சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம்

யுவன் ஷங்கர் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
யுவன் ஷங்கர் ராஜா

ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா! - #AnandaVikatanPressMeet

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

``உங்கள் சொந்த ஊரான பண்ணைபுரம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துக்க முடியுமா? கடைசியா அங்கே எப்போ போனீங்க?’’

- பஷீர்

“எங்க ஊருப்பக்கம் தண்ணி, காத்துன்னு எல்லாமே அவ்ளோ ப்ரெஷ்ஷா இருக்கும். ஸ்கூல் படிக்கிறப்போ ஒவ்வொரு தீபாவளிக்கும் மொத்தக் குடும்பத்தையும் அம்மா அங்கே கூட்டிட்டுப் போவாங்க. அங்கே வீட்டுக்குக் கீழேயே ஆறு ஓடும். அங்கேதான் நாங்க ஆட்டம் போடுவோம். இப்போ அம்மாவோட சமாதி அங்கதான் இருக்கு. தேனிப்பக்கம் போனா அங்கே ஒருதடவை போய்ட்டுதான் வருவேன்.”

`` ‘வலிமை’ படத்தில் என்ன மாதிரியான சிக்னேச்சர் தீம், என்ன ஜானர்ல பாடல்களை எதிர்பார்க்கலாம்?’’

- சுகுணா திவாகர்

“ ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு இசையமைக்கிற சமயத்துலயே அஜித் போன் பண்ணி, ‘யுவன் நாம பில்லா, பில்லா 2, மங்காத்தான்னு கிட்டார் வச்சு நிறைய தீம் மியூசிக் பண்ணிட்டோம். அதனால இந்தப் படத்துல கிட்டார் பயன்படுத்தாம பின்னணி இசை அமைக்க முயற்சி பண்ணுங்க’ன்னு சொன்னார். ஆனா, அந்தச் சமயத்துல எனக்கு அந்தப் படத்துக்கு கிட்டார் பயன்படுத்தினா ரொம்ப நல்லாருக்கும்னு தோணினதால பயன்படுத்தினேன். சரி, ‘வலிமை’ல இதை ஒரு சவாலா எடுத்துக்கலாமேன்னு முடிவு பண்ணி கிட்டார் பயன்படுத்தாம மாஸா ஒரு தீம் பண்ணியிருக்கேன். இதுவரைக்கும் மூணு பாடல்கள் முடிஞ்சது. ஒரு சின்ன தீமும் பண்ணியிருக்கேன். மொத்தம் எத்தனை பாடல்கள்னு இனிதான் முடிவாகும்.”

‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம்

``ஒரு தயாரிப்பாளரா கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க? ‘மாமனிதன்’ ஓடிடில ரிலீஸாகப்போகுதுன்னு வரும் தகவல்கள் உண்மையா?’’

- அய்யனார் ராஜன்

“முதல்ல ‘மாமனிதன்’ பத்திச் சொல்லிடுறேன். அந்தப் படம் கண்டிப்பா ஓடிடி ரிலீஸ் இல்ல. தியேட்டர்லதான் ரிலீஸாகும். ஒரு தயாரிப்பாளரா, படம் பார்க்கிறவங்க தங்களைப் பொருத்திப் பாத்துக்குற மாதிரியான கதைகளை மட்டுமே படமா பண்ணணும்னு நினைக்கிறேன். தமிழில் கல்லூரி மாணவர்களை தியேட்டருக்கு அழைச்சுட்டு வர்ற மாதிரியான காதல் படங்கள் சமீபத்துல வரலையேன்னு தோணுச்சு. அதனால பண்ணுன படம்தான் ‘பியார் ப்ரேமா காதல்.’ ‘மாமனிதன்’ குடும்பத்தோட பார்க்குறமாதிரியான படம். அதுக்கு அப்பாவும் நானும் இசையமைச்சா இன்னும் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால இரண்டு பேரும் பண்றோம். இதுதவிர இன்னும் சில படங்கள் பற்றின பேச்சுவார்த்தை போய்ட்ருக்கு.”

``தமிழ் சினிமால நிறைய சிக்கல்கள் இருக்குன்னு நிறைய தயாரிப்பாளர்கள் புகார் சொல்றாங்க. யுவனுக்கு எப்படி?’’

- சுதர்சன் காந்தி

“கண்டிப்பா இங்கே நிறைய சிக்கல்கள் இருக்குதான். அஜித் சாரே ஒருமுறை, ‘யுவன் படம் தயாரிக்கிற முடிவு இருந்தா கைவிட்ருங்க. இங்கே நிறைய ஏமாத்துவாங்க’ன்னு சொன்னார். ஆனா, எதுலதான் சிக்கல்கள் இல்ல? எந்த பிசினஸ் பண்ணுனாலும் நீங்க பிரச்னைகளை சமாளிச்சுதான் ஆகணும். சினிமாதான் என்னோட வேட்கை. அதனால சினிமா தயாரிக்கலாம்னு முடிவு பண்ணினேன். இந்த சிக்கல்கள் எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்னு நம்புறேன்.”

``யுவனிசம் - ஒரு மாஸ் ஹீரோவுக்கான பாலோயிங் அளவுக்கு உங்களுக்கும் இருக்கு. எப்படி நடந்தது இது?’’

- சுதர்சன் காந்தி

``வெங்கட் பிரபுவும் இதையேதான் சொல்லிகிட்டிருப்பார், ‘எந்த ஒரு கம்போஸருக்கும் இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் கிடையாது’ன்னு. இது எனக்குக் கிடைச்ச வரம். இசைதான் என்னையும் அவங்களையும் இணைக்குதுங்கிறபோது அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்துக்கிட்டே இருப்பேன். என் பிறந்தநாள் அப்போ ரத்ததானம் பண்ணுறது, ஆதரவற்றோர் இல்லம் போறதுன்னு நிறைய விஷயங்கள் என் ரசிகர்கள் பண்ணுறாங்க. அவங்களோட இந்தச் செய்கைகளால ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு முடிவுக்கு இப்போ வந்துருக்கேன். ‘யுவன் கல்வி அறக்கட்டளை’ ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன். நிறைய பேரை இந்த அறக்கட்டளை வழியா படிக்க வைக்கப்போறேன். போக, ஆதரவற்றோர் இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்துல இணைக்கிற புள்ளியாவும் இந்த அறக்கட்டளை இருக்கும். இதனால அன்பு ரெண்டு தரப்புக்குமே கிடைக்கும்ங்கிறது என்னோட எண்ணம். இதுபத்தி வெளியே இதுவரைக்கும் சொல்லல. ஆனந்தவிகடன் வழியா இதை உலகத்துக்குச் சொல்றதுல ரொம்பவே மகிழ்ச்சி.”

‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம்

``யுவனோட மியூசிக்கல் ப்ராசஸ் எப்படியிருக்கும்?’’

- வெ.நீலகண்டன்

“என்னோட ப்ராசஸுக்கு ஒரு பார்மெட்டே கிடையாது. சமீப காலமா ஒருபக்கம் என் மகளைத் தூங்க வச்சுகிட்டு இன்னொரு பக்கம் லேப்டாப்ல இசையமைக்கிறதுதான் என்னோட ஸ்டைலா இருக்கு. க்ரியேட்டிவிட்டியைப் பொறுத்தவரை ஒருநாள் நிறைய ஐடியாக்கள் தோணும். சில நாள்கள் தொடர்ச்சியா ஒண்ணுமே தோணாது. காடு, மலைன்னு இயற்கையோட நான் இருக்குறப்போ இன்னும் கொஞ்சம் நல்லா இசையமைக்கமுடியுதுன்னு நினைக்கிறேன்.”

``இப்போ எந்தப் பாடல் வெளியானாலும் ‘அது இந்தப் படத்துல இருந்து எடுத்ததுப்பா’ன்னு மறுநாளே சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகிடுது. இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்குமான வித்தியாசம்தான் என்ன? ஒரு பாட்டை எப்பவோ கேட்டு மனசுல பதிஞ்சு பின்னொரு சமயத்துல நமக்கே தெரியாம நம்ம இசையா வெளியே வர்ற வாய்ப்புகள் உண்டா? ’’

- நித்திஷ்

“நிச்சயம் உண்டு. நான் எந்தப் பாட்டையுமே அதிக முறை கேட்கவே மாட்டேன். ஏன்னா, கேட்க கேட்க அது உள்ள நல்லா பதிஞ்சு, ரொம்ப நாள் கழிச்சு நான் இசையமைக்கிறப்போ என்னோட இசையா வெளியே வந்துடுமோன்னுதான். இது எல்லாப் படைப்பாளிகளுக்குமே நடக்கும்தான். அதேசமயம் இதை காப்பியடிக்கிறதுக்கான சாக்கா சொல்லமுடியாது. அப்படியே ஒரு பாட்டை உருவுனா அது நிச்சயம் காப்பிதான். நான் அப்பாவோட பாடல்களில் மூணு நோட்ஸை மட்டும் எடுத்து அதை வேற பாடலா மாத்தியிருக்கேன். அது இன்ஸ்பிரேஷன். இதுதான் வித்தியாசம்.”

‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம்

``உலகம் முழுக்க அரசியலும் இசையும் இணைந்த புள்ளிகள் நிறையவே இருக்கு. பாப் மார்லியை உதாரணமாச் சொல்லலாம். தமிழ்ச் சூழல்ல மட்டும் ஏன் இசை அரசியலில் இருந்து விலகியிருக்கணும்னு நினைக்கிறீங்க?’’

- சுகுணா திவாகர்

“தனித்தனியா இருக்கணும்னு நான் சொல்லல. ‘Blacklives matter’ பிரச்னையாகட்டும், என் டி-ஷர்ட் சர்ச்சையாகட்டும், ஏன் மக்கள்கிட்ட ரீச் ஆகுதுன்னா மக்களும் என்னோட உணர்வுகளைப் பிரதிபலிப்பதால்தான். நான் சொல்றதை அவங்களும் பொருத்திப் பாத்துக்குறாங்க. அது அப்படித்தான் நடக்கும். மத்தபடி நான் எந்தெந்தப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறேன், எதைத் தவிர்க்கிறேங்கிறது எல்லாம் என்னோட விருப்பம்தானே!”

‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம்

``நிகழ்கால அரசியலை கவனிக்கிறீங்களா? இப்போ நம்பிக்கையான தலைவரா யாரைப் பார்க்குறீங்க?’’

- வெ.நீலகண்டன்

“என்னோட அரசியல் சார்பு என் தனிப்பட்ட விஷயம். அதை நான் வெளியே சொல்லவேணாம்னு நினைக்கிறேன். நான் மதம் மாறுனப்பவும் என்னை பாலோ பண்ணுங்கன்னு என் ரசிகர்கள்கிட்டயோ நண்பர்கள்கிட்டயோ சொன்னதில்ல. அரசியலும் அப்படித்தான். என்னைப் பத்தி வெளியே தெரியுற விஷயமா என்னோட இசை மட்டுமே இருக்கணும்னுதான் நான் ஆசைப்படுறேன்.”

அடுத்த வாரம்...

 தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா பண்ணப்படுதுனு சிலர் குற்றச்சாட்டு முன்வைக்கிறதை எப்படிப் பார்க்குறீங்க?

 விஜய் கூட மறுபடியும் இணையுற வாய்ப்பு கிடைச்சா, அவரை பாட வைப்பீங்களா? அந்தப் பாட்டு என்ன ஜானர்ல இருக்கும்?

 ‘யுவன் இசை முன்னே மாதிரி இல்லை’னு தொடர்ச்சியா வைக்கப்படுற விமர்சனங்களுக்கு உங்க பதில் என்ன?