Published:Updated:

Veera Simha Reddy: செஸ்வான் ஃப்ரைட் ரைஸில் சில்லி சாஸ்; சூப்பர் ஹிட் x ப்ளாக்பஸ்டர் = சூப்பர்பஸ்டர்!

Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
News
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி

"வாரிசா துணிவா... யார் பெருசுன்னு அடிச்சுக்காட்டு" என தமிழ்நாடு முழுக்கக் களேபரமாக இருக்க, பொங்கல் விழா சமயத்தில் அக்கட தேசத்தில் ஆரவாரத்துடன் முதலில் வெளியானது பாலய்யாவின் 'வீர சிம்ஹா ரெட்டி'.

Published:Updated:

Veera Simha Reddy: செஸ்வான் ஃப்ரைட் ரைஸில் சில்லி சாஸ்; சூப்பர் ஹிட் x ப்ளாக்பஸ்டர் = சூப்பர்பஸ்டர்!

"வாரிசா துணிவா... யார் பெருசுன்னு அடிச்சுக்காட்டு" என தமிழ்நாடு முழுக்கக் களேபரமாக இருக்க, பொங்கல் விழா சமயத்தில் அக்கட தேசத்தில் ஆரவாரத்துடன் முதலில் வெளியானது பாலய்யாவின் 'வீர சிம்ஹா ரெட்டி'.

Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
News
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
விஜய்யின் `வாரிசு', அஜித்தின் `துணிவு'... இந்தப் பொங்கல் யாருக்கானது எனத் தமிழ்நாட்டில் கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கையில் மற்றொரு பக்கம் பாலய்யா வயலன்ட்டாக தனக்கே உரித்தான ஃபார்மேட்டில் ஒரு ஆக்‌ஷன் மசாலா படத்தைச் சங்கராந்திக்காக இறக்கியிருக்கிறார்... இல்லை பறக்கவிட்டிருக்கிறார். அது குறித்த கறார் விமர்சனமாக இல்லாமல், ஒரு ஜாலி அலசல் இது!

பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி', சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' இரண்டு படங்களும் ஒரு நாள் முன் பின்னாக இந்த சங்கராந்திக்கு அங்கே வெளியாகியிருக்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இரண்டு படங்களுக்கும் ஒரே தயாரிப்பாளர்தான். ஒரு தயாரிப்பிலிருந்து ஒரே சமயத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். "வாரிசா துணிவா... யார் பெருசுன்னு அடிச்சுக்காட்டு" எனத் தமிழ்நாடு முழுக்கக் களேபரமாக இருக்க, அக்கட தேசத்தில் ஆரவாரத்துடன் முதலில் வெளியானது பாலய்யாவின் 'வீர சிம்ஹா ரெட்டி'. பாலய்யாவின் ரசிகர்கள் தரையில் ஆரவாரம் செய்ய, திரையில் 'God of Masses' என்ற கேப்ஷனோடு ஆர்ப்பரிக்கிறார் பாலகிருஷ்ணா.

Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி

பக்கா கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களைக் கொடுத்த இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி முதன் முறையாக பாலகிருஷ்ணாவோடு இணையும் படம் இது. இவருக்கும் தன்னுடைய முந்தைய படம் 'க்ராக்' சூப்பர் ஹிட். பாலகிருஷ்ணாவுக்கும் அவரின் முந்தைய படமான 'அகண்டா' ப்ளாக்பஸ்டர். சூப்பர் ஹிட் x ப்ளாக்பஸ்டர் = சூப்பர்பஸ்டர் என்ற கணித பார்வையோடு சென்டிமென்டலாக ஆரம்பித்த படமே இந்த 'வீர சிம்ஹா ரெட்டி'.

ஓப்பன் பண்ணா... இஸ்தான்புல்லில் இருக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் கேழ்வரகு உருண்டையில் நாட்டுக்கோழி குழம்பை ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். எப்படி... ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதா... வாங்க படத்துக்குள்ள போகலாம்.
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி

இஸ்தான்புல்லில் ஆந்திரா ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார், சிங்கிள் மதரான மீனாட்சி (ஹனி ரோஸ்). இந்த ரெஸ்டாரன்டை தனக்கு விற்கச் சொல்லிக் கேட்டு, அதற்கு ஒப்புக் கொள்ளாததால் கடையை உடைத்து மிரட்டிச் செல்கிறான் ஒரு கார்ப்பரேட் முதலாளி (டிரெண்டைப் புடிச்சிட்டோமா!). கட் பண்ணா, நடு கடலில் மிதக்கும் சொகுசுப் படகில் புரியாத பாடலுக்கு வைப் செய்துகொண்டிருந்தவனின் முகத்தில் ஒரு பன்ச். 'Who are you?' என்று கேட்டவனிடம் 'Hero' என்ற வசனத்தோடு ஆக்‌ஷன் காட்சி ஆரம்பிக்கிறது. யங் பாலய்யா என்ட்ரி! இவரது பெயர் ஜெய். சொகுசு கார்களின் ஷோரூம் வைத்திருக்கும் 30 வயது இளைஞன்.

சில பல க்ரின்ஜ் சந்திப்புகளில் நாயகி ஈஷா (ஸ்ருதிஹாசன்) இவருக்குப் பழக்கமாக, காதல் மலர்கிறது. ஈஷா போன் செய்து, "நம்ம லவ்வை வீட்ல சொல்லிட்டேன். அப்பா, அம்மாவை வந்து பேசச் சொன்னாங்க" என்று மகிழ்ச்சியாகக் கூற, அதைத் தனது அம்மாவிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல் "எனக்கு அப்பா இல்லைன்னு அவளுக்குத் தெரியாதுல. அதனால அப்படிச் சொல்லிருக்கா!" என்கிறார் யங் பாலய்யா. "உனக்கு அப்பா இல்லைன்னு யார் சொன்னது? இதுவரைக்கும் உனக்குத் தெரியாத ஒரு ரகசியத்தை இப்போ சொல்றேன். உன் அப்பா உயிரோடுதான் இருக்கார்" என க்ளோஸ் அப்பில் ஹனி ரோஸ் சொல்ல, பல கோடி படங்களில் ஏற்கெனவே வந்துவிட்ட ட்விஸ்ட்தான் அது என்றாலும், அதிர்ச்சிகரமாக அதிர்ச்சியாகிறார், நம்ம யங் பாலய்யா!

பாலகிருஷ்ணா - ஸ்ருதிஹாசன்
பாலகிருஷ்ணா - ஸ்ருதிஹாசன்

"ஒரு காட்டுல நிறைய வன விலங்குகள் இருக்கும். அந்த விலங்குகளை எல்லாம் அடக்கி ஆள ஒரு ராஜா இருப்பார். அந்த ராஜா ஒரு சிங்கம். அந்த சிங்கத்துடைய பெயர் வீர சிம்ஹா ரெட்டி. அவர்தான் உன் அப்பா" (அட, பாலய்யா படம்னா டபுள் ரோல் இல்லாமயா?) என்றதும் இஸ்தான்புல்லில் இருந்து ஆந்திரா மாநிலம் ராயலசீமா பகுதிக்கு ஃப்ளைட்டில் பறக்கிறது கேமரா. ஊரே போற்றும் உன்னத மனிதர் வீர சிம்ஹா ரெட்டியின் என்ட்ரி! அவரின் தலையை எடுக்கத் துடித்துக்கொண்டு காத்திருக்கிறார், பிரதாப் ரெட்டி (துனியா விஜய்). ஒவ்வொரு முறையும் பாலய்யாவை அட்டாக் செய்ய வந்து அடி வாங்கிச் செல்வதே அவரின் வாடிக்கையாக இருக்கிறது. "என்றைக்கு நீ அவனின் தலையை எடுக்கிறாயோ அன்றைக்குத்தான் உனக்கு முதல் இரவு" என்ற டோனில் ரிவெஞ்ச் எடுக்கக் காத்திருக்கிறார் பிரதாப் ரெட்டியின் மனைவியும் வீரசிம்ஹா ரெட்டியின் தங்கையுமான பானுமதி (வரலட்சுமி). (அடேயப்பா, 'நாட்டாமை' காலத்துல இருந்து, இதுதான் ட்விஸ்ட்போல!)

இவர்கள் ஏன் வீரசிம்ஹா ரெட்டியை கொல்ல நினைக்கிறார்கள், அவர் தன் மனைவியையும் மகனையும் பிரிந்து வாழக் காரணம் என்ன... என்பதை 20 ஆக்‌ஷன் காட்சிகள், 35 பன்ச் டயலாக்குகள், நான்கு பாடல்கள் மூலம் ஆக்ரோஷமாக ஆரவாரமாக ஆர்ப்பரிப்பாக செஸ்வான் ஃப்ரைட் ரைஸில் சில்லி சாஸ் ஊற்றி, சைடு டிஷ்ஷாக ஆந்திரா சிவப்பு மிளகாயைக் கடிக்கக் கொடுத்து, படு காரசாரமாகச் சொல்லியிருக்கிறது இந்த `வீர சிம்ஹா ரெட்டி'.
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி

பாலய்யா... ஒற்றை ஆளாக சாரி... இரட்டை ஆளாக படத்தை சுமந்து நிற்கிறார்கள் வீர சிம்ஹா ரெட்டியும் ஜெய்சிம்ஹா ரெட்டியும். அவர் படத்திலிருக்கும் அத்தனை அம்சங்களும் இதிலும் நிறைந்திருக்கின்றன. பன்ச் டயலாக், டான்ஸ், ஸ்டன்ட் என 360 டிகிரியில் சூர்யகுமார் யாதவ்வை போல அதிரடி காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார். வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்! அப்பா ரக்கட் பாய் என்றால், சாக்லேட் பாயாக வரும் மகன் பாலய்யா 'சுகுண சுந்திரி...' பாடலில் ஸ்ருதிஹாசனுடன் லெக் மூவ்மென்ட்டில் அசத்துகிறார். கறுப்பு சட்டை, கறுப்பு வேட்டி, கையில் சுருட்டு என அப்பா பாலய்யாவுக்கு பக்கா மாஸான கேரக்டர்.

ஸ்டன்ட் காட்சிகள் என்ற பெயரில் ஏதோ வைட் காலர் உத்தியோகத்தைப் போல சட்டையில் அழுக்கே படாமல் நூற்றுக்கணக்கான ஃபைட்டர்களைப் பறக்கவிட்டு துவம்சம் செய்கிறார். இஸ்தான்புல்லில் வசிக்கும் மாடர்ன் தெலுங்குப் பெண்ணாக ஸ்ருதிஹாசன். ஒரு காமெடி ரீல்ஸ், ஒரு சீரியஸ் ரீல்ஸ் எனக் காட்சிகள் கூட இல்லாமல் ரீல்ஸ் கணக்கில் மட்டுமே வந்துபோகிறார்.
வரலட்சுமி - துனியா விஜய்
வரலட்சுமி - துனியா விஜய்

வில்லனாக துனியா விஜய். பாலய்யாவுக்கு ஸ்டன்ட்டில் டஃப் கொடுத்திருக்கிறார். தெலுங்கு சினிமாக்களில் வில்லன் கேரக்டர்களுக்கு தமிழிலிருந்து சமுத்திரக்கனியை எப்படிப் பிடித்தார்களோ அதே போல, கன்னடத்திலிருந்து துனியா விஜய்யை பிடித்திருக்கிறார்கள். நிச்சயம் இன்னும் பல டோலிவுட் படங்களில் இவரைப் பார்க்கலாம். பாலய்யாவுக்கு அடுத்தபடியாக, வரலட்சுமி சரத்குமாரின் கேரக்டர் கவனிக்க வைக்கிறது. பாசமான தங்கையாகவும், அண்ணனைப் பழிவாங்க நினைக்கும் கோபக்கார வில்லியாகவும் வெரைட்டி காட்டுகிறார். எமோஷனல் காட்சி ஒன்றிலும் நன்றாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள் வரு!

'சாவே என்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டுதான் வரமுடியும்', 'மக்கள் வாழ்றதுக்காக பூமியைப் படைச்சான் கடவுள். ஆனா, பூமி வாழ்றதுக்காக இந்தச் சிங்கத்தைப் படைச்சிருக்கான்', 'பயம் என் பயோடேட்டாவுலேயே இல்லைடா ப்ளடி ஃபூல்', 'தலையை வெட்டுறதுக்கு இது ஆடு இல்லை; சிங்கம்', 'காத்தே என் எதிர்ல வரும்போது பொறுமையாதான் வரும்', 'உனக்கு ஆணவம் சீட்ல இருக்கலாம். ஆனா, எனக்கு DNAலயே இருக்குடா...' போன்ற வசனங்கள் இனி வைரல் டெம்ப்ளேட் ஆகலாம். ஒரு பக்கா கமர்ஷியல் தெலுங்குப் படத்தின் ஃபார்முலாவுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது கோபிசந்த் மல்லினேனியின் திரைக்கதை. வரலட்சுமியின் கேரக்டர்தான் படம். அந்த கேரக்டரை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.

Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி
Veera Simha Reddy | வீர சிம்ஹா ரெட்டி

பாலய்யா - தமன் காம்பினேஷனில் 'அகண்டா'வை தொடர்ந்து, 'வீரசிம்ஹா ரெட்டி'யும் வெற்றி பெற்றியிருக்கிறது. பாலகிருஷ்ணாவால் திரையும் தமன்னால் ஸ்பீக்கர்களும் தீப்பிடிக்கின்றன. ரிஷி பஞ்சாபியின் ஒளிப்பதிவு ராயலசீமாவின் வெப்பத்தை கச்சிதமாகக் கடத்துகிறது.

ராம் - லக்‌ஷ்மனின் ஸ்டன்ட் படத்தின் காரத்தை கூட்டியிருக்கிறது. பாலய்யாவுக்கான டெயிலர் மேட் ஸ்டன்ட் கோரியோகிராஃபி. பாலய்யா அடித்ததில் ஒருவர் காற்றில் பறந்துகொண்டே வணக்கம் வைக்கும் காட்சியும் (மன்னிப்பு கேட்கிறாராம்!), ஒரு உதையில் இன்னோவா கார் பல கிலோமீட்டர்கள் ரிவர்ஸில் போவதும் ஹைலைட்ஸ்! ரத்தம் தெறித்தல், எலும்பு முறித்தல், தசை கிழித்தல், கார்கள் வெடித்து சிதறுதல் என அனைத்துமே படத்தில் இருக்கின்றன. வரலட்சுமி தன் கணவனுக்குச் சமைக்கும்போது காரத்தை அள்ளிக் கொட்டுவார். அதற்கு ஒரு காரணத்தையும் சொல்வார். அப்படி அதீத காரம் சேர்க்கப்பட்ட ஆந்திரா மீல்ஸ் இந்த `வீர சிம்ஹா ரெட்டி'. (ஆனா, இவ்ளோ காரம்லு தாங்காதுலு!)

ஒரு பக்கம், 'RRR', 'புஷ்பா' என டோலிவுட் சினிமா அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில், 'குறுக்க இந்த கெளஷிக் வந்தா...' என்ற டோனில் களமிறங்கியிருக்கிறது இந்த 'வீர சிம்ஹா ரெட்டி'. எங்கே நெகட்டிவ் விஷயங்களே இல்லையென்று நினைக்க வேண்டாம். பாலய்யா படம் பார்க்க சென்றால் அதற்கு என சில ரூல்ஸ் இருக்கின்றன. அதில் முதலாவது 'நோ லாஜிக் ஒன்லி என்டர்டெயின்மென்ட்' என்ற மோடுக்குள் வந்துவிட வேண்டும். இரண்டாவது, நூற்றுக்கணக்கான ஃபைட்டர்களை ஹீரோ அடித்து துவைத்தால் அதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை வேண்டும். (நியாயம் இல்லையா!) `இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு' என்ற மனநிலை கூடவே கூடாது. ஆக, போய் என்ஜாய் செய்யண்டி..! Don't try to be a hero, அதை பாலய்யா பார்த்துக்குவார்!

ஜெய் பாலய்யா... ஜெய் ஜெய் பாலய்யா...!