வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சமீபத்தில் விகடனில் வெளியான நர்சிம் எழுதிய "காதல் நெருப்பு" சிறுகதை வாசித்த போது "உன் முகத்த பார்த்தா நான் உன்ன லவ் பண்ணேன்" என்ற கதையின் கடைசி வரி மனதை என்னமோ செய்துவிட்டது. தமிழ் சினிமாவில் இதுபோல காதலுக்கு அழகு முக்கியமில்லை என்பதை உணர்த்தும் உண்மையான காதல்களை காட்டிய சில திரைப்படங்களை பார்ப்போமா...
வழக்கு எண் 18/9 என்ற படம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் நாயகியின் முகம் அமிலத்தால் பாதிக்கப்பட்டுவிட அப்போதும் நாயகன் "உனக்கு நான் இருக்கேன்" என்று தனது காதலில் உறுதியாக இருக்கிறான். விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் குஷ்புவின் முகம் தீக்காயத்தால் பாதிக்கப்பட அவரது காதலன் "நான் உன்ன லவ் பண்ணது உன் முகத்த பார்த்து தான்... ஆனா இப்போ உன் முகம் அசிங்கமாயிடுச்சு" என்று குஷ்புவை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். இந்த இரண்டு படங்களும் இருவேறு விதமான ஆண்களை அவர்களுடைய காதலை காட்டுகிறது.

எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் புத்தகத்தில் உள்ள "தீப்பாதி" கட்டுரையில் தனது முன்னாள் காதலியின் முகம் தீயால் பாதிக்கப்பட்டுவிட தீய்ந்துபோன அந்த நாயகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் பாலச்சந்திரன் ஓடிவரும் வலி நிறைந்த அந்தக் காட்சி, காதலுக்கு அழகு முக்கியமில்லை என்பதற்கு நல்ல உதாரணம் என்று சொல்லலாம்.
"துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் கண்பார்வையற்ற நாயகி முகம் தெரியாத நாயகன் மீது அவரது இனிய குரலுக்காக காதல் வயப்படுகிறார். அஜித்தின் "காதல் கோட்டை" படத்தில் முகம் பார்க்காமலே நாயகனும் நாயகியும் காதல் செய்கிறார்கள். ஷங்கரின் "ஐ" படத்தில் நாயகனின் முகம் பாதிக்கப்பட்ட போதிலும் நாயகி அவரை ஏற்றுக்கொண்டு தனக்கென ஒரு உலகத்தை தேடி செல்கிறார். "அங்காடித் தெரு" படத்தில் நாயகியின் கால்கள் பறிபோய்விட பெற்ற தந்தை கைவிட்டுவிட்ட போதிலும் "உனக்கு நான் இருக்கேன் கனி" என்று நாயகன் முன்பிருந்த அதே காதலுடன் வாழ்க்கையை தொடர்கிறார்.

"அன்பே சிவம்" படத்தில் கமலின் முகம் விபத்தொன்றால் பாதிக்கப்பட்டு காயத் தழும்புகளுடன் இருக்கிறது என்பதால் நாயகியை பல வருடங்கள் கழித்து பார்த்தபோது அவருடன் சேராமல் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் ஒரு பறவையாக கமல் பிரிந்துசெல்லும் காட்சி ரொம்பவே வலி நிறைந்தது. "அன்பே சிவம்" படத்தின் கிளைமேக்ஸ்சில் முகத்தில் வெட்டுக்களுடன் இருக்கும் நாயகனும் நாயகியும் சேர்ந்திருக்கலாம்!
ராஜூமுருகனின் "குக்கூ" படத்தில் "ஹேர பாத்தும் மார பாத்தும் காதல் வர்ற இந்தக் காலத்துல ஒருத்தரயொருத்தர் பார்க்காமலே ஒரு காதல்" என்ற வசனமும் அந்தப் படத்தின் காதல் காட்சிகளும் தான் எத்தனை உணர்வுபூர்வமானது. "பேரழகன்" படத்தில் கண்பார்வையற்ற நாயகிக்கு கண் பார்வை கிடைக்க செய்யும் நாயகன் மீது முதலில் காதல் வராமல் வேறொருவரை தவறாக காதலிக்க தொடங்கும் நாயகியை புரிந்துகொண்டு நாயகன் சின்னா பிரிந்துசெல்வதும் பின்னாட்களில் நாயகி அந்த தெத்துப்பல் சின்னாவின் உண்மையான காதலை புரிந்துகொண்டு அவருடன் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கும் காட்சிகள் அவ்வளவு அழகானது!

"ஒரு குப்பை கதை" படத்தில் நாயகன் குப்பை அள்ளுபவர் என்பதால் நாயகி அவரை புரிந்துகொள்ளாமல் வேறொருவருடன் தகாத காதல் வயப்பட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். நாயகனோ அப்போதும் மனைவியை வெறுக்காமல் அமைதியாக இருக்கிறார். ஒருகட்டத்தில் நாயகி தகாத காதலனிடம் ஏமார்ந்து போய் குப்பை அள்ளும் கணவரிடம் திரும்பி வர நாயகன் எந்த மறுப்புமின்றி எதையும் சொல்லிக்காட்டாமல் அதே காதலுடன் அவரை ஏற்றுக்கொள்கிறார். தவறு செய்த நாயகியும், குப்பை அள்ளுபவர் என்றாலும் அவ்வளவு அழகில்லை என்றாலும் தனது கணவரின் அந்த உண்மையான உள்ளத்திற்காக அவரை புரிந்துகொண்டு திரும்பி வரும் காட்சி தான் எத்தனை பாசிட்டிவானது...
"மின்னல் முரளி" படத்தில் நாயகனை (குரு சோமசுந்தரம்) ஊரே சேர்ந்து பைத்தியம் என்று நினைத்து விரட்டியடிக்க, அப்போது நாயகனுடைய உண்மையான காதலை உணர்ந்து அவரை தேடி வரும் காதலி அடுத்த சில நிமிடங்களிலயே இறந்து போவது அத்தனை கனமான காட்சி! "மௌன குரு" படத்தில் நாயகனை குடும்ப உறுப்பினர்கள் உள்பட எல்லோரும் சேர்ந்து மனநல மருத்துவமனையில் அனுமதித்தாலும் நாயகி தன் காதலில் மாறாமல் இருந்து இறுதியில் அவரது கரம் பிடிக்கும் காட்சி அவ்வளவு பரிசுத்தமானது!

"பிச்சைக்காரன்" படத்தில் நாயகன் பிச்சை எடுக்க நேர்ந்தாலும் அவர் மீது காதல் வயப்படுகிறார் நாயகி... இந்தக் காதலை உணர்த்தும் "உனக்காக வருவேன்" பாடல் அவ்வளவு ஆத்மார்த்தமானது. காதல் காட்சிகளை எழுதவதில் இயக்குனர் சசி எவ்வளவு தனித்துவமானவர் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்ததொரு உதாரணம். சிம்புவின் "வல்லவன்" படத்தில் நயன் பேசும் "நான் லவ் பண்ணது அந்த பல்லன தான்..." என்ற வசனம் கூட ஓரளவுக்கு மனதை கவர தான் செய்கிறது.
"ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் சரண்யா டிகிரி படிக்கவில்லை என்பதற்காக பதினெட்டு வருடங்களாக கணவர் அழகம்பெருமாள் பேசாமல் இருப்பார். அது காமெடி படமென்றாலும் சரண்யா அவர்கள் நடித்த மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் அதுவும் ஒன்று என குறிப்பிடலாம். யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான தம்பதிகளிடம் குறைகளை சொல்லி சொல்லிக்காட்டும் அதற்காக வெறுப்பை உமிழும் இந்த மாதிரியான முட்டாள்தனம் நிறைய உண்டு. தம்பதிகள் காதலர்கள் முதலில் தங்களது குறைகளை பகிர்ந்துகொண்டு அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்போது தான் அவர்களது காதல் மேலும் அழுத்தமானதாகிறது. அழகாகிறது!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.