வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வதந்தி வெப்சிரிஸ். கொஞ்சம் தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. தாமதமான முடிவு என்றாலும் தரமான ஒன்று தான்.
என்னுடைய பார்வையில் சில கண்ணோட்டங்கள். No Spoilers
1. எஸ்.ஜே.சூர்யா. 1986இல் வாசுதேவநல்லூரிலிருந்து நடிக்க வந்த இளைஞன். அவரை நமக்கு ஒரு இயக்குனராகத்தான் தெரியும். சொல்லப்போனால் இயக்குனர் கம் நடிகர். ஆனால் அவர் இண்டஸ்ட்ரிக்கு வந்த முதல் காரணமே நடிக்கத்தான்.
வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. பாண்டியராஜனின் நெத்தியடி, கிழக்குச்சீமையிலே போன்ற படங்களில் ‘அன்கிரெடிட்டட் ரோல்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு நிமிட வேடம் தான் கிடைத்தது.
நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தன்னை இண்டஸ்ட்ரியில் நிருபித்த பிறகு ஒரு நடிகனாக பரிமளிக்கலாம் என்று முடிவு செய்தார். இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
‘ஆசை’ படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த காரணத்தினால் அஜித்திடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுதான் ‘வாலி’. அதன் பின்பு வந்த ‘குஷி’ தமிழ் சினிமாவில் ஒரு வரலாறு.

தமிழில் வெளிவந்து ஹிட்டடித்து பின்பு அதே படம் தெலுங்கில் ரீமேக், பின்பு ஹிந்தியில் என இரண்டாம் படத்திலேயே பாலிவுட் வரை சென்றார். இப்பொழுது சூர்யா என்ற நடிகன் வெளியே வருகிறார் ‘நியூ’ படம் மூலமாக.
பின்பு அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி என நடிப்பும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு மெருகேரியது.
சிம்ரன் இவருடன் நடிக்கவில்லை என்பதனால் அவரைப்போன்று உருவத்தோற்றம் கொண்ட மீரா சோப்ராவை (நிலா) வம்படியாக நடிக்க வைத்தார். பாலச்சந்தர் ரஜினியை போன்று உருவாக்கி காட்டுகிறேன் என்று ராகவா லாரன்ஸை 'பார்த்தாலே பரவசத்தில் நடிக்க வைத்தது போல.
இடையில் இரு தலைக்கொள்ளி எறும்பாக இயக்குனர் மற்றும் நடிகர் என இரு குதிரைகளில் பயணம் செய்து தடுமாறிக் கொண்டிருந்தவரை மீட்டெடுத்தது ‘இறைவி’ படம். தேசிய விருதுக்கானப் பரிந்துரை. இதுதான் பாதை என்று தீர்மானித்து தன்னை ஒரு நடிகனாக செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நடிகன் மிளிர்கிற இடம் இந்த ‘வதந்தி’ வெப்சீரிஸ். முதல் எபிசொடிலிருந்து இறுதிவரை எஸ்.ஜே.சூர்யாதான். பதற்றம், கோபம், இயலாமை, மிரட்டல், காதல், இரண்டு மூன்று இடங்களில் மோனோ ஆக்டிங் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் இந்த மகா நடிகன். 54 வயது என்றெல்லாம் சொல்லவே முடியாது. சார்மிங்.
2. திரைக்கதை. எட்டு எபிசோட். முதல் காட்சியிலேயே கொலை. இறுதிவரை அதாவது கிட்டதட்ட ஆறு மணிநேரம் பார்வையாளனை யூகிக்க வைக்க முடியாமல் காட்சிக்கு காட்சி பதைபதைப்பையும் கூட்ட வேண்டும், அதே சமயம் ஆரவத்தையும் குறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு மணி நேர சினிமாவிலேயே அலுப்புதட்டிவிடும் நமக்கு ஆறு மணி நேரங்கள் கடந்ததே தெரியவில்லை. நிச்சயமாக சினிமாவை விட இதுபோன்ற வெப்சீரிசை கொண்டாடித்தீர்த்தே ஆக வேண்டும். அவ்வளவு சுவாரஸ்யமான திரைக்கதை. வாழ்துக்கள் ஆண்ட்ரூ லூய்ஸ். இரண்டு சினிமாக்கள் எடுத்துவிட்டார். ஒரு வெப் சீரிஸ் முடித்திருக்கிறார். இன்னும் இவருக்கு ஒரு விக்கி பேஜ் இல்லாததை தமிழ் கூறும் நல்லுலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. முதல் எபிசோடிலேயே இறந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு இனிமேல் நடிக்க ஸ்கோப் இல்லையோ என்று நினைத்தால், படுஏமாற்றம். நான் லினீயராக விரியும் திரைக்கதையில் சூராய்வுக்கு அடுத்தபடியான ஸ்கோப் சஞ்சனாவிற்கே. ஒரு டீன் ஏஜ் பெண்ணாக எல்லா உணர்வுகளையும் உள் வாங்கி அசாத்தியமாக முகத்தில் வெளிப்படுத்துகிறார்.
வெலோனி இறந்த முதல் எபிசோட் முதற்கொண்டு இறுதிவரை அந்தப் பெண்ணின் ஒழுக்கம் கேள்விக்குறியாகிக்கொண்டே இருக்கிறது. வதந்தியின் வெப்சீரிசில் இருக்கும் கதை மாந்தர்கள் மட்டுமல்ல, பார்க்கும் நாமும் அவளை சந்தேகிக்கிறோம். ‘Character assassination’ என்பது எவ்வாறு நடக்கிறது என்பதற்கு இந்த வெப்ஸீரிஸ் எழுதியிருக்கும் என்னையும் வசிக்கும் உங்களையும் சேர்த்து ஒரு சமுதாய பிரதிபலிப்பு.
4. வெலோனியை கொன்றது இவன்தான் என ஒருவனை வைத்து கேசை முடிக்கிறது காவல் துறை. ஆனால் அது உண்மையல்ல என்று நம்புகிறார் சூர்யா. வெலோனியை கொன்றது யார் என தலையைப் பிய்த்துக்கொள்கிறார். அவருடன் நாமும். காட்சிகள் கடத்தும் உணர்வில் தொய்வில்லை. ஐந்தே முக்கால் மணி நேரம் வரை யார் செய்திருப்பார்கள் என்று கண்டுபிடிக்க முடியவே இல்லை. இறுதி பதினைந்து நிமிடத்தில் தான் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி யார் எனத்தெரியவருகிறது. இப்படி ஒரு காரணத்திற்காக கொலையா என்ற கேள்வி எழாமலில்லை. Plot with a twist என்ற ஜானரில் இதை ஷமிக்கலாம்.
5. எஸ்.ஐ. ராமராக வரும் விவேக் பிரசன்னா பாடு கட்சிதமான தேர்வு. மிக சீரியசாக செல்லும் கதையில் அவரிடமிருந்து சட்டிரிக்கல் (satirical) வசனங்கள் வெளிப்படுவது ஒரு ஆறுதல்.

6. ‘என்ன சொல்லுதீவோ’ என கன்னியாகுமாரி பேச்சுவழக்கில் ஈர்க்கிறார் சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட்.
7. குளப்புலி லீலா ஒரு முக்கிய கதாப்பத்திரத்தில் வருகிறார். ‘அண்ணாத்தவில்’ தன்னை விட வயது முதிர்ந்த ரஜினிகாந்துக்கு பாட்டியாக நடித்த கோபம் போகவில்லை போலும். கடுகடு வென்று தானிருக்கிறார்.
8. சென்செஷனல் சேதி தான் வேண்டும் என்று துடியாய் துடிக்கும் பத்திரிக்கை ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹரீஷ் பேரடி ‘நச்’ பொருத்தம்.
9. கதைமாந்தார்கள் மட்டுமல்லாமல் மேன்சன், காடு, சூர்யாவின் ஜிப்ஸி ஆகியவையும் கதாபாத்திரங்களாக மிளிருகின்றன.
அரை நாள் செலவு செய்து தாரளாமாக பார்க்கலாம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.