சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஆயிரம் நிலவோடு அறிமுகமான வானம்பாடி!

எஸ்.பி.பி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.பி.பி

காந்தக் குரல் எஸ்.பி.பி

Soulful Peaceful Beautiful... இதுதான் ‘பாடும் நிலா’ பாலுவின் குரலைக் கேட்டு வளர்ந்த என் போன்றோரின் வாழ்க்கையில் SPB என்ற மூன்றெழுத்தின் அர்த்தம்!

எஸ்.பி.பி ஓர் அதிசயப்பிறவி. கர்னாடக சங்கீதம் கற்காமலே இசையில் சாதனைகள் நிகழ்த்திய, பொறியியல் படித்த இளைஞன். எல்லாமே கேள்வி ஞானம்தான். மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதையும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அவைதான் அவருக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவுக்குப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. எந்தப் பாடகனுக்கும் ஆரம்பத்தில் உச்ச நட்சத்திரங்களுக்குப் பாட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் எஸ்.பி.பி தமிழில் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி அறிமுகமானவர்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

இப்படி மிக இளம்வயதில் மெச்சூர்டான, ‘ஆயிரம் நிலவே வா’ பாடலைப் பாடியவர், ‘Reverse Aging’ என்பார்களே... ஆரம்பத்தில் வயதான பாடகர்களுக்கே உரிய இறுக்கமான குரலிலும், வயதாக வயதாக மலைத் தேனடையைப் பிளந்ததைப்போல எல்லோருக்கு மானதாய் நாலாபுறமும் வடிந்து தேனினும் இனித்தது அவர் காந்தக் குரல்!

எஸ்.பி.பியின் பாடல்களைக் கேட்காமல் தமிழர்கள் யாரும் காதலித்திருப்பார்களா என்று தெரியாது. “ரொமான்டிக் பாடல்களைப் பாடுறதுக்கு எனக்குள்ள தாக்கத்தை உண்டாக்கியது லெஜண்ட் முகமது ரஃபி சார். அவர் பாடல்களை கண்ணை மூடிக்கிட்டுக் கேட்டுப் பாருங்க... அவர் ஏதோ தன் காதலிகிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரியே தோணும். அவரோட பாதிப்புதான் என்கிட்ட இருக்கு. அதனாலகூட ரொமான்டிக் பாடல்களில் என் குரலில் காதல் நிரம்பி வழியலாம்!’’ என்று ரஃபியைச் சிலாகிக்கும் பாலுவும் காதல் திருமணம் செய்தவர்தான்.

சங்கீதத்தோடு இங்கிதமும் தெரிந்தவர் பாலு. எந்த இடத்திலும் அவர் உணர்ச்சிவயப்பட்டுப் பேசி யாரையும் காயப்படுத்தியதே இல்லை. உயிரைக் கொடுத்துப் பாடிய பாடல், படத்திலிருந்து தூக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. இப்போதுபோல அப்போது ரெக்கார்டுகளிலும் இடம்பிடிக்காமல் குப்பைகளுக்குப் போகும் அந்தப் பாடல்களுக்காக அவர் சண்டை போட்டதுமில்லை.

தன்னை நம்பி வந்த பல இளம் இசையமைப்பாளர்களுக்கு உயிரைக் கொடுத்துப் பாடி அவர்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்திருக்கிறார். இவரைப் பிடித்துப்போய் கடைசிவரை இவரைத்தவிர வேறு யாரையும் பாட வைக்காமல் தங்கள் கரியரில் Single singer Wonder-ஆகப் பயன்படுத்தி இசையமைத்தவர்கள் பலர். அதேபோல ஏ.ஆர். ரஹ்மானுக்கும் வேறுவிதமான அனுபவம் நடந்திருக்கிறது.

“ ‘ரோஜா’ படத்தின்போது சாமியார் மடத்திலுள்ள என் பஞ்சதன் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அப்போ அவ்ளோ வசதியெல்லாம் இருக்காது. பாடகர்கள் பாடும் அந்தக் கண்ணாடி அறைக்குள் எஸ்.பி.பி சாரால் வசதியாக நின்றுகூட பாட முடியாது. அவ்வளவு சின்னதாய் இருக்கும். ஆனாலும் புன்சிரிப்போடு மூன்று நாள்கள் வந்து பொறுமையாகப் பாடிக் கொடுத்துட்டுப் போனார்!” என்கிறார் ரஹ்மான்.

‘சங்கராபரணம்’ படத்துக்காக முதல் தேசிய விருதை வாங்கிவிட்டு, ‘எனக்குக் கர்னாடக சங்கீதம் தெரியாது’ என்று பாலு சொன்னபோது கர்னாடக சங்கீத மேதைகளே ஆடிப்போனார்கள். அதேபோல இராண்டாவது தேசிய விருதினை ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்காக வாங்கியபோது, ‘எனக்கு இந்தி தெரியாது’ என்றபோது, ‘கியா..!’ என ஷாக் ஆனது பாலிவுட்.

சாரீரம் சரீரம் எல்லாமே இசையால் நிரம்பியவர் எஸ்.பி.பி. ஒரேநாளில் அசுரத்தனமாக 19 பாடல்களைப் பாடி கம்போஸ் செய்ததெல்லாம் இன்றளவும் யாரும் மிஞ்ச முடியாத ரெக்கார்டு. அதேபோல ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறி பல படங்களுக்கு இசையமைத்ததும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்குக் குரல் கொடுத்திருப்பதும் ஆல்டைம் ரெக்கார்டுதான்!

ஐஸ்க்ரீமில் செர்ரி போல நடிப்புத் திறமை என்பது அவர் நமக்குக் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ். மிக நல்ல நடிகர்!

“ஒரு பாடகன் என்பவன் கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். நான் பள்ளி நாள்களிலேயே மேடை நடிகன்தான். இயல்பாக நடிப்பேன். அதனால் நடிப்பது சிரமமாக இல்லை. ஆனால், நல்ல அப்பா, நல்ல அண்ணன், நல்ல டாக்டர் என ஒரே மாதிரி ரோல்கள் செய்வது பிடிக்கல. தெலுங்கில் தணிகல பரணியின் இயக்கத்தில் ‘மிதுனம்’ படத்துல கிடைச்சது மாதிரியான சவாலான கேரக்டர்களை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!” என்று தன் நடிப்பார்வத்தையும் 74 வயதில் வெளிக்காட்டியவர் பாலு!

எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். எவ்வளவு உயரங்கள் போனாலும் சிகரங்கள் தொட்டாலும் அவர் எல்லோரிடத்திலும் அன்பாகவே இருக்கிறார். எளிதில் அணுகும் மனிதராக இருக்கிறார்.

“நான் உங்களை ரொம்ப நேரம் காக்க வெச்சிட்டேனோ... ஐ ஆம் ரியலி ரியலி ஸாரி..!”-கைகளைக் கூப்பியபடி தன்னைச் சந்திக்க வந்த நிருபனின் கைகளைப் பற்றி, “என்ன சாப்பிடுறீங்க?” என்று வாஞ்சையோடு கேட்கும்போதே அவன் வானத்தில் மிதந்து கொண்டிருப்பான். பேட்டியில் போகிற போக்கில் பிடித்த ஐஸ்க்ரீம் ‘கஸாட்டா’ பற்றி சப்புக்கொட்டியபடி பேசுவார். குரல் உடைந்து இனி பாடவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்ததையும், மீண்டு வந்ததைப் பற்றியும் கண்ணீரோடு நிருபனிடம் பகிர்ந்துகொள்வார், ஒரு பாசக்கார பெரியப்பாவைப் போல!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர் யாரையும் திட்ட மாட்டார். “ஏன் திட்டணும்... முடிந்த அளவு பாசிட்டிவிட்டியை விதைப்போமே?” என்பார்.

தான் பிஸியாக கமல்-ரஜினி என உச்ச நட்சத்திரங்களுக்குப் பாடிக்கொண்டிருந்தபோதுகூட, சக பாடகரான மனோவை வளர்த்துவிட மெனக்கெட்டார். “பாலுண்ணா எப்பவும் மத்தவங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர். நான் பாடுன பாட்டுல பாதி அவர் சிபாரிசு செஞ்சதுதான். ரஜினிக்கு ‘எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா’ அப்படிப் பாடினதுதான். யாருக்கு அப்படி ஒரு மனசு வரும்!” என்று மனோவே நெகிழ்ந்து சொல்கிறார்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

கொடுத்ததை அப்படியே பாடுபவர் அல்ல பாலு. சின்னச் சின்ன விளையாட்டுகள் மூலம் பாடலை செழுமைப்படுத்தும் ரசாயன வித்தைகள் தெரிந்தவர். அவர் தாண்டிவந்தது தலைமுறைக் கலைஞர்களை மட்டுமல்ல, பல தலைமுறை ரசனைகளையும்தான். எல்லா தலைமுறை ரசனைக்கும் ஈடுகொடுத்து மயக்கியது எஸ்.பி.பியின் குரல்.

எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான், அனிருத், கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று காலங்கள் கடந்து பயணிக்கும் பாடலின் குரல் பாலுவுடையது. காலங்களைக் கடந்த அந்த குரல் இன்னும் பல காலங்களைக் கடந்தும் ஒலிக்கும்; நிலைக்கும்; நிறைக்கும்; இசைக்கும்!