Published:Updated:

“அநீதியை எதிர்க்க தமிழகம் தயங்கலாமா?”

டி.எம்.கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
டி.எம்.கிருஷ்ணா

‘`உங்களது இந்த நிலைப்பாட்டினால், நீங்கள் பிறந்த சாதியில் நிறைய எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்குமே...?’’

சாதிக்கு அப்பாற்பட்டது சங்கீதம் என்று தனிமனித இயக்கமாகத் தொடர்ந்து செயல்படுபவர் டி.எம்.கிருஷ்ணா. ஆல்காட் குப்பத்தில் இசைக்கச்சேரி, கர்னாடக சங்கீத சபாக்களில் கானாப் பாடல் என்று பல மாற்றங்களை நடத்திக் காட்டியவர், சமீபத்தில் ‘குடியுரிமைத் திருத்தச் சட்ட’த்துக்கு எதிரான போராட்டக்களத்துக்கும் வந்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`உங்களைப் போன்ற வி.ஐ.பி-கள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடு கிறபோது, எதிர் வினை களைச் சந்திக்க வேண்டி யிருக்குமே...?’’

‘`போனவருடம்கூட டெல்லியில் எனது கச்சேரி நடை பெறவிடாமல், வலது சாரிகள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலே எதிர்ப்புகளையெல்லாம் மீறி, அரசு சார்ந்த இசை விழாவில் என்னைப் பாடச் செய்தார். எதிர்வினைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக, ஜனநாயக நாட்டில் உரிமைகளைக் காப்பாற்ற நாம் குரல் கொடுக்காவிட்டால், வேறு எதைக் காப்பாற்றிவிடப்போகிறோம்?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் கூறியிருக்கும் அறிவுரையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“உறுதியாக எதிர்க்கும் சில பேரைத் தவிர்த்து, நமது நாட்டிலுள்ள கலைஞர்கள், குறிப்பாக சிந்தனையாளர்கள் எல்லோருமே சுயநலமாகத்தான் யோசிக்கிறார்கள். ராஜா, ஜமீன்தார், அரசியல்வாதி, ஐ.ஏ.எஸ் அதிகாரி என அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து நமக்குப் பயன் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இங்கே எல்லோருக்குமே இருக்கிறது. இந்த நிலப்பிரபுத்துவ மனநிலை இருப்பதால்தான், ஒரு தவற்றைக் கண்டித்துப் பேசுகிற துணிச்சல் என்பது இங்கே ரொம்பவும் குறைச்சலாகி விட்டது.

“அநீதியை எதிர்க்க தமிழகம் தயங்கலாமா?”
“அநீதியை எதிர்க்க தமிழகம் தயங்கலாமா?”

சுய மரியாதையை இந்தத் தேசத்துக்கே கற்றுக்கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிடச் சிந்தனை, சுயமரியாதை, சமத்துவம் என்பவை வெறுமனே சித்தாந்தம் மட்டு மல்ல... அரசியல் கட்ட மைப்பிலேயே இதன்மூலம் எப்படி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு.

ஆனால், அப்படிப்பட்ட தமிழ்நாட்டில்தான் இன்றைக்குத் துணிச்சலுடன் குரல் கொடுப்பதற்கே தயங்குகிறோம் அல்லது வளவளா கொழகொழா என்று எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், நாம் எந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டோம் என்பதை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.’’

‘`சமுதாய ரீதியிலான இந்த முற்போக்குச் சிந்தனைகள் எப்போது, எங்கே, எப்படி உங்களுக்கு அறிமுகமாயின?’’

‘`ஆரம்பத்தில் இப்படியான சிந்தனைகள் எதுவும் எனக்குக் கிடையாது. 15 வருடங்களுக்கு முன்பு ‘சங்கீதம் என்றால் என்ன, அது ஏற்படுத்தும் உணர்வு என்ன’ என்பது மாதிரியான சங்கீத ஆராய்ச்சியாகத்தான் ஆரம்பித்தேன். ஆனால், அதன் தொடர்ச்சியாக ‘நான் யாருக்காக இந்த சங்கீதத்தைப் பாடுகிறேன், யாரெல்லாம் ரசித்துக் கேட்கிறார்கள் - யாரெல்லாம் கேட்கவில்லை’ என்ற சமுதாய - அரசியல் கேள்விகள் எழ எழ, அது சமுதாய ஆராய்ச்சியாகவும் விரிவடைந்துவிட்டது. மக்களை அவர்களது மொழியிலேயே தொடர்பு கொண்டுதான் நமது கருத்துகளையும் கொண்டுசேர்க்க முடியும். அதுதான் சமத்துவத்தை நோக்கிய பயணமாகவும் இருக்கமுடியும்!’’

‘`சாதிகளற்ற சமத்துவத்தை நோக்கிய முற்போக்காளர்களின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“முற்போக்காளர்கள் தாங்கள் சார்ந்த அரசியலைப் பற்றிப் பேசுகிறபோது, மக்களின் கலை, பண்பாடு, நம்பிக்கை, பக்தியைப் பற்றியும் சேர்த்துப் பேசுவதில்லை. பகுத்தறிவுச் சிந்தனை வேறு; இந்தப் பண்பாடுகள் வேறு என்பது மாதிரியாகத் தனித்தனியே நாம் பிரித்து வைத்திருக்கிறோம். இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர், இந்த இடைவெளியில் புகுந்து கொள்கிறார்கள்.

டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

உதாரணத்துக்குக் கர்னாடக சங்கீதத்தையே எடுத்துக் கொள்வோம்... ‘இது பிராமின் இசை’ என்பதாகத்தானே நடைமுறை இருக்கிறது. ‘இது உன் இசை அல்ல; எங்கள் இசை’ என்று நாம் திருப்பி வாங்கியிருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால்தானே அதிலுள்ள தவறுகளைத் திருத்தி, மக்கள் எல்லோரும் கொண்டாடுகிற மாதிரியான ஜனநாயகத் தன்மையைக் கொண்டுவந்திருக்க முடியும்!’’

‘`டி.எம்.கிருஷ்ணா, தன் சொந்த வாழ்க்கையில், சாதி மறுப்புக் கொள்கைகளை எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கிறார்?’’

‘` ‘நான் சாதியை மறுக்கிறேன்’ என என்றைக்கு நான் சொல்லிக்கொள்கிறேனோ... அதுவே எனது சாதிய மேலாதிக்கத்தை வெளிப்படுத்து வதாகத்தான் நினைக்கிறேன். என் வாழ்க்கையில், நட்பு வட்டாரத்தில் வெவ்வேறு சாதியினரும் இருக்கிறார்கள். அவர்களோடு என்னுடைய தொடர்பு எந்த அளவில் இருக்கிறது என்பதும் எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இதைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை!’’

‘`பேருந்துகளில் ‘கானா’ பாடுகிற டி.எம்.கிருஷ்ணா, அந்த மக்களின் குடிசைகள் அகற்றப்படும்போது அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லையே?’’

‘`இந்தக் கேள்வி நியாயமானதுதான். இந்த சந்தேகம் அவர்களுக்கிருப்பதைத் தவறு என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில், சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நான் மேல்தட்டிலிருந்து வந்தவன். அதனால் என்மேல் அவர்களுக்கு ஒருவித சந்தேகப் பார்வை படிந்திருப்பது நியாயம்தானே!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன வேலை செய்கிறோம், அவர்களோடு எந்த அளவு உண்மையாக இருக்கிறோம் என்பது மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டு, எனக்குள் இருக்கிற அழுக்குகளை எல்லாம் கழுவி ஒரு மனிதனாக முன்னேறிக்கொண்டே இருக்கிறேன்.

எனக்கும் தெரியாமலேயே சுய சாதி சார்ந்த சிந்தனைகள் சில சமயங்களில் வெளிப்பட்டுவிடுகிறது. எனவே, ‘சாதிய உணர்வு மேலெழுந்துவிடக்கூடாது’ என்பதில் இன்னும் கூடுதல் கவனத்தோடும் சுய நினைவோடும் இருந்துகொண்டிருக்கிறேன். மற்றபடி இந்தக் கேள்விக்கு என்னால் இந்த அளவில் மட்டும்தான் பதில் சொல்ல முடியும். இதற்குமேல் விளக்குவது எனக்கு சரியாகப்படவில்லை!’’

‘`உங்களது இந்த நிலைப்பாட்டினால், நீங்கள் பிறந்த சாதியில் நிறைய எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்குமே...?’’

“நான் ‘ஆன்டி பிராமினாக’ இருக்கிறேன் என்று நிறைய பேர் சொல்லிவருகிறார்கள். இதுதொடர்பாகக் குடும்பம், நட்பு வட்டம் என்று பல தளத்திலிருந்து அழுத்தங்களும் வருகின்றனதான். அதேசமயம் எனக்கிருக்கிற சலுகைகள் வசதிவாய்ப்புகளுக்கு மத்தியில் இதையெல்லாம் நான் பெரிய விஷயமாக எடுத்துச் சொல்வதே தவறு. எந்தவித உரிமையும் இல்லாமல் சமூகத்தின் அடித்தட்டில் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களோடு ஒப்பிட்டால், எனது இந்த நிலைப்பாடெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல.’’