Published:Updated:

ஆன்லைன் ஆலாபனைகள் 2020

ஆன்லைன் ஆலாபனைகள் 2020
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் ஆலாபனைகள் 2020

படங்கள்: ராமநாதன் ஐயர், எஸ். ஹேமமாலினி, விஷ்ருதி

ஆன்லைன் ஆலாபனைகள் 2020

படங்கள்: ராமநாதன் ஐயர், எஸ். ஹேமமாலினி, விஷ்ருதி

Published:Updated:
ஆன்லைன் ஆலாபனைகள் 2020
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் ஆலாபனைகள் 2020

நியூசிலாந்து, சிங்கப்பூரில் கச்சேரிகள் செய்த அதே தினம் மாலை, சென்னையில் பாடினார் சுதா ரகுநாதன். மறுநாள் காலை 6 மணிக்கு அவர் அமெரிக்காவில் பாட வேண்டுமென்றார்கள். இப்படி அந்தந்த நாடுகளின் time zoneகளுக்கு ஏற்ப கச்சேரிப் பதிவுகளை வெளியிட்டது MadRasana.

சென்ற இரண்டு வருடங்களாக சத்யம் வளாகத்தில் செரீன் மினி தியேட்டரில் லைவ் இசை விழா நடத்தியவர்கள், இந்தமுறை விர்ச்சுவல் விழாவை அவுட்டோரில் பதிவு செய்து நம் வரவேற்பறைக்கு எடுத்து வந்தார்கள். நமக்காக மட்டும் பாடுவது மாதிரியான மிகச் சிறப்பான ஒலிப்பதிவும், கண்புரை விழுந்தவர்கள்கூட விதவிதமான லொகேஷன்களை சிரமமின்றிப் பார்த்து மகிழக்கூடிய வகையில் ஒளிப்பதிவும் இருந்தன. ‘மேன் ஆஃப் த விர்ச்சுவல் சீசன்’ விருது பெறுகிறார், MadRasana-வின் மகேஷ்!.

ஷ்ரேயா - கார்த்திகேயன்
ஷ்ரேயா - கார்த்திகேயன்
 காயத்ரி கிரீஷ்
காயத்ரி கிரீஷ்

லால்குடி ஜெயராமனின் நளினிகாந்தி வர்ணத்தில் தொடங்கி, அதே லா.ஜெ-வின் கமாஸ் தில்லானாவுடன் கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன். எம்பார் கண்ணன் (வயலின்), பத்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்), ராமன் (மோர்சிங்) சுதாவை ஆதரவுடன் அரவணைத்துச் சென்ற ஆக்கபூர்வக் குழு.

ஆரபியில் ‘ஸாதிஞ்செநெ...’, ஆனந்த பைரவியில் ‘கமலாம்பா...’, வசந்தாவில் ‘மால்முருகா...’ வழியே தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், பாபநாசம் சிவன் மூவரும் வரிசையில் நின்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டார்கள்.

ஆன்லைன் ஆலாபனைகள் 2020
சௌம்யா
சௌம்யா

எந்த கச்சேரியிலும் கல்யாணி நுழையும்போதே, கல்யாண மண்டபத்தினுள் ரஜினி வருகை தரும்போது ஏற்படும் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் ஒட்டிக்கொள்ளும். சுதா ரகுநாதன் பாடிய கல்யாணி அதே ரகம். ஆரம்பம் முதல் முடிவு வரையிலான சங்கதிகள் ஒவ்வொன்றும் பரவசப்படுத்தின. அதிலும் லைட் சங்கதிகளைக் குறைத்துக்கொண்டு வின்டேஜ் கல்யாணியை, இன்றுவரை அவர் பராமரித்துவரும் இனிமைக் குரலில் தவழ விட்டார். அந்த ஆலாபனையின் கடைசி சில மணித்துளிகள்... சொர்க்கம் கல்யாணியின் அழகிலே!

‘நிஜதாஸ வரதா...’ என்ற பட்டணம் சுப்ரமணிய ஐயர் பாடலில் யாருக்கும் வரம் அளிக்கும் ஸ்ரீராமனின் குணநலன்கள் அல்வாத் துண்டங்களாக பிளேட்டில் வந்து விழுந்தன. ஸ்வரங்களில் எம்பார் கண்ணன் ஸ்வீட்டாக பதிலடி கொடுத்து வர, ஜிலுஜிலு தருணங்கள் அவை! நிற்க... கல்யாணி மாதிரியான மிக அழகான ராக ஆலாபனை மற்றும் ஸ்வரங்களின் நடுவில் கிரக பேதம் செய்து திசை திருப்ப வேண்டுமா?

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்
சௌம்யா
சௌம்யா

இத்தனை சூப்பரான கல்யாணி நிறைவுற்றதும், கைதட்டி, பாராட்டி மகிழ எதிரில் ஒரு ஜந்துகூட இருக்க விடாமல் செய்துவிட்ட கொரானா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியத் தோன்றுகிறது!.

சுபஸ்ரீ தணிகாசலம் (QFR புகழ்!) நடத்திவரும் மார்கழி மகா உற்சவம் விஜய் டிவியில் காணக்கிடைத்தது. மார்கழிக் குளிர் நாளில் அலாரம் வைத்து, விடியற்காலை ஐந்தரை மணிக்குக் கண் விழித்து, ஆறு மணிக்கு ரெடியாகி டி.வி முன் உட்கார்ந்ததும்... திரையில் விஜய் சிவா! தலைப்பு: காதல்... காதல்... காதல்..! பரந்துபட்ட காதலைப் பாடல்கள் மூலம் விஜய் சிவா விளக்கிய விதம் கொஞ்சமும் சலிப்பு தட்டவில்லை. காதல் விவகாரமாயிற்றே!

விஜய் சிவா
விஜய் சிவா

பார்க் அல்லது கடற்கரை போன்ற இடங்களில் இளம் காதலர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதை அறியும் ஆசை யாருக்கும் ஏற்படுவது இயல்பு. ப்ரதாபவராளி ராகத்தில் ‘விந நாஸ கொநி...’ பாடலில் ‘‘அன்னை சீதையுடன் பல்லாங்குழி ஆடும்போது நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு ததும்பப் பேசிய இன் மொழிகளைக் கேட்டு ஆனந்தப்பட எனக்கும் ஆசை...’’ என்று ராமனிடம் தியாகராஜர் தெரிவிப்பது...

காதல் என்பது இருவழிப் பாதை... ஒருவரையொருவர் புரிந்து, பணிந்து செல்வது கட்டாயம். ‘பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய... குமரேசா...’ ‘பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா...’ என்றெல்லாம் அருணகிரிநாதர் அடுக்கிச் சொல்வது... மாதிரியான பாடல்களைப் பாடிக் காண்பித்து விவரித்தார் விஜய் சிவா.

கே.காயத்ரி
கே.காயத்ரி

புராண, இதிகாசக் காதல் பற்றிப் பாடி, பேச ஒரு மணி நேரமெல்லாம் போதாது. நடுவில் கேள்வி-பதில், விளம்பரங்கள் வேறு. தலை போகும் அவசரத்தில் காலை நேர வாக்கிங் போவது மாதிரி மூச்சு வாங்கினார் வித்வான்!

விர்ச்சுவல் சீசன் என்பதால் இசைக் கலைஞர்களுக்குப் பாடவும், பிறர் பாடக் கேட்கவும் சபா சபாவாக ஏறி இறங்கும் வேலை இல்லை. எனவே நிறைய பேர் நேரத்தை வீணடிக்காமல் தினமும் ஒரு திருப்பாவைப் பாடி அப்லோடு செய்து பக்திப் பணியாற்றி வருகிறார்கள்.

பாடகி காயத்ரி கிரீஷ், தினமும் ஒரு திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடி வருகிறார். ‘‘எல்லோரும் திருப்பாவை மட்டும் பாடறாங்க... அதனால திருவெம்பாவை இரண்டாவது இடத்துக்குப் போயிடுது. நான் முப்பது நாள்கள் திருப்பாவை, இருபது நாள்கள் திருவெம்பாவை, கடைசிப் பத்து நாள்களுக்கு திருப்பள்ளியெழுச்சியும் பாடத் திட்டமிட்டிருக்கேன்...’’ என்றார், முப்பது நாள்களுக்கு அட்டவணை போட்டு வைத்திருக்கும் காயத்ரி கிரீஷ். பாவை நோன்புக்கு இவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தவர் மகள் விஷ்ருதி கிரீஷ்.

அக்கரை சகோதரிகளுடன் பாலமுரளி
அக்கரை சகோதரிகளுடன் பாலமுரளி

அதே போல், அக்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி, ஸ்வர்ணலதாவுடன் மையமாக உட்கார்ந்து தினமும் திருப்பாவை வழங்கி வருகிறார் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா. ஒரு நாள் மூத்த சகோதரி வயலின் வாசிக்க, இளையவரும் பாலமுரளியும் பாடுகிறார்கள்... அடுத்த நாள் வயலின் கைமாறும். இப்படி மாறி மாறி! ஒவ்வொரு நாளும் அன்றைய ராகத்தைக் கோடிட்டுக் காட்டிவிட்டு, ஆழ்வார்களின் பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு, ஆண்டாளின் திருப்பாவையைத் திருத்தமாகப் பாடுகிறார்கள். முயற்சி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

‘இப்படியும் செய்யலாமே’ என்று சொல்லி இந்தக் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருபவர், கலிபோர்னியாவில் இயங்கும் தென்னிந்திய மியூசிக் அகாடமியின் தலைவர் உஷா சாரி. கடல் கடந்து வரும் உதவி!

அன்று தஞ்சை நால்வர். இன்று கர்னாடிக் நால்வர். ஷ்ரேயா தேவ்நாத் (வயலின்), மயிலை கார்த்திகேயன் (நாகஸ்வரம்), பிரவீன் ஸ்பர்ஷ் (மிருதங்கம்), ஜீவானந்தம் (தவில்) ஆகிய நால்வரும் ஒன்றாக மேடையேறி வசித்து வருகிறார்கள். ஒரு மாறுதல் கருதி மக்கள் வரவேற்பு தந்து பாராட்டுகிறார்கள்.

ஹேமவதிக்காக நாகஸ்வரமா அல்லது நாகஸ்வரத்துக்காக ஹேமவதியா என்று இனம்பிரிக்க இயலவில்லை. ஒன்றுக்கொன்று அந்த அளவு ‘ஜெல்’ ஆகிறது. மயிலை கார்த்திகேயன் இந்த ராகத்தை வாசித்தபோது, ஜில்லென்று குளிர்ந்தது! லால்குடி பாணி என்கிற முத்திரையுடன் ஷ்ரேயா வயலின் உடன் சேர்ந்தபோது கேட்பதற்கு அத்தனை ஆனந்தம். தீட்சிதரின் ` ஸ்ரீகாந்திமதீம்’ பாடலை இருவரும் சேர்ந்து வாசித்து முடித்தபோது ஒரு நடை திருநெல்வேலி சென்று, நிர்மலமான தாமிரபரணி ஆற்றங்கரையில் வசிப்பவனை தரிசித்த உணர்வு!

சபாக்களின் கூட்டமைப்பில் நடந்த இந்தக் கச்சேரியில் ப்ரவீன் - ஜீவானந்தம் வாசித்த மிருதங்க, தவில் ‘தனி’யில் வாத்தியங்களை அடித்து சேதாரப்படுத்தவில்லை.

கே.காயத்ரி கச்சேரியை ஒரே நாளில் இரண்டு இடங்களில் கேட்க முடிந்தது. ஆன்லைன் அட்வான்டேஜ். காலைப் பனியில் தரையில் விழுந்த பவழமல்லியால் வருடிவிட்ட மாதிரி இருந்தது காயத்ரியின் வரமு ராக ஆலாபனை (சபா கூட்டமைப்பு). பாபநாசம் சிவன் துணை புரிந்தருள, ஆடாமல் அசையாமல் இனிமை கலந்த குரலில் காயத்ரி பாடிய சங்கராபரணம் அழுத்தமான சங்கதிகளுடன் பவனி வந்தது.

நாத இன்பத்தில் இவர் பாடியது பிலஹரி மற்றும் கரகரப்பிரியா. இரண்டு இடங்களிலும் இவருக்கு நல்ல வயலின் அமைந்தது வரம் (ஹேமலதா/விட்டல் ரங்கன்). மிருதங்கமும் டிட்டோ. (பூங்குளம் சுப்ரமணியன்/சுமேஷ் நடராஜன்). கே.வி.ஜி-யின் கஞ்சிரா, இரண்டாவதில் எக்ஸ்ட்ரா!

நாரத கான சபாவில் கூட்டமைப்புக்கான கச்சேரிகளை ரெக்கார்டு செய்ய அமைக்கப்பட்டிருந்த மேடை கோவிட் கால ஸ்பெஷல்! ‘ சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று பாடகருக்கும் பக்கவாத்திய டீமுக்கும் போதிய இடைவெளியில் சிறுசிறு மேடை.

படிப்பாளியும் பலதும் தெரிந்த அறிவாளியுமான எஸ். சௌம்யாவை மேடையில் பார்க்கும் போதே கூடுதல் மரியாதை ஏற்படுகிறது.பாடுவதைக் கேட்கும்போது ‘ இவர் சரியாகத்தான் பாடுவார்’ என்ற நம்பிக்கை உண்டாகிறது!

ராமனை நினைத்தால் தியாகராஜரின் உடல் புளகாங்கிதம் அடைகிறதாம். அவனைக் காணும் போது ஆனந்தம் கண்களைக் குளமாக்குகிறதாம். ‘ தயராநீ தயராநீ தாசரதி ராம...’ என்று மோகனத்தில் உருகுவார் தியாகராஜர். ‘தயராநீ’ என்ற பதத்துக்கு பல்வேறு சங்கதிகளால் சௌம்யா செய்த அலங்காரம் அசத்தல்!

மெயினாக சாருகேசி. சுவாதி திருநாளின் ‘கிருபயா...’ பாடல். சப்த ஸ்வரங்களும் கொண்ட சம்பூர்ண ராகமான சாருகேசியை புயல் மழை வீசுவது போல் சாகசம் செய்து தன் மேதாவிலாசம் காட்டவில்லை சௌம்யா. மிதமான தட்பவெப்பநிலையில், சன்னமான குரலில் வளர்த்திச்சென்று சாருகேசிக்கு அழகூட்டினார். நிறைகுடம்!

( ஆலாபனை தொடரும்)