“பொம்பிளைதானே, அதான் ஜெயிச்சிட்டேம்பாங்க, தோத்துட்டா, பொம்பிளையாச்சே, எப்படி ஜெயிக்க முடியும்பாங்க”

டி.ஆர்.மகாலிங்கத்தின் வாரிசு ஷாலினி
பிரபல புல்லாங்குழல் கலைஞர் டி.ஆர். மகாலிங்கம். கர்னாடக இசைத்துறையில் 'மாலி' என்ற பெயரில் அறியப்பட்டவர். இவரின் அக்கா பேத்தியான ஷாலினி மோகன், வளர்ந்துவரும் பேஸ் கிடார் கலைஞர். தாத்தாவின் பெயரைப் பேச வந்திருக்கிற ஷாலினிக்கு பாடகி, கொன்னக்கோல் கலைஞர் என வேறு முகங்களும் உண்டு.
சமீபத்தில் நடந்த ‘பொன்னியின் செல்வன் 2’ ஆடியோ லான்ச்சில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மேடையைப் பகிர்ந்த படி, பேஸ் கிடார் வாசித்தவர், திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
அதென்ன பேஸ் கிடார்?
``மணிரத்னம் இயக்கத்துல ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல ‘தில் சே’ ஹிந்தி படத்துல வரும் ‘தில் சே' பாட்டுல ஆரம்பத்துல ஒலிக்கிற முதல் இன்ஸ்ட்ருமென்ட்டே பேஸ் கிடார்தான். திரை இசையில பேஸ் கிடாரோட பங்கு தவிர்க்க முடியாதது. மெலடியோ, அதிர வைக்கிற தாள இசையோ... எதுகூடவும் இசைந்து ஆளை உருக்கும். அதுதான் பேஸ் கிடாரோட ஸ்பெஷல். பேஸ் கிடார் இல்லாம எந்த இசையமைப்பும் முழுமையடைற தில்லைன்னே சொல்லலாம். இளையராஜா லேருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வரைக்கும் பலரும் பேஸ் கிடாரோட மகிமை புரிஞ்சவங்கன்றதை அவங்களோட மியூசிக்கை ரசிக்கும்போது புரியும்...’’ பேஸ் கிடார் குறித்த அறிமுகம் சொல்லி அழகுத் தமிழில் பேசுகிறார் ஷாலினி.
``மாலி தாத்தாவைத் (டி.ஆர்.மகாலிங்கத்தை அப்படித்தான் குறிப்பிடுகிறார்) தவிர எங்கக் குடும்பத்துல யாரும் இசைத்துறையில இருந்த தில்லை. எனக்கு 5 வயசிருக்கும்போதே மாலி தாத்தா இறந்துட்டாரு. அப்பல்லாம் அவரை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. தாத்தாவை பத்தின தகவல்கள் எனக்கு என் குடும்பத்தார் மூலமா அவ்வளவா சொல்லப்படலை. ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னாடிதான் அவரை பத்தி தெரிய வந்தது. நானா விக்கிபீடியாவுல தாத்தா சம்பந்தப்பட்ட தகவல்களைத் தேடித் தெரிஞ்சுகிட்டேன். எந்தப் பின்னணியும் இல்லாத எனக் குள்ள எப்படி இசை வந் திருக்கும்ங்கிற கேள்விக்கு அப்புறம்தான் விடை தெரிஞ்சது. நான் முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கலை. ஆனா என்னுடைய வெஸ்டர்ன் மியூசிக் ஷோஸ்ல என்னால கர்னாடக சங்கீத ராகங்களை யூஸ் பண்ண முடியும். தாத்தாவுக்கு தேங்க்ஸ்...’’ பாசம் பகிரும் பேத்தி, டெலி கம்யூனிகேஷனில் இன்ஜினீயரிங் முடித்தவர்.

``கிறிஸ்டியன் ஸ்கூல்ல படிச்சதால, சின்ன வயசுலயே மியூசிக் எனக்கு அறிமுகமாயிடுச்சு. சர்ச்ல பாடுவேன், பியானோ வாசிப்பேன். கீபோர்டு வாசிக்கிறதும், பாடறதுமாதான் இசையில என் கரியர் ஆரம்பமானது. இன்ஜினீயரிங் முடிச்சிட்டு விப்ரோ கம்பெனி யில வேலை பார்த்திட்டிருந்தேன். அங்கே ஒரு மியூசிக் பேண்ட் இருந்தது. அங்கேதான் பேஸ் கிடார் அறிமுகமாகி, அது பிடிச்சுப் போய் வாசிக்க ஆரம்பிச்சேன். அதுவரை என்னுடைய இசையில எனக்குத் தெரியா மலேயே பேஸ் கிடாருக்கான நோட்ஸை நான் முணுமுணுத்திருக்கேன்னு புரிஞ்சபோது, பேஸ் கிடார்தான் எனக்கான அடையாளம்னு முடிவு பண்ணினேன்.
என்னுடைய மியூசிக் வீடியோஸை சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டே இருப்பேன். அப்படி நான் ஷேர் பண்ணியிருந்த ஒரு வீடியோவை ரஹ்மான் சார் ஷேர் பண்ணியிருந்தார். அவ்வளவுதான்... சந்தோ ஷத்துக்குக் கேட்கணுமா... அதுக்கு நன்றி சொல்லி ரஹ்மான் சாருக்கு மெயில் அனுப்பி னேன். அப்புறம் அவர்கூட அடிக்கடி மெயில் வழியா பேசிட்டிருந்தேன். எவ்வளவு பிசியா இருந்தாலும் பதில் போடுவார். அந்த நட்பு மூலமா தான் ‘பொன்னியின் செல்வன் -2’ ஆடியோ லான்ச்சுல வாசிக்கிற வாய்ப்பு வந்தது. முதல்ல அவருக்கு நான் டி.ஆர். மகாலிங்கத்தோட பேத்தின்னு தெரியாது. ரெஸ்யூம் அனுப்பும்போது அதுல நான் தாத்தா பத்தி குறிப்பிட்டிருந்ததைப் பார்த்துட்டுதான் விசாரிச்சார். எந்த இடத்துலயும் நான் இன்னாரோட பேத்தினு சொல்லி விளம்பரம் தேடிக்கிறதை விரும்ப மாட்டேன். நான் என் திறமையால அடையாளப்படுத்தப்படணும், அதுதான் என் தாத்தாவுக்கு நான் கொடுக்கிற மரியாதையாவும் இருக்கும்...’’ அநியாய அடக்கத்துடன் சொல்பவர், பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் நிறைய படங்களுக்கு பேஸ் கிடார் வாசித்திருக்கிறார். தனது ‘கின்னி அண்டு தி பாட்டில்’ என்கிற பேண்டுடன் இணைந்து தமிழ்ப் படங்களில் பாடுகிறார். கிரிதர் உடுப்பாவிடம் கொன்னகோல் பயின்று வருகிறார். வசுந்தரா தாஸுடன் இணைந்து ‘ஷா ஹுசைன்’ புராஜெக்ட்டில் இவர் பேஸ் கிடார் வாசித்தது பிரபலமாகப் பேசப்பட்டது.

``கன்னட இண்டஸ்ட்ரியில அர்ஜுன் ஜன்யா மாதிரியான பெரிய மியூசிக் டைரக் டர்ஸ்கூட வொர்க் பண்ணிட்டிருக்கேன். தவிர என்னுடைய சொந்த புராஜெக்ட்ஸ்ல நானே பாடி, பெர்ஃபார்ம் பண்றேன். ரஹ்மான் சார்கூட ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்ண சிலிர்ப்பு இன்னும் அடங்கலை. அவருடைய அடுத்தடுத்த புராஜெக்ட்டுல எனக்கு வாய்ப்பு கொடுப்பார்ங்கிற நம்பிக்கை யோட காத்திட்டிருக்கேன். பிரபலமானவங் களோட பிள்ளைகளா, பேரப்பிள்ளைகளா இருக்கிறதால வாய்ப்பு வேணா கிடைக்கலாம். ஆனா, அந்த வாய்ப்பைத் தக்கவெச்சுக்கிறது நம்ம திறமையால மட்டும்தான் முடியும்ங் கிறதும் எனக்குத் தெரியும்’’ - தாத்தாவின் பெயரை விசிட்டிங் கார்டாக பயன்படுத்தக் கூடாதென்ற தெளிவோடு இருப்பவர், இசைக் கருவிகள் வாசிக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களையும் வெளிப்படையாக முன் வைக்கிறார்.
``பொதுவாவே இசைக்கருவிகள் வாசிக்கிறதுல பெண்களோட எண்ணிக்கை குறைவுதான். டிரெடிஷனல் மியூசிக் தாண்டி ஆர்வம்காட்டற பெண்களுக்கு இங்கே வரவேற்பும் கொடுக்கப்படறதில்லை. எல்லாத் தையும் தாண்டி, இதுல திறமையை நிரூபிக் கிறது அவ்வளவு ஈஸியான விஷயமில்லை. ஒரு பெண்ணா ஜெயிச்சிட்டோம்னா, ‘நீ பொம்பிளைதானே... அதான் ஜெயிச் சிட்டே’ன்னு பேசுவாங்க. அதுவே ஜெயிக்க முடியலைனா, ‘பொம் பிளையாச்சே... எப்படி ஜெயிக்க முடியும்’னு கேட்பாங்க. பெண்கள் ஒருமுறை இல்லை, ஒவ்வொரு முறையும் திறமையை நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும். வேற வழியில்லை...’’ இசையே உயிராக, உலகமாக வாழ்ந்து கொண்டிருப்பவரை, இக்கட்டான தருணத்திலிருந்து மீட்டதும் இசைதான்.
‘`நான், அம்மா, அப்பா மூணு பேரும் பெங்களூருல இருக்கோம். அப்பா கவுதமன் மோகன், பிசினஸ்மேன். நான் பண்ற பல விஷயங்கள் அப்பாவுக்குப் புரியாது. ஆனாலும் அவர் ஒருநாளும் என்னை கேள்வி கேட்டதோ, தடுத்ததோ இல்லை... அவர்தான் எனக்கு பெரிய சப்போர்ட். ஒரே தம்பி கனடாவுல இருக்கான். சின்ன வயசுல நிறைய பாடிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல லைஃப்ல நிறைய பிரச்னைகள்... ஆங்ஸைட்டி அதிகமாயிடுச்சு. கூட்டத்தைப் பார்த்தாலே மயக்கம் வந்து, பாடாம இருந்த நாள்கள் பல. ஆனா, என்னுடைய இசைதான் அந்த ஆங்ஸைட்டிலேருந்தும் மீட்டெடுத்தது. என் வாழ்க்கையில எனக்கு எல்லாமாகவும் இருந்து அழகாக்குறதும் அந்த மியூசிக்தான்...’’ அனிச்சையாக கிடாரை வருடுகின்றன ஷாலினியின் விரல்கள்..!