Published:Updated:

பெயருக்கேற்றார் போல் அபூர்வம்தான்! - சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

Actor Kamal
News
Actor Kamal

இன்னாருடைய மகன் நான்தான் என ஹீரோ கூற சில பல ட்விஸ்ட்களுடன் பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார, ஹீரோவின் சோகக் கதையை கேட்ட ஹீரோயின், வில்லனை அழிக்க அவருக்கு உதவி செய்து, மீண்டும் ஹீரோவுடன் சேர்வார். இதைத்தானே காலம்காலமாக கமர்ஷியல் சினிமாக்களில் நாம் பார்த்து வருகிறோம்.

Published:Updated:

பெயருக்கேற்றார் போல் அபூர்வம்தான்! - சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

இன்னாருடைய மகன் நான்தான் என ஹீரோ கூற சில பல ட்விஸ்ட்களுடன் பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார, ஹீரோவின் சோகக் கதையை கேட்ட ஹீரோயின், வில்லனை அழிக்க அவருக்கு உதவி செய்து, மீண்டும் ஹீரோவுடன் சேர்வார். இதைத்தானே காலம்காலமாக கமர்ஷியல் சினிமாக்களில் நாம் பார்த்து வருகிறோம்.

Actor Kamal
News
Actor Kamal

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பழிவாங்கும் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட கம்ர்ஷியல் மசாலா படங்கள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே? அந்த கமர்ஷியல் படங்களின் திரைக்கதை அமைப்பு, காட்சிகள், பாடல்கள் என அனைத்தையுமே இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் நாம் பார்த்து சலித்துவிட்டோம்தானே. அதில் என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது?

பழிவாங்கும் கதைக்கான படத்தில், முதலில் ஹீரோ ஓபனிங் சீன் அல்லது பாடல், ஹீரோயின் ஓபனிங் சீன் அல்லது பாடல்... பிறகு ஹீரோ, ஹீரோயின் காதல், அவர்கள் இடையே வெளிநாட்டில் டூயட் பாடல்கள். இதற்கு நடுவில் ஹீரோ வரிசையாக சிலரை கடத்திக் கொலை செய்வார். ஏன் கொல்கிறார் என தெரியாமல் ஒரு இடைவேளை.

ஹீரோ கொலைகாரன் என தெரிந்ததும் அதிர்ச்சியடையும் ஹீரோயின் அவரை விட்டு விலக நேரும்போது தனது பிளாஷ்பேக்கை ஹீரோ ஓபன் செய்ய, அதை இதற்கு முன்பு எந்த படங்களிலும் பார்த்திராத மாதிரி ஹீரோயினும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார்.

அந்த பிளாஷ்பேக்கில், ஹீரோக்கு அழகான பெரிய குடும்பம் இருந்திருக்கும். வில்லன் ஏதோ சில காரணங்களுக்காக அந்த குடும்பத்தை கூண்டோடு கொலை செய்திருப்பார். அதில் ஹீரோ மட்டும் தப்பித்து, வேறு எங்கோ வளர்ந்து வந்து அவரை பழிவாங்குவார்.

Representational Image
Representational Image

இன்னாருடைய மகன் நான்தான் என ஹீரோ கூற சில பல ட்விஸ்ட்களுடன் பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார, ஹீரோவின் சோகக் கதையை கேட்ட ஹீரோயின், வில்லனை அழிக்க அவருக்கு உதவி செய்து, மீண்டும் ஹீரோவுடன் சேர்வார். இதைத்தானே காலம்காலமாக கமர்ஷியல் சினிமாக்களில் நாம் பார்த்து வருகிறோம்.

எந்த கமர்ஷியல் சினிமா எடுத்தாலும் அதற்கு இந்த திரைக்கதைதான் மீட்டர். வில்லன் ஏன் ஹீரோவின் குடும்பத்தை அழிக்கிறான் என்பதற்கான காரணங்கள் மட்டும் படத்திற்கு படம் வேறுபடும். அதுபோக ரசிகர்களுடன் கனெக்ட் செய்துகொள்ள ஹீரோவுக்கு மாற்றுத்திறனாளி தங்கச்சி, உடல் நலம் சரியில்லாத அம்மா, வறுமையில் வாடும் குடும்பம் போன்ற செண்டிமெண்ட் பூஸ்டர் பேக்குகளை டைரக்டர்கள் அவ்வப்போது ஆக்டிவேட் செய்துகொள்வார்கள்.

Representational Image
Representational Image

இடைவேளைக்கு பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களின் இதயத்தை தொடும்படி அமைந்தால் போதும். அதை மட்டும் மெனக்கெட்டு யோசித்தால் கூட ஒரு மினிமம் கியாரண்டி படத்தை எடுத்துவிடலாம்தானே. அதைத்தானே எல்லா இயக்குநர்களும் செய்துவருகிறார்கள்?

ஆனால் இங்கேதான் ஒருவர் வேறுபடுகிறார். இந்த திரைக்கதை பேட்டர்னை மொத்தமும் மாற்றி வேறு ஒன்றை செய்யக்கூடியவர்.

படத்தின் ஓபனிங் காட்சியிலேயே வில்லன்கள், ஹீரோவின் தந்தையை கொன்றுவிடுகிறார்கள். அதற்கு ஹீரோ பழிவாங்குகிறார். இதுதான் ஒன்லைன். இப்படி ஒரு ஒன்லைனை கேட்டவுடன் சொல்லிவிடலாம். படம் தேறவே தேறாது என்று. ஆனால் அந்த படம் மெகா ஹிட் என்றால் நம்ப முடிகிறதா?

"என்னய்யா சொல்ற? ஓபனிங்லயே பிளாஷ்பேக்க வெச்சா எவன்யா பார்ப்பான்? ஒரு சஸ்பென்ஸே இருக்காது. பிளாஷ்பேக்லாம் ரெண்டாவது ரீல்லதான் வெக்கனும். இல்லன்னா இடைவேளைக்கு அப்றம்தான் வெக்கனும். அப்போதான் படம் ஓடும்" என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் முதலிலேயே பிளாஷ்பேக்கை சொன்ன அந்த படம் சில்வர் ஜூப்ளி ஓடியது. சரி. ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டாம். அந்த படத்தின் பெயர் அபூர்வ சகோதரர்கள்.

அபூர்வ சகோதரர்கள்
அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாசராவ், கமல், கிரேஸி மோகன் ஆகிய ஜாம்பவான்களின் கைவண்ணத்தில் உருவான அபூர்வ சகோதரர்கள் அப்போது அனைத்து சாதனைகளையும் உடைத்ததாக சொல்வார்கள். பழிவாங்கும் கதைகள் கொண்ட கமர்ஷியல் படங்களுக்கு இன்றுவரை அபூர்வ சகோதரர்கள்தான் பெஞ்ச்மார்க்.

படத்தின் தொடக்கமே பிளாஷ்பேக்கில்தான் தொடங்கும். அப்பா கமலை 3 வில்லன்கள் கொன்றுவிடுவார்கள். கர்ப்பிணி மனைவி ஸ்ரீவித்யாவுக்கு விஷம் ஊற்றி விடுவார்கள். அதில் இருந்து தப்பிக்கும் ஸ்ரீவித்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க, ஒன்று அவரிடமும் இன்னொன்று மனோரமாவிடமும் வளரும். இதுதான் படத்தின் சாராம்சம். இதே உத்தியைத்தான் மைக்கேல் மதன காமராஜனிலும் கமல் கையாண்டிருப்பார்.

இப்போது இந்த சாராம்சத்தை வைத்துக்கொண்டு சராசரி கமர்ஷியல் டைரக்டர் எப்படி திரைக்கதை எழுதுவார் தெரியுமா? ஸ்ரீவித்யா அல்லது மனோரமா இருவரில் ஒருவர் தங்களிடம் வளர்ந்த பலசாலி கமலிடம் பிளாஷ்பேக்கை சொல்லி, வில்லன்களை பழிவாங்க சென்றுவா மகனே என நெற்றியில் திலகமிட்டு அனுப்பி வைப்பார்கள். அவரும் வெற்றியுடன் திரும்ப, சுபம் என டைட்டில் போடப்படும். இதுதான் திரைக்கதை பேட்டர்ன். ஆனால் இங்குதான் கமல் வேறுபடுகிறார். இதில் தனக்குத்தானே சில பல சிக்கலான முடிச்சுகளை போட்டுக்கொள்கிறார். அப்படி போடப்படும் முடிச்சுகளை கவனமாக அவிழ்ப்பவனே தேர்ந்த திரைக்கதை ஆசிரியர். கமலின் பிரில்லியன்ஸ் வென்ற இடமும் அதுவே.

திரைக்கதை முடிச்சுகளை கதை விவாதத்தின்போது கமல் தனது குழுவினரிடம் சொல்லும்போது அவர்கள் ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? (சும்மா ஒரு கற்பனை)

அபூர்வ சகோதரர்கள்
அபூர்வ சகோதரர்கள்
கமல்

1. பழிவாங்கும் கதாநாயகன் உயரம் குறைவானவன்

"சுத்தம். போச்சு. என்ன சார் சொல்றீங்க. இந்த ஹீரோ எப்படி வில்லன்கள கொல்லுவார்?. என்ன சார் நீங்க" என கமலிடம் நிச்சயம் யாராவது கேட்டிருப்பார்கள்தானே?

ஆனால் அந்த உயரம் குறைவான கமல் பழிவாங்கும் விதத்தை லாஜிக்கலாக யோசித்திருப்பார். அவன் உடல் வலிமை இல்லாதவன். மாறாக தன் மன வலிமை, புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வில்லன்களை அழிப்பான்.

2. இன்னொரு கதாநாயகன் ஒரு அப்பாவி. போதாக்குறைக்கு காதல் மயக்கம் வேறு.

"அட என்ன சார், அந்த கமல்தான் பலசாலி இல்லன்னு பார்த்தா இந்த கமலையாச்சும் பழிவாங்க வெக்கறா மாதிரி திரைக்கதை எழுதலாம்ல? அதுவும் போச்சா? இந்த படம் ஒருநாள் கூட ஓடாது" என புலம்பியிருப்பார்கள்தானே.

3.வில்லன்கள் தேர்வு.

"சரி அதையாச்சும் சொல்லுங்க. நல்ல வில்லன் இருந்தா கூட படம் தப்பிச்சுரும். ரகுவரன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் இவங்களோட கால்ஷீட்ட வாங்கிடலாமா?"

"இல்ல. படத்தோட மெயின் வில்லன் நாகேஷ்"

"யாரு நம்ம காமெடியன் நாகேஷா? போச்சு. அடுத்து"...

"இன்னொரு வில்லன் டெல்லி கணேஷ்"

"என்னது? சார் விளையாடாதீங்க. நீங்க படம் எடுக்கறா மாதிரி தெரியல"...

அடுத்து, நாசர், ஜெய்சங்கர்.

அப்பாடா இது ஒன்னுதான் நல்ல விஷயம்

`அபூர்வ சகோதரர்கள்' சேதுபதி
`அபூர்வ சகோதரர்கள்' சேதுபதி

4. கொலைகளை கண்டுபிடிக்கற போலீஸ் ஆபிசர் ஜனகராஜ்

"ஜனகராஜா? சார் இந்த படத்தோட கதைய இதோட மூடி வெச்சுருங்க. படமா எடுத்தா ஓடவே ஓடாது" என யாராவது ஒருத்தராவது சொல்லியிருப்பார்கள் தானே.

இப்படி எல்லாமே நெகடிவ் சிக்கல்கள். அந்த ஒவ்வொரு சிக்கல்களுக்கும் திரைக்கதை மூலம் அழகாக பதில் சொல்லியிருப்பார்கள். இதில் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் பஞ்சு அருணாசலம்.

ஸ்கிரிப்ட் டாக்டரான பஞ்சு, தமிழ் சினிமாவில் ஏராளமான கதைகளில் பெருமளவு மாற்றங்களை புகுத்தியிருக்கிறார். தேறாத கதைகளை கூட பட்டி, டிங்கரிங் பார்த்து மினிமம் கியாரண்டி ஆக்கிக் கொடுத்திருக்கிறார். அப்பேர்பட்ட சாதனையாளர் அவர். அபூர்வ சகோதரர்கள் கதையை அமரர் பஞ்சு எழுதியிருந்தாலும், இன்று வரை பெஞ்ச்மார்க்காக உள்ள திரைக்கதையை கமலும், கிரேஸி மோகனும் அமைத்திருப்பார்கள்.

படத்தில் ராஜா இசையில் வாலி வரிகளில் வெளியான அனைத்துப் பாடல்களும் ஹிட். அதைவிட கவனிக்க வேண்டியது பாடல்களுக்கான முக்கியத்துவம். ஒரு கமர்ஷியல் படத்தில் பாடல்களை நீக்கிவிட்டால் கூட அந்த கதையில் பெரிதாக எந்த தாக்கமும் இருக்காது. ஏனெனில் சில படங்களில் பாடல்கள் இடைச்செருகல்கள்தான். சில படங்களில் பாடல்கள் தேவையில்லாத ஆணிதான். 2000ஆம் ஆண்டுகளில் பாடல்கள் என்பது புகை பிடிப்பதற்கான இடைவேளையாகவே பயன்பட்டது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பாடல்களிலும் திரைக்கதை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

`அபூர்வ சகோதரர்கள்'
`அபூர்வ சகோதரர்கள்'

அப்புவுக்கு காதல் தோல்வி ஏற்பட்டால்தான் கதையில் திருப்பமே வரும் என்பதால் ரூபிணி உடனான காதல் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். அதே நேரம் அப்பு செய்யும் கொலைகளுக்கான பழி ராஜா மீது விழ வேண்டும் என்பதற்காக, லாரியில் ஒரு பாடல், நாசரைக் கொன்றது புலி என போலீஸ் நினைக்க புலி வேஷத்தில் ராஜா ஆடும் "அண்ணாத்த ஆடுறார்" பாடல் என படத்தில் பாடல்களை தூக்கிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த கதை, திரைக்கதையை பின்பற்றி அதற்குப் பின் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் இன்றுவரை இதுதான் பெஞ்ச்மார்க்காக இருக்கிறது. அதுதான் கமல் மற்றும் குழுவினரின் வெற்றி.

89ஆம் ஆண்டிலேயே கம்ப்யூட்டர் கிராபிக்ஸையும், பி.சி.ஸ்ரீராமையும் நம்பி களமிறங்கியது எல்லாம் வேற லெவல் தன்னம்பிக்கை. சர்க்கஸ் பின்புலத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள், டெல்லி கணேஷ் கொலைக்கான டெக்னிக் என ஒவ்வொரு சீனிலும் பார்வையாளர்கள் பிரமிப்புக்கு உள்ளானார்கள்.

kamal
kamal

கமலின் உயரம் குறைந்த ரகசியத்தை மட்டுமே நாம் பார்த்தோம். ஆனால் அதில் மற்றொரு சுவாரசியம் என்னவெனில் அப்பு கமலுக்கு முகம் கொஞ்சம் உப்பி இருக்கும்படியும் ராஜா கமலுக்கு லேசான நீட்டு முகம் இருக்கும்படியும் அமைத்திருக்கும் வேரியேஷன். இதெல்லாம் ஒரே ஒரு படத்துக்காக கமல் செய்த மெனக்கெடல் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

கமல் - கிரேசி மோகன் கூட்டணி படங்களை இப்போது பார்த்தாலும் வசனம் ஒவ்வொன்றும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் வகையில் ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் அவை நீங்கா இடம் பிடித்திருக்கும்.

33 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அபூர்வ சகோதரர்கள் திரைப்படமும், அதன் திரைக்கதையும், பாடல்களும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாது. நான் மேற்கூறிய விஷயங்களை நீங்களும் சிலாகிக்க மீண்டும் ஒருமுறை இந்த படத்தை பாருங்கள்.

- கோ.ர.மணிகண்டன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.