வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இந்த பதிவை தொடங்குவதற்கு முன் சோளகர் தொட்டி எழுதிய ச. பாலமுருகனுக்கும், துணைவன் எழுதிய ஜெயமோகனுக்கும் என் நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தான் இந்த விடுதலை என்ற திரைப்படத்தின் முதல் புள்ளி.
கலை என்பது சமத்துவத்தின் ஒரு மாபெரும் வடிவம். நம் தமிழ் சமூகத்தில் பல காலங்களாக கலைகளில் வழி மட்டுமே சமத்துவம் நிலை நாட்ட பட்டுள்ளது. இன்று அது பெரும்பான்மையான ஒரு திரைவடிவம் பெற்றுள்ளது. சமமான இருக்கைகளில், சக மனிதனின் அருகாமையில் அமர்ந்து ஒரு கதையை, ஒரு வாழ்வை ஒரே தருணத்தில் ஒரு நூறு மனிதர்கள் திரையில் காண்பது என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்று எடுத்துக்கொள்ள முடியாது.
அதனால்தான் கலை துறையில் இருப்பவர்களுக்கு விரும்பினாலும், விரும்பவிடினும் ஒரு சமூக பொறுப்பு பற்றிக்கொள்கிறது. அந்த வகையில் தன் முதல் படைப்பு தொடங்கி இன்றுவரை அந்த சமூக பொறுப்பின் விழுக்காடை உயர்திக்கொண்டே வந்து இன்று ஒரு 100 விழுக்காடு சமூக பொறுப்புடன் ஒரு படைப்பை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். அந்த பொறுப்புணர்ச்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

விடுதலை - பாகம் 1 -
தொழில்நுட்ப ரீதியாக இந்த படத்தை விமர்சிக்க பல ஆயிரம் விமர்சகர்கள் இருக்கலாம். அதனால் அந்த ஒரு பாதையை விட்டு விலகி, தன் ஒரு நாள் கூலியில் ஒரு பெரும் பகுதியை ஒரு படத்திற்காக செலவிட்டு, அமர்ந்து திரையை அண்ணார்ந்து பார்க்கும் வெகுஜன மக்களின் பார்வையில் இருந்து கூற விரும்புகிறேன்.
கேள்வி கேட்க யாருமில்லை என்ற துணிவில் மிருகங்களாக மாறிய மனித மிருகங்கள், கேள்வி கேட்காத ஒரு சமூகத்தின் மீது நடத்தும் தாக்குதலும், அந்த தாக்குதலையும், அடக்குமுறையையும் எதிர்க்க தொடங்கும் மக்கள் படையை பற்றிய கதையே இந்த விடுதலை பாகம் 1.

workshop, electric shock தண்டனை, அதிகாரத்தை கண்டு பயந்து ஓடியவர்களை குற்றவாளிகளாக மாற்றுவது, பொம்மைகளுக்கு ஆடை அணிவிப்பது போல அணிவித்து சுட்டு வீழ்த்துவது, ஆணாய் இருத்தல் அதுவும் அதிகார வர்கத்தில் ஆணாய் இருத்தல் என்ற ஒரே காரணத்தால் தன் சக மனிதர்களின் அம்மணத்தை கண்டு ரசிக்கும் அந்த கண்கள் - இவை எல்லாம் புத்தகத்தின் வரிகளாக கடப்பதற்கே நெஞ்சம் பதைந்த எனக்கு - இவை அனைத்தையும் திரை வடிவமாக கண்ட பொழுது என் கண்களை கண்ணீர் மறைக்க துடித்த தருணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை.
ஆனால், ஒரே ஒரு ஆறுதல் நான் வாசித்த, நான் கற்பனையில் கண்ட சோளகர் தொட்டிக்கு கிடைக்காத ஒரு வாத்தியாரும், ஒரு மக்கள் படையும், ஒரு குமரேசனும், இந்த அருமபுரி மக்களுக்கு கிடைத்தது. அந்த ஆறுதலோடு இந்த பாகத்தை நிறைவு செய்ததற்கு இந்த படக்குழுவிற்கு என் நன்றிகள்.

ஆட்சி, அதிகாரம், அரசியல், அடக்குமுறை இவையெல்லாம் காலம் காலமாக அஞ்சி நடுங்குவது அவர்களை எதிர்த்து கேட்கப்படும் அந்த முதல் கேள்விக்காக மட்டும்தான். அந்த கேள்வியை சற்று உரக்க, சற்று ஆணித்தனமாகவே இந்த சமூகத்தின் மீது வைத்துள்ளார் வெற்றிமாறன். விடை கிடைத்தாலும் கிடைக்காவிடினும், இனி கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் கேட்ட எந்த ஒரு சமூகமும் இந்த மண்ணில் சரித்திரம் படைக்காமல் சரிந்தது இல்லை.!!!
- இர. மௌலிதரன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.