Published:Updated:

``எங்க குடும்பத்தின் மீது கருணை காட்டுங்க!" - வதந்திகள் குறித்து எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பி.சரண்
எஸ்.பி.பி.சரண்

``அடுத்து ஒரு மிக முக்கியமான தகவல், எஸ்.பி.பி கொரோனாவால் இறக்கலை. அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார். நுரையீரல் தொற்று காரணமாவே இறந்தார்." - எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பி.மரணத்தால் திரையுலகமும் இசை ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியிருக்க அவரின் மருத்துவக் கட்டணத்தை மையப்படுத்தி வெளியாகும் தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இதுகுறித்து எம்.ஜி.எம் மருத்துவமனை தரப்பிலும் எஸ்.பி.பி-யின் மகன் சரண் தரப்பிலும் பேசி நேற்று முன்தினமே விகடன் இணையதளத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், மேலும் விளக்கமாகச் சொல்ல இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார் எஸ்.பி.பி.சரண். அதில் அவர், ``எங்கள் குடும்பத்தின்மீது கருணை காட்டுங்கள்" என உருக்கமாகப் பேசினார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.பி.சரண், ``சிகிச்சை முடிந்து அப்பா காலமாகிவிட்டார். அப்பாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததிலிருந்தே ஏராளமான வதந்திகள் வந்துகொண்டிருந்தன. அவர் மரணமடைந்த பிறகும்கூட வதந்திகள் ஓயலை. இப்போது மருத்துவக் கட்டணம் தொடர்பாக சில வதந்திகளைப் பரப்பிக்கிட்டிருக்காங்க. அப்பாவின் மரணத்திலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தைக்கூடக் கொடுக்காமல் பிரச்னையை ஏற்படுத்துறாங்க.

எங்களால் மருத்துவக் கட்டணத்தைக் கட்ட முடியாம தமிழக அரசை அணுகினோம் என்றும், தமிழக அரசு தாமதம் செய்ததால் இந்திய துணை ஜனாதிபதியின் மகளை அணுகி அவர் தலையிட்டு மருத்துவக் கட்டணத்தை செட்டில் செய்த பிறகே, அப்பாவின் உடலை மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் ஒப்படைச்சதாகவும் ஏதேதோ கதை கட்டிக்கிட்டிருக்காங்க. இப்படி அப்பாவின் மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது.

எம்.ஜி.எம் மருத்துவமனையை நம்பி வந்தோம். அவங்க சிறந்த முறையில் சிகிச்சையளிச்சாங்க. ஒவ்வொரு நாளுமே என்னிடமும் எங்கள் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசித்துதான் அப்பாவுக்கு சிகிச்சையளிச்சாங்க. என்ன பில்லிங் செய்தார்களோ அதில் ஒரு பங்கை நாங்க வாரா வாரம் செலுத்திக்கிட்டுருந்தோம். ஒரு பங்கு இன்ஷூரன்ஸ் வந்துகிட்டுருந்தது. அப்பா இறந்ததும் இறுதியாக செட்டில்மென்ட் செய்வதற்காகப் பணத்தோடு ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன்.

பில் தொடர்பாக ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தில் வேறு யாருடனும் நான் பேசலை. இங்குள்ள டாக்டர் தீபக் என்னுடைய நெருங்கிய நண்பர். ``நாங்கள் இன்னும் எவ்வளவு பணம் கட்டணும்?"னு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், ``இதுவரை செலுத்தியதைத் தவிர, வேறெந்தக் கட்டணமும் வாங்க வேண்டாம். உடலைப் பத்திரமாக ஒப்படையுங்கள்"னு எம்.ஜி.எம் மருத்துவமனையின் சேர்மன் சொல்லிட்டதாகச் சொன்னார். இதெல்லாம் தெரியாமல் சிலர் வந்தியைப் பரப்புறாங்க. நாங்க இந்த மருத்துவமனைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம்.

எஸ்.பி.பி-யின் இறுதி நிகழ்வில்...
எஸ்.பி.பி-யின் இறுதி நிகழ்வில்...

அதேபோல, அரசு தரப்பிலும் உதவி கேட்டிருந்தோம். உதவின்னா பண உதவியில்லை. பொதுவாகப் பேசியிருந்தோம். அரசு தரப்பிலும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினாங்க. நான் சுகாதாரத்துறை செயலாளரிடமே நேரடியாகப் பேசினேன். ``என்ன உதவின்னாலும் அரசு செய்யத் தயார்"னு சொன்னாங்க. என் அப்பா எப்போ இறந்தார்னு நான் அறிவிச்ச நேரம்தான் சர்டிஃபிகேட்லயும் இருக்கு. அதனால இறந்த நேரம் குறித்தும் சந்தேகம் வேண்டாம். உண்மை இப்படியிருக்க வீண் வதந்திகளைப் பரப்புறவங்களிடம் ஒன்று கேட்கிறேன்... நீங்க எஸ்.பி.பி இறந்ததை நினைச்சு வருத்தப்படுறீங்களா... இல்லை ஹாஸ்பிட்டல் பில்லிங் பத்தி வருத்தப்படுறீங்களா?

அடுத்து ஒரு மிக முக்கியமான தகவல், எஸ்.பி.பி கொரோனாவால் இறக்கலை. அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார். நுரையீரல் தொற்று காரணமாவே இறந்தார். ஏற்கெனவே அப்பாவின் ரசிகர்கள் வருத்தத்திலிருந்த நிலையில், அவருக்கு டிராக்கியஸ்டமி செய்யப்பட்டது தெரிஞ்சா இன்னும் அதிகமாகக் கவலைப்படுவாங்கன்னுதான் அதைச் சொல்லலை. நான் தினமும் அப்பாவைப் பார்த்துக்கிட்டிருந்தேன். சைகையில் பேசிக்கிட்டிருந்தார். ஐபேட்ல எழுதினார். நாங்க பண்ற காமெடிக்கு சிரிச்சுக்கிட்டிருந்தார். நல்லா உற்சாகமாக இருந்தார். அவர் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியலை.

எஸ்.பி.பி-யைக் காண வந்த ரசிகர்கள்
எஸ்.பி.பி-யைக் காண வந்த ரசிகர்கள்

நடிகர் அஜித் வரலைன்னு ஒரு பிரச்னையைக் கிளப்புறாங்க... அஜித் வந்தால் என்ன வரலைன்னா என்ன... பேசினா என்ன, பேசலைன்னா என்ன? அஜித் என் நண்பர், என் தந்தைக்கும் நன்கு பரிச்சயமானவர். அவர் எங்கிருந்து வேண்டுமானாலும் வருத்தப்படலாம், நேர்லதான் வரணுங்கிறதில்லை. வெளியூர்ல இருந்தும் வெளிநாட்டுல இருந்தும் நிறைய பேர் அப்பாவுடைய சமாதியைப் பார்க்க வர்றாங்க. அதற்கான அனுமதிக்கு லோக்கல் பஞ்சாயத்திடமும் போலீஸ் டிபார்ட்மென்ட்டிடமும் பேசிக்கிட்டிருக்கேன். அப்பா போன பிறகு, பாரத ரத்னா விருது கிடைச்சாலும் சரி கிடைக்காட்டாலும் சரி. ஆனால், அரசு கொடுத்தால் பெற்றுக்கொள்வோம். எனக்கு என் அப்பாதான் பாரத ரத்னா. எங்களுக்கு எங்க அப்பா இல்லை. உலகத்துக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லை, அவ்வளவுதான். இது எதிர்பாராத மரணம்கிறதால எங்களால எளிதில் ஜீரணிக்க முடியலை. எங்களுக்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுது. நான் எங்க அம்மாவைப் பாத்துக்கிறதா... இல்லை உங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டிருக்கிறதா? ஆகையால், எங்க குடும்பத்தின் மீது கருணை காட்டுங்க” என்றார் உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு