Published:Updated:

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!

சௌம்யா
பிரீமியம் ஸ்டோரி
சௌம்யா

வீயெஸ்வி

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!

வீயெஸ்வி

Published:Updated:
சௌம்யா
பிரீமியம் ஸ்டோரி
சௌம்யா

கஸ்ட் - செப்டம்பரில் அமெரிக்கப் பயணம். பத்துக் கச்சேரிகள். நவம்பரில் ஐந்து நாள்கள் சுவிட்சர்லாந்துக்கு ஷார்ட் ட்ரிப். கச்சேரி எதுவுமில்லை.பதிலாக, அங்கே நடக்கும் ஒரு கச்சேரிக்கு சீஃப் கெஸ்ட்! டிசம்பர் 15 முதல் பதினைந்து நாள்களுக்கு மியூசிக் அகாடமியின் இசை மாநாட்டுக்குத் தலைமை. ஜனவரி முதல் தேதி ‘சங்கீத கலாநிதி’ விருது. மகிழ்ச்சியாக இருக்கிறார் பாடகி எஸ்.சௌம்யா. டிசம்பர் இசைவிழாவுக்காக தி.நகரிலுள்ள ஒரு பிரபலமான ஷோரூமில் புடவைகள் தேர்வில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தேன். பொதுவாக, இதுமாதிரியான பேட்டிகள், விருது அறிவிப்பில்தான் ஆரம்பமாகும். விதிமீறாமல் அதுவே முதல் கேள்வியாக அமைந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்த முறை ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு மூன்று பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருந்தன. அறிவிப்புக்கு முதல் நாள்கூட வேறொரு வித்வான் தேர்வாகிவிட்டதாக அறிந்தேன். இறுதியாக யார் என்பதை அறிய ஃபீல்டில் மற்றவர்களைப்போல் நானும் ஆவலாகக் காத்திருந்தேன்” என்றார் சௌம்யா. விருதுக்காகவும், வாய்ப்புக்காகவும் தான் என்றுமே அலைந்ததில்லை என்று சொல்லும் சௌம்யா, ஆரம்பக்கட்டங்களில்கூட சான்ஸ் கேட்டு சபா நிர்வாகிகளுக்கு ‘நமஸ்காரம் மாமா’ என்று சொன்னதில்லையாம். ‘`இதுவரை எல்லாம் தானாகவே நடந்துவந்திருக்கிறது” என்றார் நிதானத்துடன். அந்த ஞாயிறன்று அகாடமியின் தலைவர் என்.முரளி தொலைபேசியில் அழைத்து சந்தோஷத் தகவலைச் சொன்னபோது, போனை அப்பாவிடம் கொடுத்துவிட்டார் இந்தச் செல்ல மகள்.

“என் பாட்டிலும் படிப்பிலும் குழந்தைப் பருவம் முதல் அக்கறை செலுத்தி என்னை வளர்த்து ஆளாக்கியவர் என் அப்பா சீனிவாசன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்க முரளியிடம் பேசினார் அவர்...” என்று சொன்னபோது சௌம்யாவுக்கும் கண்கள் லேசாகப் பனித்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிப்ரவரி, 1972-ல் மலையாள நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையைப் படிக்க நேரிட்டது. கேரளாவின் ஏலூரில் உத்யோகமண்டலம் பகுதியில் இருந்த வீட்டில் அப்பாவின் மடியில் உட்கார்ந்திருக்கிறாள் இரண்டரை வயதுக் குழந்தை சௌம்யா. எதிரில் பாளை ராமச்சந்திரன் உள்ளிட்ட உள்ளூர் வித்வான்கள் மற்றும் நான்கைந்து சின்னஞ்சிறுசுகள். சௌம்யாவின் இசைத்திறனைச் சோதித்துப் பார்க்க வந்திருந்தவர்கள் அவர்கள். தேவகாந்தாரி, வாசஸ்பதி, யதுகுலகாம்போதி, சிம்மேந்திர மத்யமம் என்று ஒவ்வொரு ராகமாக அவர்கள் பாடிக்காட்ட, டக்டக் என்று ராகத்தின் பெயர்களை மழலை மொழியில் சொல்லியிருக்கிறாள் குழந்தை சௌம்யா. நடுநடுவே அப்பாவின் மடியிலிருந்து நழுவி ஓடுவாள். கைபிடித்து இழுத்து உட்கார வைப்பார் தந்தை. வந்திருந்தவர்கள் மிட்டாய் கொடுப்பார்கள். ‘ராகப் பரீட்சை’ தொடரும்.

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!

“அந்த நிகழ்ச்சியைக் கோழிக்கோடு வானொலி நிலையம் அப்போது பதிவு செய்தது. இன்னமும் அப்பா அதை பத்திரமாக வைத்திருக்கிறார்” என்றார் சௌம்யா. குருவாக இருந்து சௌம்யாவுக்கு அவர் தந்தை இசையைப் புகட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பேராசிரியர் எஸ்.ராமநாதன் அறிமுகமானது அவருக்கு குரு பிரசாதமாக அமைந்தது. அப்போது சிறுமி சௌம்யாவுக்கு ஆறு வயது. பரம குருவானார், 1985-ல் சங்கீத கலாநிதி விருதாளர் எஸ்.ராமநாதன். ஆரம்பம் முதல் வாய்ப்பாட்டும், ஒன்பது வயது முதல் வீணை மீட்டவும் கற்பித்தார். “கேரளாவுக்குக் கச்சேரிகளுக்காக வரும்போதெல்லாம் எங்கள் கிராமத்துக்கு வந்து பாட்டுச் சொல்லித் தருவார். அவரிடம் தோடியில் ‘வேலெடுத்த கையே’ பாடலைப் பாடிக்காட்டி மெருகேற்றிக்கொண்டது மறக்க முடியாதது. ஒருகட்டத்தில் ‘உங்க பொண்ணை மெட்ராஸ் அனுப்பிடுங்க’ என்று அப்பாவிடம் குரு சொன்னது என் இசை வாழ்க்கையில் திருப்புமுனை’’ என்றார் சௌம்யா.

ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு வாரக் கடைசிகளில் சென்னை வந்து தன் மாமா வீட்டில் தங்கிக்கொண்டு திருவல்லிக்கேணியிலிருந்த எஸ்.ராமநாதன் வீட்டுக்குப் போய் வருவார் சௌம்யா. பின்னர் அப்பா, குடும்பத்துடன் சென்னைக்குப் புலம்பெயர்ந்துவிட, பாட்டுப் பயிற்சி மேலும் தீவிரமானது. பெரும்பாலும் குரு வீட்டிலேயே வாசம்!

“குருகுல வாசம் என்றால் வாத்தியாருக்கு சேவகம் புரிய வேண்டும் என்று சொல்லப்படுவது உண்டு! குருவின் ஆடைகளைத் தோய்த்துப் போடுவதிலிருந்து, ரேஷன் கடைக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கும் சென்று வருவதுவரை எல்லாம் செய்ய வேண்டுமென்று சிலர் வர்ணிப்பார்கள். உங்கள் அனுபவம் எப்படி?” என்று கேட்டதும் சிரித்தார் சௌம்யா. “எனக்கு அப்படி எந்த அனுபவமும் ஏற்பட்டதில்லை. சார் குடும்பத்தில் நிறைய பேர் உண்டு. எனவே வீட்டு வேலைகளை அவர்களே பகிர்ந்துகொண்டு விடுவார்கள். கோடையில் மொட்டை மாடியில் வடகம் காயப்போடுவது மட்டுமே என் வேலை. மற்றவர்கள் பாடும்போது என்னை சுருதிப்பெட்டி போடச் சொல்வார். இப்போதும் நினைவிருக்கு, பாடகர் உன்னிகிருஷ்ணன் முதன்முதலில் எங்கள் சாரிடம் சேர வந்தபோது கல்யாணி ராகத்தில் ‘பஜரே ரே சித்த’ கீர்த்தனையைப் பாடிக் காட்டினார். அப்போது நான்தான் சுருதி போட்டேன்” என்ற சௌம்யாவுக்கு எஸ்.ராமநாதன் குருவாக அமைந்தது சங்கீத வரம்.

பகட்டும் பாசாங்கும் இல்லாத எளிமையான மனிதர் எஸ்.ராமநாதன். நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி இருக்குமிடத்தில் சௌம்யா தனது பத்தாவது வயதில் கச்சேரி செய்யக் காரணமாக இருந்தவர். காலை 6 மணிக்கு இசை வகுப்பை ஆரம்பித்துவிடுவாராம். இரண்டரை மணி நேரத்துக்கு அது தொடரும். பத்து நிமிட ரெஸ்ட். மறுபடியும் பகல் உணவுவேளைவரை வகுப்பு. ஒரு மணி நேரம் சாய்வு நாற்காலியில் குட்டித்தூக்கம். மாலை கச்சேரி செய்யவோ அல்லது பிறருடையதைக் கேட்கவோ போவார், சீடர்களை அழைத்துக்கொண்டு.

‘`நாங்க தப்பாப் பாடினா சார் கடுகடுக்கமாட்டார். அதே வரியைத் திரும்பத் திரும்பப் பாடுவார். நாங்க தவற்றைத் திருத்திக் கொள்ளும்வரை அந்த வரியை விட்டு மேலே செல்ல மாட்டார். சொல்லித் தரும் பாடல் சம்பந்தமான சம்பவங்களை நினைவுபடுத்துவார். பாடலின் பொருள் விளக்குவார். தன் குரு டைகர் வரதாச்சாரி ஸ்வரம் பாடும் ஸ்டைலைப் பாடிக் காட்டுவார். ராத்திரி நேர அமைதிச் சூழலில் வீணை க்ளாஸ் எடுப்பார்’’ என்று தன் குரு புராணத்தைப் பூரிப்புடன் சொல்கிறார், நாளைய ‘சங்கீத கலாநிதி’.

இன்னொரு மேதையான டி.முக்தாவிடம் சௌம்யாவை அனுப்பி வைத்து, பதம், ஜாவளிகள் தவிர அபூர்வப் பாடல்கள் சிலவற்றையும் கற்றுக் கொள்ளக் காரணமாக இருந்தவரும் எஸ்.ராமநாதன்தான். அதேமாதிரி தேவாரம் கற்றுத் தெளிய ஓதுவார்களிடம் அனுப்புவாராம்.

சமகாலக் கலைஞர்களிடம் அன்புடனும் நட்புடனும் பழகும் தன்மை குருமுகமாகத்தான் சௌம்யாவுக்கு வந்திருக்க வேண்டும். சமீபத்திய வேறொரு பேட்டியில், ஐந்து மணி நேரக் கச்சேரியாக இருந்தாலும் கடைசி வரை வீரியம் குறையாமல் பாடும் திறனை சுதா ரகுநாதனிடமிருந்தும், சீஸனுக்கு இத்தனை கச்சேரிகள்தான் என்று தீர்மானித்துவிட்டால், விடாப்பிடியாக அதன்படி நடப்பதை பாம்பே ஜெயஸ்ரீயிடமிருந்தும், புதுமைகள் புகுத்துவதை சஞ்சய் சுப்பிரமணியனிடமிருந்தும் தான் கற்றுள்ளதாகக் கூறியிருக்கிறார். அதேமாதிரி, இன்றைய இளம் கலைஞர்களிடமும் தோழமையுடன் பழகிவருபவர் சௌம்யா.

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!

சென்னை மீனாட்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர். ஐ.ஐ.டி-யில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் மாஸ்டர்ஸ் முடித்தவர். பிற்பாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி! வெப்பம், ஈரப்பதம் காரணமாக மிருதங்கத்தில் சுருதி கலையாமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்பதே டாக்டர் சௌம்யாவின் ஆய்வுக்கான பொருள். மிருதங்க வித்வான்களைவிட, அதைத் தயாரிப்பவர் களுக்கான விஷயம் இது. சௌம்யாவின் கணவர் ஸ்ரீதர், சாஃப்ட்வேர் இன்ஜினீயர், மனைவியின் பாட்டு விஷயத்தில் தலையிடுவதில்லை. அவரின் கச்சேரிகளுக்கும் அதிகம் வருவதில்லை. வந்தாலும் முன் வரிசைக்கு வந்து உட்காருவதில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மக்களோடு மக்களாக உட்கார்ந்துவிட்டுச் செல்வதே அவர் வழக்கம். மகன் சன்கிர்த் பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறார். கிட்டார் வாசிப்பார். கானா பாடுவார்.

வெவ்வேறு சைஸ் நோட்டுப்புத்தகங்கள், வண்ணவண்ண பேனாக்கள், கலர் கலரான பென்சில்கள், அழிரப்பர், ஷார்ப்னர் என்று சேகரித்துவைத்துக்கொள்ளும் ‘ஸ்டேஷனரி பிரியை’ சௌம்யா. “எனக்குக் கிடைக்கிறதை யெல்லாம் யாருக்கும் கொடுக்க மாட்டேன். நானேதான் வெச்சுக்குவேன்” என்கிறார் குழந்தைச்சிரிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism