Election bannerElection banner
Published:Updated:

BTS பாய்ஸ்... ஜாலி கேலி டல்கோனா மெர்சல்ஸ்!

BTS
BTS ( Photo: ibighit.com )

நேற்றுவரை நம்மோடு ஒண்ணுமண்ணாக ஓவியா ஆர்மியில் இருந்தவர்கள், திடீரென்று பிடிஎஸ் ஆர்மில சேர்ந்துட்டேன், ப்ரீயா இருந்தா கொரியா பாட்டு பார்க்கலாம் வரியா எனும்போது கொரோனாவும் வெட்டுக்கிளியும் சேர்ந்து நம்மைத் தாக்குவதுபோல ஒரு பேர‌திர்ச்சி.

கறிக்குழம்பு, கறிதோசை சாப்பிட்டவர்கள் திடீரென்று கறி இட்லி சாப்பிட்டேன்னு சொல்வதுபோல கடும் அதிர்ச்சி. நம்ம கூடவே சுத்துன செவ்வாழையெல்லாம் பிடிஎஸ், பிடிஎஸ் ஆர்மின்னு சொல்றப்ப அதை தெரிந்துகொள்ளாமல் இருக்கமுடியுமா?

உலகமே ஊரடங்கி இருக்கும் இந்த நேரத்தில் உலகப்புகழ் பெற்றவற்றில் டல்கோனா காஃபியும் பிடிஎஸ்ஸும் குறிப்பிடத்தக்கவை. இரண்டின் பூர்வீகமும் தென்கொரியாதான். டல்கோனா காபி வீட்டிலயே செய்து தராங்க, குடிக்கிற மேட்டர் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனால்,பிடிஎஸ்?

தென்கொரியாவில் 2010-ல் ஏழுபேர் இணைந்து தொடங்கிய இசைக்குழு (BangTan Sonyeondan) பேங்க்டன் பாய்ஸ்; இதன் சுருக்கமே பிடிஎஸ் எனப்படுகிறது. ஆரெம், ஜின், சுகா, ஜேஹோப், ஜிமின், வி, ஜுன்கூக் என்று மொத்தம் ஏழுபேர்கொண்ட கே-பாப் எனப்படும் இசைக்குழுதான் அது. அவர்களின் முழுப்பெயர்கள்தான் நம் வாயில் நுழையவில்லையே தவிர அவர்களது பாடல்கள் அனைவரின் காதுக்குள்ளும் நுழையத்தான் செய்கின்றன. 2013-ல் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஆல்பங்கள் வெளியிடத் தொடங்கினார்கள். அவை கொரோனாவை விட கொடூரமாய்ப் பரவுகின்றன. வெட்டுக்கிளிகளை விட வேகமாய்ப் பயணிக்கின்றன.

பாடல், இசை, நடனம் என எல்லாவற்றையும் செய்வ‌து இந்த எழுவர் குழுமம்தான். சவுண்ட் பார்ட்டிகளாகிய இவர்களைச் `சப்த'ரிஷிகள் என்றாலும் மிகையன்று.

பதின் பருவத்தினராக இவர்கள் தங்கள் குழுமத்தை ஆரம்பித்தார்கள். மேலோட்டமாக (மீமோட்டமாகவும்) சொல்வதென்றால் இங்கே கனா காணும் காலங்கள் பசங்க எப்படியோ அதே மாதிரி அந்த நாட்டிலே அவக. தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி என்பதுபோல இவர்கள் ஆல்பம் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்.

Bangtan Boys
Bangtan Boys
Photo: twitter/BTS_twt

இவர்கள் எப்படிப் பிரபலமானார்களென்று பார்த்தால், மக்களுக்கு எது தேவையோ, எதைக் கேட்க விரும்பினார்களோ அதைப் பாடினார்கள். இவர்களது பாடல்கள் பெரும்பாலும் காதல், பள்ளிப்பருவ, விடலைகளின் பிரச்னைகள், மனித உறவுகள், மன ஆரோக்கியம், சமூகம் சார்ந்தே இருக்கின்றன. உடலைப் பாதுகாக்க பல வழிகள் இருக்க‌, மனதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ள மக்கள் இவர்களை நாடினார்கள். தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் இந்தப் பாடல்கள் இருந்ததால் அனைவரும் குறிப்பாக இளம் ரசிகப்பட்டாளம் அதிகமாகியது.

கருத்து அனைவரிடமும் இருக்கிறது, கவனத்தை ஈர்க்கும்படி சொல்வதில்தானே வெற்றியின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. கருத்தாய், இசையாய், நடனமாய், கண்கவர் காணொலியாய் இவர்கள் கொடுக்கையில் அது எல்லோரையும் எளிதில் சென்றடைகிறது. அதற்குப் பின்னால் இவர்களின் பெரும் உழைப்பு இருக்கிறது.

விரல் நுனியில் வைரல் வைத்திருக்கும் இந்த யுகத்தில் பிறந்ததைப் பெரும்பேறாகக் கருதுவதாகப் பேட்டி ஒன்றில் சொல்கிறார்கள் இவர்கள். இணையர்கள் கொடுத்த பெருவெற்றி இது. நாட்டுக்காக ஆர்மி இருப்பதை அறிந்திருக்கிறோம், பாட்டுக்காக ஆர்மி இருப்பதை இவர்களால் அறிகிறோம். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் இவற்றில் கோடிக்கணக்கில் ஃபாலோ செய்கின்றனர். தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கொரோனாவைப்போல் இளசுகளின் இதயமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் இவர்கள்.

இக்குழுவைப் பற்றிச் செய்யப்பட்ட ட்வீட் மற்றும் ரீட்வீட் ஆகியவற்றின் எண்ணிக்கை, டிக்டாக்கில் ஒரு மில்லியன் அதிவேக ஃபாலோவர்களைக் கொண்டது, வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட யூடியூப் வீடியோ என‌ கின்னஸ் சாதனை மட்டுமே பதினொன்றைச் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவின் உயரிய இசை விருதுகளிள் ஒன்றான `பில்போர்ட் மியூசிக் அவார்டு’ தொடங்கி, பல விருதுகளை இவர்கள் வென்று கொண்டிருக்கிறார்கள். வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு `விருது'நகரையே உருவாக்கிவிடலாம். இசையில் அவர்கள் தொட்டது உச்சம். இதைத்தாண்டி எதுவுமில்லை மிச்சம். இதற்கு முந்தைய இசைச்சாதனைகள் யாவையும் முறியடித்திருக்கிறார்கள். `ரெக்கார்ட்' ப்ரேக் என்பது சாலப்பொருத்தம்.

Bangtan Boys
Bangtan Boys
Photo: twitter/BTS_twt

இவர்கள் வெறும் பாடல்களோடு நின்றுவிடாமல் மக்களுக்கான நிறைய தொண்டுகளைச் செய்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் நலன், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் பிரச்னைகள், குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைகள், பேரிடர் நிவாரணங்கள் என எல்லாவற்றிற்கும் இவர்களும் இவர்களுடைய ஆர்மியும் பேருதவிகளைச் செய்கின்றனர். பிடிஎஸ் டொனேஷன்ஸ் என்று கூகுளிட்டால் அவர்கள் செய்த உதவிகள் கொட்டுகின்றன. இந்த வகையில் இவர்களை கடையேழு வள்ளல்கள் என்றாலும் மிகைய‌ன்று.

காதலுள்ள அனைவரையும் ஏன் காதுள்ள அனைவரையுமே கவரக்கூடியவைதான் இவர்களின் பாடல்கள். தமிழிசை தாண்டி வேறு இசையையும் ரசிப்பவர்கள் பிடிஎஸ் கேட்காமல் இருக்கமுடியாது. பிறகென்ன, நாம் ஒரு யூத் என்பதை நிறுவ, ட்ரெண்டிங்கில் இருப்பதை உறுதிசெய்ய, இனி என்ட மதர்டங்க் கொரியா, என்ட காஃபி டல்கோனா காஃபி, என்ட‌ ஆர்மி பிடிஎஸ் ஆர்மி என்று ஜோதியில் கலக்க வேண்டியதுதான். இதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை, ஒரு டிஸ்பிளே பிக்சர், ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஒரு வால்பேப்பர் போதும்; பிளே லிஸ்ட்டில் கொஞ்சம் பிடிஎஸ். ராஜாவா ரகுமானா என்ற உள்ளூர் சர்ச்சையை விட்டு, நாம் உலக லெவலுக்குப் போவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டியதுதான்.

Bangtan Boys
Bangtan Boys
Photo: twitter/BTS_twt

இக்குழுவில் ஜின் என்றொருவர் இருக்கிறார். இவ்வுலகில் ஜின் என்றொரு மதுவகை இருக்கிறது. குடிகாரர்களுக்கு... மன்னிக்கவும், மதுப்பிரியர்களுக்கு ஜின்பாட்டில் போதை தருவதைப்போல, இசைப்பிரியர்களுக்கு ஜின், பாட்டில் போதை தருகிறார். இசைப்பிரியர்களுக்கு அது ஒரு `சுகா'னுபவம்.

பாஷையாடா முக்கியம்... பாட்டைக்கேளுடா என்கிறார்கள் இசை வெறியர்கள். சக்தி இருந்தா சப்டைட்டில் பாத்து தெரிஞ்சுக்கடா என்கிறார்கள் `சாவுக்கடின'‌ விசிறிகள். இசைக்கு மொழி முக்கியம் இல்லை. எனவே இதைப் புரிந்துகொள்ள `ப்ரொஃபெஷனல்' கொரியராகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியம் இல்லை. கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்ட நாம் கொரிய பாடல்களோடும் வாழக் கற்றுக்கொள்ளுவோம்!

- சிவ.அறிவழகன்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு