Election bannerElection banner
Published:Updated:

"`ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!" - பாடகி சுர்முகி

எஸ்.பி.பியுடன் சுர்முகி
எஸ்.பி.பியுடன் சுர்முகி

`இந்தப் பாடலை நான்தான் சினிமாவில் பாடினேன்'னு சொன்னால் சிலர் `அப்படியா!'னு அதிர்ச்சியாவாங்க. சிலர் நம்ப மாட்டாங்க. அப்போ ரொம்பக் கஷ்டமாயிருக்கும்.

``இது நான் பாடின பாட்டுதான்"னு வலியுறுத்தி ரசிகர்களை நம்ப வைக்கிற நிலை எந்தப் பாடகருக்கும் வரக்கூடாது. ஆனா, இன்றைய நிலை அப்படித்தான் இருக்கு" - தொடக்கத்திலேயே உடைகிறது சுர்முகியின் குரல். பின்னணிப் பாடகியான இவர், இன்றைய இசையுலக சூழல் மற்றும் இளம் பாடகர்களின் மனக்குமுறல்களை தன் அனுபங்களின் வாயிலாகப் பகிர்ந்துகொள்கிறார்.

``முறைப்படி இசைக்கத்துக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கலை. கேள்வி ஞானத்தால், 14 வயசுல பாட ஆரம்பிச்சேன். சின்னச் சின்ன மேடைகளில் பாடியதைத் தொடர்ந்து, ஹரிஹரன் சாரின் இசை நிகழ்ச்சியில அவருடன் பாடினேன். அதுதான் என் முதல் பெரிய இசை மேடை. ராஜ் டிவி `ராஜ கீதம்' நிகழ்ச்சியின் 2-வது சீஸன்ல டைட்டில் வின் பண்ணினேன். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அப்துல் ஹமீது சார், பின்னணிப் பாடகியாகணும்ங்கிற என் கனவுக்கு ரொம்பவே ஊக்கப்படுத்தினார். அவர் சொன்னதுபோல, என் குரல்ல ஒலிப்பதிவு செய்த பாடல்கள் அடங்கிய டெமோ சிடி-களை பல இசையமைப்பாளர்களுக்குக் கொடுத்தேன்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் சார் இசையில்தான் முதன்முதலில் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. என் பாடல் மக்கள்கிட்ட பிரபலமாகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதுதானே வளர்ந்துவரும் இசைக்கலைஞர்கள் எல்லோரின் ஆசையாக இருக்கும்! நீண்ட முயற்சிக்குப் பிறகு, `பள்ளிக்கூடம்' படத்துல `ரோஸ் மேரி'ங்கிற பாடலைப் பாடினேன். பிறகு, சுசித்ராங்கிற என் இயற்பெயரை, சுர்முகினு மாத்திகிட்டேன். ஒவ்வொரு சினிமா பாடல் வாய்ப்புமே பெரிய முயற்சிக்குப் பிறகுதான் கிடைக்குது" - சுர்முகியின் ஒவ்வொரு வார்த்தையிலும் தவிப்பும் ஆதங்கமும் அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

`செல்லம் வாடா செல்லம் (சிறுத்தை)', `ஏ துஸ்யந்தா (அசல்)', மதுர குலுங்க (சுப்ரமணியபுரம்)', `பாருருவாயா (தாரை தப்பட்டை)', `பேச்சி பேச்சி (அரண்மனை)', `ஆண்டிபட்டி கனவா காத்து (தர்மதுரை)' உட்பட 400-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியிருக்கிறார் சுர்முகி. 
இளையராஜா மற்றும் கமலுடன் சுர்முகி
இளையராஜா மற்றும் கமலுடன் சுர்முகி

``இவ்வளவு சினிமா பாடல்களைப் பாடியிருக்கேன். அவற்றில் பல பாடல்கள் ஹிட்டாகியிருக்கு. ஆனா, அந்தப் பாடல்களைப் பாடினது நான்தான்னு பலருக்கும் தெரியாதது. இசை நிகழ்ச்சிகளில் நான் பாடிய சினிமா பாடலைப் பாடுவேன். `உங்க குரல், அந்தப் பாடலைப் பாடிய பாடகி குரல்போலவே இருக்கே'னு மக்களில் சிலர் சொல்லுவாங்க. `இந்தப் பாடலை நான்தான் சினிமாவில் பாடினேன்'னு சொன்னால் சிலர் `அப்படியா!'னு அதிர்ச்சியாவாங்க. சிலர் நம்ப மாட்டாங்க. அப்போ ரொம்ப கஷ்டமாயிருக்கும்.

ஏதாவதொரு வகையில் டைம் லைன்லயே இருக்கிற பாடகர்களுக்குத்தான் சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைக்குது. எனக்கு நல்லா பாடத் தெரியும். ஆனா, செல்ஃப் புரொமோஷன் பண்ணிக்கத் தெரியலை. அதுதான் பெரிய சிக்கல். அதனால, வளர்ந்துவரும் பாடகர்களின் நிலை ரொம்பவே சவாலானதா இருக்கு.

இளையராஜாவுடன் சுர்முகி
இளையராஜாவுடன் சுர்முகி

`தர்மதுரை' படத்துல நான் பாடின `ஆண்டிபட்டி கனவா காத்து' பாடல் ரொம்பவே பிரபலமாச்சு. ஆனா, என்ன பண்றது? அப்படம் ரிலீஸாகி, நாலு வருஷமாகியும், எனக்கு அடுத்த ஒரு ஹிட் பாடல் அமையவேயில்லை. அதனால், எனக்குள் இருக்கும் வருத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதேசமயம், சினிமாவில் கோரஸ் மற்றும் டிராக் பாடல்களைப் பாடிகிட்டிருக்கேன்" என்பவர், 4,000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். 

``முந்தையக் காலங்கள்ல பி.சுசீலா அம்மா, எஸ்.ஜானகி அம்மா, சித்ரா அம்மா, சொர்ணலதா அக்கானு பெரிய பாடகிகள் பலரும் தொடந்து நிறைய படங்களில் பாடினாங்க. அப்படியொரு சூழல், இன்னைக்கு எங்களுக்குக் கிடைப்பதில்லை. அவங்கள மாதிரி புகழ்பெற்ற பாடகியாக நாங்க புகழ் பெறுவது இப்போதைய நடைமுறையில் சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்போ மேடை இசை நிகழ்ச்சிகள் மூலமாகத்தான் நிறைய இசைக்கலைஞர்கள் வாழ்ந்துகிட்டிருக்காங்க. வருஷத்துக்குச் சராசரியா 20 இசைக்கச்சேரிகளில்தான் பாட வாய்ப்புக் கிடைக்குது. இதனால் கிடைக்கும் வருமானத்தில்தான், குடும்பத்தை நடத்திட்டிருக்கேன். இது என் குரல் மட்டுமல்ல. பல நூறு திறமையான இளம் பாடகர்களின் குரலும்கூட. வாய்ப்பு வருதோ, இல்லையோ! தினமும் மணிக்கணக்கில் பயிற்சி எடுக்கிறேன்.

சித்ராவுடன் சுர்முகி
சித்ராவுடன் சுர்முகி

இப்போ டிவி இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அதிகரிச்சிருக்கு. சராசரியா நாலு சேனல்ல வருஷத்துக்கு 1 - 2 இசைப் போட்டிகள் நடக்குது. அதில் சராசரியா 40 - 50 பேர் டாப் 10 போட்டியாளர்களா வர்றாங்க. அவங்க எல்லோருமே திறமையானவங்கதான். அவங்க எல்லோருக்குமே சினிமா வாய்ப்புகள் கிடைக்குதா. அவங்கள்ல சிலருக்கு சினிமாவில் பாடுற வாய்ப்புக் கிடைக்கிறதுக்குள், அடுத்த சீஸன் தொடங்கிடும். இந்நிலையில் எத்தனை பாடகர்கள் புகழ்பெற முடியும்? அதனால், திறமையான இளம் பாடகர்கள், இசைக் கனவை ஒதுக்கிவச்சுட்டு படிப்புக்கு ஏத்த வேலைக்குப் போறாங்க. வேலைக்கு இடையே, தேடிவரும் இசை வாய்ப்புகளுக்கு மட்டும் பாடுறாங்க" - கவலையுடன் ஒலிக்கிறது சுர்முகியின் குரல். இளையராஜாவின் இசையில் பாடுவது பற்றிக் கேட்டதும், இவரின் குரலில் தேனைவிடவும் இனிமைக்கூடுகிறது.

``2008-ம் ஆண்டிலிருந்து இளையராஜா சாரின் ரெக்கார்டிங்கில் பாடிகிட்டிருக்கேன். ராஜா சாரின் 40-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியிருக்கேன். அவருடைய இசை நிகழ்ச்சிகள்ல பிரதான பாடகர்கள் பாடிட்டிருப்பாங்க. அவங்களுக்குக் கொஞ்சம் பின்னாடி, பல பாடகர்கள் கோரஸ் பாடிட்டிருப்பாங்க. அதுல நானும் தவறாம இடம்பெறுவேன். சாரின் இசையில் அதிகளவில் கோரஸ் பாடினாலும், அதுவே எனக்குப் பெரிய பெருமைதான். அதைவிட, அவரிடமிருந்து நான் கத்துகிட்ட இசை அனுபவங்கள் மிக அதிகம்.

ஓர் இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு, அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ராஜா சார். `உங்க மேல நிறைய மரியாதை எனக்கிருக்கு. அதனால, உங்ககிட்ட பேசவே பயமாயிருக்கு'னு சொன்னேன். `நீ எதுக்குப் பயப்படறே? நேத்து பாடின பாடகர்கள்லயே நீதான் சிறப்பா பாடினே'னு அவர் சொன்னப்போ, என் மனசுல ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கிற மாதிரி இருந்துச்சு. பிறகு ஒருநாள், `நீ ரொம்ப நல்லா பாடுறே. உனக்குப் பின்னணிப் பாடகியா ஒரு வாய்ப்புத் தரணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். அதற்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு'னு சொல்லி, `பாருருவாயா (தாரைத்தப்பட்டை)' பாடலைப் பாடவச்சார். தவிர, ராஜா சார் இசையில தமிழ், தெலுங்கில் 15 சினிமா பாடல்களைப் பாடியிருக்கேன்" என்கிறார் சுர்முகி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு