கிரீன் அப்ளை பண்ணுறதுன்னு இந்த மேக்கப்ல நிறைய ஸ்டெப்ஸ் இருக்கு. நான் எனக்கு ஏத்த 5 - 6 ஸ்டெப்ஸ்தான் கடைப்பிடிப்பேன்.
ரெக்கார்டிங், கச்சேரி, பர்சனல் அவுட்டிங்னு ராத்திரி எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும், மறக்காம மேக்கப் ரிமூவ் பண்ணிடுவேன். மேக்கப் கலைக்காமல் தூங்கினா, நாளடைவுல முகத்துல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. மேக்கப் பண்ணுறவங்க, பண்ணாதவங்க யாரா இருந்தாலும், தூங்குறதுக்கு முன்பு சாதாரண தண்ணீர்ல முகத்தைக் கழுவிட்டாலே போதும். சரும பாதிப்புகள் வர்றதைத் தவிர்க்கலாம்'' என்கிற சரண்யா, தன் அப்பாவுக்கும் மேக்கப் ஆலோசகர்.

‘‘எங்க குடும்பத்துல பலருக்கும் முடி உதிர்வுப் பிரச்னை இருக்கு. அப்பாவுக்கு மட்டும் முடி உதிர்வுப் பிரச்னையே இல்லை. 40 வருஷங்களா தினம் தவறாம ஷாம்பூ பயன்படுத்தித் தலைக்குக் குளிப்பார். அதனாலேயே, பெரிசா மேக்கப் பண்ணிக்காட்டியும், இளமையாவே தன்னைக் காட்டிக்கிறார். முன்னாடியெல்லாம் மேக்கப் விஷயத்துக்கு எங்கப்பா மெனக்கெடவே மாட்டார். சில வருஷங்களாதான் அவருக்கு ஃபேஷன் விஷயத்துல ஆர்வம் வந்திருக்கு. ‘புரொகிராம் ஒண்ணு இருக்கு. நான் ஃபேஷியல் பண்ணிக்கட்டுமா?'ன்னு ஆர்வமா கேட்பார். செல்ஃப் மேக்கப் டிப்ஸும் அடிக்கடி கேட்கிறார். வெளியிடங்களுக்குப் போறதுக்கு முன்பு, அவர் பயன்படுத்துற டிரஸ் நல்லாருக்கான்னு ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப்ல கருத்து கேட்பார். இளைஞர்கள் மத்தியில தானும் அட்ராக்ட்டிவ்வா தெரியணும்னு நினைக்கிறார்போல'' நகைச்சுவையாகச் சொல்பவர், ஷாப்பிங் ஆர்வத்தையும் பகிர்ந்தார்.
‘‘கொரோனா நேரத்துல ஆன்லைன் ஷாப்பிங் பண்ணிப் பழக்கமாகிட்டதால, அதுவே இப்போ நிரந்தர பழக்கமாகிடுச்சு. சோர்வா இருக்கிறப்போல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்ல கவனம் கொடுத்தாலே போதும், எனக்குப் புத்துணர்வு வந்திடும். என் கல்யாணத்தப்போதான் ஃபேமிலியா ஷாப்பிங் போனோம். ‘உனக்கு வேணுங்கிறதையெல்லாம் வாங்கிக்கோ... பணத்தைப் பத்திக் கவலையே படாதே'ன்னு எங்கப்பா எக்கச்சக்க அன்பு காட்டினார். அப்போ செமத்தியா அவருக்குச் செலவு வெச்சுட்டேன். அதுக்கப்புறமா அஞ்சு வருஷம் கடந்தும், இப்போவரை நாங்க ஃபேமிலியா ஷாப்பிங் போக சந்தர்ப்பமே அமையலை. அப்பாவுக்கு மறுபடியும் செலவு வைக்கக் காத்துக்கிட்டிருக்கேன்'' என்பவர், தன் குரல்வளப் பராமரிப்பு குறித்துச் சொல்லி முடித்தார்.

‘‘குளிர்ச்சியான உணவுகள்கூட எனக்கு ஒத்துக்கும். ஆனா, எண்ணெய் மற்றும் காரமான உணவுகள் என் குரல்வளத்தை பாதிக்கிறதால, அவற்றைத் தவிர்ப்பேன். சில நேரம் காபிகூட தொண்டையைக் கரகரப்பாக்கிடும். தொண்டை சரியில்லைன்னா, கல்லுப்புச் சேர்த்த வெதுவெதுப்பான நீர்ல வாய் கொப்பளிப்பேன். வெந்நீர்ல, வேகவெச்ச இஞ்சி மற்றும் தேன் கலந்து குடிப்பேன். கச்சேரி மற்றும் ரெக்கார்டிங் முடிஞ்சதும் அரை நாள்வரை வாய்ஸ் ரெஸ்ட் கொடுப்பேன். அப்பல்லாம் என் கணவர் குஷியா இருப்பார்'' என்று சொல்லி, கணவரைக் குறும்பாகப் பார்த்த சரண்யா,
``தேவைக்கேற்ப தண்ணீர், தூக்கம், பசிக்கேற்ற உணவு, உடலுக்குப் போதுமான ஓய்வு, மன அமைதிக்கான விஷயங்கள்ல சரியா கவனம் கொடுத்தாலே போதும்... பெரிசா மெனக்கெடல் இல்லாமலேயே ஆரோக்கியமா வாழலாம்!'' என்றார் பளீர் சிரிப்புடன்.