கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“பறை துக்கத்திற்கானது அல்ல; கொண்டாட்டத்திற்கானது!”

எழிலரசு, தமிழ்வேந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழிலரசு, தமிழ்வேந்தன்

ஓவியம்: மருது

பறை இசைக்கு ஆடாத கால்களே இல்லை எனச் சொல்லலாம். மிகத் தொன்மையான இசைக் கருவியான பறை, திருவிழாக்கள் தொடங்கி இறப்பு வரையிலும் இசைக்கப்படுகிறது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் எனப் பல இலக்கியங்களில் பறையிசை பற்றிய குறிப்பைக் காணலாம். பறை என்றால் சொல், பேசு என அர்த்தம் சொல்லப்படுகிறது. இதைத் தமிழர்கள் ஐந்திணைகளிலும் பயன்படுத்தினார்கள். பறை மறுப்புப் போராட்டம் எனும் சாதிய எதிர்ப்பு வரலாற்றையும் இந்த இசைக்கருவி கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு இவ்விவாதத்தை மேலும் மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி 10 வருடங்களுக்குப் பிறகு சென்னை சங்கமம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பறையிசை நிகழ்வும் நடந்தது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார். அந்நிகழ்வுக்குப் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்...

மணிமாறன்
மணிமாறன்

‘2008-ல் கிராமியக் கலைஞர்களோடு பொங்கல் விழா கொண்டாடிக்கொண்டிருந்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், அந்த நிகழ்வுகளில் பங்கேற்றார். அங்கு ஐந்து /ஆறு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அற்புதமாகப் பறை வாசித்து ஆடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அந்தச் சிறுவர்களின் கலைத்திறமையை ரசித்துக்கொண்டிருந்தோம். வாசித்து முடித்ததும் அந்தச் சிறுவர்களை அருகில் அழைத்த தலைவர், ‘மிக அழகாக வாசிக்கிறீர்கள். இந்தக் கலையை நீங்கள் தொடர வேண்டும். அதுபோல எந்தக் காலத்திலும் உங்கள் படிப்பை விட்டுவிடக்கூடாது, நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். எல்லோரும் கைதட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்தவர் தலைவர் கலைஞர். அந்தச் சிறுவர்கள் இப்போது வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இந்த ஆண்டுச் சங்கமம் நிகழ்ச்சியில் அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களில் எழிலரசு, லயோலா கல்லூரியில் விலங்கியலும், தமிழ் வேந்தன், இசைக் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் பறையிசைக் கலைஞர்களாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’

“பறை துக்கத்திற்கானது அல்ல; கொண்டாட்டத்திற்கானது!”


இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வந்த நிலையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார், அதை ரீட்வீட் செய்து ‘லயோலா கல்லூரியில் படிப்பவர்கள் ஏன் பறை அடிக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையாக ‘பறை அடிப்பதை ஏன் இழிவாகப் பார்க்கிறீர்கள்’, ‘கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும்’, ‘நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், பறை அடிப்பதில் என்ன பிரச்னை’ என்று அவருக்கு எதிராகப் பலர் பதிவிட்டனர். அதேபோல ‘சாவுக்குப் பறை அடிப்பதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையே பயன்படுத்திவருகின்றனர். அதை எதிர்க்கும் நோக்கத்தில்தான் ரவிக்குமார் இவ்வாறு பதிவிட்டுள்ளார்’ என்று ஆதரவுக் குரல்களும் எழுந்தன.

இவ்வாறு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ‘பறையொலியால் பரவும் இழிவு’ என்னும் கட்டுரையைத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ரவிக்குமார் வெளியிட்டார். அதில் ‘செத்த மாடுகளை அகற்றுதல், பிறப்பு, இறப்பு தொடர்பான பணிகளைச் செய்தல், பறையடித்தல் போன்ற தொழில்கள் தலித் மக்கள்மீது அக்காலத்தில் பலவந்தமாகச் சுமத்தப்பட்டன. மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் சூழலும் இருந்தது. டாக்டர் அம்பேத்கர், எல்.இளையபெருமாள் போன்ற தலைவர்களும் இதனை எதிர்த்துப் போராடியுள்ளனர்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விரிவாக அவரிடம் பேசினேன்.

எழிலரசு
எழிலரசு

“முதலில் நான் பதிவிட்ட நோக்கமே திசை திரும்பியுள்ளது. ஏற்கெனவே இதைப் பற்றி முகநூலில் பதிவு செய்துள்ளேன். பறை இசைப்பதைக் கலையாக மட்டும் பார்க்கமுடியாது. நகரத்தில் நடக்கின்ற விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு ‘எல்லாம் நார்மலைஸ்’ ஆகிவிடும் என்று கருதுகிறார்கள். கிராமங்களில் இன்னும் மோசமான நிலையே உள்ளது. பறையைச் சுமப்பவர்கள் ஒரு தோளில் பறையையும் மறு தோளில் சாதியையும் சுமந்து செல்லும் இழிநிலையே உள்ளது. இந்தப் போராட்டம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. பலர் இதற்காக உயிர்துறந்துள்ளனர்.

பறை இசைக்க மறுத்ததால் கட்டை விரல் வெட்டப்பட்ட குறுங்குளம் குருமூர்த்தி, ஊர்த் திருவிழாவில் பறை இசைக்க மறுத்ததால் கொல்லப்பட்ட ரெட்டியூர் பாண்டியன், பறையை எரித்துப் போராடிய கோவை மாணிக்கம் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இப்படிப் பறை அடிப்பதை இழிதொழிலாக மறுத்துத் தலித்துகள் நீண்டகாலமாகவே போராடிவந்துள்ளனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் பற்றிய பதிவுகள் பிற பகுதிகளுக்கு இப்போதும்கூட போய்ச் சேரவில்லை.

தமிழ்வேந்தன்
தமிழ்வேந்தன்

பறையினால் ஒரு சமூகத்திற்கு ஏற்பட்ட இழிவு என்பது சென்ற நூற்றாண்டில் ஏற்பட்டதுதான். மற்ற சமூகத்தினரும் இப்போது பறை வாசிக்க ஆர்வமாக உள்ளனர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் சாவு வீட்டில் பறை அடிப்பது கிடையாது, கிராமங்களுக்குச் செல்வது கிடையாது. அங்கு இன்னும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மேடையில் ஆடுவதும் தெருக்களில் ஆடுவதும் ஒன்றல்ல என்கிற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். நம் அறிவார்ந்த தலைவர்கள் முன்சொன்ன கல்வியை ஆயுதமாகக் கொள்வதே நமது சுயமரியாதையைக் காக்கும் வழியாகும். மாநிலங்களவை உறுப்பினராக இன்றும் பல இரங்கல் வீடுகளுக்கு நான் செல்லும்போது அங்கே பறை அடிப்பவர்களை மற்றவர்கள் நடத்தும் விதத்தைப் பார்க்கும் போது சங்கடமாக உள்ளது. இந்த நவீன அறிவியல் சூழ்நிலையிலும் தண்டோரா போடும் வழக்கம் என்பது சென்ற ஆண்டுதானே ஒழிக்கப்பட்டது. இப்படிச் சுயமரியாதைக்காகப் போராடிக்கொண்டு இருக்கும்போது, அந்தக் கலை அழிந்துவிடும், அதை அழிவிலிருந்து காப்பாற்றியே தீருவேன் என்று சொன்னால், அப்படிச் சொல்லுவோரே அத்தொழிலைச் செய்யட்டும்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களில் ஒருவரான எழிலரசைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் லயோலா கல்லூரியில் விலங்கியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

“பறை துக்கத்திற்கானது அல்ல; கொண்டாட்டத்திற்கானது!”

“லயோலா கல்லூரியில் படிப்ப வருக்கு ஏன் பறை என்ற கேள்வியையே தவறாகப் பார்க்கிறேன். எங்கள் பறையிசைக் குழுவில் இருப்பவர்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்துகொண்டும் படித்துக்கொண்டும் இருக்கிறார்கள். யாரும் படிப்பின் முக்கியத்துவம் அறியாமல் இருந்துவிடவில்லை. நான் எனது 3 வயதிலிருந்து பறை இசைத்துவருகிறேன். பறை என் வாழ்வில் 15 ஆண்டுகளாகப் பயணித்துவருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்குச் சென்று பறையிசைத்துள்ளோம். பறையை தமிழர் பாரம்பரியமாகப் பார்க்கிறேன். அதை இழிதொழிலாகப் பார்க்கக்கூடாது என்பதே என் கருத்து” என்றார்.

அடுத்ததாக, கடந்த 20 ஆண்டுகளாக பறையிசையைத் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கும் ‘புத்தர் கலைக்குழு’ மணிமாறனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டபோது “முதலில் இது ஒரு பெரிய விவாதம் ஆகியிருப்பதே மகிழ்ச்சி” என்று நிதானமாகப் பேசத் தொடங்கினார். ‘‘பறை உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. மேலை நாட்டுக் கலைஞர்கள் இக்கருவி பற்றி ஆர்வமாகத் தெரிந்துகொள்கின்றனர். அதுமட்டுமல்லாது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால் பறையை இழிவாகப் பார்த்த சமூகத்தினரும் இன்று பறை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்றாலும், மறுபுறம் பிளாஸ்டிக் பறையின் வருகைக்குப் பின்னர், இறப்பிற்குப் பறை அடிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் அதில் 99.9% தலித் மக்களாக இருப்பதுதான்.

“பறை துக்கத்திற்கானது அல்ல; கொண்டாட்டத்திற்கானது!”

மேலும், இங்கே பறை மறுப்புத் தியாகிகளின் போராட்டம் பெரியது. கோவையில் ஒரு தெருவின் பெயரே மாணிக்கம் தெரு என்று வைக்கப்பட்டுள்ளது. கல்வி மறுக்கப்பட்டதால் அதை எதிர்த்துப் பறை எரிப்புப் போராட்டம் செய்தவர்தான் மாணிக்கம். மேலும், தொண்டூழியம் என்று ஊதியம் இல்லாமல் பறை இசைப்பதை எதிர்த்து ஈழத்தமிழர்களும் பறை மறுப்புப் போராட்டம் செய்துள்ளனர்.

இந்தப் போராட்டங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறவேண்டும், அவர்களின் இழிநிலை போக வேண்டும் என்பதற்காகத்தான். இத்தகைய தியாகங்கள் யாவையும் நினைவில் கொண்டுதான் நாங்கள் எங்கள் குழுவில், ‘சாவிற்குப் பறை இசைப்பதில்லை, சாராயம் குடித்துப் பறை இசைப்பதில்லை’ என்ற உறுதிமொழியை ஏற்றுக் கடைப்பிடித்து வருகிறோம். மேலும் குழுவில் ஆர்வத்தோடு வரும் பிற சமூக மக்கள் பலரைச் சேர்த்துப் பயிற்சி வழங்குகிறோம். இதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்வதே எங்கள் நோக்கம்.

“பறை துக்கத்திற்கானது அல்ல; கொண்டாட்டத்திற்கானது!”

ஆனால் இன்னொரு விஷயத்திலும் நாங்கள் மிகக் கவனமாக உள்ளோம். அது, இடக்கையில் பறையைக் கொடுத்துவிட்டு வலக்கையில் இருக்கும் அவர்களது புத்தகத்தைப் பறித்துவிடாமல் இருப்பதுதான். சமீபத்தில் அரசுப்பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழாக்களில் பறையிசைத்த மாணவர்கள் யாவரும் தலித்துகளாக இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இத்தனை ஆண்டுக்கால கலைமாமணி விருதுகளில் இரண்டே இரண்டு பறையிசைக் கலைஞர்களின் பறையோசை மட்டுமே விருதுக்குத் தகுதியானது என்பது பறைக்கான அங்கீகாரம் எந்த அளவில் இங்குள்ளது என்பதற்குச் சாட்சி. எமது பறை முழக்கம் துக்கத்திற்கானது அல்ல; கொண்டாட்டத் திற்கானது. சாமிகள் ஆடுவதற்காக அல்ல; ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்காக. ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்... பறையல்ல; பாகுபாடுகள்!” என்று மணிமாறன் தன் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

இன்று விவாதமாகப் பல சத்தங்களை இந்தப் பறை ஏற்படுத்தியிருந்தாலும் சமத்துவத்தை நோக்கிப் பல கேள்விகளையும் உரை யாடல்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை. சமத்துவம் ஓங்கி ஒலிக்கட்டும்.