Published:Updated:

``இந்த இரவில் நாம் வேறெங்கோ, வேறொன்றாகவோ வாழலாமா?'' - HBD ஜி.வி.பிரகாஷ்

G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar

கடைசி சாராய பானையின், கடைசிக் குவளையை அள்ளிய அரசன் முகம் சுருங்கி வானத்தைப் பார்த்தான். மின்னலொன்று வெட்டி மறைந்து, மழைப் பொழியத் தொடங்கியது.

விண்வெளியோ, நடுக்கடலோ எங்கு வேண்டுமானாலும் இசையால் நம்மை நகர்த்திச் செல்லமுடியும். ஒருவனை தன்னிலை மறந்து, எங்கோ மிதக்க வைப்பது போதைக்குப் பிறகு இசையால் மட்டுமே சாத்தியம். அப்படியான பயணங்களை உருவாக்கித்தரும் இசைக்கலைஞர்கள், தேவதூதர்கள். ஜி.வி. பிரகாஷ், அப்படியான இசைக்கலைஞர்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

பல படங்களுக்கு அவர் இசை அமைத்திருந்தாலும், குரலால் நம்மை வசீகரித்திருந்தாலும் இந்த இரண்டு இசைத்துண்டுகள் எப்போது கேட்டாலும், எங்கேயோ என்னை இழுத்துச்செல்லும். அது எங்கே என்னை இழுத்துச்செல்கிறதென, விவரிக்க முயன்றிருக்கிறேன். நீங்கள் செல்வதும் இங்குதானா?!

மேல் நோக்கியபடி கிடக்கிறது கார்த்திக்கின் கேமரா. அதன் உச்சியில் நிற்கும் நானோ, ஆழமான லென்சுக்குள் நாசி பிடித்து இறங்குகிறேன். உடல், இதமான குளிர் உணர்கிறது. அந்தி மாலையின் அடர் நீலத்தை வண்ண நகலெடுத்து வைத்திருக்கும் சிறு சலனமற்ற இத்திரவ வெளி, பொன், மரகத துகள்களின் மினுமினுப்பையும் கூடுதலாக பெற்றிருக்கிறது. கண்கள் கூசாத ஒரு வெளிச்சம். பாதி ஆழம் சென்றுவிட்டேன். இங்கே மூச்சு விட முடிகிறது.

சின்னதும் பெரிதுமான ஆயிரம் புகைப்படங்கள் என்னை சுற்றி வட்டம் அடிக்கின்றன. அண்டத்திலுள்ள வண்ணங்களை எல்லாம் மேனியில் கொண்ட மீன்களின் புகைப்படங்கள் நீந்திக் கொண்டிருக்கிறன. அவற்றைக் கவ்வியெடுக்கும் முயற்சியில் கறுப்பு, வெள்ளைப் பறவையின் புகைப்படமொன்று பறந்துகொண்டிருக்கிறது. சிறகு விரித்துப் பறக்கும் அதன், ஒற்றை இறகையாவது பொறுக்கி எடுத்துப்போகவே இங்கு வந்தேன்.

ஒரு நிமிடம் பொறுங்கள், எனக்கு தலைச் சுற்றுகிறது. பறவையின் புகைப்படத்தில் யாரோ, வண்ணத்தை திருடியிருக்கிறார்கள்! துயரம் நினைத்து நெஞ்சு அடைக்கிறது, தொண்டைக்குழி கேவி அழுகிறது. என்னால் நீந்தமுடியவில்லை, என் கால்களும் திரவமாக உருகிக்கொண்டிருக்கின்றன. திடீரென கண்கள் கூசும் ஒரு பெரும் வெளிச்சம். வெளி அதிர்கிறது. சொல்ல இயலாத புது உத்வேகம். நரம்புகள் புடைக்கின்றன. மேல் நோக்கி விரைகிறேன் நான். இது கடலாக மாறிவிட்டது!

Mayakkam Enna
Mayakkam Enna

அதன் பரப்பிலிருக்கும் கரும்பாறை ஒன்றில் ஏறி நிற்கிறேன். ராட்சத அலைகள், என் மார்பில் மோதி சுருண்டு விழுகின்றன. எரிமலையின் வெடிப்பிலிருந்து கிளம்பிய ஜூவாலை, கடலுக்குள் புகுந்து ஃபீனிக்ஸ் பறவையாக எழுகிறது. தீ சொட்டச்சொட்ட அதன் சிறகுகளை அசைக்கிறது. என் காலுக்கடியில் கிடந்த கடலை அள்ளி, ஃபீனிக்ஸின் பிம்பத்தை பிடித்துவிட்டேன். நான் கார்த்திக், ஜாக்கிரதை!

கள்ளியின் பச்சையம் கூட காணாத பாலை நிலமிது. இரவு கொண்டாட்டத்திற்கு தயாராகிறது. சாராயப் பானைகளின் மணம், மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது. அகழ்ந்தெடுத்த கிழங்குகளை அடுக்கி வைத்து நெருப்பு மூட்டியவர்கள், வட்டசட்டத்தில் இழுத்துக் கட்டிய தோலுக்கு விறைப்பேற்றுகிறார்கள். வலுவிழந்த புலியின் எலும்புகளைக் குச்சிகளாகக் கரைத்து, இடுப்பிலும் செருகியிருக்கிறார்கள். மாமிசத்துண்டுகளை சிலர் கொழுப்பில் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடைசித்துண்டில் கரி ஏறியபோது இரவும் ஏறியிருந்தது.

முதலில் தாரையை ஊதினார்கள். பாம்புகள் வால்களை கிலுகிலுத்தன. பிரம்மாண்ட கதவு திறந்து, மன்னன் ஆடி வந்தான். எல்லோரும் ஆடினார்கள். குவளையில் அள்ளி குடலுக்குள் ஊற்றிய சாராயம், விறுவிறுக்க ஆடியதில் வியர்வையாக வெளிவந்தது. இறந்துபோன மூப்பர்களின் ஓலம், இசையில் கலந்து பாடலானது.

திடீரென அவன் ஆடக்குதித்தான். ஓலங்கள், சந்தோஷக் கூச்சல்களானது. தாரை, தம்பட்டங்கள், தமுக்கு, பறைகளின் சத்தம் கூடின. அவனோடு இசைந்து நெருப்பும் வளைந்து ஆடியது. மண்ணுக்குள்ளிருந்த எலிகள் தரை வந்து குதிக்கின்றன. அவற்றை பாம்புகள் முத்தமிடுகின்றன. துள்ளிக்குதிக்கும் எலும்புக்கூடுகளில் தேகம் மூளைத்து, அதன் மீது ரோமம் முளைக்கின்றன. அத்தனையும் அங்கு கூத்தாடிக்கொண்டிருக்கிறது.

Aayirathil Oruvan
Aayirathil Oruvan
``ஜி.வி.பிரகாஷுக்கு இந்த பிறந்தநாள் ரொம்பவே ஸ்பெஷல்... ஏன்னா?!'' #HBDGVPrakash

கடைசி சாராய பானையின், கடைசிக் குவளையை அள்ளிய அரசன் முகம் சுருங்கி வானத்தைப் பார்த்தான். மின்னலொன்று வெட்டி மறைந்து, மழைப் பொழியத் தொடங்கியது. உச்சம் அடைந்தும், கூத்து நின்றபாடில்லை. சாராய பானைகள் மழைநீரால் நிரம்பி வழிந்தன. அதில் ஒரு குவளை மொண்டு குடித்த மூப்பனுக்கு, காவிரியின் ருசி தெரிந்தது.

நன்றி ஜி.வி.பிரகாஷ்..!

அடுத்த கட்டுரைக்கு