
`கும்பகோணம் கொழுந்து வெத்தலையா என்னைக் கிள்ளிப் பார்க்குறியே வெட்கத்துல வெத்தலை சிவக்குதே!’
``இதுவரை 38 மில்லியன் பேர் யூடியூப்ல பார்த்திருக்கிற இந்தப் பாடலை, என் எல்லாக் கச்சேரிகளிலும் தவறாமல் பாடிடுவேன். இதுபோன்ற நாட்டுப்புறப் பாடல்களும், இந்த இசையும்தான் நான் உயிர்வாழறதுக்கே பிடிப்பா இருக்குது” - நெகிழ்ச்சியாக உரையாடலைத் தொடங்கிய லட்சுமி, தன் அம்மா மற்றும் இரண்டு மகன்களை நமக்கு அறிமுகப்படுத்தினார். `கடலக்கொல்ல ஓரத்திலே’ பாடலைப் பாடிய புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர்களான `கொட்டும் முரசு’ கோட்டைச்சாமி - `கிடாக்குழி’ மாரியம்மாள் தம்பதியின் புதல்வி. சினிமாப் பின்னணிப் பாடகியாகும் பெரும் ஆசையில், ஜீ தமிழ் சேனல் `சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
``அஞ்சாவது வரைதான் படிச்சேன். சின்ன வயசுல ஒப்பாரி மெட்டுப் பாடல்கள் பாட ஆரம்பிச்சு, பின்னர் நாட்டுப்புறப் பாடகியானேன். என் வீட்டுக்காரர் அப்போ ரொம்பவே புகழ்பெற்ற பாடகர். அவரே சொந்தமா பாடல் எழுதி, இசையமைப்பார். அவருடன் பல்வேறு கச்சேரிகளில் பாட ஆரம்பிச்சு, எங்களுக்குள் காதல் மலர்ந்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகிட்டோம். பிறகு, இருவரும் இணைந்து ஏராளமான கம்யூனிஸ்ட் மேடைகள்ல பாடினோம். ஒருகட்டத்துல வருமானத் தேவைக்காக, நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாட ஆரம்பிச்சு பிரபலமானோம். இப்போ உடல்நிலை சரியில்லாம வீட்டுல ஓய்வில் இருந்தாலும், என் குரலில் தளர்வு ஏற்படலை. ஆசைக்காக சில உள்ளூர்க் கச்சேரிகளில் மட்டும் பாடுறேன். மவ லட்சுமி வருமானத்துலதான் குடும்பமே இயங்கிட்டிருக்கு” என்று மெல்லிய புன்னகையுடன் கூறும் மாரியம்மாளின் பார்வை, லட்சுமியின் மீது திரும்பியது.
``என் ரெண்டு வயசுல அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு, தனியா போயிட்டார். பிறகு, தன் பெயர்லயே இசைக்குழுவை ஆரம்பிச்ச அம்மா, ஓய்வில்லாமப் பாடினாங்க. எங்க குடும்பத்தை மட்டுமல்லாம, அவங்களோட சகோதரிகளின் குடும்பத்தையும் கவனிச்சுக் கிட்டாங்க. அம்மாவின் இசைப் பயணத்துக்காகப் புதுக்கோட்டைக்குக் குடியேறினோம். கச்சேரிகள்ல அம்மா பாடுறதைப் பார்த்து, கேள்விஞானத்துல பாடிப் பயிற்சி எடுப்பேன். `பாடகியா ஆனதாலதான், நம்ம கல்யாண வாழ்க்கை திசைமாறிப்போய் கஷ்டமாகிடுச்சு’ன்னு அம்மாவுக்கு வருத்தமுண்டு. அதனால, நான் நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டவங்க, பாடகர்கள் யாராச்சும் இல்லாத சில நேரங்கள்ல மட்டுமே அவங்க கச்சேரியில என்னைப் பாட அனுமதிப்பாங்க. நான் முழுநேரப் பாடகியாகக்கூடாதுன்னு ரொம்பவே எதிர்த்தாங்க.

அம்மாவுக்குத் தெரியாம பள்ளி அளவிலான மாவட்ட மற்றும் மாநிலப் பாட்டுப் போட்டிகள்ல நிறைய பரிசுகள் வாங்கினேன். அதைக் கண்டுபிடிச்சு, ஒருமுறை ஸ்கூலில் வெச்சே என்னைச் செமத்தியா அடிச்சாங்க. அதன் பிறகும் இசை ஆர்வத்தை என்னால கைவிட முடியலை. ஏழாவது படிக்கிறப்போ, அப்போதைய முதல்வர் கருணாநிதி ஐயாகிட்ட மாநில அளவிலான பாட்டுப் போட்டியில முதல் பரிசு வாங்கினேன். அப்போ பலரும் என்னைப் பாராட்ட, அதன் பிறகு என்னைத் தொடர்ந்து பாட அனுமதிச்சாங்க. அம்மாவுடன் இணைந்து நிறைய கச்சேரிகளில் பாடினேன். கூடுதல் வருமானம் கிடைக்க, பொருளாதாரத் தேவைகளைச் சமாளிச்சோம்” என்கிற லட்சுமி திருமணத்துக்குப் பிறகு சிங்கிள் பேரன்ட்டாக ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்.
``பத்தாவதுக்குப் பிறகு, மேற்கொண்டு படிக்க முடியாத சூழல். உடனே எனக்குக் கல்யாணமாகிடுச்சு. நாட்டுப்புறப் பாடகரான கணவர் சந்திரசேகருடன், நிறைய கச்சேரிகள்ல பாடினேன். அவரோட அரவணைப்பில் கிணத்துத் தவளை மாதிரி வாழ்ந்துட்டேன். கல்யாணமான ஆறே வருஷத்துல, உடல்நிலை சரியில்லாம கணவர் இறந்துட்டதால, ரொம்பவே தவிச்சுப்போனேன். மேற்கொண்டு வாழணுமான்னு ஏகப்பட்ட கேள்விகள். என் மகன்களுக்காகத் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டேன்.
நாட்டுப்புற இசைதான் எனக்குப் பிடிப்பாவும் ஆதரவாவும் இருந்துச்சு. ஆண் துணையற்ற பெண் என்பதால, என்னைத் தற்காத்துக்கிறதே பெரிய போராட்டமாச்சு. அம்மாவுடன் அவங்க குழுவில் பாடுறதைத் தாண்டி, மற்ற குழுக்களிலும் பாடினேன். இந்த நிலையில, ஆந்தக்குடி இளையராஜாவுடன் இணைந்து, `தெம்மாங்குப் பாட்டு பாடி’ங்கிற ஒரு ஆல்பத்துல பாடினேன். அது ஹிட்டாகவே, அடுத்தடுத்து ஆல்பங்கள் ரிலீஸ் பண்ணினோம். எங்க பாடல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சுது. தொடர்ந்து அவருடைய குழுவுல பிரதானப் பாடகியா பாடிட்டிருக்கேன். சமீபத்துல நாங்க பாடிய `எருக்கச்செடி கிட்ட காதலை எடுத்துச் சொல்லிப்புட்டேன்’ பாடலும் பெரிய ஹிட்” என்னும் லட்சுமி, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், 30 ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிப் போட்டி அனுபவம் குறித்துப் பேசுபவர், ``ஸ்கூல் படிக்கிறப்போதிலிருந்து, இப்போ வரை தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பாட ஆவலா போவேன். ஆடிஷன்ல தேர்வானாலும், என்னைப் போட்டியாளரா பாடக் கூப்பிடமாட்டாங்க. என் முயற்சியைக் கைவிடலை. சமீப காலங்கள்லதான், டி.வி நிகழ்ச்சிகள்ல நாட்டுப்புறப் பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுது. என் திறமைக்கு, ஜீ தமிழ் `சரிகமப’ நிகழ்ச்சியில அங்கீகாரம் கொடுத்தாங்க. நீண்டகால அனுபவத்தால, நாட்டுப்புற இசைக் கச்சேரிகளில் பாட எனக்குப் பயிற்சி தேவைப்படாது. ஆனா, இசை நிகழ்ச்சியில போட்டியாளரா பாட நிறைய பயிற்சி தேவைப்பட்டுச்சு. இந்த இசை நிகழ்ச்சியில இடம் பிடிச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி. நாட்டுப்புறப் பாடகர்களால சினிமாப் பாடல்களையும் நல்லாவே பாட முடியும். ஆனா, அதற்கான வாய்ப்புகள்தான் பெரிசா கிடைக்கிறதில்லை. இந்த நிகழ்ச்சியில என் பாடலைக் கேட்டு ரசிச்ச இசையமைப்பாளர்கள் இமான் சாரும் யுவன் சங்கர் ராஜா சாரும், சினிமாவில் பாட வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லியிருக்காங்க.
பொங்கல் சமயத்துல தொடங்கி, ஆறு மாதங்களுக்கு மட்டுமே ஓரளவுக்குக் கச்சேரிகள் இருக்கும். பிறகு, ஆல்பங்கள் ரிலீஸ் பண்றதுல கவனம் செலுத்துவோம். நாட்டுப்புறப் பாடல்கள் அழிஞ்சுடக்கூடாதுன்னு, என்னாலான பங்களிப்பைத் தொடர்ந்து கொடுப்பேன். பெரிய பையன் ஜீவா ப்ளஸ் டூ, சின்ன பையன் சுபாஷ் ஏழாவது படிக்கிறாங்க. பசங்களுக்கு இசைத்துறையில பயணிக்கவே ஆசை. அதை நிறைவேத்தணும்” என்பவர், தான் பாடிய `அத்த மக உன்னை நெனச்சி அழகுக் கவிதை ஒண்ணு வடிச்சேன்’ என்ற பாடலில் சில வரிகளைப் பாட, மாரியம்மாளும் அவருடன் இணைந்து பாட வீடு இசையால் நிறைந்தது.
``அப்பாவின் அன்பை இழந்துட்டேன்!”
``ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காலமான அப்பா, அதற்கு முந்தின வாரம் வரைக்கும் கச்சேரிகளில் பாடினார். இடைப்பட்ட காலங்கள்ல மனக்கசப்புகள் இருந்தாலும், பொருளாதாரத் தேவைக்காக அம்மாவும், நானும் அப்பாவுடன் இணைந்து பல்வேறு கச்சேரிகள்ல பாடினோம். அப்போல்லாம், `என்கிட்ட பேசுத்தா! நான் தப்பு பண்ணிட்டேன். உங்களோடவே நான் வந்திடுறேன்’னு என்னிடம் கெஞ்சுவார். எங்களை விட்டுட்டுப் போன கோபத்துல, அவர்கிட்ட பேசாமலேயே பெரிய தண்டனை கொடுத்தேன். `என் மவ ரொம்ப நல்லா பாடுது’ன்னு பலர்கிட்டயும் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கார். அவர் இறப்புக்குப் போனேன். என் வைராக்கியத்தால, அப்பாவின் அன்பை முழுமையா இழந்துட்டேன். அப்பாகூடப் பேசியிருக்கலாம்; பழகியிருக்கலாம்னு இப்போ தோணுது” என்கிறார் லட்சுமி, கண்ணீருடன்.