சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ஒப்பாரியே என்னை உயர்த்தியது!”

வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரமணி

தாலாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி, கானா போன்ற மண்ணின் இசைதான் இப்போது மக்கள் ரசிக்கும் இசையும்.

ப்பாரிப் பாடல்களைப் பாடியே புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார், வேலூர் மாவட்டம், லத்தேரியைச் சேர்ந்த கிராமியப் பாடகர் வீரமணி.

மென்மையான குரல், கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சோகமான ஒப்பாரிப் பாடல்கள் என... கேட்கிற அனைவரையும் கண் கலங்கச் செய்கிறார் வீரமணி. நடமாடும் நகைக்கடையைப்போல் கழுத்தில் தங்கச் சங்கிலிகளை அணிந்திருக்கிறார்.

“வறுமையிலேயே பிறந்து வளர்ந்த என்னை உயர்த்தியது ஒப்பாரி இசைதான். ‘செய்யும் தொழிலே தெய்வம்; உண்மையாக உழைத்தால் உயரலாம்’ என்பதை மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டவே இந்த ஜொலிஜொலிக்கும் நகைகள்” என்கிறார் வீரமணி.

‘‘என் குடும்பம் பெருசு. சாப்பாட்டுக்குக்கூட வழியில்லை. தாத்தாவும் அப்பாவும் சாவுக்கு ஒப்பாரி பாடும் வேலையத்தான் செஞ்சாங்க. பரம்பரைத் தொழில்னு எல்லாம் இல்ல. நான் அவர்களிடமிருந்து மாறுபட்டு, புதுசா பண்ணனும்னு முடிவு பண்ணினேன். ‘பொணத்துக்கு முன்னாடி ஆடுறதும் பாடுறதும் ஒரு பொழப்பா; இதிலென்ன கௌரவம்’னு சொன்னவங்களும் இருக்காங்க. என் வளர்ச்சியப் பார்த்து, அவங்க எல்லாம் இப்ப வாயடைச்சுப் போயிருக்காங்க. பறை மேளம் அடிப்பதும் ஒப்பாரி பாடுவதும் தமிழர்களின் பாரம்பர்யம்.

வீரமணி
வீரமணி

எட்டு வயசில் ஒப்பாரி ராகம் கத்துக்கிட்டேன். பத்து வயசிலிருந்து சொந்தமா பாடல் எழுதிப் பாடவும் ஆரம்பிச்சேன். சாவு வீட்ல நான் பாடுறதைக் கேட்டு உணர்ச்சி பொங்க பலர் தேம்பித் தேம்பி அழுறாங்க. சின்னஞ்சிறு குழந்தை, திருமணமானவர், திருமணம் ஆகாதவர், இளம்பெண், வயதானவர், தாய் தந்தையர், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாங்கல்யத்தைப் பறிகொடுத்தவர் என அவரவர் உறவு முறைகளுக்கு ஏற்ப 300-க்கும் அதிகமான ஒப்பாரிப் பாடல்களை எழுதி வச்சிருக்கேன்.

என் பெயரில், நண்பர்கள் சிலர் யூடியூப் சேனல் தொடங்கி ஒப்பாரிப் பாடல்களைப் பதிவு செஞ்சாங்க. நான் ஃபேமஸ் ஆயிட்டேன். பல லட்சம் பார்வையாளர்கள். லைக்ஸ் குவியுது. அதன்மூலம், வெள்ளித்திரையில் இருக்கிற நிறைய கலைஞர்களும் அறிமுகமாகியிருக்கி றார்கள். இயக்குநர் பா.இரஞ்சித் அண்ணாதான் என்னைத் தட்டிக்கொடுத்து, பலரிடம் அறிமுகப்படுத்தினார்.

கேரளா உட்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் போய் ஒப்பாரி பாடியிருக்கிறேன். அந்தமான், சவுதி, சிங்கப்பூர், இலங்கையிலிருந்தும் அழைப்பு வருது. கானாப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன். புரட்சியாளர்கள் அம்பேத்கர், சேகுவேராவைப் பற்றியும் பாடல் எழுதியுள்ளேன். ஏழ்மை நிலை மாறி இப்போ புல்லட், கார் வாங்கி வசதியாக இருக்கிறேன்.

சில சினிமா வாய்ப்புகளும் வந்திருக்கிறது. சிலர் கதை சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப ஒப்பாரியையும் கானாப் பாடல்களையும் எழுதிட்டிருக்கிறேன். என்னிடம் 60 பேர் வேலைசெய்கிறார்கள். குடிப்பழக்கம் இருக்கக் கூடாது. பீடி பிடிக்கக் கூடாதுன்னு கட்டளை போட்டிருக்கிறேன்.

எங்களை மாதிரியான கலைஞர்களை இழிவாப் பார்க்கிற பார்வையை மாத்தத்தான் என்கிட்ட வேலை செய்யுற பசங்களுக்கு யூனிஃபார்ம், கூலிங் கிளாஸ் கொடுத்து டீமை மாடர்னா மாத்தி வச்சிருக்கிறேன்” என்கிறார் வீரமணி.