Published:Updated:

`சென்னையை விட்டு காரைக்குடிக்கே சென்றது ஏன்?' - காரணம் சொல்லும் `நாதஸ்வரம்' கீதாஞ்சலி!

கீதாஞ்சலி
கீதாஞ்சலி

`ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களுக்கு ஷூட்டிங் நாள்களை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட, `ராஜா ராணி'யிலிருந்து வெளியேறினார் கீதாஞ்சலி.

`நாதஸ்வரம்' சீரியலின் ஹீரோவும், இயக்குநருமான திருமுருகனைக் காதலிப்பவராக முக்கியமான கேரக்டரில் அறிமுகமானவர் கீதாஞ்சலி. காரைக்குடியைச் சேர்ந்தவர். `நாதஸ்வரம்' ஷூட்டிங் காரைக்குடியைச் சுற்றியே நடந்ததால் வீட்டிலிருந்து வந்தே ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்தத் தொடர் நிறைவடைந்ததும், அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வந்தன. எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அம்மாவை அழைத்துக்கொண்டு சென்னை வளசரவாக்கத்தில் குடியேறினார்.

சீரியல்களைத் தொடர்ந்து சில படங்களிலும் நடித்தார். இந்நிலையில், இவர் நடித்த `வாணி ராணி' நிறைவுபெற்றது. உடனடியாக `நிறம் மாறாத பூக்கள்' தொடரில் கமிட்டானார். இன்னொருபுறம், `ராஜா ராணி' சீரியலிலும் கமிட் ஆனார். `ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களுக்கு ஷூட்டிங் நாள்களை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட, `ராஜா ராணி'யிலிருந்து வெளியேறினார். `நிறம் மாறாத பூக்கள்' தொடர் மட்டும் ஒளிபரப்பாகி வந்தது.

கீதாஞ்சலி
கீதாஞ்சலி

அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. மேலும் இந்தாண்டு அவ்வளவாக சினிமா வாய்ப்புகளும் இவருக்கு அமையவில்லை. எனவே சென்னையைக் காலி செய்து பழையபடி சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.

கீதாஞ்சலியிடம் பேசினேன். ``பிரபலமான ஆர்ட்டிஸ்ட்னா ரெண்டு சீரியல்கள் நடிக்கிறப்போ பிரச்னை வராது. அவங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க. ஆனா, புதுமுகமா இருந்தா அவங்களை ரெண்டு சீரியல் பண்ண முடியாதபடி கால் ஷீட்ல குழப்பம் பண்றாங்க. ஒரேயொரு சீரியல்ல நடிச்சிகிட்டு சென்னையில எப்படி நாள்களைக் கடத்தறது. அதனாலதான் பழையபடி காரைக்குடிக்கே வந்துட்டேன்'' என்றார்.

`தங்கைக்குத் திருமணமாகி விட்டதால் உங்களுக்கும் 2020ல் திருமணம் இருக்குமென்கிறார்களே' எனக் கேட்க, ``ஆமா அதுவும் நிஜம்தான். மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காங்க. மார்கழி முடிஞ்சதும் திருமண வேலைகள் ஆரம்பிச்சிடும். மறுபடி சென்னை வர்றதா இருந்தா கல்யாணத்துக்குப் பிறகுதான் வருவேன்'' என்றார் கீதாஞ்சலி.

பின் செல்ல