சினிமா
தொடர்கள்
Published:Updated:

“எங்கள் கோபமே இசையாகிறது!”

வா ப்ரோ இன்னா ப்ரோ ராப் இசைக் குழு
பிரீமியம் ஸ்டோரி
News
வா ப்ரோ இன்னா ப்ரோ ராப் இசைக் குழு

இந்தக் குடியிருப்புல எழுநூறுக்கும் மேல வீடுங்க இருக்கு. இங்கேயிருக்கிற யாரைக் கூப்பிட்டுப் ‘பாடு’ன்னு சொன்னாலும், அவன் வாழ்க்கையில இருந்து ஒரு பாட்டை எடுத்து விடுவான்.

“சென்னையில எங்கே குற்றம் நடந்தாலும் வியாசர்பாடியிலயோ கண்ணகி நகர்லயோதான் போலீஸ் வண்டி வந்து நிக்குது. எங்க தோற்றமும் மொழியும் எங்க வீடுமே எங்களைக் குற்றவாளி மாதிரி அவங்களுக்குக் காட்டுது. வியாசர்பாடின்னா ரவுடியிசம்.. குற்றப் பின்னணி... வியாசர்பாடி ஹவுசிங் போர்டுக்குள்ள வந்து பாருங்க... கேரம்ல, வாலிபால்ல, அத்லெடிக்ஸ்ல இண்டர்நேஷனல் பிளேயர்ஸ் இருக்காங்க... அதைப் பத்தியெல்லாம் யாரும் பேசுறதேயில்லை...” - சுனிலும் நந்தாவும் ரொம்பவே துடிப்பாகப் பேசுகிறார்கள்.

இருவருக்கும் வயது 19 தான். ஆனால் எழுப்புகிற கேள்விகளில் கூர்மையான அரசியல் இருக்கிறது. ‘வா ப்ரோ இன்னா ப்ரோ’ (va_bro_inna_bro) என்ற ராப் இசைக் குழுவை நடத்துகிறார்கள் இருவரும். சமூக ஊடகங்களில் பெரும் அறிமுகம் இவர்களுக்கு.

வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு 53-வது பிளாக்கின் மாடிதான் இவர்களது ஸ்டூடியோ. உடைந்த நாற்காலியொன்றைத் தட்டித்தட்டி டியூன் போடுகிறார்கள். பால்வாடிப் பருவம் தொட்டு இறுகிய நட்பு.

“எங்கள் கோபமே இசையாகிறது!”

“இந்தக் குடியிருப்புல எழுநூறுக்கும் மேல வீடுங்க இருக்கு. இங்கேயிருக்கிற யாரைக் கூப்பிட்டுப் ‘பாடு’ன்னு சொன்னாலும், அவன் வாழ்க்கையில இருந்து ஒரு பாட்டை எடுத்து விடுவான். அதுக்கு நீங்க கானா, நாட்டுப்புறப் பாட்டுன்னு எந்தப் பேரு வேணுன்னாலும் வச்சுக்கலாம். ஆனா, அவன் பாடுறது, அவன் பட்ட வதையில இருந்து உருவான பாட்டு. புகையை இழுத்து வெளியில துயரத்தோட துப்புற மாதிரி, வலி ஆத்துற மருந்து எங்க பாட்டு மக்களுக்கு. அப்படித்தான் நாங்களும் பாடத் தொடங்குனோம்.

இந்தத் தோற்றம்... இந்த நிறம்... நாங்க பேசுற மொழி... நாங்க வாழுற 200 சதுர அடி அழுக்கு வீடு... எதுவுமே நாங்களா விரும்பி ஏத்துக்கிட்டதில்லை. எங்களுக்கு வாய்ச்சது இதுதான். எங்க தாத்தா, அப்பா, இப்போ நாங்கன்னு யாரோட வாழ்க்கையும் மாறவேயில்லை. எனக்கு நாலைஞ்சு வயசு இருக்கும்போதே எங்க அப்பா தற்கொலை செஞ்சுக்கிட்டார். பெரிய பெயின்டர்... சென்னையில இருக்கிற பல பாரம்பர்யக் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிச்சவர்.

“எங்கள் கோபமே இசையாகிறது!”

அவர் இறந்தபிறகு அவர் பாத்த பெயின்டிங் வேலையை அம்மா எடுத்துப் பண்ணி எங்களைக் காப்பாத்தி வளர்த்தாங்க. சின்ன வயசுல இருந்தே, ‘யாரும் அடிச்சா திருப்பி அடிக்கக்கூடாது... அமைதியா இருக்கணும்’னு சொல்லிச் சொல்லி வளர்த்திருக் காங்க. எங்களுக்கும் கோபம் வரும்ல... நாங்களும் மனுஷங்க தானே... எங்க கோபத்தை வெளிப்படுத்த ராப் சரியான ஊடகமா இருந்துச்சு. அதைப் புடிச்சுக்கிட்டோம். உலகம் முழுவதுமே ராப், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இசை. அதனால எங்களுக்கு அது ரொம்பவே நெருக்கமா இருக்கு...” இடைநிறுத்தாமல் பேசுகிறார் சுனில். டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் தமிழ் மாணவர்.

நந்தா வாழ்க்கை வேற மாதிரி... முல்லை நகரில் வீடு. பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு ஹவுஸ் கீப்பிங், லோடுமேன், ரயில் பெட்டிகள் கழுவும் வேலையென ஒரு சுற்று வந்து, இப்போது துறைமுகத்தில் வேலை. ஏடிகே, யோகி பி ஸ்டைலில் பெயரை என்.கே.மேட் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.

“இந்த ஹவுசிங் போர்டுல இருக்கவங்க என்ன ஜாதி, என்ன மதம்னு தெரியாது. ஆனா, யாருக்காவது ஒன்னுன்னா மொத்தமா வந்து நிப்பாங்க. அதுதான் எங்க வாழ்க்கைமுறை. ஆனா, வியாசர்பாடின்னா அக்யூஸ்ட் ஏரியா மாதிரிதான் பாக்குறாங்க. வீட்டையொட்டி இந்த ரோடு இருக்கு. ராத்திரி பதினோரு மணிக்கு இங்கே நின்னா, போலீஸ்காரங்க ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் உக்கார வச்சிருவாங்க. ‘என் வீடு அங்கே தாங்க இருக்கு’ன்னு சொன்னாலும் விடமாட்டாங்க. ‘இந்த நேரத்துல ரோட்டுல என்ன வேலை’ன்னு கேப்பாங்க. ராத்திரி முழுவதும் ஸ்டேஷன்ல உக்காரவச்சிருந்து காலையில அடித்துத் துரத்துவாங்க. ஆனா, அதோ தெரியுதுல்ல, பாரதிநகர், கண்ணதாசன் நகர்... அங்கெல்லாம் அதிகாலை மூணு மணி வரைக்கும் பேட்மின்டன் விளையாடுவாங்க. அந்தப்பக்கமே போலீஸ் ஜீப் போகாது... திறந்தவெளியில இருந்தாலும் சிறைமாதிரிதான் இது.

கொஞ்சநாள் முன்னாடி ஆவடியில ஒரு ராப் கச்சேரிக்கு அட்வான்ஸ் வாங்கியிருந்தோம். நாங்க 7 பசங்க... ராப்ங்கிறதால அதுக்கேத்த டிரஸ் போட்டுக்கிட்டு பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டிருந்தோம். திடீர்னு போலீஸ்காரங்க வந்து, ‘எங்கடா போறீங்க’ன்னு கேட்டாங்க. ‘கச்சேரிக்குப் போறோம்’ன்னு சொன்னோம். ‘என்னடா கோமாளி டிரஸ்... மூணு சொல்றதுக்குள்ள இந்தப் பைத்தியக்கார டிரஸ்ஸை மாத்திக்கணும்’னு சொல்லி லத்தியை ஓங்கிக்கிட்டு ‘ஒண்ணு’, ‘ரெண்டு’ன்னு எண்ண ஆரம்பிச்சுட்டார். அத்தனை பேர் பாத்துக் கிட்டிருக்கும்போது பிளாட் பாரத்துலயே ஏழு பேரும் டிரஸ் மாத்தினோம். இந்த அவமானத்தைத் துடைக்க, அந்தக் கச்சேரியிலயே ஒரு ராப் போட்டோம். எங்களை என்ன வேணும்னாலும் பேசலாம்... கேட்கலாம்... ஏன்னா நாங்க வியாசர்பாடி. இந்தச் சமூகம் எங்களைக் குற்றவாளியாக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கு...” - சொல்லிசைக்குத் தகுந்த கட்டைக்குரல் நந்தாவுக்கு.

“எங்கள் கோபமே இசையாகிறது!”

சாத்தான்குளம் காவல் வன்முறையில் தந்தை-மகன் இறந்தபோது இவர்கள் போட்ட ‘குத்துங்க எஜமான் நல்லா குத்துங்க’ ராப், பலரின் கவனத்தை ஈர்த்தது. சென்னையை அழகுபடுத்துவதாகச் சொல்லி, இந்த நகரை உருவாக்கிய மக்களை குப்பைகளைப்போல நகருக்கு வெளியே அள்ளிக்கொட்டும் அநீதிக்கு எதிராக ‘சென்னை வாசி சென்னையி லதான் இருப்போம்’ என்று ஒரு ராப் பாட, விசாரணை வரைக்கும் வந்து முடிந்திருக்கிறது. மீனவர்கள் கொல்லப் படுவது, அரசியல்வாதிகளின் ஊழல்கள், காவல்துறையினர் பொதுமக்களை நடத்தும் விதம் என சின்னச்சின்ன ஸ்கிட்களால் கேள்வி எழுப்புகிறார்கள் இந்த இளம் ராப்பர்கள்.

“எங்களை மாதிரி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உருவாக்கினதுதான் ராப். முறைப்படி கத்துக்க எங்களுக்கு வாய்ப்பில்லை. கேள்வி ஞானம்தான். ஸ்ரீ ராஸ்கோல், யோகி பி, ஹாவோக் பிரதர்ஸ்னு நிறைய பேரைப் பார்த்துக் கத்துக்கிட்டு வளர்ந்திருக்கோம். கம்ப்யூட்டர், கீ போர்டெல்லாம் வாங்கிக்கொடுத்து, பாட்டைக் கேட்டு உற்சாகப்படுத்துற நண்பர்கள் இல்லேன்னா நாங்க இல்லை. ஒரு பாட்டு எழுதிட்டோம்னா, அடுத்த பத்து நாளைக்கு மெட்ரோ டிரெயின் தண்டவாளத்துல சகதி அள்றது, துணிக்கடையில லோடு இறக்கறதுன்னு கிடைக்கிற வேலைக்குப் போவோம். அதுல வர்ற காசை வச்சு ரெக்கார்டிங் பண்ணிடு வோம். டிக் டாக்ல ‘மியூசிக் ஸ்டார் தமிழ்’னு ஒரு போட்டி நடத்தினாங்க. ஒரு லட்ச ரூபாய் பரிசு... ஜி.வி.பிரகாஷ் சார்தான் அதை விளம்பரப்படுத்தினார். பெரிய பெரிய பாடகர்களெல்லாம் கலந்துக்கிட்டாங்க. 2.8 லட்சம் ஓட்டு வாங்கி முதலிடம் பிடிச்சோம். பரிசு வாங்குறதுக்குள்ள டிக் டாக்கைத் தடை பண்ணிட்டாங்க. அதுமட்டும் கிடைச்சிருந்தா சிறப்பா ஒரு ஆல்பம் பண்ணியிருப்போம்.”

கண்கள் மின்னச் சொல்கிறார் சுனில்.