லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராகத்துக்கும் ரசனைக்கும் சம்பந்தமில்லை! - வித்யா பவானி சுரேஷ்

வித்யா பவானி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யா பவானி சுரேஷ்

‘`பரதநாட்டியமும் சரி, கர் னாடக சங்கீதமும் சரி... அதைப் புரிஞ்சுக்கணும்ங்கிற தேடல் எல்லார்கிட்டயும் இருக்கு. ஆனாலும் இந்த நிகழ்ச்சிகள் நடக்குற ஆடிட்டோரியத்துக்குள்ளே போக பலரும் தயங்கறாங்க. ‘

‘சங்கீதம் பாட... ஞானமுள்ளவர்கள் வேண்டும்...’ என ஷோபனாவும் - ‘சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்’ என பாக்யராஜும், இசைமோதல் நடத்தும் காட்சி ஒன்று ‘இது நம்ம ஆளு’ படத்தில் இடம்பெறும். கர்னாடக சங்கீதமும் சரி, பரதநாட்டியமும் சரி... இன்னமும் மேல்தட்டு மக்களுக்கான கலைகளாகவே தொடர்வதுதான் சோகம். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் இந்தக் கலைகள், சாமானியர்களையும் ஓரளவு நெருங்கியிருந்தாலும், அந்த இடைவெளி முற்றிலுமாக நீங்குவது எப்போது?

இந்தக் கேள்விக்கான பதில் வித்யா பவானி சுரேஷிடம் இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும், கர்னாடக இசை ஆய்வாளருமான வித்யா, கர்னாடக இசையை யும் பரதத்தையும் சாமானியர்களும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக இயங்கி வருபவர். புத்தகங்கள், மேடை நிகழ்ச்சிகள், யூடியூப் என பல தளங்களின் வாயிலாக அதைச் சாத்தியப்படுத்தி வருகிறார்.

வித்யா பவானி சுரேஷ்
வித்யா பவானி சுரேஷ்

‘`எல்லாருமே பேங்க் போறோம். பணம் போடறோம், எடுக்கறோம், செக் கொடுக்க றோம்... பல பரிவர்த்தனைகள் பண்றோம். அதுக்காக நம்ம எல்லாருக்கும் பேங்கிங் தெரியணும்னு அவசியமில்லையே... ஒரு பயனாளருக்கு என்ன தெரியணுமோ, நமக்கு அது தெரிஞ்சா போதுமானது. அதே மாதிரி தான் கர்னாடக சங்கீதத்தை அனுபவிக்க யூஸர் லெவல் தெளிவு இருந்தா போதும். அதுக்கு ராகம், தாளம்னா என்ன, கீர்த் தனைனா என்ன, கச்சேரியோட வடிவம் என்னங்கிற அளவுக்குத் தெரிஞ்சிருந்தா போதும். அந்த யூஸர் லெவல் தகவல்களை மக்களுக்குக் கத்துக்கொடுக்கிறதைத்தான் தொடர்ந்து பண்ணிட்டிருக்கேன்’’ - எளிமை யான உதாரணமே வித்யாவின் நோக்கம் உணர்த்துகிறது.

‘`அம்மா விஜயலட்சுமி மூர்த்தி, ஆல் இந்தியா ரேடியோவுல இயக்குநரா இருந்தாங்க. அப்போ நாங்க போபால்ல இருந்தோம். அப்பா மூர்த்திக்கு என்னை நடனக் கலைஞரா பார்க்கணும்னு ஆசை. அதனால கதக்ல சேர்த்துவிட்டார். ஒரு கட்டத்துல அப்பாவோட கனவை நனவாக்கணும்ங்கிற மாதிரி அது எனக்குள்ள சென்ட்டிமென்ட்டான ஒரு லட்சியமா மாறிடுச்சு. அப்பாவோட இறப்புக்குப் பிறகு உடைஞ்சு நொறுங்காம, சோகத்துல மூழ்காம, வாழ்க்கையை பாசிட்டிவ்வா ஏத்துக்கிட்ட அம்மாதான் எனக்கு ரோல் மாடல். போபால்லேருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தோம். சீனியர் பரதக்கலைஞர் தனஞ்செயன் சார்கிட்டயும் கே.ஜே.சரஸா அம்மாகிட்டயும் பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு திருநெல் வேலிக்கு மாற்றலானதால பாளையங் கோட்டை செயின்ட் சேவியர் காலேஜ்ல, எம்.ஏ.நாட்டார் வழக்காற்றியல் படிச்சேன். கூடவே ஏசிஎஸ்ஸும் படிச்சிட்டு, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்துல என் கரியரை ஆரம்பிச் சேன். அந்த நேரத்துலதான் கல்யாணமும் முடிஞ்சது. அரேன்ஜ்டு மேரேஜ்தான்... கணவர் சுரேஷுக்கும் கலைகள்னா அவ்ளோ பிடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு கல்யாணத்துக்குப் பிறகு புகுந்தவீட்டுச் சூழல் கலைகளை எல்லாம் ஓரம்கட்டிவைக்கச் செய்யறதா அமையும். அந்த விஷயத்துல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. ‘எல்லாரையும் போல வேலைக்குப் போறது, வர்றதுனு ஏன் சராசரி வாழ்க்கைக்குள்ளயே உழலணும்... உனக்குள்ள இத்தனை திறமைகள் இருக்கும் போது அதையெல்லாம் அடுத்தகட்டத்துக்கு கொண்டு போகணும்’னு ஊக்கப்படுத்தினார் கணவர். ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிகள்ல நான் பேசறதைப் பார்த்துட்டு, ‘இவ்ளோ அழகா பரதநாட்டியத்தை பத்தி பேசற நீ, இதையே ஏன் ஒரு புத்தகமா எழுதக்கூடாதுன்னு கேட்டார். அப்படி உருவானதுதான் என் முதல் புத்தகமான ‘அப்ரிஷியேட்டிங் பரதநாட்டியம்...’’ 22 வருடங்களில் 44 புத்தகங்களை எழுதிமுடித்திருக்கும் வித்யா, அத்தனையிலும் கலைக்கும் வெகுஜனங்களுக்குமான இடைவெளியைச் சுருக்கு வதையே நோக்கமாக முன் வைத்திருக்கிறார்.

வித்யா பவானி சுரேஷ்
வித்யா பவானி சுரேஷ்

‘`பரதநாட்டியமும் சரி, கர் னாடக சங்கீதமும் சரி... அதைப் புரிஞ்சுக்கணும்ங்கிற தேடல் எல்லார்கிட்டயும் இருக்கு. ஆனாலும் இந்த நிகழ்ச்சிகள் நடக்குற ஆடிட்டோரியத்துக்குள்ளே போக பலரும் தயங்கறாங்க. ‘எனக்கு இதெல்லாம் புரியாது’ங்கிற தாழ்வு மனப்பான்மை பலருக்கும் இருக்கு. இந்தத் தயக்கத்தையும் மனத்தடையையும் உடைக்கிறதுதான் என் நோக்கமா இருந்தது. அந்த அடிப்படையிலதான் புத்தகங்கள் எழுத ஆரம்பிச்சேன்.

பரதநாட்டியத்துல நடனமாடி முடிச்சதும் அது குறித்த தகவல்களை திரைக்குப் பின்னாலருந்து வாய்ஸ் ஓவர்ல அறிவிக்கிற வழக்கம் உண்டு. முதல்முயற்சியா, என்னுடைய பரதநாட்டிய நிகழ்ச்சிகள்ல மாற்றத்தைக் கொண்டுவந்தேன். மைக்கை மேடையில வெச்சு, நானே அதுல விளக்கங்கள் கொடுக்க ஆரம்பிச்சேன். ஆடி முடிச்சதும் அவசரமா பின்னாடி போய் ஒரு வாய் தண்ணீர் குடிச்சு ஆசுவாசப்படுத்திக்கிட்டு மைக்ல அறிவிப்பு கொடுத்துட்டு, மறுபடி அடுத்த நடனத்துக்குத் தயாராகிறது சாதாரண விஷயமில்லை. அதையும் மீறி என் குரல்ல பார்வையாளர்களுக்கு நேரா நின்னு நடன முத்திரை, அதோட அர்த்தம்னு எல்லாத்தையும் விளக்கமா சொல்ல ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

கர்னாடக சங்கீதத்தை ரசிக்க ராகங்களை அடையாளம் காணும் அறிவு தேவையே இல்லை. ராகங்களைக் கண்டுபிடிக்கிறதுங்கிறது ஒரு கேம் மாதிரி. பாட்டைக் கேட்டதும் ராகத்தைக் கண்டுபிடிக்கிறதெல்லாம் ஒருவித போதை மாதிரி. அதெல்லாம் கர்னாடக சங் கீதத்தைக் கரைச்சுக் குடிச்சவங்களுக்கானது. அதுக்கும் ரசனைக்கும் சம்பந்தமே இல்லை. கர்னாடக சங்கீதம்ங்கிறது உங்க ஆன்மாவைத் தொடணும், அவ்வளவுதான். ராகங்களைக் கண்டுபிடிக்கிறது தனித்திறமை... ஆனா இசையை ரசிக்க அவசிய மில்லாத திறமை அது’’ - நியாயமான வார்த்தை களால் கவனம் ஈர்ப்பவர், லேட்டஸ்ட்டாக தன் யூடியூப் சேனலில் ‘கர்னாடிக் மியூசிக்... எவ்ரிபடி இஸ் இன்வைட்டடு’ என்ற பெயரில் விழிப்புணர்வைத் தொடர ஆரம்பித்திருக் கிறார்.

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

‘`அடுத்து பரதநாட்டியத் துலயும் இதே மாதிரி விழிப்புணர்வு கொண்டு வரப் போறேன். பாவம், அபிநயம், அடவு, அரை மண்டின்னா என்ன, ஒரு கருத்தை நடன அசைவுகள் மூலமா எப்படித் தெரிவிக் கிறோம்னு எல்லாத்தையும் பாமர மக்களுக்கும் புரியற மாதிரி சொல்லித் தரணும். ஒரு படத்துக்குப் போறோம்... நமக்கு கேமரா ஆங்கிளோ, படத் தயாரிப்போ தெரியணும்னு அவசியமில்லாம அந்தப் படத்தை ரசிக்க முடியுதில்லையா...அதே மாதிரி மனநிலையோட கர்னாடக இசைக் கச்சேரியையும் பரத நாட்டியத்தையும் ரசிக்க வைக்கணும்ங்கிறதுதான் என் நோக்கமே... கர்னாடக இசைக் கச்சேரிகள்ல என்ன ராகம், என்ன தாளம், யார் இசை யமைச்சதுங்கிற தகவல்களை கட்டாயம் அறிவிக்கணும். ராகங்களைக் கண்டுபிடிக்கிற சவால் பார்வையாளர்மேல வரும்போதுதான் அவங்களுக்கும் இசைக்குமான இடைவெளி அதிகமாகுது. கலை வடிவங்கள் எல்லாருக் குமானவைதான். ரசிக்கிற உரிமையும் எல்லாருக்குமானது’’ - முக்கியமானதோர் உரிமைக்காக ஒலிக்கிறது வித்யாவின் குரல்.

பரதநாட்டிய கலைஞர் வித்யாவின் விரிவான பேட்டியை இந்த https://bit.ly/3U1bW5j லிங்க்கில் க்ளிக் செய்து காணலாம்.