Published:Updated:

இசையிலும் வேலையிலும் பரவும் மகிழ்ச்சி!

ஸ்ரீரங்கம் வெங்கட நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீரங்கம் வெங்கட நாகராஜன்

இசை என்னோட முதன்மை ஈடுபாடா இருந்தாலும், பேராசிரியர் ஆகணும்ங்கிறதுதான் என்னுடைய லட்சியம்

இசையிலும் வேலையிலும் பரவும் மகிழ்ச்சி!

இசை என்னோட முதன்மை ஈடுபாடா இருந்தாலும், பேராசிரியர் ஆகணும்ங்கிறதுதான் என்னுடைய லட்சியம்

Published:Updated:
ஸ்ரீரங்கம் வெங்கட நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீரங்கம் வெங்கட நாகராஜன்

ஸ்ரீரங்கம் வெங்கட நாகராஜன் - கர்னாடக சங்கீத உலகில் ‘மிக வேகமாக’ வளர்ந்துவரும் இளம் பாடகர் என்று விமர்சகர்களால் பாராட்டப்படுபவர். மற்றொருபுறம், ‘பணியிடங்களில் நேர்மறை மனோபாவம் பணியாளர்களிடமிருந்து தலைவர்களுக்கு எப்படி மேல்நோக்கிப் பரவுகிறது’ என்ற தலைப்பில் சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஆய்வாளர். சுவாரசியமிக்க இந்த இணைவை அறிந்துகொள்ள, மழை தொடங்கியிருக்காத ஒரு காலை வேளையில் வெங்கட நாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

“எங்களுடைய பூர்வீகம் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள காகர்லா கிராமம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் பிறந்த பூமி. என் அம்மாவழி தாத்தா காகர்லா ஜானகிராம் அவதானி அந்தக் காலத்துல ஸ்ரீரங்கத்துக்கு இடம்பெயர்ந்து வந்துட்டாங்க. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கதான். அம்மா சங்கீதம் படிக்கிறத நான் சிறுவயதில் இருக்கும்போது பக்கத்துல இருந்து கவனிக்க ஆரம்பிச்சதுல எனக்கும் பாட்டு மேல ஈடுபாடு வந்துவிட்டது” என்று பேசத் தொடங்குகிறார் வெங்கட நாகராஜன்.

அம்மாவுடன் வெங்கட நாகராஜன்
அம்மாவுடன் வெங்கட நாகராஜன்

“என் தாத்தா பள்ளிக்கூடத் தலைமையாசிரியரா இருந்தவர். அப்பா, அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போனதால, நான் தாத்தா, பாட்டியிடம்தான் வளர்ந்தேன். எனக்கு 7 வயசு இருக்கும்போது அப்பா இறந்துட்டார். நாங்க உடைஞ்சு போய்ட்டோம். எங்க தாத்தாதான் எங்களை அரவணைத்து வளர்த்துவந்தார். எனக்கு சங்கீதத்து மேல ஈடுபாடு ஏற்பட்டதும் இந்தக் காலகட்டத்துலதான். என்னுடைய ஆர்வத்த அம்மா அடையாளம் கண்டு கொண்டு பயிற்சிக்கு ஏற்பாடு செஞ்சாங்க. அடிப்படைப் பயிற்சி களுக்குப் பிறகு, 2004-ல் 13 வயதில், திருச்சியில் இசைவாணி ஸ்ரீமதி அம்புஜம் வேதாந்தத்திடம் சேர்ந்து சங்கீதம் கத்துக்கத் தொடங்கினேன்.” நிறைந்த கண்களுடன் அம்மாவைப் பார்க்கிறார் வெங்கட நாகராஜன்.

“அம்மா வங்கியில் வேலை பார்த்தாங்க. ஒவ்வொரு நாளும் ஆபீஸ் முடிஞ்சு வந்ததும் அன்னிக்கு நடந்த பிரச்னைகள், சவால்கள்னு அவங்க வேலையில எதிர்கொண்ட விஷயங்களைப் பத்தி என்கிட்ட விரிவா பகிர்ந்துப்பாங்க. இந்த விஷயங்களும் எனக்குள்ள தாக்கம் செலுத்த ஆரம்பிச்சது. இசை சார்ந்த ஈடுபாடு ஒருபக்கம், மனிதவள மேலாண்மையில் என்னுடைய பணி சார்ந்த வாழ்க்கையை அமைச்சுக்கணும்ன்ற கனவு மறுபக்கம்னு வளர்ந்துவந்துச்சு. ஸ்ரீரங்கத்துல பள்ளிப்படிப்பு முடிச்சிட்டு, சென்னை விவேகானந்தா காலேஜ்ல பி.காம் பண்ணினேன். தொடர்ந்து டிஜி வைஷ்ணவா காலேஜ்ல மனிதவள மேலாண்மையில பட்டமேற்படிப்பு முடிச்சேன்” என்று தன்னுடைய கல்விப் புல வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறார் வெங்கட நாகராஜன்.

“சென்னையில நடக்கிற டிசம்பர் சீசன் கச்சேரிகளுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்கள்ல ஜூனியர்-சீனியர் பிரிவுகளுக்குப் போட்டிகள் நடக்கும். அதுக்கு நாங்க ஸ்ரீரங்கத்துல இருந்து வந்து கலந்துக்குவோம். என் மகன் தொடர்ந்து பலமுறை முதல் பரிசு வாங்கியிருக்கான். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ், வாணி மகால், நாரத கான சபா, ஊத்துக்காடு வேங்கடகவி ட்ரஸ்ட் சபான்னு பல சபாக்கள், கச்சேரிகள்லயும் பாடி பரிசும் அங்கீகாரமும் என் பையனுக்குக் கிடைச்சிருக்கு” பெருமை பொங்கப் பேசுகிறார், வெங்கட நாகராஜனின் தாய் புவனேஸ்வரி.

சென்னை மியூசிக் அகாடமியின் டிசம்பர் சீசன் ஜூனியர் பிரிவில் 2017-ல் இருந்து பாடிவரும் வெங்கட நாகராஜன், கொரோனாப் பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக இணையவழிக் கச்சேரியில் பாடிவருகிறார். இந்த ஆண்டுக்கான ஒளிப்பதிவு சமீபத்தில் முடிந்திருக்க, முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து பட்டம் பெற்றிருக்கிறார் வெங்கட நாகராஜன்.

“இசை என்னோட முதன்மை ஈடுபாடா இருந்தாலும், பேராசிரியர் ஆகணும்ங்கிறதுதான் என்னுடைய லட்சியம். மனிதவள மேலாண்மைப் படிப்பு முடிச்சதும், உடனடியா வேலைக்குப் போக விரும்பினேன். வேலையும் கிடைச்சது. ஆனா, வேலைக்குப் போய்ட்டா சங்கீதம் கைநழுவிப் போய்டும்னு அம்மா சொன்னாங்க. வேலையோட தன்மை சங்கீதத்தைக் கவனிக்க முடியாமப் பண்ணிடும்னு எச்சரிச்சாங்க. ஆனா, இதுலே பிஹெச்.டி பண்ணினா, துறை சார்ந்த அறிவும் ஆழப்படும், சங்கீதத்துக்கும் நேரம் சீரா அமையும்னு அம்மா அறிவுரைல ஐஐடில சேர்ந்து, பணியிடங்கள்ல நேர்மறை மனோபாவம் பணியாளர்கள்ட்ட இருந்து தலைவர்களுக்கு எப்படி மேல்நோக்கிப் பரவுதுங்கிற தலைப்புல ஆய்வு பண்ணினேன்” என்கிறார் வெங்கட நாகராஜன்.

இசையிலும் வேலையிலும் பரவும் மகிழ்ச்சி!

“பாசிட்டிவிட்டி என்கிற விஷயத்தின் மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஈடுபாடு அதிகம். பணியிடங்கள்ல தலைவர்களிடமிருந்து பணியாளர்களுக்குப் பரவும் நேர்மறை மனோபாவம் குறித்து ஆய்வுகள் உண்டு; ஆனால், பணியாளர்களிடமிருந்து மேல்நோக்கித் தலைவர்களுக்குப் பரவும் நேர்மறை மனோபாவம் ஆய்வுசெய்யப்பட வேண்டிய ஒன்றுன்னு நினைச்சேன். அப்படித்தான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு தொடங்கியது.

உற்பத்தி, ஐ.டி, சுகாதாரம், என்.ஜி.ஓ எனப் பல்வேறு துறைகள்ல பணியாளர்களிடம் இருந்து தலைவர்கள் நோக்கிய நேர்மறை மனோபாவம் எப்படி இயங்குகிறதுன்னு ஆய்வு பண்ணினேன். உற்பத்தித்துறையைவிட சேவைத்துறை, ஐ.டி துறைகளில் இந்தப் பரவல் அதிகமாக இருக்கிறது. இதுக்குக் காரணம் அந்தத் துறைகளுக்கு உள்ளேயே வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, வெவ்வேறு நிலைகள்ல உள்ள பணியாளர்கள் இணைந்து ஒரு வேலையில ஈடுபடுறாங்க. இந்தச் சூழல்தான் நேர்மறை மனோபாவம், இந்தத் துறைகள்ல அதிகமாகவும், விரைவாகவும் பரவ வழிசெய்யுதுன்னு என்னுடைய ஆய்வுகள் மூலம் கண்டறிஞ்சிருக்கேன்” என்கிறார் வெங்கட நாகராஜன்.

இதுகுறித்து மேலும் பேசிய வெங்கட நாகராஜன், “வொர்க்-லைஃப் பேலன்ஸ் பத்தி இன்னிக்கு நிறைய பேசுறோம். ஆனா, தன்னிச்சையா இயங்கும் உரிமை, முடிவெடுக்கும் அதிகாரம் போன்ற விஷயங்களைப் பணியாளர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் பணியில் அவங்க ஈடுபாட்டை ஆழப்படுத்த முடியும். பணியாளர்கள் தங்கள முக்கியமா உணரத் தொடங்கும்போது, அது வேலையில வெளிப்படும். கச்சேரில பாடகருக்கும் பக்கவாத்தியக்காரர்களுக்கும் இருக்கும் ஒருங்கிணைப்பு, சங்கீதத்துக்கு ரசிகர்களிடமிருந்து வர்ற எதிர்வினைன்னு பாசிட்டிவிட்டி பரவுவதை உணரமுடியும். ஆய்வுரீதியா நான் கண்டறிஞ்சதும் இதுவே. என்னுடைய இந்த ஆய்வ ஏதாவது ஒரு நிறுவனத்துல பரிசோதிச்சு, நடைமுறைப்படுத்திப் பார்க்கும் திட்டமும் இருக்கு” என்றார்.

“சங்கீதம், படிப்புன்னு இன்னிக்கு நான் முன்னேறி வந்ததுக்குக் காரணம் என் அம்மாவோட தியாகம்தான். ஒரு கட்டத்துக்கு மேல வேலை சார்ந்த எந்த புரொமோஷனையும் அவங்க ஏத்துக்கல. என் சங்கீத வளர்ச்சி தடைபடக் கூடாதுங்கிறதுக்காகத் தமிழ்நாடு, சென்னை தாண்டிப் போகக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தாங்க. அவங்களோட தியாகமும், வளர்ப்பும்தான் என்னை ஆளாக்கியிருக்கு” என்று தாய் புவனேஸ்வரியைத் தோளோடு அணைத்துக்கொள்கிறார் வெங்கட நாகராஜன்.

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism