Published:Updated:

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி

திப்பு - ஹரிணி

இருபது வருடங்களாக திரைத்துறையில் தம்பதிகளாகப் பயணித்துவரும், பாடகர்கள், திப்பு மற்றும் ஹரிணியை சந்தித்துப் பேசினோம்.

Published:Updated:

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி

இருபது வருடங்களாக திரைத்துறையில் தம்பதிகளாகப் பயணித்துவரும், பாடகர்கள், திப்பு மற்றும் ஹரிணியை சந்தித்துப் பேசினோம்.

திப்பு - ஹரிணி

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக திரைத்துறையில் தம்பதிகளாகப் பயணித்துவருகிறார்கள், பாடகர்கள் திப்பு- ஹரிணி. இந்த இருபது வருட பயணத்தில் நடந்த பல விஷயங்களைக் கேட்டறிய, அவர்களை சந்தித்துப் பேசினோம்.

உங்களின் முதல் சந்திப்பு எப்போது நடந்தது..?

"நான் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன்கிட்ட உதவியாளரா இருந்தேன். அப்போ ஒரு நாள், ஹரிணி ஸ்டூடியோவுக்கு பாட வந்தாங்க. அதுதான், நான் இவங்களைப் பார்த்த முதல் சந்திப்பு. அவங்க பாடவேண்டிய பாடல்ல சில டபுள் மீனிங் வார்த்தைகள் இருந்துச்சு. அதெல்லாம் நான் பாட மாட்டேன்னு சொன்னாங்க. செம போல்டா பேசுறாங்களேனு தோணுச்சு. அப்புறம் பாட ஆரம்பிச்சதும், சில இடங்களில் கரெக்‌ஷன் சொன்னேன். அதை ஹரிணி ஏத்துக்கவே இல்லை. சரியாதான் இருக்குனு சொன்னாங்க. அப்போ நான் முரளிதரன் மாமாகிட்ட, `என்ன அங்கிள், கரெக்‌ஷன் சொன்னாக்கூட ஏத்துக்க மாட்றாங்க'ன்னு சொன்னேன். `அவங்க சீனியர்டா, அவங்ககிட்ட எப்படி சொல்லணுமோ அப்படிச் சொல்லணும்னு' சொன்னாங்க. ரெண்டு பாட்டு பாடவேண்டிய இடத்துல ஒரு பாட்டு மட்டும் பாடிட்டுப் போயிட்டாங்க. என்னாலதான் கோவப்பட்டு போயிட்டாங்கன்னு எனக்கு அவங்க மேல கொஞ்சம் கோபமா இருந்துச்சு."

திப்பு - ஹரிணி
திப்பு - ஹரிணி

"ரெண்டாவது சந்திப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட ஸ்டூடியோவில் நடந்துச்சு. இவங்க, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தோட ரெக்கார்டிங்கிற்கு வந்திருந்தாங்க. நான் ஒரு ஹிந்தி படத்தோட ரெக்கார்டிங்கிற்குப் போயிருந்தேன். இந்த சந்திப்பில் நாங்க எதுவுமே பேசிக்கலை. அதுக்கப்புறம், தேவா சாரோட ஆஸ்திரேலியா கான்சர்ட்டில் மீட் பண்ணிக்கிட்டோம். அப்போ, `வாலி’ படத்தோட `ஏப்ரல் மாதத்தில்’ பாட்டை என்னையும், ஹரிணியையும் சேர்ந்து பாடச் சொன்னாங்க. எனக்கு, பாடல் வரிகள் மனப்பாடமா இருக்காது. ஆனால், ஹரிணிக்கு வரிகள் நல்லாவே ஞாபகத்துல இருக்கும். அதுனால தேவா சார் ஹரிணிகிட்ட கேட்கச் சொன்னார். அப்போதான், இவங்களோட கேரக்டர் பத்தி எனக்குத் தெரிஞ்சது. ரொம்ப அமைதியா, புரியுற மாதிரி வரிகளைச் சொல்லிக்கொடுத்தாங்க’’ என திப்பு சொன்னதும் ஹரிணி தொடர்ந்தார். "இவர்தான் அன்னைக்கு ஸ்டூடியோவில் என்னை கடுப்பாக்கினார்னு எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்தான் தெரியும். இவர் ஏன் அன்னைக்கு அப்படி பேசினார்னு இவரோட பழகுனதுக்கு அப்பறம்தான் எனக்கும் தெரிஞ்சது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பக்காவா இருக்கணும்னு நினைப்பார். அப்படி நினைக்கிறவங்களுக்கு கோபமும் இருக்கத்தான் செய்யும்.’’

ரொம்ப சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே..?

"22 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என்னைப் பொறுத்தவரை இந்த வயசு கல்யாணத்துக்கு சரியான வயசுதான்னு நினைக்கிறேன். சின்ன வயசுலேயே குடும்பப் பிரச்னைகளை ஃபேஸ் பண்றது கொஞ்சம் சிரமமாதான் இருக்கும். ஆனாலும் அதைச் சரியா பண்ணிட்டா, லைஃப் நல்லா இருக்கும். நாம எப்படி வாழுறோம்கிறது நம்ம கையிலதான் இருக்கு. எங்க கல்யாணம் நடக்கும்போது, ஹரிணி பாப்புலர் சிங்கர். நான் என் கரியரையே ஆரம்பிக்கலைனு சொல்லலாம். அந்தச் சமயத்தில், `நான் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்றதுனால கல்யாணத்துக்கு அப்பறமும் என் அப்பா அம்மா, தங்கச்சியை நான்தான் பாத்துக்கணும்’னு சொன்னேன். `நான் ஒரு பெரிய சிங்கர். நான் சொல்றதைத்தான் நீ கேட்கணும்’னு ஹரிணி சொல்லலை. என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஓகே சொன்னாங்க. எந்த ஈகோவும் இல்லாதனாலதான், நாங்க இத்தனை வருஷமா ஹேப்பியா இருக்கோம்.’’

இந்த 20 வருட பயணத்தில் மறக்க முடியாதவர்கள் யார் யார்; நீங்க கத்துக்கிட்ட மிகப் பெரிய விஷயம் என்ன?

"எங்க கரியர்ல தேவா சார், வித்யாசாகர் சார், ரஹ்மான் சார், ஹாரிஸ் சார்னு இவங்க நாலு பேரும் ரொம்ப முக்கியமானவங்க. எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு பாடகருக்கு முக்கியமானவங்கதான். ஏன் இந்த நாலு பேரைச் சொல்றோம்னா, நாங்க யாருனு மக்களுக்குத் தெரியாதபோது, எங்களை நம்பி வாய்ப்பு கொடுத்தாங்க. `இவன் பண்ணுவான்’னு நம்பி ஒரு விஷயத்தைப் பண்ணச் சொல்லுவாங்க. அப்படி இவங்களாலதான் இன்னைக்கு நாங்க இந்த நிலையில் இருக்கோம். இவங்களை மறந்துட்டோம்னா, எங்களுக்கு சோறு கிடைக்காது."

திப்பு - ஹரிணி
திப்பு - ஹரிணி

"இந்தப் பயணத்தில், ஒரு பாடலை ஆடியோவாக கேட்கிறதுக்கும் விஷுவலா பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு கத்துக்கிட்டேன். இதை, கமல் சாரோடு நான் வொர்க் பண்ணும் போதுதான் புரிஞ்சுக்கிட்டேன். `அன்பே சிவம்’ படத்தோட `ஏலே மச்சி, மச்சி’ பாட்டுல நான் கமல் சாரோட போர்ஷனைப் பாடினேன். பாடி முடிச்சதும், `ஒரு பெரிய படத்துல ரொம்ப நல்ல பாட்டு ஒண்ணு பாடியிருக்கோம்’னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு வித்யாசாகர் சார் படத்துல என் குரல் இருக்காதுனு சொன்னார். நான் `ஏன்’னு கேட்கும்போது, `படத்துல கமல் சாருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடும். அவரால் ஹை பிச்ல பாட முடியாது. அதனால, கமல் சாரோட போர்ஷனை அவரே பாடிட்டார்’னு சொன்னாங்க. அப்போகூட, ஆக்ஸிடென்ட் ஆனா என்ன, பாட்டுதானேனு நினைச்சேன். படம் பார்க்கும்போதுதான், ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு அப்பறம் கமல் சாரோட உடம்பே மாறியிருக்கும்னு தெரிஞ்சது. அந்தக் கேரக்டர் அப்படித்தான் பாடும்னும் தெரிஞ்சது. அதை பார்த்தப்போதான், ஒரு நடிகர் பாட்டை எப்படி பார்ப்பார், பாடகர் எப்படி பார்ப்பார்னு புரிஞ்சுகிட்டேன்.’’

திப்பு - ஹரிணியின் முழுமையான பேட்டியை கீழேயுள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.