வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மயில்சாமி என்ற மகத்தான கலைஞன், அறுபதைக் கூடத் தாண்டாமல் அவசரமாக (57) இறந்து போனதே அனைவரையும் அதிர்ச்சித் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் அதற்குள்ளாக அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் என்பதில் இரு வேறுபட்ட கருத்து கிடையாது. சத்தியமங்கலத்தில் பிறந்து, நாடக நடிகனாக வாழ்வைத் தொடங்கிய அவர், தனது 19 வது வயதிலேயே சினிமாவில் காலடி வைத்தவர். ஆரம்ப காலத்தில் அவருடைய நகைச் சுவை நாடாக்கள் தமிழகமெங்கும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தின.
ஒரு முறை எங்கள் களப்பணிக்காக நாகர்கோவில் சென்றபோது, இரவில் இரண்டு மூன்று இடங்களில் வாகனம் தேநீருக்காக நிறுத்தப்பட்டபோது, அத்தனை டீக் கடைகளிலும் அவரின் நகைச்சுவை ஒலி நாடாக்களே ஓடிக் கொண்டிருந்தன. இறுதியாக நாகர்கோவில் டீக்கடையிலும் அவர் ஒலி நாடாவே ஓடி, எங்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது!

1965-1984-2023 ஆகிய மூன்று ஆண்டுகளுமே அவர் வாழ்வில் முக்கியமானவை. முன்னதில் பிறந்த அவர்,அடுத்ததில் சினிமாவில் நுழைந்தார், மூன்றாவதில் இறுதி விடை பெற்றுக் கொண்டார். நான் கண்ட தகவலின் அடிப்படையில் பார்த்தால், அவர் 200 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளதாகத் தெரிகிறது.
நாடகக் கலைஞர், சிரிப்பு நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்+நடிகர், அசத்தப்போவது யாரு?(சன் டிவி) நிகழ்ச்சியின் நடுவர், பின்னணிக் குரல் கொடுப்பவர் என்று ஏகப்பட்ட பரிமாணங்களைக் கொண்ட பன்முகக் கலைஞர் நம் மயில் சாமி.
நடிகர்கள் வடிவேலு, மணிவண்ணன் போன்றோருக்கு பின்னணிக் குரலும் கொடுத்தவர் இவர்.
எல்லோரையும் சிரிக்க வைப்பது சாதாரணமானதல்ல’ தினமும் சிரித்து வாழ்பவர்கள் நோய் நொடியின்றிப் பல்லாண்டுகள் வாழ்வர்!’ என்கின்றன மருத்துவக் குறிப்புகள். ஒரு விதத்தில் பார்த்தால் நமது சிரிப்பு நடிகர்களும் மருத்துவர்களே. தனது ஒலி நாடாக்கள் மூலமாகவும் நம்மை என்றைக்கும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் மயில்சாமியும் சிறந்த மருத்துவரே!

‘நடித்தோம்! சம்பாத்தித்தோம்!’ என்று இருக்கும் பல நடிகர்களைப் போலல்லாமல், பொது நல வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் இவர். அதனால்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஆனால் தோல்வி பரிசையே இவருக்கு கொடுத்தனர் விருகம்பாக்கம் தொகுதி மக்கள். அதற்காக அவர் ஓய்ந்து விடவில்லை.
‘தாவணிக் கனவுகளி’ல்(1984) தொடங்கி, ‘உடன் குடில்’ (2022) வரை, சுமார் 36 வருடங்களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் துணை வேடங்கள் ஏற்ற இவரின் மகனும் நடிகர்தான்!
மயில்சாமி சிறந்த ஆன்மீகவாதியுங்கூட. மகா சிவராத்திரியான நேற்று முன் தினம் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு வரும் வழியில்தான் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.

இவருடைய மகன் ‘அன்பு’ என்ற அருமை நாயகத்தை நடிகராக்க, இவர் பெரு முயற்சிகள் எடுத்து வந்ததாகத் தெரிகிறது. அவருக்குப் பொருத்தமான உதவிகள் செய்வதே சினிமாத் துறையினர் மயில்சாமி அவர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும். அவர் நடிகராக மிளிர்ந்தாலே இவரின் ஆத்மா சாந்தியடையும்.
தமிழ் இறை முருகனின்
நாமம் தாங்கிய நடிகரே!
பன்முகத் தன்மை யுடன்
பலச் சிரிப்பைக் கொடுத்தவரே!
இன்னும் பல ஆண்டுகள்
இருந்திருந்தால் மகிழ்ந் திருப்போம்!
அவசர அவசர மாய்
அனைவரையும் துயரில் ஆழ்த்தி
விடை பெற்றுச் சென்றதேனோ?
விதியே விடை அற்றதுதானோ!
அடைந்திடட்டும் ஆத்மா சாந்தி!
சாந்தி! சாந்தி! சாந்தி!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.