Published:Updated:

“மூணு மணி நேரம் தொடர்ந்து வாசிப்பேன்!” - தவில் சிறுமி நிஷாந்தினி

நிஷாந்தினி
பிரீமியம் ஸ்டோரி
நிஷாந்தினி

ஆரம்பத்துல மேளத்தை என்னால தூக்கக்கூட முடியாது. குருதான் தூக்கி மடியில வைப்பாங்க. கொஞ்சம் கொஞ்சமா நானே தூக்கி வைக்க, இறக்கி வைக்க ஆரம்பிச்சேன்.

“மூணு மணி நேரம் தொடர்ந்து வாசிப்பேன்!” - தவில் சிறுமி நிஷாந்தினி

ஆரம்பத்துல மேளத்தை என்னால தூக்கக்கூட முடியாது. குருதான் தூக்கி மடியில வைப்பாங்க. கொஞ்சம் கொஞ்சமா நானே தூக்கி வைக்க, இறக்கி வைக்க ஆரம்பிச்சேன்.

Published:Updated:
நிஷாந்தினி
பிரீமியம் ஸ்டோரி
நிஷாந்தினி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தவில் இசை. மூத்த இசைக் கலைஞர் களுக்கு ஈடுகொடுத்து தவில் அடித்துக்கொண்டிருந்த சிறுமி நிஷாந்தினியை, அரங்கமே ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அவர் அடித்த அடியில் இசை அதிர அதிர, வாஞ்சையாக அவருக்கு திருஷ்டி முறித்தனர் பெண்கள் சிலர். ஆறாம் வகுப்புப் படிக்கும் நிஷாந்தினியின் தொடர்பு விவரங்கள் பெற்று, புதுக்கோட்டை அருகில் வாராப்பூரில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம்.

‘`புதுக்கோட்டையில உள்ள பாட்டி வீட்டுல தங்கி படிச்சிக்கிட்டு இருந்தேன். கொரோனா லாக்டௌனால ஸ்கூலுக்கு லீவ் விட்டப்போ, பரதநாட்டியம் கிளாஸுக்குப் போயிட்டு இருந்தேன். என் தாத்தா கிருஷ்ணன் நாதஸ்வர வித்வான். என் மாமா நாகராஜன் தவில் வித்வான். மாமா வீட்டுக்குப் போகும் போது, உள்ளூர் மட்டுமல்லாம கர்நாடகாவுல இருந்தெல்லாம் வந்து மாமாகிட்ட அண்ணன்கள் தவில் கத்துக்கிறதை ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன். நானும் கத்துக்க எனக்கு ஆசை ஆசையா வந்தது.

“மூணு மணி நேரம் தொடர்ந்து வாசிப்பேன்!” - தவில் சிறுமி நிஷாந்தினி

பரதநாட்டியம் கத்துக்கிட்டதால, எனக்கு ராகமும் தாளமும், ஸ்வரங்களும் தெரியும். அதனால, தவில் கத்துக்கிறேன்னு அப்பா கிட்ட கேட்க, மாமாகிட்டயே கத்துக்கோனு சேர்த்துவிட்டுட்டாங்க. குருகிட்ட இருந்து மொதல்ல தவில் பாடத்தைக் கத்துக்கணும். அப்புறம் பாடத்தை எழுதிப் பார்த்து மனப் பாடம் பண்ணணும். முதல்ல குரு, கையா லேயே தாளம் போட சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம்தான் கட்டையில வாசிக்கச் சொல்லிக்கொடுப்பாங்க. அதுக்குப் பேரு கட்டைப்பாடம். அதுக்கப்புறம்தான் தவிலையே கையால தொட முடியும். ஆதி தாளத்தில் தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட தாளங்கள் இருக்கு. ரொம்ப சின்சியரா பாடத்தைப் படிக்க ஆரம்பிச்சு, கட்டையில வாசிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்து லேயே, ‘நல்லா வாசிக்கிற...’னு சொல்லி மேளத்தைக் கையில கொடுத்துட்டார், என்னோட குரு’’ - குழந்தைககுரிய குதூகலத் துடன் சொல்கிறார் நிஷாந்தினி.

‘`ஆரம்பத்துல மேளத்தை என்னால தூக்கக்கூட முடியாது. குருதான் தூக்கி மடியில வைப்பாங்க. கொஞ்சம் கொஞ்சமா நானே தூக்கி வைக்க, இறக்கி வைக்க ஆரம்பிச்சேன். விரல்கள் எல்லாம் ரொம்ப வலிக்கும். கையையே தூக்க முடியாத அளவுக்கு ரெண்டு தோள் பட்டையும் பயங்கரமா வலிக் கும். அப்பாவும் அம்மாவும் மாறி மாறி ஒத்தடம் கொடுப்பாங்க. ஆனாலும் வலியைப் பொருட்படுத்தாம தொடர்ந்து வகுப்புக்குப் போனேன். இப்போ என்னால மூணு மணி நேரம்கூட தொடர்ந்து தவில் வாசிக்க முடியும்’’ என்பவர் இப்போது நிகழ்ச்சிகளில் பிஸி.

‘`போன வருஷம் அக்டோபர் மாசம் புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில்ல நவராத்திரி திருவிழாலதான் என் அரங்கேற்றம் நடந்தது. அதுக்கப்புறம் மூணே மாசத்துல நாதஸ்வர, தவில் கலைஞர்களோட சேர்ந்து நிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் நிறைய பேர் வந்து பாராட்டு வாங்க, ஆசீர்வதிப்பாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்ப அறந்தாங்கி, பேராவூரணி, கறம்பக்குடி, புதுக்கோட்டை, ஆலங்குடின்னு சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில் நிகழ்ச்சிகள், கல்யாணம், காது குத்துனு இதுவரைக்கும் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்ல வாசிச்சிருக்கேன். அடுத் தடுத்து நிறைய நிகழ்ச்சிகள் புக் ஆகிட்டு இருக்கு. தவில் இசை இளந்தளிர், இளம் தவில் சக்ரானு சில அமைப்புகள் விருதுகள் கொடுத்து ஊக்கப் படுத்தினாங்க. தவிலைப் பொறுத்தவரை கெண்டம், துருவம், சங்கீரணம்னு ஏகப்பட்ட தாளங்கள் இருக்கு. எள் அளவுதான் நான் கத்துக் கிட்டது, இன்னும் எல்லாத்தையும் தொடர்ந்து கத்துக்கணும்.

கொரோனா லாக்டெளனால முழு நேரமும் தவில் கத்துக்கவும், நிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் வாய்ப்புக் கிடைச்சது. இப்போ ஸ்கூல் திறந்துட்ட தால காலை, மாலை பயிற்சி, விடுமுறை நாள்களில் நிகழ்ச்சினு செய்றேன். தொடர்ந்து நல்லா பயிற்சி எடுத்து அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் ஐயா, மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன் ஐயா போல பெரிய வித்வானா வரணும். அவங்கள மாதிரி நானும் பலருக்கும் தவில் பயிற்சி கொடுக்கணும்” என்கிறார் கண்கள் விரிய.

குடும்பத்தினருடன் நிஷாந்தினி
குடும்பத்தினருடன் நிஷாந்தினி

நிஷாந்தினியின் குரு நாகராஜன், “நிஷாந்தினி என் மச்சான் பொண்ணுதான்னாலும், வகுப்புக்கு வந்துட்டா எந்தச் சலுகையும் இல்லாம அவ்ளோ அர்ப்பணிப்போட கத்துப்பா. பாடத்தை புரிஞ்சு படிச்சதால ரெண்டே மாசத்துல அதுக்கு கை புரண்டிடுச்சு (பழகி விட்டது). அதோட ஆர்வத்துக்கும் வேகத்துக்கும் நிச்சயம் இதில் உயரங்கள் பார்க்கும்’’ என்றார்.

நிஷாந்தினியின் பெற்றோர் நாராயணசாமி, சித்ரா கிருஷ்ணவேணி, ‘`நிஷாந்தினியோட தாத்தா கிருஷ்ணன் நாதஸ்வர வித்வான்னாலும், அவர் பிள்ளைங்க யாருமே இசைக்கருவிகளைக் கையில எடுக்கல. இப்போ நிஷாந்தினி வாசிக்கிறதைப் பார்த்துட்டு சிலர், ‘பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் சரிவருமா...’னு கேட்பாங்க. ஆனா பலர், ‘பொம்பளப் புள்ளை வாசிக்குறதைப் பார்க்க எவ்ளோ கம்பீரமா இருக்கு’னு நெகிழ்ந்து சொல்லுவாங்க. நம்ம சமூகம் மாறிட்டு இருக்குங்கிறது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்’’ என்றனர் நெகிழ்ச்சியுடன்.

‘`என் தம்பிக்கு இப்போ அஞ்சு வயசாகுது. அவனும் இப்போ தவில் கிளாஸுக்கு வர ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரமே ரெண்டு பேரும் சேர்ந்து கச்சேரி பண்ணுவோம்’’

- தன் தம்பியைக் கட்டிக்கொண்டு சொல்கிறார் நிஷாந்தினி.