சிலருக்கு இசை என்பது பேச்சு; இவருக்கு மூச்சே இசைதான். தன் ஒவ்வொரு சுவாசத்தையும் இசையாய் நமக்குத் தரும் நாம் வாழும் காலத்தின் இசை மேதை ஏ.கே.சி.நடராஜன்.
இந்த 'கிளாரினெட் எவரஸ்ட்' என்னும் புகழ் மாலையை ஏ.கே.சி-க்குச் சூட்டியது யார் தெரியுமா, நம்நாடு விடுதலை பெற்று முதல் முறையாக தேசியக்கொடியை பிரதமர் நேரு டெல்லியில் ஏற்றியபோது நம் தென்னிந்திய இசையை இசைக்க அழைக்கப்பட்ட, நாதஸ்வர உலகின் சக்கரவர்த்தியாய்க் கொண்டாடப்பட்ட திருவாடுதுறை T.N.ராஜரத்தினம்பிள்ளை. நாகப்பட்டினத்தில் ஏ.கே.சி-யின் வாசிப்பில் மயங்கிய TNR, 1952-ல் அவரை 'கிளாரினெட் எவரஸ்ட்' என்றார். இப்போது ஏ.கே.சி மேடை ஏறும்போது சின்னதாக துணை தேவைப்படுகிறது. ஆனால், ஏறி உட்கார்ந்து, கிளாரினெட் கைக்கு வந்து சீவாளி உதட்டில் அமர்ந்த பிறகு அலை அலையாய்ப் புறப்படும் 'சுத்த சங்கீதத்திற்கு' ஏ.கே.சி-யே துணை.

மிருதங்கக் கலைஞர் பத்ம விபூஷண் உமையாள்புரம் சிவராமன், “கிளாரினெட் என்னும் மேலைநாட்டு இசைக்கருவியில் உள்ள KEY களை மாற்றியமைத்து கர்னாடக இசைக்கு ஏற்ப வடிவமைத்த பெருமை ஏ.கே.சி-யையே சேரும்” என்கிறார். சங்கீத மொழியில் அவர் சொல்கிறார், “குழைவான நாதம், ஸ்ருதி சுத்தம், லய சுத்தம், சாகித்திய சுத்தம், கமகங்கள், ஜாருக்கள்” அத்தனையையும் கிளாரினெட்டில் கொண்டுவந்தவராக ஏ.கே.சி-யைத் தட்டிப்பார்க்கிறார் உமையாள்புரம் சிவராமன்.
திருச்சி, பெரிய கடை வீதி, சுண்ணாம்புக்காரத் தெருவில் 1931-ம் ஆண்டு, மே 30-ம் நாள் கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சின்னிகிருஷ்ண நாயுடுவுக்கும் ருக்மணி அம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் நடராஜன். தன் பத்தாம் வயதிலேயே ஆலந்தூர் வெங்கடேச ஐயரிடமிருந்து கர்னாடக இசையை (வாய்ப்பாட்டு) பயின்றார். அதன் பிறகு இலுப்பூர் நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். நிறைய வித்வான்கள் இருந்த காலமது. எனவே தனித்துவமான அடையாளத்திற்காக மேற்கத்திய இசைக்கருவியான கிளாரினெட்டைத் தேர்வு செய்தார். கிளாரினெட் கலைஞரான அவரின் தந்தையே அவரை வழிநடத்தினார். நாதஸ்வரம் கற்க தீவிர சாதகம் செய்வதிலேயே நேரம் போனதால் மூன்றாவது பாரத்தோடு பள்ளிப் படிப்பு முடிந்துபோனது. 18-வது வயதிலேயே டெல்லி அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞரானார். அவரின் அக்கா மரணமடைந்த செய்தி வந்த நிலையிலும் நிலையத்தார் அவருக்கு விடுப்பு மறுத்தனர். கோபப்பட்ட ஏ.கே.சி வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்.

கேட்க கேட்கவே இசையில் தோய முடியும். அதுவே பிறகு இசை அறிவாகப் பரிணமிக்கும் என்பார்கள். ஏ.கே.சி-க்கு சிறு வயதிலேயே அந்த வாய்ப்பு நிறைய கிடைத்தது. “திருமிழிசை சகோதரர்கள், செம்பனார்கோயில் சகோதரர்கள், திருவிடைமருதூர் வீருசாமிபிள்ளை குளிக்கரை பிச்சையப்பா மற்றும் தவில் மேதையான மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றவர்களின் நாதஸ்வர கச்சேரிகள் நிறைய கேட்டேன். அதைப்போலவே வாய்ப்பாட்டில் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலச்சுமி, டி.கே.பட்டம்மாள் என்று அந்தப் பட்டியல் ரொம்ப நீளமானது தம்பி” என்று சொல்லும்போதே அந்தக் கச்சேரிகளில் அவர் மூழ்குவது கண்களில் தெரிகிறது. “அப்போல்லாம் 6 மணி நேரம்கூட கச்சேரி நடக்கும். 15 கி.மீ சைக்கிள் மிதித்து கேட்பதற்காகப் போவோம்” என்றார்.
கர்னாடக இசைக்கு நாதஸ்வரத்தின் பங்களிப்பு குறித்த ஏ.கே.சி பார்வை முக்கியமானது. ஓர் இசைக்கலைஞனின் விரிவான கற்பனைக்கு இடமளிக்கும் 'ராக ஆலாபனையை' கர்னாடக இசைக்குத் தந்து மெருகூட்டியதில் நாதஸ்வரத்துக்கு ஒரு பெரிய பங்குண்டு என்கிறார். ஆனால் அவர் தன் கருவியாக கிளாரினெட்டையே தேர்வுசெய்தார். அது மேற்கின் இசைக்கருவி அல்லவா என்றபோது 'வயலின்' யாருடைய கருவி என சிரித்துக்கொண்டே ஏ.கே.சி கேட்டார். கிளாரினெட்டை அவர் மரபிசைக்குப் பயன்படுத்திய பிறகுதான் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோனும், சீனிவாசனின் மாண்டலினும் நம் மரபிசையில் கோலோச்சின.

புதுமையை நாடிய இளைஞர் ஏ.கே.சி கிளாரினெட்டைத் தேர்வு செய்ய காரணமிருந்தது. திரையிசையில் முக்கியமான இடத்தை அப்போதே கிளாரினெட் வகித்தது. அகில இந்திய வானொலி அதை ஏற்று அங்கீகரித்திருந்தது. பாலசரஸ்வதி, கமலா, வைஜெயந்திமாலா போன்ற பரதக்கலைஞர்கள் தங்கள் நடனத்திற்கான இசையில் அதைப் பயன்படுத்திவந்தனர். ஆனால் ஏ.கே.சி வழக்கமான கிளாரினெட்டை மாற்றி அதை மண்மயப்படுத்தினார். அதனால் இவர் வாசிக்கும்போது மட்டும் அது நாதஸ்வரமும் கிளாரினெட்டும் இணைந்த இசையாய் வழிந்தது.

இதைத் தன் சொந்த அறிவால் தனது இசை நுட்பத்தால் சாதித்துள்ளார். கிளாரினெட்டிலுள்ள பொத்தான்களை (KEY) அகற்றியும் மாற்றியும் அமைத்ததால் மட்டும் அந்த இனிமை வந்துவிடவில்லையாம். மூச்சுக்காற்றையும் கை விரல்களையும் நாவையும் இயக்கும் “தனித்துவ ஆற்றலால்” அந்த இனிமை தனக்கு வசமானதாகச் சொல்கிறார். இதை அவர் “அசுர சாதகம்” என்று சங்கீத வார்த்தைகளால் சொல்லும்போது அந்த வெற்றிலை வாய்ச் சிகப்பு இன்னும் அதிகமாகிறது. பெரும்பகுதியும் PLAIN NOTES இசைக்கவே பயன்பட்ட கிளாரினெட்டை கர்னாடக இசையின் தனித்துவமான கமகங்களை உதிர்த்து இசைத்துக் காட்டியபோது அமெரிக்கர்கள் அதிசயித்துப்போனார்கள். இந்த சாதனை எளிதில் வரவில்லை. ஒவ்வொரு ராகத்தையும் கிளாரினெட்டுக்கு ஏற்றபடி எப்படி அணுகுவது என்பதைக் கண்டடைவதற்குப் பல மணி நேரம் பயிற்சி செய்துள்ளார். எந்தத் தொழிலையும் தேர்வு செய்யலாம். உயிரையும் ஆன்மாவையும் வஞ்சகமில்லாமல் அதில் வைத்தால் எதிலும் வெல்ல முடியும் என்கிறார் இந்த எவரஸ்ட்.
தனது முதல் கச்சேரியை 1946-ல் சென்னை ஜெகநாத பக்த சபாவில் அரியக்குடி, டி.என்.ஆர், பாலக்காடு மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் முன்னிலையில் செய்துள்ளார். ஜாஸ் இசைக்குழு வோடு இணைந்தும் மேடையேறியுள்ள ஏ.கே.சி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியுசிலாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் அழைப்பை ஏற்று நம் இசையின் உயர்வை ரசிக்கவைத்துள்ளார். டிஸ்னி பல்கலைக்கழகத்தின் பேரா.வில்லியம்ஸ் ஏ.கே.சி-யின் சாதனைகளையும் கற்பிக்கும் முறைகளையும் 1994-ல் ஆய்வுசெய்தார்.

பல விருதுகளைக் குவித்துள்ள ஏ.கே.சி, 1958-ல் ஆரிய வைஸ்யா சபா தனக்கு விருதாகத் தந்த 36 பவுன் தங்க கிளாரினெட்டை தேசப் பாதுகாப்பு நிதிக்கு அன்றைய முதல்வர் பக்தவத்சலத்திடம் தந்தார். இவருக்குத் தமிழ் இசைச் சங்கம் இசைப் பேரறிஞர் விருது தந்தது. குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா 'சங்கீத நாடக அகாடமி விருது' தந்தார். மியூசிக் அகாடமி 'சங்கீத கலாநிதி' விருது தந்தது. கிளாரினெட் சாம்ராட், கிளாரினெட் சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளைப் பெற்ற ஏ.கே.சி பல மடங்களுக்கும் கோயில்களுக்கும் ஆஸ்தான வித்வானாக இன்றும் இருந்துவருகிறார்.
இசையின் வரலாற்றில், கர்னாடக இசையும் பலவிதமான தாக்கங்களுக்கு உள்ளானதுதான் உண்மை. சங்கீத மும்மூர்த்திகள் என்று கொண்டாடப்படும் தியாகராஜரும் முத்துசாமி தீட்சிதரும்கூட மேற்கத்திய டியூன்களுக்குப் பாடல் (சாகித்யம்) எழுதியுள்ளனர். முத்துசாமி தீட்சிதரின் தம்பி பாலுசாமி தீட்சிதரும் அவரின் தஞ்சை சீடரான வடிவேலுவும் 'வயலின்' என்ற மேற்கின் இசைக்கருவியைக் கர்னாடக இசையில் கலந்து ஒன்றாக்கினர். இன்று வயலின் இல்லாத கச்சேரி மேடைகளைக் கற்பனை செய்ய முடியுமா.
தஞ்சையை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி, சுவாட்ஸ் பாதிரியாரிடமும் சென்னை புனித ஜார்ஜ் பள்ளியிலும் படித்தார். அப்போது அவரை மேற்கத்திய செவ்வியல் இசை(WESTERN CLASSICAL) கவர்ந்தது. அவர் தன் அரண்மனைக்கு பல மேற்கின் இசைக் கருவிகளைக்கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவை வரவைத்தார். இதில் நான்கு கிளாரினெட்டுகள் இருந்ததாக சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.சீதா கூறுகிறார். அதற்கு ஆதாரமாக சரபோஜி மன்னர் 1802 டிசம்பரில் எழுதிய கடிதத்தைக் காட்டுகிறார். மேலும், மகாதேவ நட்டுவனார்தான் கர்னாடக இசைக்கு முதலில் கிளாரினெட்டைப் பயன்படுத்தியதாகவும் சீதா கூறுகிறார். அப்போது சதிர் (பரதம்) நாட்டியக் குழுக்களில் கிளாரினெட் பயன்படுத்தப்பட்டதாம். பரதநாட்டிய மேதை பாலசரஸ்வதி தனது நடனக்குழுவில் ராதாகிருஷ்ண நாயுடு என்ற கிளாரினெட் கலைஞரைத் தொடர்ந்து பயன்படுத்தியதாக 1940-ல் தனது வானொலி நேர்காணலில் டைகர் வரதாச்சாரி கூறுவது கவனிக்கத்தக்கது.
இப்படி கிளாரினெட் பற்றிய வரலாற்று நினைவுகளோடு ஐயா ஏ.கே.சி.நடராஜனைச் சந்திக்க அவரது திருச்சி தில்லைநகர் வீட்டுக்குப் போனோம். அவரின் மாப்பிள்ளை சந்திரசேகரன் அழைத்துப்போனார். கவிஞர் நவஜீவனும் உடன்வந்தார். ஏ.கே.சி கம்பீரமான மனிதர். பேச்சில் 70 ஆண்டு இசை வரலாற்றை மல்லாரிபோல் இசைக்கிறார். பேச்சில் தளர்ச்சியே இல்லை. அனுபவங்களைச் சொல்லுங்களேன் என்றபோது, "அதுகிடக்கட்டும், முதலில் காபி சாப்பிடுங்க" என்றார். சாதித்த களைப்பா அல்லது வாழ்க்கையில் பார்த்த பல ஆரோகணம் அவரோகணமா புரியவில்லை. அவர் துணைவியார் சத்யா அம்மா சூடான காபி கொடுக்க, சூழல் குளிர்ந்தது. ஏ.கே.சி-யோடு பேசும்போது, “100 வருடங்கள் வாழமுடிந்தால் எந்தப் புத்தகமும் படிக்க வேண்டிய தேவையில்லை, அந்த அனுபவங்களே போதுமானது” என்ற கவிஞர் திருலோகம் வரிகள் உயிர்பெற்றுப் பேசுவதாக மனசுக்குப்பட்டது. அனுபவச் சுரங்கத்திலிருந்து சிலவற்றை ஏ.கே.சி நமக்குப் பந்திவைத்தார்.

“தம்பி, மேடு பள்ளம்தான் வாழ்க்கை. பள்ளத்தில் விழுந்தாலும் மேடேற வேண்டும். என்ன, ஏறும் மேடு விழுந்த பள்ளத்தைவிடச் சிறப்பாக இருந்தால் பிழைத்துக்கொள்வோம்” என்று சொல்லிச் சிரித்தபோது அந்தப் பெரிய உதடுகள் கவனிக்கவைத்தன.
”சங்கர் சிமென்ட் அதிபர் சங்கரலிங்க ஐயர் வீட்டுக் கல்யாணம் கல்லிடைக்குறிச்சியில். 5 நாள் கல்யாணம். எம்.எல்.வி வந்து பாடிய கல்யாணம். 5-ம் நாள் ஊர்வலம். நடந்துபோகும் ஊர்வலத்தை வாசித்துக்கொண்டே அழைத்துப்போவதுதான் எனக்கு ஐயர் தந்த வேலை. கல்லிடைக்குறிச்சியில் ஊர்நடுவே மேடை. மேடையில் சிங்கம்போல் அமர்ந்து டி.என்.ராஜரத்தினம்பிள்ளை வாசிக்கிறார். பத்தாயிரம் பேர் கூடிய கூட்டம் 2 மணி நேரம் ரசிக்கிறது. கச்சேரி முடிந்ததும் ஊர்வலத்தை அழைத்துச்செல்ல நான் ஏந்திரிச்சேன். என்னைப் பார்த்துவிட்ட டி.என்.ஆர் ’டேய், மேலே வா’ என்றார். என் வேலை ஊர்வலம்தான், ஐயர் கோபிப்பார் என்றேன். நான் சொல்றேன் நீ வாசி என்று பத்தாயிரம் பேருக்கு முன்னால் 1.5 மணி நேரம் வாசிக்கவைத்து, வெற்றிலை போட்டுக்கொண்டே ரசித்த அந்த மேதையை நான் மறக்க முடியுமா. (கண் டி.என்.ஆர் படம் இருந்த திசையைப் பார்க்கிறது) என்னையும் என் கிளாரினெட் வாசிப்பையும் உலகத்தை ஏற்கவைத்த பெரியமனசு அவருக்கு.
"கொஞ்சம் காபி சாப்பிடுங்களேன்’’ என்றவரிடம், ’வேணாம்ய்யா, கொஞ்சம் டி.என்.ஆர் பத்திச் சொல்லுங்களேன்’ என்றோம். ”நிறைய சொல்லலாம். நாதஸ்வரம் கோயில்களிலும் திருவிழாக்களிலும் வாசிக்கப்பட்டு வந்தது. கச்சேரிகளும் நடந்தன. பிள்ளைதான் செவ்வியல் இசைக்கு ஏற்ப அதன் வடிவத்தை மாற்றி, ’சுத்தமான மத்திமம்’ பேசும் விதமாக நாதஸ்வரத்தை மாற்றியமைத்தார். அதன் பிறகுதான் நிறைய மேடைக் கச்சேரிகள் நடக்க ஆரம்பித்தன. கலைஞர்களின் சுயமரியாதையையும் அவர்தான் காப்பாற்றினார். ஆனாலும் நான் நாதஸ்வரத்தை என் எதிர்காலமாக ஏற்கவில்லை. காரணம், என்னதான் சிறப்பாக இசைத்தாலும் டி.என்.ஆரின் பிரதியாகவே பார்க்கப்படுவேன். தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காகவே கிளாரினெட்டை எடுத்தேன். அதனால் பல சிக்கல்களையும் சந்தித்தேன்.
கேரளா கோட்டயம் கோயிலில் கச்சேரி செய்ய ராமசாமி ஐயர் ஏ.கே.சி-யை அழைக்கிறார். போனால், பெரிய எதிர்ப்பு. கிளாரினெட் சர்ச்சில் வாசிக்கப்படும் கருவியாதலால் இதைப்போய் நம் கோயிலில் வாசிப்பதா என்ற கோபம் இந்து மக்களுக்கு. மதமாற்றப் பிரச்னை இருந்த நேரமது. வெளிநாட்டு இசைக்கருவியோடு எப்படி கோயிலில் நுழையலாம் என்று மக்கள் ஆத்திரப்பட்டார்கள். ராமசாமி ஐயர் கோயிலுக்கு வெளியே கச்சேரி நடக்கும் கேளுங்கள் என்கிறார். ஏ.கே.சி-யோ நான் மேற்கத்திய இசை வாசிப்பதில்லை, கர்னாடக இசைதான் வாசிப்பேன் கேளுங்கள் என்றுசொல்லி 4.5 மணி நேரம் வாசிக்கிறார். தவற்றை உணர்ந்த மக்கள், அடுத்த ஆண்டு கோயிலில் வாசிக்க அழைக்கிறார்கள். இதைச் சொல்லிவிட்டு ஏ.கே.சி சொன்னார், அதனால்தான் என் கிளாரினெட்டின் வாயை நாதஸ்வர வாயான ’அனசு’ போல மாற்றினேன். கேட்பதற்கு முன்பு பார்த்தாவது புரிந்துகொள்ளட்டும் என்றார். ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னால் ஒரு போராட்டம் இருப்பதை வார்த்தையாக அல்லாமல் வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர் அவர்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் நடந்ததை ஒரு கதைபோல் சொன்னார். வாசிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் கிளாரினெட் வெளிநாட்டு வாத்தியம் எனச் சொல்லி “திருவையாறு உற்சவத்தில்” அவரை வாசிக்க அனுமதிக்கவில்லையாம். பிறகு அதே உற்சவ கமிட்டியின் மூத்த செயலாளராகத் தேர்வாகி, பஞ்சரத்ன நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக ஏ.கே.சி உயர்ந்தார். 2003-ல் அதே புகழ்பெற்ற திருவையாறு தியாகராஜர் உற்சவத்தை ஏ.கே.சி தான் தொடங்கிவைத்தார். அப்போது தியாக பிரம்ம மகோற்சவ சபாவின் செயலாளராக இருந்த மிகப்பெரிய தவில் வித்வானாகிய அரித்துவார மங்கலம் பழநிவேல் சொன்னார், ”எங்களுக்கெல்லாம் வாத்தியத்தால் பெருமை. ஏ.கே.சி யால் அந்த வாத்தியத்துக்குப் பெருமை” என்று. ஒரே மனிதர் ஒரே இடம், ஏனிந்த மாற்றம். இசைபட வாழ்ந்ததால் வந்த மாற்றம்.
கால மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டே பேசுகிறார். என்னதான் மீடியாக்கள் வந்தாலும் நேரடியாக இசையைக் கேட்டு ரசிப்பதன் சுகத்தை இந்தத் தலைமுறை இழந்துவிட்டதோ என்று ஆதங்கப்படுகிறார். தன் ஞாபகத் தந்தியை மீட்டிக்கொண்டே பேசுகிறார். திருச்சி அருணகிரிநாதர் விழாவில் கே.பி.சுந்தராம்பாள் மாலை 6 மணிக்குப் பாட ஆரம்பித்தவர் இரவு 12 மணிக்குத்தான் முடித்தார். என்ன கற்பனை, என்ன குரல் வளம்... மறக்கமுடியுமா. முழு நிகழ்ச்சியையும் வானொலி நேரடியாக ஒலிபரப்பியது. அதுபோலவே காருக்குறிச்சி அருணாசலம் விடியக்காலை 4.30 மணிவரை வாசித்தார். இந்த நிகழ்ச்சி இந்தியா முழுதும் ஒலிபரப்பானது. நான் ரசிகர்களை எப்படி ஈர்ப்பது என்பதைக் கற்றுக்கொண்டதே அண்ணன் காருக்குறிச்சியாரிடம் இருந்துதான்.
அப்போதெல்லாம் நவராத்திரி போன்ற விழாக்களில் எல்லா நாள்களும் கச்சேரி நடக்கும். அரியக்குடி செம்மங்குடி மதுரை மணி போன்ற பெரிய வித்வான்கள் பாடுவார்கள். பரதநாட்டியம், நாதஸ்வரம், மெல்லிசை, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் என்று எல்லாக் கலை விருந்தையும் மக்கள் ரசித்தார்கள். இன்று கோயில்களில் கச்சேரி ரொம்ப குறைஞ்சுபோச்சு. சபாக்கள்தான் காப்பாற்றுகின்றன.
திருவாடுதுறை ஆதீனம் நாதஸ்வரக் கலையை போஷித்தது. நானும் குளிக்கரை பிச்சையப்பாபிள்ளையும் 20 ஆண்டுகள் ஆதீன வித்வான்களாக இருந்தோம். அந்த 20 ஆண்டுகளில் கீர்த்தனை எப்படி வாசிக்கணும், சுரம் எப்படி வாசிப்பது, ராக ஆலாபனை எப்படிச் செய்வது போன்ற விஷயங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் என் வாத்தியத்தில் கொண்டுவர யாரும் இதுவரை செய்யாத மாற்றங்களைச் செய்தேன்” என்றார் ஏ.கே.சி, பெருமிதத்தோடு.
இசை மரபுகளை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை இவர். 75 ஆண்டுகளாக சமரசமில்லாமல் இசை மரபின் விழுமியங்களைத் தான் பின்பற்றுவதாகச் சொல்கிறார். தன் இசையில் ஒரு அபசுரம் வந்தால்கூட அன்றே ரிட்டையராகிவிடுவேன் என்கிறார். திருச்சியின் காவிரி ஆறும் ஶ்ரீரங்கம் கோயிலும்தான் தன்னைப் பிடித்து திருச்சியிலேயே கட்டிப்போட்டிருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார்.

90 வயதில் 75 ஆண்டுகள் இசையோடு வாழ்ந்த ஒரு ஜாம்பவானிடமிருந்து விடைபெற்றோம். வித்தியாசத்தின் மீது நம்பிக்கை வைத்து கிளாரினெட்டைத் தொட்ட கை அது. எதையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு, மேற்குலகின் கருவியை நம் இசைக்கு ஏற்ப மண்மயப்படுத்திய பேரறிவாளர் அவர். பல்லாயிரம் மேடைகளைப் பார்த்த கலைஞர். இசைக் கலைஞர் நித்யஶ்ரீ மகாதேவன், “சில வித்வான்கள் மட்டும்தான் அவர்கள் வாசிக்கும் வாத்தியத்தைச் சொன்னவுடன் அவர்கள் நம் நினைவுக்கு வருவார்கள். மிருதங்கம் என்றால் பாலக்காடு மணி ஐயர். புல்லாங்குழல் என்றால் மாலி. வீணை என்றால் பாலச்சந்தர். நாதஸ்வரம் என்றால் ராஜரத்தினம் பிள்ளை. இந்த வரிசையில் கிளாரினெட் என்றாலே ஏ.கே.சி தான் நம் நினைவுக்கு வருவார்” என்கிறார். இசைக்கு இந்தியாவில் தரப்படும் எல்லா உயர்ந்த விருதுகளையும் பெற்ற ஏ.கே.சி-க்கு இதுவரை ’பத்ம’ விருது கொடுக்கப்படவில்லை. ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் ஏ.கே.சி-க்கு பத்ம விருது வழங்கி, மரபான தென்னிந்திய இசையை ரசிக்கும் ரசிகர்களையும் தமிழ் மக்களையும் கௌரவிக்க வேண்டும்.
வாசல்வரை வந்து வழியனுப்பிய ஏ.கே.சி-யை வணங்கி விடைபெற்றோம். ’சங்கராபரணம் சோமாயஜுலு மாதிரி இருக்காரில்ல’ என்று எங்களுக்குத் தெரிந்த வகையில் ஒப்பிட்டுக் கொண்டோம். அவர் போய்விட்டாலும் உரையாடிய அதிர்வுகளும் கேள்விகளும் மனசு முழுக்க இருக்கவே செய்தன. தன் குருநாதர்களின் பெயரைச் சொல்வதையே மரியாதைக் குறைவாகக் கருதும் தலைமுறை அவருடையது. ஆனால் அந்த குரு சிஷ்ய உறவு முறையிலிருந்த அடிமை முறை சரியா? ஒரு கலையைக் கற்பதற்கு அளவுக்கு அதிகமான காலம் செலவழிக்கப்பட்டதாக வந்த சில விமர்சனங்களையும் தள்ளிவிட முடியாதே. அதே நேரம் அவர் பேசும் நேரமெல்லாம் சொன்ன “கற்றுக்கொண்டேன், புரிந்துகொண்டேன்” போன்ற வார்த்தைகளில் உள்ள ஆத்மார்த்த வெளிப்பாட்டை நாம் தள்ளிவிட முடியுமா? இன்று கலைகளைக் கற்கும்போது அந்த நெருக்கம் உள்ளதா?
நிகழ்கால பிரச்னைகளை ஓவியம் நாடகம் போல ஏன் மரபிசை பாடுவதில்லை என்றபோது, சிரித்துக்கொண்டார். நீண்ட பாரம்பர்யம் கொண்டது கர்னாடக இசை. நான் அந்தக்கால சம்பிரதாயத்தைச் சேர்ந்தவன். பாரதி, பாரதிதாசனெல்லாம் காலத்தை ஒட்டி நிறைய எழுதினார்கள். நாங்களும் பாடினோம். இந்தத் தலைமுறை ரொம்ப வேகமா இருக்கு. எனக்குப் பின்னால் வருபவர்கள் ஈடுகொடுப்பார்கள் என்றார். இசை அதிகம் வணிகமயமானதற்காகக் கவலைப்பட்டார்.

இசை, பரதம், வில்லிசை, கூத்து போன்ற எல்லாக் கலைகளும் சபாக்களை நம்பியே இப்போது உள்ளன. அங்குள்ள அரசியல் தனி. (கட்சிகளைத் தவிர எல்லாவற்றிலும் அரசியல் உள்ளதாகச் சொல்வது ஜோக் அல்ல) சபா என்று வந்துவிட்டால், உறுப்பினர் பணம் எல்லாம் வந்துவிடுகிறது. எனவே கலைகளைப் பராமரிக்கும் வேலையை கோயில்கள் செய்யலாம். இசைப்பள்ளிகள் எல்லா மாவட்டத்திலும் உள்ளன. (இல்லை என்றால் தொடங்கலாம்). தொழிற்கல்விக் கூடங்கள் (BE, ITI) அருகிலுள்ள தொழிற்சாலையோடு பிணைக்கப்பட்டு மாணவர்கள் நேரடி அனுபவம் (APPRENTICESHIP) பெருவதுபோல இசைப்பள்ளிகள் கோயில்களோடு பிணைக்கப்பட்டால், இசைப்பள்ளி மாணவர்கள் தங்கள் கலையை நிகழ்த்த களமும் வளர வாய்ப்பும் அமையும். சிறப்பாக இயங்கும் நம் அறநிலையத்துறையும் ஆலயங்களும் மலினமான நிகழ்வுகளைத் தவிர்த்து நல்ல கலையைக் காப்பாற்றுவதிலும் வளர்ப்பதிலும் செலவைக்கூட ஏற்கலாம்.
மொழி என்பது எழுத்துகளால் ஆனது மட்டுமல்ல, கலைகளும் சேர்ந்ததுதான் மொழி. மொழியைக் காப்பாற்ற கலைகளையும் காப்பாற்ற வேண்டும். நம் தமிழ் இசைக்கருவிகள் பல இன்று வழக்கில் இல்லை. அதை வாசித்த கடைசிக் கலைஞனும் செத்துப்போனான். பேணுவதற்கு ஆள் இல்லை. பேணி வளர்ப்பது எப்படி என்பதை உ.வே.சா ’கனம் கிருஷ்ணையர்’ என்ற இசைக் கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார். அதுபோலவே இசை, பரதம் போன்ற கலைகளை வளர்க்கவும், ஏற்படும் வளர்ச்சிகளை நிகழ்த்துகலை மாணவர்கள் அறியவும் ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழில் பத்திரிகைகள் (JOURNAL) வேண்டும்.
இப்படி ஏராளமான மன ஓட்டங்களை ஓர் உண்மைக் கலைஞரின் சந்திப்பு உருவாக்கியது. ஏ.கே.சி-யை கிளாரினெட் எவரஸட் என்கிறோம். எவரஸ்ட்கூட உயரத்தில் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் 90 வயதிலும் ஏ.கே.சி வளர்ந்துகொண்டே இருக்கிறார்.
(இன்னும் ஊறும்)